kamagra paypal


முகப்பு » சமூகம், திரைப்படம்

பொதுமக்களின் எதிரிகளாகும் நாயகர்கள்

public-enemies-character-11ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் மைக்கெல் மான் இயக்கியதொரு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. படத்தின் கதாநாயகன் ஜானி டெப்பும் (Johny Depp) தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்தவராதலால் இத்திரைப்படத்தைப் பற்றி நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. இந்தத் திரைப்படத்தின் பெயர் ‘பப்ளிக் எனிமீஸ்’ (Public Enemies). அதாவது ’பொதுமக்களின் எதிரிகள்’. இந்தப் படத்தின் கதை அமெரிக்கா மிகக் கஷ்ட தசையில் இருந்த 1930களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது. இதில் வரும் அனேகப் பாத்திரங்கள் அக்காலத்தில் இருந்த பல மனிதர்களின் வாழ்வை ஆதாரமாகக் கொண்டவை.

அன்று அமெரிக்காவிலும், மேலை நாடுகளிலும் பெரும் சரிவு (Great Depression) என்றறியப்படும் பொருளாதார வீழ்ச்சியால் சமூகத்தில் கடும் குழப்பமும், பரந்துபட்ட வறுமையும் நிலவின. மேலை நாடுகளின் ஏகாதிபத்திய முதலியம் (Imperial capitalism) திடீரென ஏற்பட்ட சந்தைச் சரிவில் திக்பிரமித்து நின்றிருந்தது. முதல் உலகப் போரும், ரஷ்யப் ‘புரட்சியும்’, ஜெர்மனியில் நடந்த கடும் குழப்பமான அரசியல் இழுபறிகளும், பல காலனி நாடுகளில் எழுந்து விட்ட எதிர்ப்புப் போராட்டங்களுமான கூட்டுத் தாக்கத்தில் உலகில் வெள்ளையர் ஆதிக்கத்துக்கும், முதலியத்தின் உலகு தழுவிய போர்க்கால, ஊகச் சந்தைக் கொள்ளைக்கும் எதிராகக் கலகம் எழுந்து கொண்டிருந்தது.

அது வரை தடைகளற்ற சந்தைப் பொருளாதாரத்தால் மக்களைச் சுரண்டிக் கொழுத்த பெரும் முதலாளிகள், அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தப்டியே திடீர் திடீரென மூடப்பட்டு வாடிக்கையாளர்களின் வாழ்வை அழித்த பெரு வங்கிகள், கந்து வட்டிக் கடைகள், தொழிற்சங்கங்களை உடைக்க ஏற்படுத்தப்பட்ட தனியார் படைகள் (Pinkerton agencies). புதிதாக உருவாக்கப்பட்ட தேசியத் துப்பறியும் அமைப்பான எஃப் பி ஐ (FBI) என்ற நிறுவனத்தின் தான்தோன்றித்தனம், முதலியத்தின் பெருங்கொள்ளையை மறைத்துக் கள்ள நாடகம் ஆடக் கூடத் துப்பு இல்லாமல் திண்டாடிய அரசியல் கட்சிகள். இவை எல்லாமாகச் சேர்ந்து, வெகுஜன அமெரிக்கருக்கு அரசியல் அமைப்பின் மீது பெரும் நம்பிக்கையின்மை ஏற்பட்டிருந்த ஒரு இருண்டகாலம் அது. அப்போது அங்கே கம்யூனிஸ்டு கட்சிக்குக் கூட ஆதரவாளர் நாடெங்கும் இருந்தனர். எங்கும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் அமைப்புகளின் முயற்சிகளாகவோ, அல்லது சட்ட அங்கீகாரம் இன்றியே ஆங்காஙகே தொழிலாளர்களின் தன்னார்வத்தில் கட்டப்பட்டோ எழுந்திருந்தன. அக்கால தொழிற்சங்கங்களில் சில இன்னும் நீடிக்கின்றன என்று நினைக்கிறேன். இன்று அவை மிக நலிவுற்று விட்டன என்ற போதும் இன்னும் அமெரிக்கத் தொழிலாளர்களில் பல்லாயிரக் கணக்கான நபர்களுக்கு நெஞ்சில் ஈரமில்லாத ஊகச்சந்தை முதலியத்தின் (Speculative Capitalism) வேட்டை நோக்கிடமிருந்து தப்பித்து வாழ ஏதோ ஒரு பாதுகாப்பு இவற்றிடம் இருந்துதான் கிட்டுகிறது.

அக்காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஆயுதம் தரித்த இளைஞர்கள் சிறு சிறு குழுக்களாகச் சேர்ந்து கொண்டு,  கொள்ளையர்களாகவும், கொலை செய்யத் தயங்காத வன்முறையாளர்களாகவும் திடீர் திடீரென வெளிக் கிளம்பினர். அப்போது பரவலாகக் கிடைக்கத் துவங்கி இருந்த அமெரிக்கக் கார்கள் இவர்களுக்கு மிக உதவியாக இருந்தன. அன்றும் சரி, இன்றும் சரி, அமெரிக்காவின் பரந்த நிலத்தில் ரயில்களின் ஊடுருவல் அதிகம் இல்லை. பெரும் நிலப்பரப்பில் ரயில்கள் போகாது. அதனால் அரசும் தனது ராணுவத்தையோ, ஆயுதப் போலிஸ்காரர்களையோ கூட்டமாக அனுப்ப அதே வகைக் கார்களையோ, துவக்க கட்ட மாடல் ட்ரக்குகளையோ நம்பித்தான் இந்தக் குற்றவாளிகளைத் தேட வேண்டி இருந்தது.

குற்றவாளிகள் பெருமளவு உள்ளூர்ப் பகுதிகளில் நிரம்பத் தேர்ச்சி உள்ள குழி எலிகளாக இருக்கையில், அமெரிக்க மைய அரசின் அதிகாரிகளுக்கு நாடெங்கிலும் உள்ள நிலப்பரப்பில் அதிகத் தேர்ச்சி இருக்கவில்லை. இது அவர்களுடைய செயல்திறமையைப் பாதித்து,  குற்றங்களை ஒடுக்குவதில் பலனற்றவர்களாக அவர்களை மக்களுக்குக் காட்டியது. மேலும் ஆங்காங்கே உள்ள மாநிலத்து அல்லது உள்ளூர் அதிகாரிகளை நம்பாத சந்தேகப் பிறவிகளாக மைய அரசின் போலிசார் இருந்தனர்.  பல மாநிலங்களில் இயங்குவதாலும்,  ப்ரந்த தேசத்துக்கான  உழைப்பாலும் தேச மையப் பார்வை கொண்ட மைய அரசு ஊழியர்களுக்கு, கிணற்றுத் தவளை சிற்றூர் அதிகாரிகள் மீது அவநம்பிக்கை இருப்பதோடு பல நேரம்  உள்ளூர் அதிகாரிகள் குற்றவாளிகளைத் தவறான சார்புநிலையால் காப்பாற்றி மறைத்து வைக்கிறார்கள் என்றெல்லாம் சந்தேகம் எழுந்த கதைகள் நிறைய உண்டு.  இந்த பரஸ்பர அவ்நம்பிக்கை பல கூட்டமைப்பு நாடுகளிலும் சகஜம் என்றாலும் அமெரிக்காவில் இது ஒரு பண்பாட்டு மரபாகவே ஊட்டி வளர்க்கப் படுகிறது.   இதில் உள்ளூர் சிறுமுதலியத்துக்கும், நாடு தழுவிய பெரு முதலியத்துக்கும் உள்ள மோதல்களும் அடக்கம்.

இந்த விஷயங்களோடு திடீர் பொருளாதாரச் சரிவால், அமெரிக்கா முழுதும் நிலவிய மைய அரசின் மீதான நம்பிக்கையின்மையும் இந்த குற்றவாளிகளுக்கு உதவியாக இருந்தது. அமெரிக்க அரசு பார்த்துக் கொண்டிருக்கையிலேயே  அன்று அந்நாட்டின் துரிதமாக வளர்ந்து வரும் திரள் சமூக ஊடகமான செய்திப்பத்திரிகைகளும், தனியார் வானொலி நிலையங்களும், நாட்டு இசைக்கலைஞர்களும் (folk singers), கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக தலை தாழ்த்திக் கிடந்த தெற்குப் பகுதியின் பிரிவினைவாதிகளும் (Southern separatists) இந்தக் குற்ற அலையைக் கிளப்பிய இளைஞர்களை ஊக்குவிக்கவும், பெருமைப்படுத்தவும், அரசையும் அரசதிகாரிகளையும் இழிவாகப் பேசியும், ஏளனம் செய்தும் ஒரு எதிர்ப்பலையைத் துவக்கி இருந்தனர்.

இறுதியில் அமெரிக்க மைய அரசு தன் மன உறுதியைத் திரட்டி, புதிதாக நிறுவிய உள்நாட்டுத் துப்புத் துலக்கும் நிறுவனத்தைப் பெரிதுபடுத்தி அதன் அதிகாரத்தை வலுவாக்கி, மாநிலங்களின் போலிஸ் அமைப்புகளை இந்த மைய அரசின் அமைப்புடைய கட்டுப்பாட்டுக்குத் தலை வணங்க வைத்து, நாடெங்கிலும் குற்றவாளிகளை வேட்டையாடிக் கொன்றது. இது 1930 லிருந்து 1940க்குள் அனேகமாக முடிந்தது என நினைக்கிறேன். இது அமெரிக்க மைய்அரசின் அரசியல் வெற்றி என்று சொல்ல் இடமுண்டு.

இந்தக் காலகட்டத்தில் சந்தைச் சரிவால் வேலை வாய்ப்பற்றிருந்த ஏராளமான மக்களுக்கு மைய அரசின் உதவி ஓரளவு கிட்டியது, நிறைய தொழிலாளர் நலச் சட்டங்கள் மைய அரசால் நிறைவேற்றப்பட்டன, முதலியத்தின் நாயகர்கள் ஓரளவு தம் பெரும் சக்திகளை விட்டுக் கொடுக்க நேர்ந்தது, ஏகபோக முதலீட்டு நிறுவனங்களைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் சட்டங்கள் உருவாயின, வங்கிகளுக்கும் உறுதியான கட்டுப்பாடுகள் கொணரப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால் அதுவரை கேட்பாரின்றித் தலைவிரித்தாடிய முதலியம் இந்தக் கட்டத்தின் இறுதியில் நிறைய உருமாற்றமடைந்து மக்களின் கருத்துகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட பல சட்ட திட்டங்களின்பால் மரியாதையோடு செயல்பட நேர்ந்தது.  ஆனால் சூடுபட்ட புலி சும்மா இருக்குமா?  முதலியம் அன்று தொடங்கி இன்று வரை மக்கள் ஒன்று திரண்டு தன்னை அடக்கிக் கூண்டில் வைத்து விட இயலாதபடி சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவது அவசியம் என்று வலுவான பாடத்தைக் கற்றுக் கொண்டது.  மக்கள் ஒன்று திரள அவசியம் தகவல் பரிமாற்றம்.  தகவல் பரிமாற்ற்த் துறையை முதலியம் முதலில் தாக்கிக் கைப்பற்ற்த் துவங்கியது.

அன்று தோற்கடிக்கப்பட்ட முதலீட்டாளர் கூட்டத்தின் காயம் இன்றுவரை அமெரிக்க வலதுசாரிகளின் மனதில் ஆறாத ரணமாய் இருக்கிறது. காலம் சென்ற ரானல்ட் ரேகனாகட்டும், சமீபத்தில் தீராப் பழியோடும் இழிவோடும் பதவி நீங்கிய ஜ்யார்ஜ் டபிள்யு. புஷ் ஆகட்டும் ’புது ஒப்பந்தம்’ (New Deal) என்று அந்தக் கட்டத்தில் கொணரப்பட்ட, சமூக வளம் கருதி இயற்றப்பட்ட மைய அரசின் சட்டங்களை ஒழித்துக் கட்டி, அமெரிக்க முதலியத்தை  மறுபடி 19ஆம் நூற்றாண்டின் சந்தை முதலியமாக, அன்றைய மக்கள் விரோத அமைப்பாக மாற்றி விட வேண்டுமென்று பெருமுயற்சி செய்தனர். அதாவது மறுபடி கட்டுப்பாடற்ற் சந்தை முதலியத்தைக் கொண்டு வர முயற்சி. [இப்போது இருப்பது தொழிற்கூட முதலியத்தின் இறுதிக்கட்டம், சிலர் இதை முதலியம் கடந்த நிலை என்றே அழைக்கிறார்கள். என் கருத்தில் இது பெருமளவும்  ஊகச் சந்தை முதலியம்.]

விளைவு மறுபடியும் அமெரிக்க முதலியம் பெரும் சரிவைச் சந்தித்து, உலகெங்கும் ஏளனத்தையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.  அன்றிலிருந்து இன்று வரை முதலியச் சரிவின் ஒரு விளைவாக அமெரிக்காவில் மைய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் புகை மூட்டமான எதிரி மனோபாவம் தொடர்ந்து வருகிறது.  பழமைவாதிகளும், பொதுநலம் பெருகுவதை விரும்பாத நசிவு மனோபாவக்காரர்களும், தன்னிச்சைப்படி ஆட்டம் போட விரும்பும் உள்ளூர் மாஃபியாக்களும் கட்டுப்பாடில்லாது முதலீட்டை வைத்து மக்களை வேட்டையாட விழையும் முதலியக் கொள்ளையருமாக ஒரு  மக்களெதிரிக் கூட்டணி இப்படி ஒரு விரோத பாவத்தை பல மாநிலங்களில் மைய அரசின் மீது ஏற்படுத்த முற்பட்ட வண்ணம் உள்ளது. அன்று இல்லாத, இன்று நிறைய இந்தக் கூட்டணியில் உள்ள் ஒரு அம்சம்,  காட்சி ஊடகங்களின் பெரும் தாக்கம்.

பணபலத்தாலும்,  மக்கள் நடுவே உள்ள வீச்சாலும் வீங்கிப் பெருத்த காட்சி ஊடகங்களால் பெரிதும் மூளியாக்கப்பட்டு விட்ட அமெரிக்க ஜனநாயகம் கடந்த சில பத்து வருடங்களில் தொடர்ந்து நலிந்து வருகிறது.

ஊடகங்களின் புகை மூட்டத்தில் எத்தனையோ அபத்தங்களை அரசியல் கட்சிகள் மறைக்க முடிகிறது.  சென்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடப் பொறுக்கப்பட்ட சாரா பெய்லின் (Sarah Pailin) என்பவர் இந்த மாநில-மைய அரசுப் பகைக்கு தூபமிட்டு வளர்த்தார்,  பல வெள்ளை இனப் பிரிவினைவாதிகளுக்கு உற்சாகமளித்தார். ஒபாமாவின் தேர்வுக்குப் பிறகு அமெரிக்கக் குடியரசுக் கட்சியின் ஆதரவாளராகக் கருதப்படும் பல தொலைக்காட்சி/ வானொலி கருத்தாளர்கள் வெளிப்படையாகவே நாட்டைப் பிளப்பது, வன்முறையை ஆதரிப்பது என்று செயல்பட்டு வருகின்றனர்.  கிட்டத் தட்ட லெனின் போன்ற ஒரு நச்சு மனோபாவம் கொண்ட அரசியல்வாதி செய்த மக்கள் ஜனநாயகத்துக்கு எதிரான ஆயுத பலத்தை நம்பும் பாசிஸ அணுகலை இன்று அமெரிக்க வலது சாரியினர் ஊக்குவிப்பது ஒரு வரலாற்று அங்கதம்தான்.  இவர்களும் இதை மக்கள் எழுச்சி என்றே குறிக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.  எப்படி லெனினின் சிறு கூட்டம் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களாலும்,  வரலாற்றுத் தகவல்களை மறைத்துத் திரித்து அளிப்பதாலும் ரஷ்ய மக்களை மூளைச்சலவை செய்ததோ, அதே போல இன்று அமெரிக்க வலதுசாரிப் பெருமுதல் ஊடகங்கள் மைய அரசை இழித்துப் பேசித் தம் அரசியல் கருத்தைத் தவிர மற்றெல்லாம் நாட்டு துரோகிகள் என்றோ,  அழித்தொழிக்கப்பட வேண்டியவர் என்றோ பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதையெல்லாம் கூர்ந்து கவனித்தால் அமெரிக்க ஜனநாயகத்தின் க்ஷீணிப்பு ஏன் எப்படி எழுந்தது என்பது புரியும். களநிலைத் தகவல் என்று எடுத்துப் பார்த்தால் வாழ்நிலைகளின்படி, அமெரிக்க உள்நாட்டுச் சந்தை நாடெங்கும் வாழும் மக்களைப் பலவிதங்களில் பின்னிப் பிணைத்து அவர்களிடையே பரஸ்பரம் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அங்கு நிலவுவது ஒரே மொழி, கிட்டத் தட்ட ஒரே மதக் கலாச்சாரம். பின், இன்வெறியர்களும், கிருஸ்தவ வலது சாரித் தீவிர வாதிகளும், உலக ஊடகங்களில் பெரும்பலம் கொண்ட முதலியத்தின் ஒரு கூறான பன்னாட்டு ஊடக முதலியமும்  தூண்டி விடும் உள்நாட்டுப் போர் ஏற்படுமா என்ன?

எல்லாவற்றிலும் மத்திய நிலையில் இருக்கும் பல அமெரிக்கர்கள் அப்படி ஏதும் நடக்காது என்று மெத்தனமாக இருக்கிறார்கள்.  இடது சாரி எப்போதும்போலத் தன் கனவுலகிலேயே நின்று கொண்டு எல்லாரும் ஏதேதோ கைக்கெட்டாத இலக்குகளை நோக்கியே எப்போதும் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.  ஆக பல நாடுகளைப் போலவே அமெரிக்காவும் போகும் திசை தெரியாமல் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது.  இந்தக் கட்டத்தில் நாடெங்கும் குற்ற அலை குறைந்தாலும்,  தீவிரவாதிகளின் கூட்டம் அதிகரிப்பதாக ஊடகங்கள் சொல்லி வருகின்றன.  சமீபத்தில் நாட்டில் பல மூலைகளில் பொது நிலையங்களைக் குண்டு வைத்துத் தகர்க்கத் திட்டமிட்டதாக பலர் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர் என்பது ஒரு சான்றாக ஊடகங்கள் பறை சாற்றுகின்றன.  எது உண்மை என்பதைக் காண முடியும் நிலையில் மக்கள் இல்லை, ஏனெனில் ஊடக எதார்த்தம் வாழ்வனுபவ எதார்த்தத்தை வென்று பல பத்தாண்டுகளாயின.

சில ரஷ்ய அரசியல் விமர்சகர்கள் அப்படி ஒரு உள்நாட்டுப் போர் நிகழ்ந்து அமெரிக்கா உடையும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் வரலாற்று அறிவை விட ரஷ்ய உலக அதிபத்தியத்துக்கான ஆர்வமே மேல் தூக்கி உள்ளது. ஆனால் அமெரிக்காவில் அவ்வப்போது இப்படி ஒரு உள்நாட்டுப் போர் ஏற்படப் போகிறது என்பது போல ஒரு பரபரப்பான மனநிலை காணப்படும். இதில் ஆர்வத்துடன் பங்கெடுக்கும் உள்ளூர்ப் பத்திரிகைகள், ஊடகங்களுக்கு (தொலைக்காட்சி, வானொலி நிலையங்களுக்கு) தம் நுகர் பொருட்களை விற்று சந்தையைப் பெருக்கும் உத்தியா அதெல்லாம் என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. இந்தக் கட்டத்தில் எதார்த்தம் என்பதை வேறு ஒரு கோணத்திலும் பார்க்க முடியும் என்று முயன்று பார்க்கிற ஒரு ஹாலிவுட் இயக்குநர் என் கவனத்தைக் கவர்கிறார்.

பெரு வீழ்ச்சியும், குற்றமும்

இந்த ஆறாத ரணத்தைப் பெருமுதலாளிகளிடம் ஏற்படுத்திய பெரு வீழ்ச்சி (Great Depression) காலத்து உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது ‘பொதுமக்களின் எதிரிகள்’ (Public Enemies) திரைப்படம்.  ஜான் டிலிங்கர் (John Dillinger), பேபி ஃபேஸ் நெல்ஸன் (Baby Face Nelson), ப்ரெட்டி பாய் ஃப்ளாய்ட் (Pretty Boy Floyd) ஆகியோரைக் கொண்டதொரு கொள்ளையர்களின் சிறுகுழு உண்மையிலேயே இயங்கிய ஒன்று. இவர்கள் மக்களால் நாயகர்களாகப் பார்க்கப்பட்டவர்கள். இவர்களின் பல சாகசக் கதைகள் செவிவழியாகப் பரிமாறக்கொள்ளப்பட்டவை.

இவர்களுடைய வரலாற்றில் ஈடுபாடு  ஏற்பட்டதால்,  ஆய்வுப் பத்திரிகையாளரும்(investigative journalist) எழுத்தாளருமான ப்ரையன் பரோ(Bryan Burrough) என்பவர் ’பொதுமக்களின் எதிரிகள்: அமெரிக்காவின் மிகப்பெரிய குற்றஅலையும்,மைய அரசின் துப்பறியும் அமைப்பின் தோற்றமும், 1933-34 ’ (‘Public Enemies: America’s Greatest Crime Wave and the Birth of the FBI, 1933–34’ ) என்ற புத்தகத்தை எழுதினார்.

அப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே மைக்கேல் மான் இத்திரைப்படத்தை வடிவமைத்திருக்கிறார். மைக்கேல் மானுக்கும்  இளம் வயதில் இப்படிப்பட்ட ’நாயகர்களின்’ வரலாற்றில் பெரும் ஆர்வம் இருந்தது. ஜான் டிலிங்கர் கொல்லப்பட்ட ப்யோக்ராஃப் (Biograph) என்னும் திரையரங்கிலேயே,  மானும் தன் இளமைப் பருவத்தில் நிறைய திரைப்படங்கள் பார்த்து பொழுது போக்கியவர். மேலும் மைக்கேல் மான் இயல்பாகவே தசைவலுவை உயர்த்திக்  காட்டும் படங்கள் எடுப்பதில் நிறைய ஆர்வம் கொண்டவர். அவருடைய முந்தைய திரைப்படங்கள் பெரும்பாலும் வலிமைமிகு ஆண்களை மையமாகக் கொண்டவை. ஆகவே பலபேரிடம் கைமாறி, கைமாறிக் கடைசியில் பரோவின் ’மக்களெதிரிகள்’  புத்த்கத்தின் ஒரு அரைகுறை வடிவத் திரைக்கதை மைக்கேல் மானிடம் வந்தது.  (அந்தத் திரைக்கதையை வைத்திருந்தும், இப்படத்தை எடுக்க முடியாமல் தவறவிட்டவர்களில் ஒருவர் லியானார்டோ டிகாப்ரியோ (Leonardo DeCaprio) என்ற பிரபல ஹாலிவுட் நடிகர்). கதை, திரைக்கதை இரண்டும் பிடித்துப் போக, மீண்டும் திரைக்கதையைத் திருத்தி ஒரு முழுமையான வடிவம் தந்தார் மான்.

michael_mannமைக்கெல் மான் ஓரளவு படைப்புத் திறன் உள்ள இயக்குநர். தசை வலு ஓங்கிய  (Muscular filmatic genre) படங்களைப் படைக்கிறார் என்று மனோஹ்லா டார்கிஸ் (Manohla Dargis) எனும்- நியு யார்க் டைம்ஸ் செய்தித்தாளில் பளிச்சென்று துலங்கும் வகையான திரைவிமர்சனங்களை எழுதும்-ஒரு இளம் விமர்சகர் இவரைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்.

‘மைக்கெல் மான் பெரும் பணச் செலவில் படம் எடுத்த போதும் கலைப்படங்களை எடுக்கிறார், அவற்றில் எளிய கூத்தடிப்புக்குப் பதில், செடுக்குகள் நிறைந்த உணர்ச்சி வெளிப்பாடும், எளிதே முடிவுக்கு வந்து முடியாத சங்கடங்களும் அழகாகவும் நிறைவாகவும் சித்திரிக்கப் படுகின்றன’ என்று சொல்கிறார் டார்கிஸ். மைகெல் மானின் படங்கள் பொது ஜன ரசனைக்கு அருகிலான கதை வார்ப்போடும் இருக்கின்றன, அந்த ரசனையைத் தாண்டிய அறிவார்ந்த விவரணையாகவும் காணப்படுகின்றன.

தசை வலு என்று சொன்னதற்கு இன்னொரு காரணம், அவை பலவும் சண்டைப் படம் என்று நாம் சுருங்கச் சொல்லும் ‘action films’. இந்த வகை ஆக்‌ஷன் காட்சிகளை அரங்கேற்றுவதில் மிகத் திறமை உள்ளவர் என்று பெயர் வாங்கியிருக்கிறார் மைக்கெல் மான்.

இக்கொள்ளையர்களின் கதைகள் ஏற்கனவே சிலமுறை திரைப்படமாக்கப்பட்டவை. ஒவ்வொருவரைக் குறித்தும் தனித்தனியாகவே திரைப்படமாக்கப்பட்டிருக்கின்றன. அவை பெரும்பாலும் நாயக வழிபாட்டுத்தன்மை கொண்டவை. ஆனால் மைக்கேல் மான் கவனமாக நாயக வழிபாட்டுத்தனத்தைத் தவிர்த்திருக்கிறார். அதே சமயம் அவர்களை முட்டாள்களாகவோ, அரக்கர்களாகவோ சித்திரிக்கவில்லை. அதைப் போலவே ஜான் டிலிங்கரைத் தொடர்ந்து துரத்தி வேட்டையாடும் மத்தியப் புலன் விசாரணைத் துறை(FBI) அதிகாரியான மெல்வின் பர்விஸையும் ஒரு நாயகராகவோ, மாறாக இழிவானவராகவோ சித்திரிக்கவில்லை. நேர்த்தியாக, வழக்கமான கருப்பு-வெள்ளைச் சட்டகத்திலிருந்து வெளியேறி  குளிர்ந்த கண்ணோட்டட்த்தில் ஒரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார் மைக்கேல் மான்.

கடைசிக் காட்சியில் ஜான் டிலிங்கர் சுட்டுக் கொல்லப்படும்போது நமக்கொரு இரக்க உணர்வு எழாததே மைக்கேல் மானின் வெற்றி. ஆனால் வழக்கமாகக் குற்ற்க் கூட்டத்தினர் பற்றிய (Gangster films) திரைப்படங்களையோ, போலிஸ் மைய, துப்புத் துலக்கும் கதைத் திரைப்படங்களையோ பார்த்து ரசிப்பவர்களுக்கு இது ஒரு குறைபாடாகத் தெரியலாம். வெற்றி பெற்றது யாரென்பதல்ல் இதில் இலக்கு,  இதில் முக்கியமாகக் காட்சிப்படுத்தப் படுவது அதுவேயில்லை. அந்தவிதத்தில் இது கொள்ளையர்களைப் பற்றிய திரைப்படங்களில் ஒரு பெரும் பாய்ச்சல்.  டிலிங்கரைப் பொறுத்த வரை சிறு வயதிலிருந்தே எதிர்ப்பு குணமும், கெடுதியை நாடும் ஊக்கமும், எளியாரைத் துன்புறுத்தும் குணமும் கொண்டவன் அவன் என்பது உணமை என்றாலும்,  இது சிறுவயதிலிருந்தே ஒரு மனிதனிடம் காணப்படுவதற்குப் புற்க் காரணங்களும் உண்டு.  அவன் வளர்ந்த பிறகு அவனாலும் தீமை விளைகிறது,  நிறுவனங்கள், சமூகம் ஆகியனவும் தம் பிழைகளாலோ, குறைகளாலோ,  அமைப்பின் பின்னுள்ள வரலாற்று சக்திகளாலோ பல விதங்களில் தாமும் தீமை பெருகிக் காட்டுத் தீயாகக் கொழுந்து எரியக் காரணமாகின்றன.   இந்த இடைவெட்டில், தனிமனிதன் என்ற உள் முரண்பட்ட ஒரு மனித-விலங்கு காலத்தின் இழுபறிகளில் சிதைவதைக் காட்ட மனவலு வேண்டும்,  அதைக் காணவும்தான்.

ஒழுக்கப்பார்வையும் கருத்தியல் சார்புக்ளும்

நாகரிக சமுதாயங்களில் ஒழுக்கம் குறித்த இறுகலான பார்வை கொண்ட மனிதர்கள் வழக்கமாக அதிகம் அதிகாரம், பதவி, மேலும் உயர் நிதி நிலைகளில் இருப்பார்கள்.  இவர்களில் ஒரு சாரார் தாம் மேலேறுவதற்காக எந்த வழிமுறையையும் பயன்படுத்தினாலும், அதே வழிகளை வேறு எளிய நிலை மனிதர் பயன்படுத்தி மேல் நிலைகளை அடைய முயல்வதைப் பெருங்குற்ற்மாகப் பாவிப்பதோடு அத்தகைய மனிதரை ஒடுக்க என்ன கடுமையையும் கைக் கொள்வது தமது பிறப்புரிமை என்பது போல பொதுவில் நிலைபாடு எடுப்பர்.

இது ஏதோ வல்து சாரி/ பிற்போக்கு அரசியலாளர் மனோபாவம் என்று சில ’முற்போக்கினர்’  இழிவாகப் பார்க்குமுன் ஒன்று சொல்ல வேண்டி இருக்கிறது.  இதே போன்ற மனிதரை இடது சாரியிலும் ஏராளமாகக் காண்லாம்.  இது அரசியல் சார்பு பொறுத்த் மனோபாவம் இல்லை.  இது அமைப்பு, அமைப்புக்குப்  பொருந்தாத வெளியாள்கள் என்ற வகைச் சட்டகத்திலெயே இரு துருவ அரசியலாளராலும் பார்க்கப் படும்.  அமைப்புகளுள் மனிதர் பொருந்தி இயங்காமல் இருக்கப் பல காரணங்கள் உண்டு.  துறவிகளும் அமைப்புக்கு வெளியே நிற்க விரும்புப்வரே.  பல ரொமாண்டிக் கவிஞர்களும்,  தீவிர சிந்தனைக்காரர்களும் அப்படிப் பட்டவரே.   மன நோயாளிகளில் பலரும் இத்தகைய உந்துதல் கொண்டவர். ஆனால் ஒரு சிறு அளவு மனிதர்களே இத்தகைய சமூக ஒவ்வாமை உள்ளவர்களில் ‘பொது எதிரிகளாக’  வடிவெடுக்கிறார்கள்.  இவர்கள் சிறு குற்றங்களிலேயே உழல்வோரும் உண்டு,  நாட்டு அதிபர்களும் உண்டு.  (ஸ்டாலின், ட்ராட்ஸ்கி, லெனின்,மாவொ, சௌசெஸ்கு, கிம் ஜாங் இல், பொல்பாட், இடி அமின், டுவாலியே,  பினொசெ, ஹிட்லர்,  ஃப்ராங்கோ இப்படிப் ‘பெரும் தலைவர்கள்’ நட்சத்திர நாயகர்கள் எனக் கருதப்படும்  பலர் இத்தகைய குற்றவாளிகளே. )பெருந்தனமோ, வறுமையோ குற்றம் நாடிச் செய்யும் மனோபாவத்தைத்  தடுப்பதில்லை.  குற்றச் செயல் விருப்பம் என்பது ஏன் எழுகிறது என்பதைக் குறித்து அரசியல் கருத்திய்லாளர் ஏதேதோ கோட்பாடுகளைக் கொண்டு இயங்கி அரசியல் அரங்கில் பெரும் கூச்சலை எழுப்பினாலும்,  இன்றைய தேதியில் இதற்குச் சரியான காரண விளக்கம் இல்லை என்பதே நிலை.

பணத்துக்குக் கொல்பவர்கள் மிருகங்கள், கருத்தியலுக்காகக் கொல்பவர்கள் தியாகிகள் என்று கொள்வது  ஒரு வழக்க்மாகி இருக்கிறது.  இரண்டாம் வகையிலும் ஏராளமானவர்கள் மிருகத்தொத்தவர்களே என்பது நாம் கருத வேண்டிய ஒரு நிலைபாடு.

ஒழுக்கப் பார்வை இறுக்கமும் இல்லாது, க்ருத்தியல் சந்தர்ப்ப வாத மோசடியும் இல்லாது விமர்சன் எதார்த்தப் பார்வையில், மனித அபிமானத்தோடு பார்த்தல் கடினம் .  அதை அடையும் பாதையும் கடின்ம்; அடைந்து விட்டாலும் பிறர் அங்கீகார்அம் பெறுவதும் கடினம்.  பிறருடைய சார்புநிலைகளின் உணர்ச்சி வெள்ளத்தில் அடித்துப் போகப்படாமல் தெளிந்த பார்வை, கருத்து நேர்மை ஆகியவற்றோடு எதார்த்தததைக் காண்பது அதை விட மிக்க் கடினம்.  ஆனால் அதை அடைய முயல்வது அப்படி ஒன்றும் இயலாத செய்ல் அல்ல.  ஒரு ஹாலிவுட் இயக்குந்ர் இப்படி ஒரு நிலையை அடைய முய்ல்வார் என்று நாம் எதிர்பார்க்க முடியாத ஒன்று என்பது அனேகமாக திரைப்பட ரசிகர்கள் எவரும் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒரு உண்மை.  ஆனால் மான் அப்படி ஒரு குளிர்ந்த, விலகிய பார்வையை இப்படத்தில் அடைய முயன்றிருக்கிறார் என்பதுதான் இப்படத்தின் சிறப்பு குணம். அதைச் சொல்லியே இவரைப் பாராட்டும் விமர்சகர்களும் உண்டு, அதைச் சொல்லி இவரை எடுத்தெறிபவர்களும் இருக்கிறார்கள்.

வெகு தெளிவாகவே இப்படிப்பட்ட கொள்ளையர்களை நாயகப்படுத்துவதில்லை என்று முடிவெடுத்து இயக்கியிருக்கிறார் மைக்கேல் மான். Public Enemies என்று வெளிப்படையாகப் பெயர் வைத்துவிட்டதே இதற்கொரு சான்று. முதல் காட்சியில் தன்னுடன் சிறையிலிருந்து தப்பித்து வரும்போது  வண்டிச் சக்கரத்தில் சிக்கிக் குற்றுயிராகும் நண்பனைக் காப்பாற்ற முயற்சி செய்து தோல்வியடைகிறான் ஜான் டிலிங்கர். ஆனால் அது குறித்து அவன் கண் கலங்கி அழுவதில்லை. கோபத்தை இன்னொரு நண்பன் மீது திருப்பி அவனைக் கொலையும் செய்கிறான். பெரும் நாயகனாகக் கொண்டாடப்பட்ட பேபி ஃபேஸ் நெல்ஸனாக ஸ்டீஃபன் க்ரஹாம் என்ற நகைச்சுவை நடிகரை நடிக்க வைத்திருக்கிறார் மான்.

அசலும், நகலும் - ஜான் டிலிங்கர், ஜானி டெப்

அசலும், நகலும் - ஜான் டிலிங்கர், ஜானி டெப்

முக்கிய பாத்திரத்தில் கொள்ளைக்காரனான ஜான் டிலிங்கராகச் செய்திருப்பது ஜானி டெப். இது ஜானி டெப் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம். இப்படத்தையும் அவர் பொன்னாக்கியிருக்கிறார். சிறப்பான, உள்ளார்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜானி டெப் நன்கறியப்பட்ட நடிகராக இருந்தாலும், ஜானி டெப் மறைந்து நமக்குக் காணக்கிடைப்பவர் ஜான் டிலிங்கரே.  டிலிங்கருக்கு இணையான முழுமையுள்ள கதாபாத்திரம் புலன் விசாரணை அதிகாரி (FBI detective) மெல்வின் பர்விஸாக ‘க்ரிஸ்டியன் பேல்’ என்ற இன்னொரு பிரபல ஹாலிவுட் நாயகர் நடித்திருக்கிறார். பல கதாபாத்திரங்கள் ஊடாடும் இக்கதையில் நம் கரிசனத்தைத் தூண்டும் ஒரே ஒரு கதாபாத்திரமாக் உருவாகி இருப்பது ஜான் டிலிங்கரின் காதலியான பிலி ஃப்ரஷெட் (Billie Frechette).  ஜான் டிலிங்கரை நூலிழையில் தவறவிடும் ஒரு FBI அதிகாரி அந்தக் கோபத்தையும், எரிச்சலையும் பிலி ஃப்ரஷெட் மீது காண்பிக்கிறார். கடுமையான பல சோதனைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளாகும் பிலி ஃப்ரஷெட் நேர்மையான அதிகாரியான மெல்வின் பர்விஸால் காப்பாற்றப்படுகிறார். பல பிரபல ஹாலிவுட் நடிகைகளும் நடிக்கப் போட்டியிட்ட இக்கதாபாத்திரம் இறுதியில் ஃப்ரெஞ்ச் நடிகையான மாஹியோன் குடியாஹ்ட் (Marion Cotillard) -டுக்குக் கிடைத்தது. கிடைத்தது சரியென்று நடிப்பால் நிரூபித்திருக்கிறார் .

டிஜிடல் ஒளிப்பதிவு இத்திரைப்படத்துக்கு சிறப்பாகக் கை கொடுத்திருக்கிறது. குறிப்பாக டிலிங்கர் தன் நண்பர்களோடு தங்கியிருந்த பொஹிமியன் விடுதிக் காட்சி இரவில் படம் பிடிக்கப்பட்டாலும், பிற திரைப்படங்களின் இரவுக் காட்சி போலில்லாமல் இயல்பான வெளிச்சத்தில் இருக்கிறது. (இந்த பொஹிமியன் விடுதி இன்னும் அப்படியே குண்டுகள் துளைத்த ஜன்னல்களோடு பராமரிக்கப்பட்டு வருகிறது. பிரபலமான சுற்றுலாத்தளமாக்கி நல்ல காசு பார்த்து வருகிறார் விடுதி உரிமையாளர்).

சந்தையும் சிந்தனை வளமும்

‘பப்ளிக் எனிமீஸ்’ ஒரு பெரும் முதலீட்டுப் படம். புதுத் தொழில் நுட்பமான டிஜிடல் படப்பிடிப்பில் முழுதும் தயாரானது. பெரும் முதலீட்டில், அதுவும் ஹாலிவுட்டில் கலைப்படம் எடுக்க முடியுமா? பெரும் செலவில் எடுக்கப்பட்ட டேவிட் லீனின் ‘லாரென்ஸ் ஆஃப் அரேபியா’ (Lawrence of Arabia) ஒரு பெரும் சாதனை. கலைக்கும் வணிகத்துக்கும் இடையில் ஒரு மெலிய கோட்டில் திறமையாகப் பயணித்தது. 1980களின் நடுவில் வெளி வந்த  ‘ப்ளேட் ரன்னர்’ (Blade Runner), ‘ஏலியன்’ (Alien) இரண்டுமே பெரும் செலவுப் படங்கள். அவை ஒரு வகைத்தான படங்களில் (genre films) சாதனைகள்தான். எத்தனையோ பெரும் செலவுப் படங்களில் கைவிரலில் எண்ணக் கூடியவைதான் இப்படித் தேறுகின்றன என்பதை வைத்துப் பெரும் செலவு என்பது கலை நேர்மையைக் குலைக்கும் என்று வேண்டுமானால் கருதலாம். மீற முடியாதது என்றில்லை, மீறுவது கடினம் என்பதுதான் தெளிவு.

உலகில் பல் நாடுகளைப் போலவே அமெரிக்கச் சந்தையும் அனேகமாக ’அறிவாளிகளுக்கு’ எதிரான சந்தைதான். அங்கே பல்கலைக் கழகங்களிலேயே கூட இப்போது இந்த அறிவு எதிர்ப்புச் சந்தை குணம் மேன்மேலும் பரவி வருகிறது என்றும், இன்னொரு புறம் நிறைய அரசியல் சார்பு எதிர்பார்க்கும், கருத்து வளம் வறண்ட முரட்டு வாதம் (fundamentalism/ dogmatism) பரவி வருகிறது என்றும் பல்கலைகளில் இருக்கும் அறிவுஜீவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நடத்தப்படும் பத்திரிகைகளிலேயே படிக்கக் கிடைக்கிறேன். எனவே அங்கு சந்தையிலும், நிறுவனங்களிலும், அரசியலிலும், ஊடகங்களிலும், மேலும் பல்கலைகளிலுமே அறிவுஜீவித்தனம் எதிர்க்கப்படுகிறது என்பது ஒரு நிதர்சன நிகழ்வாகிப் போயிருக்கிறது. இன்றைய நிலையை உத்தேசித்துப் பார்த்தால் இது ஒரு விசித்திரப் போக்கு.

வேறெப்போதையும் விட, முதலியம் பெரும் சிக்கலில் ஆழ்ந்திருக்கும் தற்காலத்தில், இனி அது மறுபடி உயிர்த்து வர அதற்குத் தேவை மேலும் மேலும் தீவிரச் சந்தை மனப்பான்மை அல்ல, ஓரளவு அறிவு ஜீவித்தனமான எதிர்காலத்துக்கான தீவிர சிந்தனை. தீவிரச் சந்தை மனப்பான்மை என்று நான் வர்ணிப்பது பிரயோஜனமில்லாத புதிய (ஆனால் உள்ளீட்டில் பழைய) பொருட்களை மேன்மேலும் மலிவு விலைக்குக் கொடுத்து மக்களைத் தேவைக்கதிகமான பொருட்களை எப்படியாவது வாங்க வைத்துக் கடனாளிகளாக ஆக்கும் வழிமுறை. தீவிரச் சிந்தனை என்பது ஏதோ தத்துவம், அரசியலியல், பண்பாடு ஆகியனவற்றில் மட்டும்தான் இருக்கவேண்டும் என்றில்லை. அறிவியல் துறைகள், கணிதம், கட்டிடக் கலை, சூழலியல், உயிரியல்,  பொதுமருத்துவம்,  ஜனத்திரள் கணிப்பாய்வு,  ஏன் package designing இல் கூடத்தான், என்று பல வகைத் துறைகளிலும் அறிவுஜீவித்தனம், வெறும் சந்தை மதிப்பீட்டைத் தாண்டிய – குறுகிய லாப நோக்கை மீறிய சிந்தனையாக போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். அங்குதான் அசாதாரணக் கருத்துகள் உற்பத்தி ஆக வாய்ப்பு உண்டு. சந்தை எப்போதும் நற்பொருளையோ அல்லது எதிர்காலத்துக்கு உதவும் பொருளையோ போஷாக்கு கொடுத்து காப்பாற்றாது. சில நேரம் மிகக் கச்சிதமாக அப்படிப் போஷாக்கு கொடுக்கும். பல நேரம் பாதியாவது போஷாக்கு கொடுக்கும். சில நேரம் மிக உபயோகமான கருத்துகளை, கண்டுபிடிப்புகளைத் தன் மூடத்தனத்தால் கவனியாமல் கிடப்பில் போட்டு மரிக்க விட்டு விடும். சந்தைக்கு மாற்று, உடனடிச் சந்தைப் பார்வையைத் தாண்டிய , தொலை நோக்கும் மக்கள் நலமும் கலந்த செயல்திற்னுள்ள, அறவுணர்வுள்ள பல வகைத் தான ’மரபு’ நிறுவனங்களே என்ற முடிவுக்கு நான் வந்து சில வருடங்களாயின.

இன்றைய இந்திய அரசு பலவிதங்களில் பெரும் வீழ்ச்சிக்(Great Depression காலத்திய அமெரிக்காவின் நிலையில் இருக்கிறது. இந்திய சமூகமும் அதே போன்ற பெரும் அமைதியின்மையில் சிக்கி இருக்கிறது. கூடவே வெளிநாட்டு பகைசக்திகளின் கைக்கூலிக் கூட்டம் வேறு நாடெங்கும் பலவடிவங்களில் ஊடுருவிப் பொய்ப் பிரசாரங்கள் மூலம் மக்களை மதிமயக்கி வருகின்றனர். பெரும்பாலான செய்தி ஊடகங்களிலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் தயாரிக்கப்பட்டவை (fabricated). அந்தத் ‘தயாரிப்புக்குப்’ பின் பல பணம் கொழிக்கும் மத நிறுவனங்களோ, அரசியல் சக்திகளோ இருக்கின்றன. எப்போதுமே இந்தியாவைக் குறித்த ஒற்றை மனப்பான்மையிலான கீழான தகவல்களே உலகின் பிற நாடுகளுக்குத் தரப்பட்டுவருகின்றன.

பெரும்பாலும் இந்தியாவைக் கீழாகச் சித்தரிக்கும் திரைப்படங்கள் மேற்குலகில் பெரும் ஆதரவையும், வரவேற்பையும் பெறுகின்றன. (சமீபத்திய உதாரணம்: Slumdog Millionaire). ஆனால் அரசியலுக்கெதிராகவும், பிரச்சாரத்துக்கெதிராகவும் கொடிபிடிப்பதாகத் தம்மைக் காட்டிக்கொள்ளும் நம் அறிவுஜீவிகள் இந்த கீழ்த்தரமான சித்தரிப்புகளை விதந்தோதி வரவேற்கிறார்கள்; ஊடகத் திரிபுகளின் பின்னணியிலிருந்து கொண்டு எப்போதும் ஒற்றைப் பரிமாணத்தில் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். மேலும் இந்திய மைய அரசும் அன்றைய அமெரிக்க அரசைப் போலவே செய்வதறியாத சோகை பிடித்த அரசாகவே இதுவரை இருந்திருக்கிறது. இதெற்கெல்லாம் மேலாக அமெரிக்கா சந்திக்காத இன்னொரு துன்பமான, அன்னிய நிறுவனங்கள் உதவி என்ற பெயரில் நாடெங்கும் ஊடுருவி இந்திய அரசின் மேலாண்மையை உடைத்துச் சிதறடிக்கச் செய்து வரும் பெருமுயற்சியையும் இந்தியா சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இத்திரைப்படம் எழுப்பும் அமெரிக்க அரசியல் நினைவுகளிலிருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளலாம் என்றால், நம் தமிழ் திரைக்கலைஞர்களுக்கும் இத்திரைப்படத்திலிருந்து கிடைக்கக் கூடிய நிறைய பாடங்கள் இருக்கின்றன. தமிழ் சினிமா இப்போது வன்முறையாளர்களை வழிபட்டுக் கொண்டிருக்கிறது. கிராமியத் திரைப்படமென்றாலே வீச்சருவாளைக் கொண்டு சகட்டுமேனிக்கு எல்லாரையும் வெட்டித் தள்ளும் ரவுடிகள் பெருநாயகர்களாக்கப் படுகிறார்கள். பெருநாயகர்களாகப் பொதுமக்களால் பார்க்கப்பட்ட கொள்ளையர்களைக்கூட அனைத்துக் காரணிகளையும் வைத்துப் பார்த்தால்  எதார்த்தமாக எப்படிச் சித்திரிப்பது என்பதை நம் தமிழ் இயக்குநர்கள் இத்திரைப்படத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.  தமிழ்த் திரைப்படங்களில் பெருநாயகர்களிலிருந்து துணை நடிகர்கள் வரை பெரும்பாலானோர் வெறும் நடிகர்களாகவே வந்து செல்வார்கள். திரையில் யார் அதிகபட்ச நடிப்பை வாரிக்கொட்டுவது என்பதில் பெரும் போட்டியே நடக்கும். ஒரு சாதாரண மனிதனாக சித்திரிக்கப்படும்போது கூட  பெரு நாயகனாகவே வில்கி நின்று ஒளிர்ந்து, திரையிலிருந்து நம்மைப் பார்த்து ‘எப்படி நடிக்கிறேன் பார்த்தாயா?’ என்று கேட்பவர்கள்தான் நம் உலக நாயகர்கள். தொடர்ந்து வணிகப் படங்கள், வெற்றிப்படங்களில் நடித்தாலும் கதாபாத்திரங்களாக மட்டுமே எப்படி காட்சியளிப்பது என்று ஜானி டெப், கிறிஸ்டியன் பேல் இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம். இத்தனைக்கும் இவர்கள் எதார்த்தம் என்று வெறும் வறட்டுக் காட்சிகளை நம் மீது திணித்து வயிற்றெரிச்சலைக் கிளப்புபவர்கள் அல்ல.  பெருவணிகப் பட நடிகர்களே.

Comments are closed.