அந்தப்புரம் இந்தப்புறம்

“சீக்கிரமா போப்பா.. ஒம்போது மணிக்கெல்லாம் பஸ் கிளம்பிடும்.”

வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. முன்னால் நீண்டிருந்த சாலை நெரிசலை எப்படியாவது சமாளித்து முன்செல்ல முடியுமா என சீனிவாசன் பரிதவித்தான். வலது பக்கம் காலியாக இருந்த அவசர பாதையை எடுக்கலாம் என கண நொடியில் தோன்றிய ஹீரோயிச நினைப்பை “போலீஸில் சிக்கினால் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டுவிடும்” என அதே ஆறாவது அறிவு வில்லனாக மாறி கைவிடச் செய்தது.

“போலாண்டா கண்ணா, அஞ்சே நிமிஷத்துல உன்ன ஸ்கூல்ல கொண்டு போய் நிறுத்த வேண்டியது எம்பொறுப்பு” என அன்றைய குட்டி பொய்க்கணக்கை போணி செய்து வைத்தான். அவள் அதை நம்பப் போவதில்லை என அவனுக்கும் தெரியும். இப்போதெல்லாம் இவளுக்கு வயதிற்கு மேல் சூட்சுமம் வந்து விட்டது.

நேற்று இரவே வகுப்பு மொத்தமும் ஆம்ஸ்டர்டாமில் இருக்கும் அறிவியல் கண்காட்சிக்கு “ஃபீல்ட் ட்ரிப்” போவதை மனைவி நினைவுபடுத்தியும் வழக்கம்போல் எட்டரைக்கு முன்னால் சீனிவாசனால் கிளம்ப முடியவில்லை.

“இன்னிக்கு நான் போனமாதிரிதான். எனக்கென்ன, போறதுக்குள்ள பஸ் போயிருச்சுன்னா நீதான் என்ன முப்பது கிலோமீட்டர் ஓட்டிட்டுப் போய் நீமோ சையின்ஸ் எக்ஸிபிஷன்ல விடப் போற”,  கோர்ட் மார்ஷல் நீதிபதி போல் கறாராகச் சொல்லிவிட்டு கையில் இருந்த தன்  “டயரி ஆப் எ விம்பி கிட்” புத்தகத்தை மறுபடியும் முகத்துக்கு நேரே நீட்டிக் கொண்டாள். வகுப்பாசிரியை எப்படியும் அவளுக்காகக் காத்திருப்பாள் என்ற குருட்டு நம்பிக்கையில் சீனிவாசன் அடி அடியாய் காரை நகர்த்தி பள்ளி வந்தபோது ஒன்பது மணிக்கு இரண்டு நிமிடம் மிச்சம் இருந்தது. காரை நிறுத்தி அணைத்து பூட்டிவிட்டு, முன்னால் ஓடிய மகளைத் தொடர்ந்து தன் நாற்பது வயது இளந்தொந்தியுடன் மூச்சிரைக்க ஓடினான்.

“என்ன மிஸ்டர் சீனிவாசன், கிளாஸ் ட்ரிப் இருக்குன்னு தெரிஞ்சும் இன்னைக்கும் தாமதமா..” என ஆசிரியை அலுத்துக் கொண்டாள்.

“ஸாரி மிஸ் சென்லி. எதிர்பாராத போக்குவரத்து நெரிசல். அவசரத்தில் அவளுக்கு மழைகோட்டுகூட கொண்டு வரவில்லை”

“அதிதியை என்ன சர்க்கரையிலா செய்து வைத்திருக்கிறீர்கள்?”

முதலில் என்ன சொல்கிறாள் என புரியாமல் “என்ன?” என்று கேட்கும்போதே சீனிவாசனுக்கு பகடி உரைத்துவிட்டது. அதற்குள் “சர்க்கரையிலா செய்து வைத்திருக்கிறீர்கள் உங்கள் மகளை, மழையில் உருகிப் போவதற்கு!” என நக்கல் சிரிப்புடன் பதில் வந்துவிட்டது. ஒன்றும் பெறாத நிகழ்வானாலும்கூட, ஒரு வெள்ளைக்காரியிடம் தன்னைக் அம்மாஞ்சியாக காட்டிக் கொண்டுவிட்டோமே என்ற பழக்கப்பட்ட தோல்வி மனப்பான்மையுடன் இன்னமும் தூறிக் கொண்டிருந்த மழையையும் சபித்துக் கொண்டு சீனிவாசன் காரைப் பார்க்க திரும்பினான். ஆனாலும், எப்போதும் சமயோசிதத்துடன் ஏதாவது பேசும் மிஸ் ஜூலியட் சென்லியை அவனால் மனதுக்குள் மெச்சாமல் இருக்க முடியவில்லை. அதிதியை பற்றி யோசித்துக் கொண்டே அலுவலகத்துக்கு வண்டியை உசுப்பினான்.

oOo

சீனிவாசன் நெதர்லாந்துக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகின்றன. நாகமலை புதுக்கோட்டையில் ஐயர் குடும்பத்தில் பிறந்து ஆச்சார அனுஷ்டானங்களுடன் வளர்ந்தவன். மேலை நாட்டு வாசம் தன் வாழ்வுமுறைக்கு முற்றிலும் புறம்பானது எனத் தெரிந்தும், மன நிறைவான தொழிலும் கை நிறைவான சம்பளமும் கிடைக்கும் இந்த ஊரில் வந்து வாசம் செய்கிறான். ஆனாலும் இங்கே தன் அடையாளத்தை தொலைத்துவிடக் கூடாது என்பதில் அளவுக்கதிகமாய் கவனத்துடன் இருப்பவன். இன்றுவரை வீட்டில் வெங்காயம்/ பூண்டு சேர்க்கமாட்டான். ஆனால் வேலை நிமித்தமாய் பிரயாணிக்கும்போது கிடைக்கும் ஒரே சைவ உணவான பிரெஞ்சு ஃப்ரையின் எண்ணையில் மாமிச வாடை அடித்தாலும் அவை ஒரே எண்ணையில் பொரிக்கப்பட்டிருக்க மாட்டாது என வயிற்றைக் கிள்ளும் பசி சொல்லும் சமாதானத்தை ஏற்றுக் கொள்ளும் நிர்பந்தத்தின் கைப்பிள்ளை. அன்றெல்லாம் குற்ற உணர்வுடன் வீட்டுக்கு வந்து தவறாமல் சந்தி பண்ணிவிடுவான். ஆனால் அதிதியை இந்த அளவுக்கு அவனால் கலாச்சார பிணைப்புக்குள் கொண்டுவர முடிவதில்லை என்பது அவனின் மிகப்பெரிய பிரச்சினைகளுள் ஒன்று.

இந்த வயதிலேயே மேலை நாட்டு வளர்ப்புமுறை கற்றுத் தந்த, ‘என் வேலையில் மூக்கை நுழைக்காமல் போ’ என்கிற சுதந்திரத்தைத்தான் அவள் விரும்புகிறாள். இந்தியா அழைத்துச் சென்றால் தாத்தா பாட்டி ஆசை ஆசையாய் செய்து தரும் இடியாப்பத்தை “ஐ டோன்ட் லைக் திஸ் ஸ்டிக்கி ஸ்டஃப்” என முகத்தில் அடித்தாற்போல் சொல்கிறாள். சீனிவாசனின் அண்ணன் குழந்தைகளுடன் அவளால் சகஜமாக விளையாட முடிவதில்லை. ஒன்று மொழி தடையாயிருக்கிறது. இல்லை இவள் வெடுக் வெடுக் என மனதில் பட்டதை அவர்களிடம் சொல்வதால் இவளை ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால் அவன் மனைவிக்கு ஒரு பொருட்டாகப் படுவதில்லை.

சீனிவாசனின் மனைவி வைஷாலி மும்பை மாட்டுங்காவில் தமிழ் அய்யர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவள் அப்பா சீனிவாசனின் ஊர்க்காரர்தான். மும்பையில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவில் பெரிய பதவியில் இருந்தார். அவள் அம்மா அவர்கள் காலனியில் இருந்த ஆபீசர் க்ளப்பில் பெண்கள் பிரிவு தலைவியாக பல காலம் கொடி கட்டிப் பறந்தார். வைஷாலி படித்தது மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் உளவியல். ஆக சீனிவாசனை ஒப்பிடும்போது வைஷாலி கொஞ்சம் ‘நாகரிகமான’ சூழ்நிலையில் வளர்ந்தவள். இவர்கள் இருவருக்கும் சண்டை வருவதே அதிதியை எப்படி வளர்ப்பது என்பதில்தான். சீனிவாசனின் கண்ணில் அதிதி செய்யும் அதிகப்பிரசங்கித்தனம் எல்லாம் வைஷாலி தட்டி கேட்பதில்லை. அல்லது அவன் தட்டிக் கேட்கும்போது மகளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுவாள். அதே சமயம் வைஷாலி தன் மகளுக்கு வாங்கித் தரும் உடுப்பு சீனிவாசனுக்கு பிடிப்பதில்லை. மனைவிதான் தன் பக்கம் இல்லை. அடுத்த வருடம் ஊருக்குப் போவதற்கு முன்னால் எப்படியாவது மிஸ் ஜூலியட்டுடன் பேசி அதிதியை கொஞ்சம் பதவிசாக நடக்க அறிவுரை சொல்லச் செய்ய வேண்டும். மிஸ் ஜூலியட் சொன்னால் இவள் நிச்சயம் கேட்பாள்.

oOo

அதிதி மூன்றாம் வகுப்புக்குள் நுழைந்த இந்த நான்கு மாதங்களில் ஒரு நாள்கூட தன் வகுப்பாசிரியை பற்றி பேசாமல் இருந்தது கிடையாது. ஜூலியட் சென்லி ஒரு பிரெஞ்சுக்காரி. ப்ரெஞ்சில் ஜூலியட் என்கிற அவர் பெயரை மிஸ் “ஜூலியே” என்றுதான் அழைக்க வேண்டுமாம். அதிதி சொன்னது. மிஸ் ஜூலியட் எப்போதும் கலகலப்புடன் இருப்பவர். தன் ஆங்கிலத்தில் பிரெஞ்சு நெடி மேலோங்கி இருப்பதை அவளே வார்த்தைக்கு வார்த்தை கிண்டலடித்துக் கொள்வாள். என்ன பேசினாலும் அதில் நகைச்சுவையும் கேலியும் இழையோடும். எந்த மாணவரையும் கடிந்ததே இல்லை, சிரிப்புடன் அவர்கள் காலை வாரியே காரியத்தை சாதித்து விடுவார் என அதிதி சொல்லுவாள். எல்லா மாணவருக்கும் பின்னாலிருக்கும் ஊக்க சக்தி. வகுப்பு மாணவர்கள் அமெரிக்க ஆதிவாசிகளை ஆய்வு செய்து ஒரு நாடகம் போட்டார்கள். அதில் பின்னணி இசைக்காக அதிதிதையே நேரடியாக பியானோ வாசிக்க சொல்லிவிட்டார். ரொம்ப கூச்ச சுபாவம் உள்ள எம்மா என்கிற ஸ்காட்லாந்து மாணவியைத்தான் எல்லாருக்கும் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி டேம்போரின் வாசிக்க சொன்னார். அவள் மேடை பயத்தில் ஒதுங்கியபோது கஞ்சிரா மாதிரியான அந்த வாத்தியத்தில் சமத்தில் தாளம் கொடுப்பது மிக சுலபம் என ஊக்கப்படுத்தி தானும் கூடவே கிட்டார் வாசித்தபடி கோரஸ் கொடுத்தார்.

ஒருமுறை குடும்பத்துடன் சீனிவாசன் பார்சிலோனா போனபோது, இரவில் எங்குமே சைவ உணவு கிடைக்காது அல்லோலப்பட்டு கடைசியில் தென்பட்ட ஒரு மெக்டொனால்ட் விரைவு உணவகத்தை அணுகும்போது அங்கே உண்ண அதிதி திட்டவட்டமாக மறுத்துவிட்டாள். கேட்டால், மெக்டொனால்டின் உணவு குளிர் பெட்டியில் வைக்காமலேயே மூன்று நாட்கள் வரைகூட கெடாமல் இருக்கும். அந்த அளவுக்கு ரசாயனங்களால் பதப்படுத்தப்பட்டிருக்கிறது என மிஸ் ஜூலியே போதித்திருக்கிறார். இந்த மாதிரி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை ஒரு போதும் உண்ணக் கூடாது என அறிவுறுத்தியிருக்கிறார். இப்படி மொத்த வகுப்பின் மேல் அவர் ஒரு ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.

oOo

School_Bus_Students_Teacher_Foreign_Class_Kindergarten_Miss

அறிவியல் கண்காட்சியில் மிஸ் ஜூலியே பல மாயாஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அமாவாசை பௌர்ணமி ஏன் வருகிறது, நீராவியால் எப்படி ரயில் இழுக்கப்படுகிறது, நியூட்டனின் மூன்று விதிகள், இன்னும் பல கோட்பாடுகள் என அங்கிருந்த மாதிரிகள் மூலம் செய்து காட்டி வகுப்பினரை வியப்பில் ஆழ்த்தினார். மாணவர் அனைவரையும் தன்னுடன் சேர்ந்து நேரடியாக பரிசோதனைகளை செய்யச் சொல்லி உற்சாகப்படுத்தினார். வகுப்பு மொத்தமும் மந்திரத்தில் கட்டிப் போட்ட மாதிரி புது சங்கதிகளை உள்வாங்கிக் கொண்டிருந்தது. நேரம் போனதே தெரியவில்லை.

பள்ளிக்கு திரும்பும் வழியில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தச் சொன்னார். அனைவருக்கும் தன் செலவில் ஐஸ் க்ரீம் வாங்கித் தரப்போவதாக தடாலென அறிவித்தார். பேருந்து நின்றதுதான் தாமதம். அனைவரும் கோரசாக “ஏ…..!” என கூவிக்கொண்டு ஐஸ் க்ரீம் பார்லரை பார்த்து ஓடினர். “ஒரு பிஸ்தாச்சியோ, ஒரு சிட்ரூன், ஒரு ஸ்ட்ராக்கடெல்லா” என ஆர்டர்கள் பறந்தன.

அனைவரும் கையும் வாயும் ஈஷிக் கொண்டு இவளை சூழ்ந்து “தேங்க் யூ, மிஸ் ஜூலியே” என்றனர்.

“எனக்கு போன வாரம் குழந்தை பிறந்தது. அதற்காகத்தான் உங்களுக்கெல்லாம் ஐஸ் க்ரீம்” என ஜூலியே பெருமிதமாகக் கூறினார்!

செபஸ்டியான் மிஸ்ஸை சந்தேகத்துடன் பார்த்தான், “உங்க வயிறுதான் பெருசாவே ஆகலையே, பின்ன எப்பிடி உங்களுக்கு குழந்தை பிறந்தது?”

“கரெக்ட். குழந்தை பிறந்தது என்னோட பார்ட்னருக்கு..”

இப்போது அதிதி கேட்டாள், “அதெப்படி அப்ப அது உங்க குழந்தை ஆகும்? குழந்தைக்குத்தான் ஒரு கணவனும் மனைவியும் வேணுமே?”

“குழந்த பிறந்தது என்னோட மனைவிக்குத்தான்”

இப்போது ஸானா கேட்டாள், “ஒரு ஆம்பிளையும் பொம்பளையும்தானே கணவன் மனைவியா இருப்பாங்க..”

“நீங்க பெரும்பாலும் பார்ப்பது அப்படித்தான். ஆனா ரெண்டு ஆணோ இல்ல ரெண்டு பெண்ணோகூட கணவன் மனைவியா இருக்கலாம். அதுவும் சகஜம்தான்.”

இப்போது ஜேம்ஸ் சொன்னான், “ஆமாம் மிஸ், எங்க பக்கத்து வீட்லகூட ரெண்டு ஆம்பிளைங்கதான் கணவன் மனைவியா இருக்காங்க. எங்க அம்மா என்கிட்ட அதப்பத்தி ஒருநாள் பேசினாங்க. இது ஒன்னும் அதிசயமான விஷயம் இல்லன்னு சொன்னாங்க”

“கரெக்ட். இதுவும் அதேமாதிரிதான். உலகத்துல பிறந்த எல்லா மனிதர்களும் ஒண்ணுதான். எல்லாரும் தனக்குன்னு ஒரு குடும்பத்த ஏற்படுத்திக்கலாம். ஆனா பிறரைத் துன்புறுத்தாம, அயோக்கியத்தனம் பண்ணாம தன்னோட வழில நியாயமா வாழணும். அடுத்தவங்க என்ன பண்றாங்க, என்ன மாதிரி மனுஷங்களோட வாழுறாங்க இதெல்லாம் பத்தி நம்ம கவலைப்படக் கூடாது. உனக்குக் குடுத்த வேலைய சரியாச் செய்யணும். நாளைக்கி எல்லாரும் இன்னிக்கி பாத்ததிலேயே உங்களுக்கு பிடிச்ச பரிசோதனை பற்றி ஒரு கட்டுரை எழுதிட்டு வரணும். சரியா?”

“சரி மிஸ்.” மொத்த வகுப்பும் தலையாட்டியது.

oOo

மாலையில் பள்ளி பேருந்தை எதிர்பார்த்து சீனிவாசன் காத்திருந்தான். வண்டி ஒரு பதினைந்து நிமிடம் தாமதமாக வந்தது.

“என்னடா கண்ணா, இன்னிக்கி லேட்?” என சீனிவாசன் பூராயமாய் கேட்டான்.

“மிஸ் ஜூலியே எல்லாருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தாங்கப்பா”.

“ஓ வாவ். என்ன விசேஷம்?”

“மிஸ் ஜூலியேக்கு பொண்ணு பொறந்திருக்கா, அதான்.”

கடந்த சில மாதங்களில் அவரை கர்ப்பிணி பெண்ணாக பார்த்த ஞாபகம் சீனிவாசனுக்கு இல்லை. முழு விவரமும் தெரியாமல் இவள் ஏதோ சொல்கிறான் என நினைத்துக் கொண்டு “மிஸ் ஜூலியட்டுக்கா..? அவங்க பாப்பாவோட முதல் பொறந்த நாளா?”

“இல்லப்பா, மிஸ் ஜூலியேவின் மனைவிக்கு போன வாரம் பொண்ணு பொறந்திருக்கா.”

“மிஸ் ஜூலியட்டுக்கு மனைவியா..?” சீனிவாசனுக்கு உள்ளே தூக்கி வாரிப் போட்டது.

“ஆமாம்ப்பா, ரெண்டு பெண்கள்கூட கணவன் மனைவியா குடும்பம் நடத்தலாம், உனக்குத் தெரியாதா ..? மிஸ் ஜூலியேதான் சொன்னாங்க.”

இயற்கைக்கு புறம்பான நியதிகளை விகல்பமே இல்லாமல் தன் எட்டு வயது சொந்த மகள் விளக்கியதைக் கேட்டு சீனிவாசனுக்கு வாந்தி வருவது போல் இருந்தது. என்ன மாதிரியான ஆசிரியையிடம் இவளைக் கல்வி கற்க அனுப்புகிறோம் என தலை சுற்றியது. மீதி வழியில் அறிவியல் அருங்காட்சியகத்தில் மிஸ் ஜூலியேவின் சாகசங்களை அதிதி வியப்புடன் விவரித்துக் கொண்டே வந்தாள். ஆனால் இவன் அதைத் துளியும் கவனிக்கவில்லை. உம்’கூட கொட்டவில்லை. இறுகிப் போய் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தான்.

இரவு உணவு முடிந்து மகள் தூங்கிய பிற்பாடு மனைவியிடம் வந்து ஆற்றாமையை கொட்ட ஆரம்பித்தான்.

“என்ன பொம்பள இவ.. சின்ன பசங்க கிட்டபோய் அவ சொந்த விவகாரம் எல்லாம் தம்பட்டம் அடிச்சிருக்கா. இவ யார்கூட படுத்தா, இல்ல புள்ள பெத்தான்னு இப்போ யாராவது கேட்டாங்களா?”

“இப்போ என்ன ஆச்சு ..?”

“அவ சொல்லலியா? அவ கிளாஸ் டீச்சர் இன்னிக்கி எல்லாருக்கும் ஐஸ் வாங்கி குடுத்துருக்கா, அவளோட பொண்டாட்டி புள்ள பெத்ததுக்கு. என்னா ஊருடா சாமி இது”

two-women

வைஷாலி சிறிது நேரம் மௌனம் அனுஷ்டித்தாள். பின் “உனக்கு ஹோமோஃபோபியா ஸ்ரீநி” என்றாள்.

சீனிவாசனுக்கு மனைவியை அறையலாம் போல் இருந்தது.

“என்ன உளர்ற!”

“பின்ன என்ன? இதே மிஸ் ஜூலியே ஒரு ஆணோட புள்ள பெத்துண்டு தான் அம்மா ஆனத வகுப்போட கொண்டாடியிருந்தா நீ இப்படி தையா தக்கான்னு குதிப்பியா?”

“அதுல என்ன இருக்கு வைஷு, அது கொண்டாடப்பட வேண்டிய விஷயம்தானே?”

“அப்போ இது மட்டும் ஏன் கெட்ட விஷயம்ன்னு சொல்ற”

சீனிவாசனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. “நாளைக்கி நான் பிரின்சிபாலிடம் கம்ப்ளைன்ட் பண்ணப் போறேன்”

“என்னன்னு கம்ப்ளைன்ட் பண்ணுவ?”

“அவ தனிப்பட்ட வாழ்க்கையில எப்படி இருந்தா எனக்கென்ன வைஷு? இதையெல்லாம் போய் பசங்க கிட்டையா போட்டு உடைக்கிறது?”

“ரிலாக்ஸ் ஸ்ரீநி, எனக்கென்னவோ எல்லாரும் ஒண்ணுன்னு இப்போதே அதிதிக்குப் புரிஞ்சது நல்லதுதான். அதுவும் இந்த ஊர்ல இதெல்லாம் சகஜம், இல்லியா? இதனால நீ போய் ப்ரின்சிப்பால எல்லாம் ஒண்ணும் பாக்க வேண்டாம்.”

அன்று இரவு முழுதும் சீனிவாசனுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. நாளை ஹெட்மாஸ்டரிடம் கொடுக்கவிருக்கும் புகாரை மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான்.

oOo

மறுநாள் நேரத்துடன் பள்ளி அசெம்ப்ளி லைனில் அதிதியை கொண்டு போய் விட்டான் சீனிவாசன்.

“குட் மார்னிங் மிஸ்டர் சீனிவாசன்”, அதே கோல்கேட் புன்னகையுடன் மிஸ் ஜூலியட் வணக்கம் சொன்னார்.

சீனிவாசனால் எதுவுமே நிகழவில்லை என்பது போல் பேசிக் கொண்டிருக்க முடியவில்லை. இத்தனை நாள் பார்த்திருந்தும் கடந்து சென்ற மிஸ் ஜூலியட்டின் காது கடுக்கன் இன்று ஏனோ இவனுக்கு வித்தியாசமாக பட்டது. இடது முன்கையில் லூஸி என குத்தியிருந்த பச்சை கண்ணை உறுத்தியது. இவ்வளவு நாளும் இவள் வெளிப்பார்வைக்கே தன்பாலினத்தவள் என தெரிந்தும் சந்தேகிக்காமல் இருந்தோமே என இப்போது அவனுக்கு திடீரென உரைத்தது.

அவளிடம் போய் நேருக்கு நேர், இதையெல்லாம் ஏன் என் குழந்தையிடம் நேற்று விளக்கினாய், என கூச்சல் போடத் தோன்றியது. ஆனால் அசெம்ப்ளியில் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆசிரியைகளும் அணிவகுத்துக் கொண்டிருந்ததால் எதுவும் பேசாமல் பள்ளி அலுவலகம் நோக்கி நடந்தான். எப்படியாவது பிரின்சிபாலிடம் புகார் கொடுத்து, குறைந்த பட்சம் அதிதியை வேறு செக்ஷனுக்கு மாற்றி விட வேண்டும். பிரின்சிபாலின் அறை காலியாக இருந்தது.

“ப்ரின்சிபால் இல்லையா?” எதிரே தென்பட்ட ஆசிரியையிடம் கேட்டான்.

“இல்லை. அவருக்கு உடம்பு சரியில்லை. நாளை வருவார்”

மறுநாள் எப்படியும் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என கறுவிக்கொண்டு வேலைக்குச் சென்றான்.

அலுவலகத்தில் அவனுக்கு வேலையே ஓடவில்லை. மார்நிக்ஸ்ஸிடம் போய் நியாயம் கேட்கத் தோன்றியது. மார்நிக்ஸ் இவனோடு ஒரே பிரிவில் எட்டு வருடங்களாக வேலை பார்க்கும் சக ஊழியன். ஓரளவு நண்பனும்கூட. சாதுவான டச்சுக்கார வெள்ளையன். தீவிர கிறித்தவன். தினம் மதிய உணவுக்கு சேர்ந்துதான் போவார்கள். மார்நிக்ஸ் முன்னும் பின்னும் பிரார்த்தித்த பின்னரே உண்ணுவான்.

அன்று கேண்டீனில் தன் மகளின் ஆசிரியை பற்றி அவனிடம் சீனிவாசன் கொட்டித் தீர்த்தான். மார்நிக்ஸ் ஒரு பெருமூச்சுடன் “வெல்கம் டூ ஹாலண்ட்” என்றான். தன் மதத்தில் நிராகரிக்கப்பட்ட எந்த விஷயத்திலும் தனக்கு உடன்பாடு இல்லை, தனிப்பட்ட முறையில் தற்பாலின சேர்க்கையை அவன் அங்கீகரிப்பதில்லை, தன் சமூகத்து பள்ளியில் இப்படி ஒரு ஆசிரியை இருந்தால், தன் சக்திக்கு உட்பட்டிருந்தால், அவரை வேலையிலிருந்தே நீக்கி இருப்பேன் என்றான். ஆனால் இந்த நாட்டில் அரசின் இன, பால் சார்பற்ற விதிகள் அதற்கு வழி வகுக்காது என அங்கலாய்த்தான். அதிதியை வேறு வகுப்புக்கு மாற்றுவதுதான் சரியான தீர்வு என சீனிவாசனுக்கு வழிமொழிந்தான். சீனிவாசனுக்கு மனது லேசானது.

மாலை வீட்டுக்கு வந்ததும் வைஷாலி கேட்ட முதல் கேள்வி “ப்ரின்சிப்பால போய் பாத்து கீத்து வைக்கலயே?”.

“இல்ல. அவர் இன்னிக்கி இல்ல. நாளைக்கி எப்படியும் போய் பேசி இவள வேற செக்சன் மாத்திடப் போறேன்”

வைஷு இவனை ஒரு கற்கால மனிதனை பார்ப்பது போல் பார்த்தாள். “ஏன் உனக்கு இந்த வேல, இவளுக்கு மிஸ் ஜூலியே எவ்வளவு பிடிக்கும்னு உனக்கே தெரியும். நீ என்னவும் நெனச்சிட்டுப் போ. அதுக்காக எம் பொண்ணு ஸ்கூலிங் பாழாப்போக நான் விடமாட்டேன். மிஸ் ஜூலியே மாதிரி வேற ஒரு நல்ல டீச்சர் எங்கயுமே கிடைக்க மாட்டாங்க.”

நேற்றிலிருந்தே சீனிவாசனுக்கும் மனதில் கொஞ்சம் குற்ற உணர்ச்சி இருந்தது உண்மைதான். ஒட்டுமொத்த நெதர்லாந்தும் அவ்வப்போது அவனுள்ளே தூங்கி கிடக்கும் கையாலாகத்தனத்தை சீண்டி பார்ப்பதைப் போல அவனுக்கு ஒரு எண்ணம். அதை இப்போது உணர்ந்தான். அதுவும் இவ்வளவு நல்ல டீச்சர் போயும் போயும் இப்படி இருக்காளே என்கிற ஆதங்கம். அதை மேலும் வைஷாலி வெளிச்சம் போட்டுக் காட்டுவதை அவன் விரும்பவில்லை.

வைஷாலிக்கும் அது நன்றாக புரிந்தது. “நீ ஒரு ஆள் மட்டும்தான் உலகத்திலேயே பேரன்ட்டா.. வேணும்னா ரவி என்ன சொல்றாருன்னு கேட்டுப் பாக்க வேண்டியதுதானே”

சீனிவாசனுக்கும் அது சரியாகப்பட்டது. ரவியும் இங்கே வசிக்கும் ஒரு தமிழ்காரர். இங்கே இன்னும் பல காலங்களாக வசிப்பவர். வயதில் சீனிவாசனுக்கு ஒரு நாலைந்து வயது மூத்தவர். இந்த ஊருக்கு வந்த புதிதில் சீனிவாசன் குடும்பம் குடியேற மிகவும் உதவி செய்தவர். அவர் அதிதியை இந்த பள்ளியில் சேர்த்ததே அதிதியின் வயதையொத்த ரவியின் மகன் அதே பள்ளியில் ஏற்கனவே படித்துவந்ததால்தான். .

உடனே தொலைபேசியில் ரவியை அழைத்தான். சம்பிரதாய குசல விசாரிப்பைத் தொடர்ந்து சீனிவாசன் விஷயத்துக்கு வந்தான். “ஏன் ரவி, இந்த ஜூலியே ஒரு மாதிரி பொம்பளயாமே, நாளைக்கிப் போய் ப்ரின்சிப்பால்கிட்ட பேசி அதிதிய செக்சன் மாத்தப் போறேன். நீங்களும் சேந்து வந்தீங்கன்னா கேஷவ்வையும் சேத்தே மாத்திடலாம்.”

“ஹே. என்னப்பா இதுக்குப் போய் இப்படி பொலம்புற. இதுதான் எனக்கு முன்னாடியே தெரியுமே.”

“என்னது.. உங்களுக்கு தெரியுமா.. உங்ககிட்ட சொன்னாளா ?”

“இல்லப்பா.. பராபரியா அங்க இங்கே காதுல விழுந்ததுதான். இந்தம்மா பிரெஞ்சுக்காரி. அந்த ஊர்ல இவ்வளவு நாளா ஓரினச் சேர்க்கைக்கு சட்டபூர்வமா அங்கீகாரம் இல்ல. இதோட பார்ட்னர் லூஸின்னு ஒரு ஐரிஷ் பொம்பள. பிரான்ஸ்ஸாவது இப்ப பரவாயில்ல. சோஷியலிஸ்ட் பார்ட்டி ஆட்சிக்கு வந்து சட்டத்த எல்லாம் இவாளுக்கு சாதகமா மாத்தியிருக்கா. ஆனா அந்த ஊர்ல எல்லாரும் தீவிர கிறிஸ்டியன்ஸ். இந்த மாதிரி பைபிளுக்குப் புறம்பான விஷயத்த எல்லாம் கடுமையா எதிர்ப்பாங்க. உனக்குக்கூட தெரியுமே, இப்பத்தான் கொஞ்ச நாள் முன்னாடி நம்ம ஊர் பல் டாக்டர் ஒருத்தங்க தன்னோட பிரசவத்துல மருத்துவ அவசரம்னு தெரிஞ்சும் டாக்டருங்க மதத்துக்கு புறம்பான விஷயம்னு அபார்ஷன் பண்ண விடாம தடுத்து கடசில தாயும் புள்ளையும் இறந்துட்டாங்களே.. அதான் ஜூலியட்டும் அவ பார்ட்னரும் கல்யாணம் பண்ணிக்க இங்க சமூக, சட்டத் தடை எதுவும் இல்லன்னு வந்து ரொம்ப காலமா குடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்காங்க”

“இருந்தாலும் ரெண்டு பெண்கள் எப்படி குழந்த பெத்துக்க முடியும் ரவி..”

“யாரவது ஒருத்தர் ஒரு ஸ்பெர்ம் டோனர் மூலமா செயற்கையா கருத்தரிச்சிருப்பா.. இப்போ அதுவெல்லாமா முக்கியம்?”

“கேக்கவே சகிக்கல ரவி. இந்த மாதிரி சமயத்துல எல்லாம் நான் ஊர்லையே இருந்திருக்கலாம்னு தோணுது”

“ஏன், இந்தியால இதெல்லாம் இல்லன்னு நெனக்கிறியா. நம்ம ஊர்லையே இப்பெல்லாம் இது ஒரு பெரிய விஷயமே இல்ல. கொஞ்ச கொஞ்சமா இந்த மாதிரி மக்கள் எல்லாம் வெளில வர்றாங்களே. மூணு வருஷம் முன்னாடி டெல்லி ஹை கோர்ட்டே இது ஒன்னும் குத்தம் இல்லன்னு டீ-க்ரிமினலைஸ் பண்ணியாச்சே. உங்க நாகமல புதுக்கோட்டையிலேயே தெருவுக்கு நாலு பேரு இந்த மாதிரி தேடினா கெடப்பாதாண்டா. அங்க பெரும்பாலும் யாரும் வெளில சொல்றதில்ல. அவ்வளவுதான் வித்தியாசம்.”

“இருந்தாலும், குழந்தைகள்கிட்டல்லாம் இதப்பத்தி யாரவது பேசுவாளா..?”

“இதப்பார்றா, இந்த காலத்து குழந்தைகள் எல்லாம் ரொம்ப ஃபாஸ்ட். இப்போ என்ன கேஷவ்வுக்கோ அதிதிக்கோ இதெல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு நெனச்சிண்டு இருக்கியா?

“தன்னோட டீச்சரே இப்படிங்கும்போது, அவங்க மனசுல வேண்டாத நெனப்பெல்லாம் வரலாம் இல்லையா?”

“போடா முட்டாள். வைஷாலி உன்ன ஹோமோஃபோபிக்ன்னு சொன்னது சரியாத்தான் இருக்கு. இந்த தன் பாலின சேர்க்கைங்குறது இந்த மாதிரி காரணங்களாலெல்லாம் வர்றது இல்ல. அது ஒவ்வொருத்தருக்கும் இயல்பா வர்றது. ஒரு பொண்ணு பெரிய மனுஷி ஆறது தன்னால நடக்குற மாதிரி இந்த மாதிரி மக்கள் எல்லாம் ஒரு தருணத்துல இதைத் தன்னால உணர்றதுதான். ஒருத்தர் இப்படித்தான் ஆகணும்னு இருந்தா அத நீ இந்தியா திரும்பிப் போறதால மட்டும் தடுத்துற முடியாது. மிஸ் ஜூலியட் ரொம்ப நல்ல டீச்சர். பசங்க அவ மேல உயிரா இருக்காங்க. அவளும் பாடமும், பாட்டும், ஸ்போர்ட்ஸும் நல்லா கத்துத் தர்றா.. இதுக்கு மேல அவ எந்த மாதிரியான ஆளுன்னு எல்லாம் எதுக்கு கவலைப்படணும்? நீ பாட்டுக்கு போய் பிரின்சிபால பாத்து கம்ப்ளைன்ட் பண்ணாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல. இந்த ஊருல இந்த காரணத்துனால எல்லாம் செக்சன் மாத்தி கேட்டயானா அது நடக்காது. உனக்குத்தான் தேவ இல்லாம கெட்ட பேரு வரும்.”

இப்போது சீனிவாசனுக்கு இன்னும் குழப்பமாக இருந்தது. இந்த ரவி எல்லாமே தெரிந்து எப்படி ஸ்திரமாக முடிவெடுக்கிறார் என ஆச்சர்யம் வந்தது. ஒருவேளை தன் நினைப்புத்தான் தவறோ என மேலும் மேலும் பட்டது. அன்று மாலைவரை தெளிவாக மார்நிக்ஸ் கட்சியில் இருந்தவன், இப்போது பெரும் மன உளைச்சலுக்கு ஆளானான். விருப்பத்துக்கு மாறாக வேறு ஒரு நிலைப்பாட்டை யாரோ ஒருவர் கட்டாயப்படுத்தி எடுக்கச் சொல்வதை போல தோன்றியது. ஒரு வகையான தோல்வியே என்றாலும் இப்போதைக்கு இந்த விவகாரத்தை ஒத்திப்போடும் ஒரு சுலபமான தப்பிக்கும் வழியையே மனம் நாடியது.

oOo

மூன்று மாதங்களுக்குப் பின்னர் வைஷாலியின் தம்பிக்கு சென்னையில் திருமணம். அதிதிக்கு மிகவும் பிடித்த மாமா என்றாலும் இந்தியா வர அரை மனதுடன்தான் ஒப்புக் கொண்டாள். மிஸ் ஜூலியட்டின் வகுப்புக்களை இழக்க வேண்டிவருமே என்பதைத் தவிர காரணம் வேறில்லை. பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம் இருந்ததால் தடுப்பூசி போட்டுக்கொள்ள சீனிவாசன் குடும்பத்துடன் ஆஸ்பத்திரி போயிருந்தான். அங்கே மிஸ் ஜூலியட் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் அவர் துணைவியும் குழந்தையின் தள்ளுவண்டியும். வைஷாலிக்கும் அதிதிக்கும் சந்தோஷம் தாங்காமல் உடனடியாக குழந்தையைப் போய் கொஞ்சினார்கள். அதிதி தள்ளுவண்டியின் இடது வலதாக ஓடி ஓடி குழந்தையுடன் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தாள். திடீரென ஓடிவந்து அப்பாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.

“பாருப்பா, குழந்த எவ்ளோ க்யூட்டா இருக்கு!”

சீனிவாசன் எட்டிப் பார்த்தான்.

குழந்தை கூடைக்குள்ளிருந்து பெரிய கண்களை உருட்டி உருட்டி மேலே சீனிவாசனைப் பார்த்துக் கொண்டிருந்தது.

0 Replies to “அந்தப்புரம் இந்தப்புறம்”

  1. காலத்துக்கேற்ற கட்டுரை. இந்த மாதிரி விஷயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதும், கலாச்சாரம் பண்பாடு எனப் பேசிக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய உலகில் போது விவாதங்களில் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதும் இதுபோன்ற கதைகளின் களமாக எடுத்துக்கொள்ளப்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.