kamagra paypal


முகப்பு » புத்தக அறிமுகம்

ஸ்டாலின் மகாத்மியங்களும், ராவண காவியங்களும்

1990 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறுண்ட பின் பலவகையான சமரசங்களுக்கு பிறகு 1999 ஆண்டு RGASPI முதலான ஆவண கிடங்குகள் திறந்து விடப்பட்டன. இதற்கு முன் எழுதப்பட்ட பெருவாரியான ஸ்டாலின் வரலாறுகள் இரு வகைப்பட்டவை. ஒன்று, சோவியத் கட்டுப்பாட்டாலும் செல்வாக்கிலும் கம்யூனிச சித்தாந்தப் பற்றினாலும் எழுதப்பட்ட ‘ஸ்டாலின்’ மகாத்மியங்கள். மற்றவை இதற்கு எதிர்வினையாக ஸ்டாலினை இரண்டு கொம்புகளும் மூன்று கண்களும் கொண்ட அரக்கனாகச் சித்தரித்த ராவண காவியங்கள். இவற்றில் முதல்வகை ஆதாரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு எழுதப்பட்டவை. இரண்டாம் வகை பெரும்பாலும் போதிய ஆதாரங்கள் கைவசம் கிட்டாமலேயே எழுதப்பட்டவை.

இருப்பினும் ஸ்டாலினைத் தொடர்ந்த குரூஷ்சொஃப் (Khruschev) ஸ்டாலினின் வலது கரமாக விளங்கிய (ஒரு காலத்தில் என்று தான் சேர்த்துக்கொள்ள வேண்டும், பல வலக்கரங்கள் கொண்ட மனிதர் ஸ்டாலின் ) பேரியா (Beria), மாலெங்கொஃஃப் (Malenkov), மாலடாஃஃப் (Molotov)ஆகியோரை முறியடித்து வந்தவர். இவர்களை ஒழித்துக் கட்டும் முகமாக, ஸ்டாலின் காலத்திய அடக்குமுறை அராஜகத்தைக் (தான் அதில் மனப்பூர்வமாக பங்கு எடுத்த போதிலும்) கவனமாக தன் பெயர் கெடாத படி பகிரங்கப்படுத்தினார். தனது பதவிப் போராட்டத்துக்காகச் அவர் இதைச் செய்தாலும், சோவியத் யூனியனில் இருந்தே வெளி வந்த இந்த மாற்றுச் சித்திரம் படித்தவர் நெஞ்சை பதைக்க வைக்கும் படியாக இருந்தது. இப்பதவிப் போராட்டத்தின் முடிவு குரூஷ்சொஃபுக்கும் வந்தது. 1964 ஆம் ஆண்டு ப்ரியெஷ்னொஃப் (Brezhnev) இவரைப் பதவியில் இருந்து தூக்கி அடித்த பின் ஸ்டாலின் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று நித்ய பூஜை மறுபடியும் தொடங்கியது.

25623இவ்வாறாகப் பற்றாளர்களால் பந்தாடப்பட்ட ஸ்டாலின் ஆட்சி ஆவணங்கள் முதல் முறையாக பற்றற்ற பார்வையாளர்களின் கவனத்துக்கு வந்தவுடன் எழுதப்பட்டு இருக்கும் முதல் நூல் தான் சைமன் சீபாக் மாண்டபியோரி எழுதிய ’ஸ்டாலின்: செஞ்ஜாரின் அரசவை’ (‘Stalin : The Court of the Red Tsar’) என்ற புத்தகம். ஒரே நேரத்தில் ஏராளமான ஆவணங்களின் பொக்கிஷம் அகப்பட்டதால், ஒரு நூலை எழுதி முடித்த பின்னும் ஏகப்பட்ட சரக்கு பாக்கி இருந்ததால், ’இளம் ஸ்டாலின்’ (‘Young Stalin’) என்ற இன்னொரு நூலையும் எழுதி ஸ்டாலினைப் பற்றி மேலும் முழுமையான சித்திரம் உருவாகத் துணை புரிந்துள்ளார் மாண்டபியோரி.

1917 ஆம் ஆண்டு நடந்த அக்டோபர் புரட்சியைப் பற்றியும் அதன் காரணிகளைப் பற்றியும் பொதுவான புரிதல்கள் உடைய எவருக்கும் எழும் கேள்விகள் பல. மிகப் பெரும் மக்கள் செல்வாக்குடன் நடைபெற்றதாக நாம் நினைக்கும் அந்த யுகப்புரட்சியின் நாயகனான லெனினுக்குப் பிறகு ஸ்டாலின் எவ்வாறு தலைமை பொறுப்பு அடைந்தார்? லெனினுக்கு அடுத்த தலைமை பொறுப்பில் இருந்த அதி மேதை ட்ராட்ஸ்கியை ஓரம் கட்ட எவ்வாறு ஸ்டாலினால் முடிந்தது? ரஷ்யர் அல்லாத, ரஷ்யப் பேரரசின் விளிம்புகளில் இருந்து முளைத்த ஒரு செருப்புத் தொழிலாளியின் மகன் (ஸ்டாலின் ஒரு தொழிலாளியாக இருந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது), இரண்டு கண்டங்களில் பெரிதும் விரிந்து கிடந்த அந்த பேரரரசை 30 ஆண்டுகள் ஆண்டது எங்ஙனம்? ஹிட்லரின் அசுரபலத் தாக்குதலைச் சமாளித்து இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா ஜெர்மனியை வென்றது எவ்வாறு சாத்தியமாயிற்று? அவர் இளமைக்காலத்தில் இதற்குத் தேவையான தயாரிப்புகள் இருந்தனவா? அவர் ஆட்சி செலுத்திய முறைக்குக் காரணம் அவரது ‘விசேஷ குணங்களா’? மேலும் இவை எல்லாவற்றையும் விட ரஷ்யா இதற்குக் கொடுத்த விலை என்ன? என்ற பல்வேறு கேள்விகளுக்கும் விடை தேடும் முயற்சியாக சைமன் சீபாக் மாண்டபியோரியின் இரு நூல்கள் அமைகின்றன.

ஸ்டாலினைப் பற்றியும் அவரின் அவையினரைப் (nomenklatura) பற்றியும், ஸ்டாலினுக்கும் அவை அங்கத்தினருக்கும் இடையே ஆன உறவு, அவை அங்கத்தினருக்கு இடையே நிலவிய பரஸ்பர உறவுகள் என உறவுகளின் வழியாகச் சொல்லப்படும் வரலாறே முதல் நூலில் சைமன் கையாண்டு இருக்கும் முறை. வேடிக்கை என்னவென்றால் ’பழையன கழிதலும் புதியன புகுதலு’மாக அவையானது மாறிக் கொண்டே இருக்கிறது. வேறு வேறு மனநிலையில் தோற்றமளித்தாலும் மாறாமல் வீற்று இருப்பது ஸ்டாலின் மட்டுமே. எனவே அவையின் வரலாறு ஸ்டாலினின் வரலாறே.

1924 இல் போலிட்ப்யுரோவினால் முன்நிறுத்தப்பட்ட ஸ்டாலின் தனது சகாக்களால் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்ட தலைவராகவே ஆட்சியை தொடங்குகிறார். அக்காலத்திய புகைப்படங்களில் அவரைத் தனியாகக் காண்பது அரிது. காமனெஃப் (Kamanev), ஜினோவியேவ் (Zinoviev), புகாரின் (Bhukarin) துணை கொண்டு ட்ராட்ஸ்கியை துரத்தி விடுகிறார். பின்பு புகாரின் ஓரம் கட்டப்படுகிறார். கீராஃப் (Kirov), ஒர்ட்சாநிகிட்சா (ordzhonikidze), , மாலடாஃஃப் (Molotov), மிகொயான் (Mikoyan), காகனோவிச் (Kaganovich) என்ற குழுவாகச் செயல் படும் சோவியத் உயர்மட்டம், தொழில்மயமாக்கலில் முழு கவனத்தைச் செலுத்தி வருகிறது. யூரோப்பியத் தொழில் மயமாதல் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆரம்பித்து வெகு தூரத்தை அடைந்து இருக்கிறது. காலனியாதிக்கம் மூலம் பெற்ற சந்தைகளும், கனிம வளங்களும் கச்சாப் பொருட்கள், நவீனத் தொழில்முறை இயந்திரங்களை இயக்கி அடைந்த நிபுணத்துவம் இவை எதுவுமே இல்லாமல் சோவியத் ரஷ்யா நவீன யுகத்தில் நுழைகிறது. கனிம வளங்கள் இருந்தாலும் அவற்றை தோண்டி எடுக்கக் கூடத் தொழில்நுட்பம் இல்லாத நிலை. இருக்கும் ஒரே சொத்து, மனித வளமும் விவசாயச் சரக்குகளும். எனவே விளைநிலங்களைப் பெருமளவுக்குக் குறுநில உடைமையாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்து மாபெரும் பண்ணைகளை அமைத்து, நவீன விவசாய முறைகளைப் புகுத்தி விளைபொருட்களை ஏற்றுமதி செய்து பணம் திரட்டி, ஆலைகளும் அணைகளும் கட்டுவதாகத் திட்டம். இந்தத் திட்டங்கள் இயல்பாகவே பெரும் தடைகளைச் சந்திக்கின்ற்ன.. தனது நிலத்தையும் 12 கோழிகளையும் தந்து விட்டு, யூரல் மலை அடிவாரத்தில் அணை கட்டத் தலையில் மண் சுமக்கும் வேலைக்குச் செல்லத் தயங்கும் சிறு விவசாயிகள் பூண்டோடு ஒழிக்கப்படுகிறார்கள். யூரோப்பிலேயே வளமான பகுதியான யுக்ரெய்ன் பஞ்சத்திலும், பட்டினியிலும் மாண்டு உழல்கிறது.

இவை புகாரினையும், ஸ்டாலினின் இரண்டாம் மனைவியான நாடியாவையும் பெரிதும் பாதிக்கின்றன. புரட்சியின் 15 வது நிறைவு ஆண்டு கொண்டாட்டத்தில் ஸ்டாலின் தனது சகாக்களோடு நடத்தும் விருந்தில் ஆரம்பிக்கும் ஒரு சில்லறைச் சண்டை ஏற்கனவே மனத்தளர்ச்சி நோயில் வாடும் நாடியா (Nadia), தனது சகோதரன் பரிசளித்த துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, தன்னைத் தானே மாய்த்து கொள்வதில் முடிகிறது. ஸ்டாலினின் மனநிலை இதற்குப் பின் விபரீதமான அளவுக்கு எச்சரிக்கை, தற்காப்பு, சந்தேகம், பழிவாங்குதல் இவற்றின் பயங்கரக் கலவையாக உருவாவதை மாண்டபியோரி நன்கு சித்தரித்துள்ளார்.

ஸ்டாலினின் முக்கிய ஆயுதம் அவரது தனிப்பட்ட மேற்பார்வையில் இயங்கிய உள்நாட்டு உளவுத்துறைதான். யெனுகிட்சே (Yenugidze), யகோடா (Yagoda / Yehuda), லாகோபா, யசோவ் (Yezhov), பேரியா (Beriya) என்று தொடர்ச்சியாக ஒருவர் மற்றொருவரை மிஞ்சும் கொடூரமும், ‘தேர்ச்சியும்’ பெற்ற மனிதர்கள் இவற்றுக்கு தலைமை தாங்குகிறார்கள். ஸ்டாலினை வெறுப்பவர்கள், மதியாதவர்கள், கேள்வி கேட்பவர்கள், ஸ்டாலின் மேதாவி என ஒத்துக்கொள்ள தயக்கம் காட்டுபவர்கள், இக்குற்றங்களில் எதாவது ஒன்றைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்கள், அவர்களின் மனைவிகள், சகலைகள், அல்லது இக்குற்றங்கள் ஏதாவது ஒன்றை பிற்காலத்தில் செய்ய வாய்ப்பு உடையவர்கள் என நீண்டு கொண்டே இருக்கும் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு இந்த உளவுத்துறை தலைவர்கள் மக்களைச் சிறையிடுவது, சித்திரவதை செய்வது, பொய் வாக்குமூலம் வாங்குவது என்று ‘பிஸி’ யாக இருக்கிறார்கள். கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கோ அதீத பயம் . உளவுத்துறை கைங்கர்யங்கள் அவர்கள் மனதில் ஏற்படுத்தும் இயல்பான வன்மமே அவர்களுக்கு எதிரியாகிறது. ‘அடுத்த கன்னத்தை காட்டு’ என்ற கிறித்தவ அறமே அவர்களைப் போல்ஷெவிக் அராஜகத்தில் இருந்து காக்கிறது.

ஒரு நாளில் 24 மணி நேரமும் போதாத உழைப்பால் உளவுத்துறைத் தலைவர்கள் ஒடிந்து போய் ‘பெண்கள்’, ‘சிறுமிகள்’, ‘போதை’ என்று தறி கேட்டுப் போகிறார்கள். இவ்வாறு தறி கேட்டவர்களைக் களை எடுக்க அடுத்த தலைவர் தயாராகக் காத்து இருக்கிறார். இவ்வாறாகத் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு, நோக்கமில்லாத அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இத்துறைத் தலைவர்களிடம் ஸ்டாலின் மேலும் கொடூரத்தை நாடிக் கொண்டே இருக்கிறார். ‘மனிதாபிமானம்’ சுடுசொல்லாகவே பயன் படுகிறது. (‘உனக்கு என்ன பெரிய மனிதாபிமானி என்று நினைப்பா?’ என்பதே ஸ்டாலினின் முக்கிய குற்றச்சாட்டு). ஒரு கால அளவுக்குப் பிறகு உளவுத்துறைத் தலைவர் அடுத்த தலைவராலேயே பரலோகத்துக்கு அனுப்பபடுகிறார். இந்த வினோதப் பொம்மலாட்டமே சோவியத் அதிகாரம் ஸ்டாலின் கைக்குள்ளே பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.

1933 முதல் ஸ்டாலினின் மூத்த சகாக்களுக்குத் துஷ்ட தசை ஆரம்பம். கட்சியில் தனக்கு அடுத்த படியாக இருந்த கீரோஃப் தலைமை பொறுப்பு ஏற்க ஸ்டாலினின் கொடுங்கோல் ராஜாங்கம் பொறுக்காத ஒரு தரப்பு ரகசிய ஏற்பாடுகள் செய்ய முனைகிறது. அதை மறுத்து விட்டு விசுவாசத்துடன் அதை பற்றி ஸ்டாலினிடமே வத்தி வைக்கிறார் கீரோஃப். முதலில் கொல்லப்படுவது வத்தி வைத்த கீரோஃப் தான். அவரைக் கொன்ற குற்றத்திற்காக வத்தி வைக்கபடுபவர்கள் கொல்லப்படுகிறார்கள்.  பிரச்சினை தீர்ந்தது. தாற்காலிகமாக.

பின் 10 ஆண்டுக்கால பகைமைகள் தூசி தட்டி எழுப்பபடுகின்றன. ஸ்டாலினின் முக்கிய எதிரியான ட்ராட்ஸ்கியோடு சேர்ந்து சதி செய்த குற்றத்திற்காக ஜினோவியவ், காமனெஃப் இருவரும் குற்ற விசாரணை செய்து கொல்லப்படுகிறார்கள். அடுத்த குறி புகாரினுக்கு. ஜிநோவியவுக்கு நாய்க் குட்டி வாங்கக் கூடச்சென்றது எல்லாம் குற்றமாக முன்வைக்கப்படுகிறது. பின்பு அவரின் கீழ் வேலை பார்த்தவர் துரோகம் செய்ததாகப் பொய்க் குற்றம் சாட்டி ஒர்ட்சாநிகிட்சா மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார். அவர் எழுதிக் கொடுக்கும் மன்னிப்புக் கடிதத்தை மீண்டும் மீண்டும் திருத்தச் சொல்லி, பள்ளி செல்லும் சிறுவனை ஆசிரியர் படுத்துவது போல, படுத்தி எடுக்கிறார் ஸ்டாலின். தொல்லை தாங்காமல் தற்கொலை

ட்ராட்ஸ்கி

ட்ராட்ஸ்கி

செய்துகொள்கிறார் ஒர்ட்சாநிகிட்சா. இவ்வாறு தலைமைக்குச் சவால் ஏதும் எழாத சூழ்நிலை உருவாகிறது. உட்கட்சி சவால்கள் முறியடிக்கப்பட்டபின் புகழ் பெற்ற ராணுவத் தலைவர்கள் கொல்லப்படுகிறார்கள். பின், முத்தாய்ப்பாக புலம் பெயர்ந்து வாழும் ட்ராட்ஸ்கி, பல முயற்சிகளுக்குப் பின் தலையில் பனிக் கோடரி கொண்டு தாக்கிக் கொல்லப்படுகிறார். இக்கொலைகள் மிகப் பிரபலமானவை, எனினும் ‘எண்ணற்ற’ என்ற அளவிலே சொல்லத்தக்க அளவு அப்பாவி மக்களும் கொல்லப்படுகிறார்கள். ஹிட்லர் வெறுப்பினால் யூத மக்களைக் கொன்றதைப் போல மூன்று மடங்கு மக்களை, தன் சொந்த நாட்டினரை, அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலின் படுகொலை செய்து இருக்கிறார்.

இவை யாவும் முன்னரே பெரும்பாலும் எழுதப்பட விஷயங்கள் தாம். மாண்டபியோரி தனது முதல் நூலில் ஏராளமான தகவல்களோடு எழுத முனைந்தது இக்கொடுரங்களின் பின்னணியும், திரை மறை மனிதர்களான ஒற்றர் படைத்தலைவர்களுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே நிலவிய உறவும் பற்றித்தான். செம்மையான ஆராய்ச்சியின் பயனாக ஒரு நுண்ணிய சித்திரம் வாசகருக்கு புலப்படுகிறது. இவ்வாறு நடந்த வரலாற்றை, ஸ்டாலினின் பூர்வாசிரமத்தை ஆராய்ச்சி செய்து இளமைக்கால ’குண’நலன்’களைப் பற்றி புரிந்து கொள்ள விழைந்து எழுதிய இரண்டாம் நூலே ‘இளம் ஸ்டாலின்’ என்ற நூலாகும். இந்த வரலாறு ஸ்டாலின் என்ற தனி மனிதர் ட்ராட்ஸ்கி போன்ற மேதாவியைத் தோற்கடித்து பதவிக்கு உயர்ந்த பின்னும், ட்ராட்ஸ்கியை ஒப்பு நோக்கத் தனது இயலாமை, தகுதிக்குறைவு, தாழ்வுணர்ச்சி, இவற்றின் கலவையால் உந்தப்பட்டு தற்காப்புக்காக நடத்திய கொடூரப்போரா? இல்லை, இவை இயல்பாகவே வாய்க்கப்பெற்ற ஸ்டாலினின் குணாதிசயங்களா? சுருங்கச்சொல்லப் போனால் அவர் ஒரு கொலை வெறியரா?

இக்கேள்விகளுக்கு பதிலாக வெளிப்படுவது ஒரு விசித்திரமான சித்திரம். செருப்புத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ஸ்டாலின், தந்தையின் கூட வாழ்ந்தது மிகக் குறைவான காலம் தான். தாயாரால் வளர்க்கப்படும் ஸ்டாலின் மிகச் சிறந்த படிப்பாளி. ஒரு நாள் கூட பள்ளி செல்லத் தவறாதவர். எப்போதும் முதல் மதிப்பெண்கள் மட்டுமே வாங்கியவர். அபாரமான பாடகர். வன்முறையும் வஞ்சமும் வாழ்க்கை முறையான ஜார்ஜியப் பழங்குடியில் பிறந்து வளர்ந்த காரணத்தால் இயல்பாகவே போராட்டகுணம் கொண்டவர். சிறு வயதிலேயே பிரசுரிக்கத் தக்கதான கவிதைகள் எழுதியவர். (மிகப்புகழ் பெற்ற அவரது நான்காவது கவிதையான ‘Prophet’ ஐ விட அவரது ‘Old Ninika’ என்னை மிகவும் கவர்ந்தது.)

பெரும்பாலும் சுயமாகவே படித்து சிந்தனையை வளர்த்துக் கொண்டவர். தனது வாழ் நாளின் இறுதி வரை படித்துக்கொண்டே இருந்தவர். ( தினசரி 500 பக்கம்). இயல்பாகவே தலைமைக்குணம் வாய்க்கப்பெற்றவர். அழுத்தமான ஆளுமையும் தீவிரமான செயலாக்கமும் படைத்தவர். அதிகம் பேசாதவர். ’கராமாஸொவ் சகோதரர்கள்’(Brothers Karamazov) நூலில் தொஸ்தாயெஃப்ஸ்கி விவரிக்கும் கோல்யா க்ரொஸாட்ஸ்கினை (‘Kolya Krosatskin’) நினைவு படுத்துபவர்.

ஸ்டாலின் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு, லெனினின் எழுத்துக்களால் கவரப்பட்டு மார்க்சீயப் போர்வீரராக மாறுகிறார். ரஷ்யப் பேரரசின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஜார்ஜியாவில் வங்கிக் கொள்ளை, கொலை மிரட்டல் விடுத்தல், நாச வேலை மிரட்டல் விடுத்தல் இவ்வாறாகத் திரைமறைவு அழிப்பு வேலைகளை இயக்குகிறார். 15 ஆண்டுகளாக லெனின் நடத்தி வந்த கலகத்திற்குப் பிரசுரங்கள் அடிப்பது, கூட்டங்களைக் கூட்டுவது, தொழிலாளர்களைத் திரட்டுவது ஆகியவற்றுக்குப் பெரும் பணம் தேவைப்பட்டது. இதற்கு ஸ்டாலின் முக்கியமான பொருளீட்டாளராகச் செயல் படுகிறார்.

1907 இல் ஸ்டாலின் முன்னின்று நடத்திய திபிலிசி வங்கிக்கொள்ளையை மாண்டபியோரி ஹாலிவுட் ஸ்டைலில் விவரிக்கிறார். பட உரிமைகள் விற்கப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்படும் அந்த கொள்ளையில் சிக்கிய கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபிள்கள் பெருமளவு லெனின் வசம் சென்று சேர்கிறது. அதனால் லெனின் ஸ்டாலினிடம் பெருமதிப்பு கொள்கிறார். முதலில் தன்னோடு போட்டியிட்ட, பின்னர் தன் தலைமையை ஏற்ற ட்ராட்ஸ்கியை ஒப்பு நோக்க ஸ்டாலினிடம் நெருக்கமாக இருக்கிறார்.

திபிலிசி கொள்ளைக்குப்பின் எண்ணெய் வளம் கொப்பளிக்கும் பாகு நகரத்திற்கு போல்ஷெவிக் கட்சியை வளர்த்தெடுக்க ஸ்டாலின் வருகிறார். கண்ட இடமெல்லாம் எண்ணெய் பீறி அடிக்கும் பாகு, அசெர்பைஜானின் தலைநகர். அக்காலத்தில் ஐரோப்பியப் பெரும் பணமுதலைகள் ( ஆல்ஃப்ரெட் நோபெல் உட்பட ), மத்திய ஆசியத் தொழிலாளர்கள், ரஷ்ய ராணுவம் என்று வினோதமான கலவை நிறைந்த நகரம். நகரில் திடீர்ப் பணக்காரர்கள் குழுமியுள்ளனர். இவர்களை மிரட்டிப் பணம் பறிப்பதே ஸ்டாலினின் வேலை. இதில் இவருக்கு உடந்தை பெரும் செல்வந்தரான ஒரு ஜெர்மானியரின் மனைவி. ஆம். ஸ்டாலின் ’அந்த விதத்திலும்’ சளைத்தவர் அல்ல. இரு மனைவிகள் உட்பட ஏறத்தாழ ஒரு டஜன் பெண்களை ஸ்டாலினோடு இணைத்துப் பட்டியல் போடுகிறார் மாண்டபியோரி. இதில் 14 வயது சிறுமி ஒருவரும் அடக்கம். பிற்காலத்தில் இந்தக் காதலிகள் எழுதிய ‘மலரும் நினைவுகள்’ பிரசுரத்திற்கு முன்பே தேடித்தேடிப் பறிமுதல் செய்யப்படுகிறது.

பலமுறை அவரைக் கைது செய்ய முயன்று தோற்றுப் பின் ஒரு ஒற்றனால் காட்டிக் கொடுக்கப்படும் ஸ்டாலின் இறுதியில் கைது செய்யப்படுகிறார். ரஷ்யக் காவல்துறை அவரை சைபீரியாவுக்கு அனுப்புகிறது. ஸ்டாலின் காலத்துச் சைபீரிய சிறையை ஒப்பு நோக்க அது அவ்வளவு கொடுமையாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காசு கொடுத்து ரயில் பயண சீட்டும் கொடுத்து ஒரு கண் காணாத சைபீரிய நகரத்துக்கு அழைத்துச் செல்கிறார் ஒரு காவல்காரர். பின் அங்கிருந்து பனிச்சறுக்கு வண்டி ஏறி ஒரு கிராமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே வாழ வைக்கப்படுகிறார். காவலுக்கு ஒரே ஒரு காவல்காரர். இந்த அனுபவமே ஸ்டாலின் தனது ஆட்சியில் சிறைச்சாலைகளைத் தீவிரப்படுத்த உந்தியது போலும். மீண்டும் ரயிலில் பயணிக்கக் காவலரின் அனுமதி தேவையாதலால் தப்பிச்செல்ல முடியாது. ஆனாலும் பனிச்சறுக்கு வண்டியில் தப்பிச் செல்கிறார் ட்ராட்ஸ்கி.

சரியான தயாரிப்புகள் இல்லாமல் முதல் உலக யுத்தத்தில் திடீரென்று குதித்த ரஷ்யா போதிய படை வீரர்கள் இல்லாமல் சிறைக்கைதிகளை விடுதலை செய்து அவர்களைப் போருக்கு அனுப்புகிறது. ஸ்டாலின் நைசாக டபாய்த்து விட்டு, லெனினுடன் சேர்ந்து புரட்சிக்கான ஆயத்தங்களில் ஈடுபடுகிறார். அக்டோபர் புரட்சியின் நிகழ்வுகளை இங்கு அசை போடுவது சாத்தியமல்ல. ஆனால் அந்த ‘யுகப்புரட்சி’ நடந்ததைப் படமாக எடுத்த ஐசன்ஸ்டைனின் (Eisenstein) படப்பிடிப்பில் காயமடைந்தவர் எண்ணிக்கை புரட்சியில் காயமடைந்தவர் எண்ணிக்கையைவிட அதிகம் என்பதே விசித்திரமான உண்மை. டாரிடா அரண்மனையைக் கைப்பற்ற அனுப்பிய சிப்பாய்கள் பட்டாளம் ட்சார் மன்னனின் விலை உயர்ந்த மதுக்கூடத்தில் முங்கிக் கிடக்கிறது. அவர்களை மேற்பார்வையிட வந்த விசேஷத் துருப்புகளும் அவ்வாறே. பின் மதுகூடத்தில் தண்ணீரைப் பீச்சி அடித்து, புரட்சி வீரர்களை எழுப்பி விட வந்த தீயணைப்பு வீரர்களும் அவ்வாறே. ஒரு வழியாக அண்டோனின்-ஒவ்செங்கோ அரண்மனைக்குள் நுழைந்து 5 நிமிடத்தில், ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழிக்கும் தாற்காலிக அரசாங்கத்திடம் இருந்து, ஆட்சியைக் கைப்பற்றுகிறார். இப்படியாக ‘இளம் ஸ்டாலின்’ புத்தகம் நிறைவுறுகிறது.

யங் ஸ்டாலின் எழுதிய சைமன் சீபாக்

யங் ஸ்டாலின் எழுதிய சைமன் சீபாக்

இந்த நூல் ஸ்டாலினின் ஆளுமையைப் பற்றி மறைந்து இருந்த பலதகவல்களை அளித்தாலும், ஸ்டாலினின் அடக்குமுறை மற்றும் கொடூரத்தன்மை இவற்றுக்கு கறாரான விளக்கத்தை அளிக்கவில்லை என்பதே உண்மை. அந்த கேள்விகளின் விடைகளுக்கு நாம் லெனினை நோக்கித் தான் பயணிக்க வேண்டும். அது நம்மை 1826க்கு இட்டுச் செல்லும். பிற்போக்குத்தனம் வாய்ந்த அரச குலத்திற்கும், முற்போக்கு எண்ணங்கள் கொண்ட பிரபு குலத்திற்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் அப்போது ‘டிசம்பர்’புரட்சியாக வெடித்தது. அது, மக்களுக்கு என்ன தேவை என்பதை தாங்களாகவே தீர்மானித்துப் பிரபுக்கள் நடத்திய ஒரு கலகம். தொஸ்தாயெஃப்ஸ்கி இப்புரட்சியில் பங்கு எடுத்தவர்தாம். தோல்வியில் முடிந்த புரட்சியின் விளைவாக அரசாங்க அடக்குமுறை அதிகமாகியது. இதனால் பிரபு குலத்தில் பிறந்த ஒரு சாரார் தீவிரவாத நோக்குடையவராக மாறினர். இவர்களே பின்னாளில் ‘மக்கள் விருப்பம் ‘ [People’s Will- ‘Norodnya Volya’ ] என்ற அமைப்பை தோற்றுவித்தனர். அரசாங்கத்தைத் தீவிரவாதத்தால் பணிய வைப்பதே இவர்களின் தாரக மந்திரம். இக்கூட்டத்தினர் ட்சார் இரண்டாம் அலெக்சாண்டர்  மன்னரைக் குண்டு வீசிக் கொலை செய்தனர்.

லெனின் இப்படியான ஒரு பிரபு குலத்தில் பிறந்தவர். லெனினின் அண்ணன் அலெக்சாண்டர்,  ட்சார் மூன்றாம் அலெக்சாண்டரைக் குண்டு வீசிக் கொல்லச் சென்று கொண்டு இருக்கும் பொழுது கையும் குண்டுமாகப் பிடிபட்டார். தூக்கிலிடப்பட்டார். இந்த இழியும் பழியும் லெனினை வெகுவாகப் பாதித்தது. தானும் ‘People’s Will’ அமைப்பில் உறுப்பினர் ஆனார். ரஷ்யப்புரட்சியாளர் செர்நெஷெவ்ஸ்கி முதலானவர்களின் எழுத்துக்களால் கவரப்பட்டார். பின்னரே மார்க்சை வந்து அடைந்தார். ரஷ்யாவில் புரட்சியின் மிகப்பலவீனமான சித்தாந்தப் பின்புலமாக மட்டும் மார்க்சின் பொருளாதார முரணியக்கவாதம் அவருக்கு பயன்பட்டது. புரட்சிக்கான நோக்கமும் வழிமுறையும் இவர் எடுத்துக்கொண்டது ‘மக்கள் விருப்பம் அமைப்பின் (Norodnya Volya’) கருத்தாக்கம் மட்டுமே. லெனினின் உலகில் பெரும்பான்மை, மாற்றுக் கருத்து இவை இரண்டும் அநாமதேயங்கள். பெரும்பான்மையினர்,  வலிமையும் தீவிரத்தன்மையும் லட்சிய உறுதியும் கொண்ட ஒரு சிறு குழுவினால் வழிநடத்தப்பட வேண்டிய ஒரு ஆட்டு மந்தை.  மாற்றுக்கருத்து என்பது பூண்டோடு அழித்தொழிக்கப்பட வேண்டியது. கருத்து மாற்றத்தின் அளவு பொருட்படுத்தத் தக்கதே அல்ல. முழுவதும் ஏற்றுக் கொள்ளாதவர் எவரும் எதிரிகளே. இந்தப் பாடத்தை மீண்டும் மீண்டும் செயலாக்கி வெற்றி பெற்றவர் லெனின். லெனின் கற்ற மற்றொரு முக்கியமான பாடம் மார்க்சிடம் இருந்தே. 1840 இல் தொடங்கி யூரோப்பில் நடந்த பல்வேறு தொழிலாளர் புரட்சிகள் தோல்வியைச் சந்தித்தன. இவற்றை அலசிய மார்க்ஸ் புரட்சியாளர்கள் ஆட்சி அமைப்புகளைக் கைப்பற்றித் தலைமையை மட்டும் மாற்றியது தான் அவர்கள் செய்த பெரும் தவறு என வாதிட்டார். அவ்வாறு ‘விட்டு வைத்த’ அமைப்புகளே பின்னர் புரட்சிக்கு எதிர் மையங்களாகின, எனவே வருங்காலத்தியப் புரட்சியாளர்கள் ஆட்சி மாற்றத்தைக் குறிக்கோளாக கொள்ளாமல் அந்த மையங்களைத் தகர்த்து நொறுக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உண்மையில் போல்ஷெவிக்குகள் கைக்கு வந்த அதிகாரத்திற்குச் சற்றும் லெனின் தயாராக இருக்க வில்லை.போல்ஷெவிக் என்றால் ‘பெரும்பான்மை’ என்று பொருள். புரட்சிகர சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியில் (RSDLP-Russian Social-Democratic Labour Party) இருந்து செயல்பட்ட லெனின், வலிமையும் தீவிரத்தன்மையும் வர்க்கப்ரக்ஞையும் கொண்ட சிறு குழுவின் தலைமையில் புரட்சி நடத்தப்பட வேண்டும் என்றும், கட்சியில் சாதாரண உறுப்பினர்கள் பார்வையாளர்களாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று கோரினார். இந்த வழிமுறைகளுக்கு கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத காரணத்தால், தனது ஆதரவாளர்களைத் திரட்டி வெளியேறி தனது கோஷ்டிக்கு தானாகவே ‘பெரும்பான்மை’ (பொல்ஷெவிக்) எனப் பெயர் சூட்டிக்கொண்டார். 1917 அக்டோபர் புரட்சியை ஒரு ஆக்‌ஷன் திரைப்பட்த்தின் துவக்கமாகவே கொள்ளவேண்டும். ஆட்சியைக் கைப்பற்றிய பின் கூடிய போல்ஷெவிக்குகள் ’புரட்சிக்கு’ முன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் சட்ட் நிர்ணயசபையைத் தங்கள் துப்பாக்கி வலிமையால் கலைத்தனர். பின்னர் அவர்களுக்கு எதிராகக் கிளம்பிய சோஷலிஸ்ட் மாற்றுக்கட்சியினர், அரசியல்சட்ட ஜனநாயகவாதிகள், அரசு குல ஆதரவாளர்கள், ராணுவம், வெளிநாட்டு போராளிகள் இவர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பலையை வாழ்வா-சாவா எனற நிலையிலேயே போரிட்டு வென்றனர். தங்கள் எதிரிகளைப் பூண்டோடு ஒழித்தால் மட்டுமே பதவியில் நீடிக்கலாம் என்ற நிலைக்கு கடும் போர்முறையால் தங்களைத் தாங்களே கொண்டு சென்றனர். இச்சூழ்நிலையில் சிறிதளவு கருத்து மாறுபாடு கூட அவர்கள் மனதில் பெரும் அவநம்பிக்கையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. சிறிதும் வேறுபட்டவர்கள் உடனடியாக முற்றும் எதிரிகளாயினர். எதிரிகள் உடனே அழித்தொழிக்கபடவேண்டியவராயினர். இதுவே கட்சியின் தன்னியல்பு ஆனது. லெனினின் மன இயல்பு உள்நாட்டுப்போர் வரலாற்றால் கட்சிக்குள் ஊடுபாவியது. இதே சூழ்நிலை கட்சிக்குள் பெரும்கட்டுக்கோப்பை தோற்றுவித்தது. கட்சி ஒற்றுமையும் தலைமைக்கு விசுவாசமும் ஜீவாதாரத்தேவை ஆகியது. உள்நாட்டுப்போரில் தோற்றால் கூண்டோடு கைலாசம் என்பதை போல்ஷெவிக் கட்சி நன்கு உணர்ந்து இருந்த்து. எனவே தீவிரமான விராட புருஷனாகவே கட்சி இயங்கியது.

1924 வரை நீடித்த இந்த உள்நாட்டு யுத்த்தில் வென்றபின் போல்ஷெவிக்குகளுக்கு அமைப்பு ரீதியிலான எதிரிகளே இல்லாமலாயினர். கட்சி மட்டுமே எஞ்சி நின்ற அமைப்பு. அவ்வமைப்பு கூட சோவியத் யூனியனில் போல்ஷெவிக்குகள் நிகழ்த்த விரும்பிய பொருளாதார மாற்றஙகளுக்கு, அவை பாதிக்கவிருந்த சாமானிய விவசாயிகள் நடுவே கிளம்பிய எதிர்ப்பைச் சமாளிக்கப் போதுமானதாக இல்லை. ஸ்டாலின் தனது வாழ்வில் பெரும் நெருக்கடியான காலகட்டமாக சர்ச்சிலிடம் சொன்னது இந்த காலக்கட்டத்தைதான். தங்களின் பொருளாதாரத் திட்டங்களுக்கு ஆதரவு காட்டாத பாட்டாளி வர்க்கத்தினரை, வர்க்க விழிப்புணர்ச்சி முழுமையாக அடையாத நிலையில் தங்கள் ’எதிர்கால வர்க்க நலனை’ அறிந்து கொள்ள முடியாத மந்தையாகவே அவர்கள் எண்ணினர். அவ்வாறு ’வர்க்க விழிப்புணர்வு’ உருவாகி வரும் வரை தீவிரமும் ‘வர்க்க விழிப்புணர்வும்’ வாய்க்கப்பெற்ற கட்சித்தலைமைக்கு ‘பாட்டாளி வர்க்கத்தின்’ சார்பாக தலைமைத்தாங்கிச்செல்லும் ‘சுமை’ வரலாறால் அளிக்கப்பட்டது எனறே எண்ணினர். இது இந்தியர்களுக்கு ஒரு வகையில் பரிச்சியமான ரட்யர்ட் கிப்ளிங் (Rudyard Kipling ) குறிப்பிட்ட ’வெள்ளையரின் பெருஞ்சுமையே’ தான் (‘White Man’s Burden’). இப்போராட்டத்தில் கட்சியை எதிர்க்க அமைப்புகள் இல்லாத நிலையிலும், பரந்த மக்கள் திரளின் மௌன எதிர்ப்பை அழிக்கப் போராட்டம் வலுவாகத் தொடர வேண்டிய நிலையில், கட்சிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு கட்சியின் தன்னியல்பு இக்குணாதிசயங்கள் நிரம்பிய ஸ்டாலினை கண்டடைந்தது. புரட்சிகரக் குழு தனி மனிதராக மாறியதும், ’பெரும்பான்மை’ ஒரு தேசமாகவே ஆனதும் லெனின் உருவாக்கிய கருதுகோளின் விகாரமான, ஆனால் இயற்கையான நீட்சியே. பிற்பாடு நடந்தது எல்லாம் இக்கருதுகோளின் பிரத்யட்ச வடிவமாக ஸ்டாலின் விளங்கியதே காரணம்.

புத்தக விவரங்கள்:

Young Stalin : by Simon Sebag Montefiore

Paperback

Pubished by: Phoenix / Orion Books ltd, London

2007/ ISBN: 978-0-7538-2379-8