kamagra paypal


முகப்பு » இசை

ஏழு ஸ்வரங்களைக் குறித்த சில இருத்தலியல் கேள்விகள்

dikshitarமுத்துஸ்வாமி தீக்ஷிதர் பிரிட்டிஷ் தேசியகீதமான “God save the Queen”-ஐ “சந்ததம் பாஹிமாம்” என்ற கர்நாடக சங்கீதக் கீர்த்தனையாக மாற்றியபோதும், ஹிந்துஸ்தானியின் சிறப்பியல்பான மீண்டுகளைத் (Meend) தன்னுடைய “நீலோத்பலாம்பிகாயாம்” என்ற பூர்வகெளளை ராகத்தில் அமைந்த கீர்த்தனையில் உபயோகித்தபோதும் 19-ஆம் நூற்றாண்டின் படைப்பூக்கம் அதன் உச்சத்தில் இருந்திருக்க வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். முத்துஸ்வாமி தீக்ஷிதரைப் (1775 – 1835) போன்ற மார்க்கதரிசிகள் நாம் நம் கலையில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், அக்கலையின் எல்லைகளை விரிவாக்கவும், மறு பரிசீலனை செய்யவும், மறு வரையறை செய்யவும் உத்வேகம் அளிப்பவர்களாக இருக்க வேண்டும். தற்போதைய நூற்றாண்டின் சில வருட வரலாறு சொல்வது போல, கர்நாடக சங்கீதம் இன்னும் முக்கியமான கலையாகவும், நம்மைப் போன்ற சிலருக்கு ஜீவ சக்தியாகவும் விளங்குகிறது. ஆனால் நாம் இக்கலையைக் குறித்து தள்ளி நின்று பார்க்கும்போது அதன் பரிணாம வளர்ச்சியை நம்மால் அனுமானிக்க முடிகிறதா? இக்கலையின் பரிணாம வளர்ச்சியை நாம் எப்படி முன்னேற்றப் போகிறோம்? இக்கலை நீடித்து நிலைத்திருக்கும்படி நாம் ஏதாவது செய்ய முடியுமா? இக்கலைக்கு நம்மால் சமகாலத்தன்மை (contemporize) தரமுடியுமா?

எந்த ஒரு மரபார்ந்த விஷயத்தின் பரிணாம வளர்ச்சியிலும் ‘புத்தாக்கம்’ (innovation) முக்கியமானதொரு பங்கு வகிக்கிறது. என்னைப் பொருத்தவரை மரபுவழி, புத்தாக்கம் இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். புத்தாக்கச் செயல்கள் இயல்பானவையாகவும், அர்த்தமுடையவையாகவும், உள்ளுணர்வு சார்ந்ததாகவும், வலிந்து திணிக்கப்படாமலும் இருக்கும்போது அவை காலப்போக்கில் மரபாகிப் போகின்றன. செஸ் விளையாட்டில் மிக்காய்ல் தால், இயற்பியலில் ஐசக் நியூட்டன், கணிதத்தில் ஸ்ரீனிவாஸ ராமானுஜன், மேற்கத்திய செவ்வியலில் J.S.பாஹ், கர்நாடக சங்கீதத்தில் முத்துஸ்வாமி தீக்ஷிதர் போன்ற புத்தாக்கச் சிந்தனையாளர்கள், தத்தம் துறைகளில் மிகப்பெரும் முன்னேற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறார்கள்; மரபின் எல்லைகளை மறு வரையறை செய்திருக்கிறார்கள்.

புத்தாக்கச் சிந்தனையாளர்கள் எப்போதுமே கண்டனக் குரல்களைச் சந்தித்தவர்களாகவே இருக்கிறார்கள். கலிலியோ வேறு யாரைக் காட்டிலும் கடுமையான கண்டனக் குரல்களைச் சந்தித்தவர். ஆனால் வரலாறு இப்படிப்பட்ட சிந்தனையாளர்களுக்கு எப்போதுமே இனிமையாக நடந்து கொள்கிறது. பல வருடங்களாக க்வாண்டம் இயக்கவியல் (Quantum Mechanics) எள்ளி நகையாடப்பட்டிருக்கிறது; நிலைநாட்டப்பட்ட கோட்பாடுகளைக் கொண்ட மரபார்ந்த இயற்பியல் (classical physics) மீதான தாக்குதலாகவே அது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 20-ஆம் நூற்றாண்டின் இயற்பியலில் க்வாண்டம் இயக்கவியல் மிகப்பெரும் மாறுதலைக் கொண்டுவந்தது என்று இன்று நமக்குத் தெரியும். இன்று அது மரபார்ந்த இயற்பியலோடு ஒருங்கிருந்து (co-exist) செயல்படுகிறது. ராமானுஜாச்சாரியார் ஆதி சங்கரரின் அத்வைதத் தத்துவத்தோடு முரண்பட்டு விசிஷ்டாத்வைதம் என்றொரு புதிய தரிசனத்தைத் தந்தார். இன்று இரண்டு தத்துவங்களைப் பின்பற்றுபவர்களும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஒருங்கிருந்தே இயங்குகிறார்கள்.

‘ஒருங்கிருத்தல்’ (co-existence) என்பதுதாம் நாம் மனதிற்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். கர்நாடக சங்கீத வெளியில் இந்த ஒருங்கிருத்தல் பண்பை நாம் கொண்டுவர வேண்டும். இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், கர்நாடக சங்கீத வெளியில் சிலர் மரபார்ந்த இசைக்கலைஞர்களாகவும், சிலர் பரிசோதனைகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்க முடியுமா? முற்போக்குவாதிகளும், பழமைவாதிகளும் ஒருங்கிருந்து செயல்பட முடியுமா? மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இக்கலைஞர்கள் தாம் சார்ந்திருக்கும் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க முடியுமா? விமர்சனங்கள் வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்பட்டு அவை ஆதரிக்கப்படுமா? அந்த கண்டனக்குரல்களும், விமர்சனங்களும் நம் இசை உலகத்தின் உள்ளிருந்தே எழ முடியுமா? இப்படிப்பட்ட பெரிய இருத்தலியல் கேள்விகளைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

’திலங்க் ராகத்தில் ராகம்-தானம்-பல்லவி பாடலாமா?’, ‘வர்ணத்தில் ராக ஆலாபனை, கல்பனா ஸ்வரங்களைச் செய்யலாமா?’, ‘சூர்தாஸ் பஜனையைத் துக்கடாவாகப் பாடலாமா?’, ‘ஒரு ஹிந்தோளக் கிருதியில் ராகமாலிகா ஸ்வரங்களைச் செய்ய முடியுமா?’ போன்ற சிறிய கேள்விகளும் இருக்கின்றன. ஆனால், வெளிப்படையாகச் சொல்லப்போனால் இத்தகைய கேள்விகள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல.

முதலில் நாம் ஏன் பெரிய கேள்விகளைக் கேட்க வேண்டுமென்று பார்க்கலாம். காலங்காலமாக கர்நாடக சங்கீதம் ஒரு குறுங்குழுவால் ஆதரிக்கப்பட்டு வந்திருக்கிறது. அவர்கள் ஒரு அரசாங்கம் தன் ராணுவ ரகசியங்களைப் பாதுகாப்பதுபோல இக்கலையின் நுணுக்கங்களை ரகசியப்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக இக்கலை அதன் உள்ளார்ந்த அழகாலும், தொடர்பாற்றலாலும், சிறிய சிறிய கூறுகளாக உலகெங்கிலுமுள்ள மக்களைச் சென்றடைந்திருக்கிறது. எனவே, இக்கலையின் நுட்பங்களை எந்தவிதத்திலும் குறைவுபடுத்தாமல், மரபின் நீட்சியையும் உடைக்காமல், அதன் பரப்பை விரிவுபடுத்தி பெரும்பான்மையான மக்களுக்கு இக்கலையை எடுத்துச் செல்லும் பொறுப்பு நமக்கிருக்கிறது.

தகவல்தொடர்பு சார்ந்த கணிப்பொறியியலில் ’திறந்த அமைப்புக் கட்டுக்கோப்பு’ (‘Open Systems Architecture’ என்றொரு அமைப்புமுறை இருக்கிறது. ‘ஒரு அடுக்கில் சில மாற்றங்கள் செய்து மொத்த அமைப்பின் செயல்திறனையும், பிற அடுக்குகளிலோ, கருவிகளிலோ, இயங்குமுறைகளிலோ எந்த மாற்றமும் தேவைப்படாமல் முன்னேற்ற முடியும்’ என்பது இந்த அமைப்புமுறையின் ஒரு முக்கிய பண்பு என்று சொல்கிறது விக்கிபீடியா. கர்நாடக சங்கீதத்தின் அமைப்புமுறை இந்த அமைப்புமுறையை ஒத்திருப்பதாக நான் கருதுகிறேன். கச்சேரிகளைப் பொருத்தவரை கடந்த ஒரு நூற்றாண்டில் நிறைய பரிணாம மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இசைக்கருவிகளைக் கையாளுதல், கச்சேரிக்கான மூல விஷயங்கள், வெளிப்பாட்டு முறை எனப் பல விஷயங்களிலும் பரிசோதனை செய்து பார்ப்பதற்கான வாய்ப்பு இசைக்கலைஞர்களுக்கு இன்னும் நிறையவே இருக்கிறது.

நமக்கென்று சுயமாக எந்த ஒட்டுதலும் இல்லாமல், இன்னொருவரின் எண்ணத்தைக் கைமாற்றித் தருபவர்கள் போலவே நாம் சில பொதுப்படையான காரணிகளை நமக்கும், ரசிகர்களுக்கும் வரையறுத்து வைத்துக் கொள்கிறோம். ரசிகர்கள் கலைஞர்களின் இசையை நேரில் கேட்கும்போது அவர்கள் இசையோடு நெருங்கிய தொடர்பு கொள்கிறார்கள். கலைஞர்கள் ரசிகர்களுடன் ஏதாவது ஒரு வழியில் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்ள வேண்டும், அவர்களையும் இந்தப் படைப்புருவாக்க முறையில் பங்கெடுக்க வைக்க வேண்டும். ஒரு கலைஞருக்கோ, அல்லது கலை வடிவத்துக்கேவோ ரசிகர் புதியவராக இருக்கும்போது இந்தத் தொடர்பின் தேவை முக்கியமான ஒன்றாகிறது. தேர்ந்த ரசிகர்களை மட்டுமில்லாமல், எலெக்ட்ரானிக் இசை ரசனை கொண்ட I-Pod தலைமுறையைச் சேர்ந்த புதிய ரசிகர்களையும் கர்நாடக இசை சென்றடையவேண்டும்.

கட்டுரையை முடிக்கும் முன், மக்ஸ் ப்ளாங்க், தால், பாஹ் போன்றோரைப் பற்றி நான் ஏன் இங்கே பேசுகிறேன் என்பதையும் சொல்ல வேண்டும். கர்நாடக சங்கீதமும், செஸ், இயற்பியல், மேற்கத்திய செவ்வியல் போல மிக உயர்ந்ததொரு கலையும், அறிவியலுமாகும். கர்நாடக சங்கீத வெளிப்பாட்டின்போது நம் உள்ளுணர்வை நம்புவதற்கான உத்வேகத்தை இப்படிப்பட்ட மேதைகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். மற்ற மனோநிலைகளிலிருந்து பார்க்கும்போது நமக்குக் கர்நாடக சங்கீதத்தின் தேர்ந்த பரிணாம வளர்ச்சியைக் கண்டுகொள்ள நேரிடலாம். ‘எல்லா விஷயங்களுக்கிடையேயும் இருக்கும் அடிப்படைத் தொடர்புகளைக் குறித்துதான் நாம் அக்கறை கொண்டிருக்கிறோம்’ என்றார் பிரிட்டிஷ் எழுத்தாளர் டக்ள்ஸ் ஆடம்ஸ். கர்நாடக சங்கீதமும் இந்த ‘எல்லா விஷயங்களுக்கிடையேயும் இருக்கும் அடிப்படைத் தொடர்புகளில்’ ஒரு பகுதிதான். அதனால்தான் அது 21-ஆம் நூற்றாண்டின் சிந்தனையிலும் தொடர்ந்து பரிணமித்து முன்னேறிச் செல்வது இன்றியமையாத விஷயமாகிறது.

prasanna2இக்கட்டுரை ஆசிரியர் கிடார் பிரசன்னா தேர்ந்த கர்நாடக சங்கீத, ஜாஸ் இசைக் கலைஞர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இவரெழுதிய இக்கட்டுரை பிரசன்னாவின் ஒப்புதலோடு இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

Comments are closed.