kamagra paypal


முகப்பு » இலக்கிய விமர்சனம்

எண்பதுகளில் தமிழ் இலக்கியம்

venkat_swaminathan_Tamil_Authors_Portraits_Writers(தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From the Eighties to the Present என்ற தலைப்பில் Book Review-வின் நவம்பர்-டிசம்பர் 1992 இதழில் வெளியான கட்டுரைதான் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது. அந்தச் சிறப்பிதழில் பிரசுரமான இரண்டு மற்ற கட்டுரைகள் ராஜூ நரஸிம்ஹன் A Telescopic Arousal of Time என்ற தலைப்பில் அம்பையின் சிறுகதைத் தொகுப்பு Lakshmi Holmstrom-ன் மொழிபெயர்ப்பில் A Purple Sea என்ற தலைப்பில் வெளி வந்த புத்தகத்தைப் பற்றியது. அடுத்தது வாஸந்தியின் காதல் பொம்மைகள் பற்றி எம். விஜயலக்ஷ்மி எழுதிய Indian Feminism – Vaasanti style என்ற கட்டுரையும் தான் இப்போது என் கட்டுரையின் மற்ற பக்கங்களிலிருந்து நான் இப்போது பெறக்கூடியவை. இந்த இதழுக்கு பின் வரும் கட்டுரை தவிர, அ.கா. பெருமாளின் தோல் பாவைக் கூத்து பற்றிய புத்தகம் ஒன்றுக்கும் மதிப்புரை ஒன்றை நான் எழுதித்தந்திருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் அது இப்போது கிடைப்பதாயில்லை. கிடைப்பது பின் வரும் கட்டுரை ஒன்றுதான்.)

நான் எண்பதுகளோடு வரம்பிட்டுக்கொள்கிறேன். இது எனக்கு சௌகரியமாகவும் இருப்பது சந்தர்ப்பவசம் தான். அதிர்ஷ்டவசமாக, இந்த எண்பதுக்களில் தான் தமிழில் சிருஷ்டி எழுத்துக்கள் புதிய பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தன. அந்த புதிய பாதைகள் இதுகாறும் கால் பதித்திராத பாதைகள். கால் பதித்திராத பாதைகள் என்றேன். காரணம் எதுவாகவும் இருக்கலாம். அவர்கள் நினைத்துப் பார்த்திராததாகவோ, தெரிந்திராததாகவோ, அல்லது அப்பாதையில் பயணிப்பதற்கு அவர்கள் தயாராக இல்லாததாகவோ இருக்கலாம். அல்லது அவை சிரம சாத்தியமானவை என்றோ அவற்றை ஒதுக்குவதே விவேகமான காரியம் என்றும் கூட நினைத்திருக்கலாம். ஆக, இம்மாதிரியான புதிய பாதைகளில் பயணிக்கத் துணிந்த எழுத்தாளர்களை, அவர்களது துணிவுக்கும், கற்பனைத் திறத்துக்கும், நேரிய சிந்தனைகளுக்கும் நாம் பாராட்ட வேண்டும். எனவே, இந்த காலகட்டத்தில், தாம் கடந்து வந்த பாதையிலேயே இன்னம் ஒன்று, தமக்குப் பிராபல்யமும், பணமும் தந்த வழியிலேயே இன்னம் ஒன்று என தொடர்ந்து எழுதியவர்களைப் பற்றிப் பேசப் போவதில்லை. சிலர் சொல்லக் கூடும். இந்த புதிய பாதையில் செல்லும் சாகஸக்காரர்களை விட பழைய பழகிய அச்சிலே இன்னம் ஒன்று, இன்னம் ஒன்று என்று எழுதித் தள்ளுபவர்கள் எழுத்துக்கள் சீராக நன்றாக எழுதப் பட்டவை, வெற்றிபெறுபவை என்று வாதிக்கக் கூடும். இருக்கலாம். ஆனால், இவர்கள் எழுத்து பற்றி எனக்கு அக்கறை இல்லை. தமிழ் இலக்கியத்தின் புதிய பரிமாணங்களின் சிருஷ்டியை விரும்புகிறவர்களுக்கும் அக்கறை இராது என்றே நான் நினைக்கிறேன்.

இன்றைய தமிழ் இலக்கியத்தின் கோபம் கொண்ட இளைஞன் பற்றி முதலில் பேசலாம். சில வருடங்களுக்கு முன் மறைந்துவிட்ட அவர், 76 வயதுக் காரர். இப்போது அவரைப் பற்றி எழுதுவது அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியுமாகும். அணைய விருக்கும் தீபம் நீண்ட உயர்ந்த சுடர் விட்டுப் பிரகாசமாக எரியுமே. அது போலத்தான் அவர் தன் கடைசி நாட்களைக் கழிக்க சென்னை வந்து சேர்ந்ததும் அந்த எண்பதுக்களில் தான் அவர் நிறைய எழுதினார். நிறைய அவர் புத்தகங்களும் பிரசுரமாயின. அதுகாறும் பிரசுரமாகாது இருந்தவை கூட பிரசுரமாயின. அதற்கு முன் கிட்டத்தட்ட இருபது வருடங்களோ என்னவோ தில்லியில் ஒரு மாதிரியான “நாடிழந்த அகதி” போல் வாழ்ந்தார். ஆனால் தில்லிவிட்டு சென்னை வந்ததும் அந்தக் கடைசி காலத்தில் அது வரை அவரைப் பிரசுரிக்காத பத்திரிகைகள், வெகுஜனப் பத்திரிகைகள் கூட அவரைப் பிரசுரித்தன. வாழ்நாள் முழுதும் அந்த வெகுஜன பத்திரிகைகளைத் தான் அவர் இடைவிடாது சாடி எழுதி வந்திருக்கிறார். பாமரத் தனமான இலக்கிய வாசனையேயற்ற எழுத்துக்களுக்கே பரிசளித்து வந்த மத்திய சாஹித்ய அகாடமியையும் அவர் சாடாத சமயம் இருந்ததில்லை. அவரிடம் அவ்வளவு திட்டுக்களையும் வாங்கிவந்த சாகித்ய அகாடமி அவரது வாழ்நாள் கடைசியில் அவருக்கு பரிசு அளித்தது. வெகு வருஷங்களாக பிரசுரமாகாது இருந்த எழுத்துக்களும், வருஷக் கணக்கில் மறு பிரசுரம் பெறாது இருந்த புத்தகங்களும் மறு பிரசுரம் பெற்றன. எங்கெங்கோ உதிரியாகக் கிடந்த அவரது எழுத்துக்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு தொகுப்புக்களாக வெளிவந்தன. வற்றிக்கிடந்த ஆற்றில் திடீரென பிரளயம் வந்தது போலத்தான். ஒரு வேளை போர்க்குதிரை சாதுவாகி லாயத்தில் கட்டப்பட்டு விட்டதோ என்று தோன்றலாம். இல்லை. நிகழ்ந்தது சமாதானமோ, துக்கிக்க வேண்டிய தோல்வி ஒன்றோ இல்லை. அவரது கடைசிக் காலத்தில் அவரது மறைவிற்குச் சற்று முன், அவரது swan song போல பிரசுரமான அவதூதர் என்ற நாவலின் பிரதான பாத்திரமான அவதூதரை இங்கு உதாரணமாகக் காட்டலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

KA.-NA.-SU-Subramaniam_Tamil_Authors_Writers_Portraitsஅந்த நாவலின் அவதூதர் ஒரு காலத்தில் குடும்பத்தோடு வாழ்ந்தவர் தான் இப்போது அவதூதர் (ஆடையைக் கூட துறந்து வாழும் சன்னியாசி) ஆன பிறகும் தான் குடும்பத்தோடு வாழ்ந்த கிராமத்திலேயே தான் வாழ்கிறார். அந்த கிராமத்து மக்கள் வாழ்க்கையின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிறார். பின் சற்றுக் காலம் கழித்து மறுபடியும் குடும்பத்தில் ஐக்கியமாகிறார். அவதூதராக கிராமத்தில் இருந்த போதும் குடும்பத்தோடும் கிராமத்து மக்களோடும் அவருக்கு இருந்த உறவு, ஆழ்ந்த ஈடுபாடும், பொறுப் புணர்வும் கவலையும் கொண்ட ஒதுங்கி வாழ்தலும் ஆக இணைந்து இருந்தது. அவரது அப்போது பிரசுரமான இன்னொரு நாவலான தாமஸ் வந்தார், இயேசுவின் தூதரும் சீடருமான புனித தாமஸ் தன் மறைவிற்கு முந்திய கடைசி வருடங்களை சென்னையை அடுத்த இப்போது புனித தாமஸ் மலை என்று அறியப்படும் இடத்தில் கழித்தார். அப்போது அவருக்கும் மயிலாப்பூரில் வாழ்ந்ததாகக் கருதப்படும் வள்ளுவருடனான ஒரு கற்பனைச் சந்திப்பை விவரிக்கிறது தாமஸ் வந்தார். அப்போது அந்தச் சந்திப்பின் விளைவாக வள்ளுவர் மீதும் அவரது குறள் மீதும் இருந்திருக்கக் கூடிய கிறித்துவ தர்மங்களின், நீதி நெறிகளின் பாதிப்பைப் பற்றிய க.நா.சு. வின் சிந்தனைகளை இந்த நாவலில் பார்க்கலாம். அக்காலத்திய சென்னையின் இரு புறநகர் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த வள்ளுவரும் தாமஸும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கக் கூடும். சந்தித்திருக்கக் கூடும். இதற்கு ஏதும் சரித்திரச் சான்று இல்லையென்றாலும், இக்கால கட்டத்தில் நிகழ்ந்து வந்த மத உறவுகளும் கொந்தளிப்புகளும் சரித்திரம் கண்டவை தான்.

sujatha1புனையப்பட்ட நாவலில், சரித்திரம் பற்றியும் அதன் ஆதாரங்கள் பற்றியுமான சர்ச்சை நம்மை பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், சுஜாதாவின் கருப்பு, சிவப்பு, வெளுப்பு போன்ற நாவல்களை நினைவூட்டும். சரித்திர நாவல்கள் எழுதுவதில் நாற்பதுகளிலிருந்து இவர்களுக்கு முன்னோடிகளாக இருந்த மிகுந்த பிராபல்யமும் புகழும் பெற்று பெரும் ரசிக பலத்தைக் கொண்டிருந்த கல்கியும், அவரளவுக்கு வெற்றியோ பிராபல்யமோ பெற்றிராத மற்றவர்களும் வெகு ஜன கவர்ச்சியான வழக்கமான காதல் கதைகளுக்கே வித்தியாசமான பெயர்களையும் உடைகளையும் அணிவித்து நாட்டுப் பற்று உணர்வுகளுக்கு ஊட்டம் தரும் வகையில் சரித்திரப் பின்னணி கொடுத்து சந்தைக்குத் தம் நாவல்களைத் தயாரித்தார்கள்.

Writer_Prabhanchan_Books_Authors_Kavitha_Publications_Classics_maanudam_vellumஆனால், சுஜாதா வெற்றி பெற்ற வெகு ஜன எழுத்தாளர். எல்லா தரப்பு மக்களிடையேயும் பெரும் அளவில் பிராபல்யமும் புகழும் பெற்றிருந்தார். குறிப்பாக இளம் வயது வாசகர்களை அவர் வெகுவாகக் கவர்ந்திருந்தார். பிரபஞ்சன் கவனிக்கப்பட்டு வரும் இலக்கியத் தரமான சிறுகதையாளராக வளர்ந்து வந்தார். இருவருமே சரித்திர நாவல் எழுதும்போது சரித்திர ஆதாரங்களோடு, முடிந்த வரை கிடைக்கும் ஆதாரங்களைத் தேடி, இலக்கியத் தரத்தோடு எழுத முயன்றனர். பிரபஞ்சன் புதுச்சேரிக் காரர். புதுச்சேரியின் சரித்திரத்தை, அது ப்ரெஞ்சுக் காரர்களின் காலனியான காலத்திலிருந்து, கடைசியாக சுதந்திர இந்தியாவின் ஒரு தனிப் பகுதியான ஆனது வரையிலான சரித்திரத்தை மூன்று பாகங்களில் எழுதத் திட்டமிட்டுள்ளார். இதன் முதல் பாகமாகிய மானுடம் வெல்லும் வெளி வந்துள்ளது. அதில் வரும் சரித்திர பாத்திரங்களும் நிகழ்வுகளும் சரித்திர ஆதார பூர்வமாக இருக்கவேண்டி, அக்கால கட்டத்தில் வாழ்ந்து அந்நிகழ்வுகளையும் சரித்திர புருஷர்களையும் தன் அனுபவ பூர்வமாக பதிவு செய்துள்ள 18- நூற்றாண்டின் பின் பாதியில் ப்ரெஞ்சுக் காரர்களுக்கு துபாஷியாக இருந்த ஆனந்தரங்கம் பிள்ளையின் மிக விரிவான நாட்குறிப்புகளையே தன் நாவலுக்கு ஆதார ஆவணமாக பிரபஞ்சன் பயன் படுத்தியுள்ளார். சுஜாதாவின் நாவல், தன் தந்தையைக் கொன்ற பிரிட்டீஷ் அதிகாரியைப் பழி வாங்க தெற்குக் கோடியிலிருந்து கான்பூர் வரை ஒரு சாகஸப் பயணம் கொண்ட ஒரு மறவர் குல இளைஞனின் கதையைச் சொல்கிறது. 1857-ன் முதல் இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் இக்கதை நிகழ்கிறது. இதற்கு சரித்திர ஆதாரங்கள் தேடுபவருக்கு நிறையவே கொட்டிக் கிடக்கிறது. இருவரும் தம் நாவல் சரித்திரபூர்வமாக உண்மையாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்கள்.

Gopallapurathu_Makkal_Ki_Rajanarayanan_Tamil_Classics_Writers_History_Fiction_Worksகி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள் என்ற 1991-ம் வருடம் மத்திய சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற நாவலையும் ஒரு வகையில் சரித்திர நாவல் என்று தான் சொல்ல வேண்டும். கி. ராஜநாராயணன் எழுதி வரும் மூன்று பாகங்களுக்கு திட்டமிடப்பட்ட நாவலின் இரண்டாம் பாகம் இது. விஜய நகர் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தெலுங்கு பேசும் மக்கள் தம் ஊரை விட்டு தெற்கு நோக்கிப் பயணமாகினர். அந்த சரித்திரம் பற்றிய செவி வழிக்கதைகளும் செய்திகளும் ஒரு வாறாக இடைவெளிகளுடன் கோர்த்துச் சொல்லப்பட்டுள்ள நீண்ட கதை இது. கி. ராஜநாராயணன் அவ்வாறு இடம் பெயர்ந்து தெற்கு மாவட்டங்களில் குடிபெயர்ந்து வாழும் சமூகத்தைச் சேர்ந்தவர். இதன் இரண்டாம் பாகம், இந்த பயணத்தின் ஏதோ ஒரு குறிப்பிட்டுச் சொல்லாத காலகட்டத்திலிருந்து தொடங்கி இந்தியா விடுதலை அடைந்தது வரையிலான சரித்திரத்தைச் சொல்கிறது. இடைவெளிகள் விட்டுத் தொகுக்கப்பட்டுள்ள இந்தக் கதைகள் ஒரு விவசாய சமூகத்தின் எளிமை, வெகுளித் தனம், அவர்களுக்கே இயல்பான கிராமீய நகைச் சுவை, ஒரு அப்பாவித்தனம், ஒரு விஷமத்தனமான பாலியல் கிண்டல்கள் என வாய்மொழி மரபின் குணங்கள அனைத்தும் இவரது கதையாடலின் இன்றியமையாத அம்சங்கள். அவரது கதையாடலில் ஒரு மெல்லிய இழையாக சரித்திரம் அடியோட்டத்தில் தொடரும்.

ஒரு தீவிர விமர்சன நோக்கில் பார்த்தால், ஈ. பாலகிருஷ்ணபிள்ளையின் டணாய்க்கன் கோட்டை என்ற நாவல் தான் முழுக்க முழுக்க சரித்திரத்தில் ஆதாரித்த நாவல் என்று சொல்ல வேண்டும். அது மைசூரை திப்பு ஆண்ட கலவரமும் சண்டைகளும் நிறைந்த காலத்தில் நிகழ்வது., தொடர்ந்து மராட்டியர்களுடன் பிரிட்டீஷாருடனும் தன்னையும் தன் ராஜ்யத்தையும் காத்துக்கொள்ள நடந்த யுத்தங்கள் நிறைந்த காலம். தமிழில் இது தான் உண்மையான சரித்திர நாவல் என்று சொல்ல வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கல்கியும், அவரைப் பின் தொடர்ந்தவர்களும் சரித்திரம் என்று உடையணிவித்துத் தந்த காதல் புனை கதைகள் மக்கள் கவனத்தைத் தம் பால் முழுதுமாக ஈர்த்துக்கொண்ட காலத்தில் வந்த காரணத்தால் யாருடைய கவனத் திலிருந்தும் மறைந்தே போயிற்று. ,அது இப்போது திரும்ப பதிப்பிக்கப் பட்டு வந்துள்ளது. முதல் பதிப்பு வெளிவந்து முப்பது வருஷங்களுக்கு மேலான பிறகு இப்போது எண்பதுக்களில் இது மறுபதிப்பு பெற்றுள்ளது, மேலே சொல்லபட்ட, இப்போது எழுதப்பட்டு வரும் சரித்திரத்தில் ஆதாரித்த நாவல்களுக்கு ஒரு அர்த்தமும் முக்கியத்துவமும் தருகிறது. இவைகள் வெளிவரும் இக்கால கட்டத்தில் முன்னர் எழுதப்பட்ட சரித்திரம் என்று புனையப்பட்டு மலையெனக் குவிந்திருக்கும் காதல் கதைகள் அவற்றிற்கு உரிய கதியை அடையும் என்று எதிர்பார்க்கலாம்.

Writer_Vaasanthi_Portraitசரித்திரப் பழமையிலிருந்து நிகழ் காலத்திற்கு வந்தால் வாசந்தியின் நிற்க நிழல் வேண்டும் என்ற நாவல் நம் முன் நிற்கும். இலங்கையில் இன்றும் எரியும் பிரசினையாக உள்ள, சிங்கள பெரும்பான்மை யதேச்சாதிகாரத்திற்கு இரையாகித் தவிக்கும் தமிழர்களின் போராட்ட வாழ்வைச் சித்தரிக்கும் நாவல் அது. இந்த நாவல் ஒரு பக்கச் சாய்வாக தமிழர்களின் அவல வாழ்வை மாத்திரம் சித்தரிக்கும் ஒன்றல்ல. இரு தரப்பினருக்கும் பொதுவாகக் காணும் மனிதகுல சோகக் கதையைச் சொல்கிறது, வாஸந்தியின் அனுதாபம் இரு தரப்பிலும் சாதாரண மக்களின் வேதனையும் துயரமே வாழ்வாகிப் போவதும் தான். எல்லா அரசுகளும் விளையாடும் அரசியல் விளையாட்டின் தார்மீக மற்ற தன்னலம். தமிழ்த் தீவிர வாதிகள் தம்முள் ஒருவருக்கொருவர் தம் அதிகாரத்தைப் பெருக்க தம் தலைமையைக் காத்துக்கொள்ள, கடைசியில் தம்மையே அழித்துக் கொள்ளும் சகோதரப் பழிவாங்கல், எதையும் அவர் ஒதுக்குவதில்லை. நாவலின் பெரும்பகுதி ஒரு பாராட்டத் தகுந்த முயற்சி என்றே சொல்ல வேண்டும். இந்த பிரசினையை வாஸந்தி நேர்மையுடனும், தீவிரமாகவும் அணுகியிருந்தாலும், இந்நாவல் அவ்வளவாகக் கவனம் பெறவில்லை. காரணம், வாஸந்தி என்னும் ஒரு வெகு ஜன பிரபலம் பெற்ற எழுத்தாளர் எழுதியிருப்பதால் இருக்கலாம்.

இங்கிருந்து நகர்ந்தால், சிறுகதை, நாவல் என்னும் புனை எழுத்தை ஒரு சமூக ஆவணமாகவே பார்க்கும் விட்டல் ராவின்Vittal_Rao,_K எழுத்துக்களின் பக்கம் பார்வை விழும் அவரது நதி மூலம், காலவெளி போன்ற நாவல்கள் அத்தகைய குணத்தவை அவரது எழுத்துக்கள் இன்னம் சீரிய கவனத்தையும் அங்கீகரிப்பையும் வேண்டுபவை. ஆனால் அவருக்கு உரிய இலக்கிய ஸ்தானமோ,அங்கீகரிப்போ ஏன் கிடைக்கவில்லை என்பதற்கான காரணம் ஏதும் எனக்குத் தென்பட்டதில்லை. அவரது நதி மூலம் என்னும் நாவல் மூன்று தலைமுறை மாதவ பிராமண சமூகத்தின் வாழ்க்கையை தன் கதைக்களனாகக் கொண்டுள்ளது. அந்த வாழ்க்கையினூடே, வெளியே சமூகத்தின் நிகழ்வுகள், குறிப்பாக, சினிமாவிலும் , நாடகத்திலும் நிகழ்ந்துள்ள நிகழ்வுகள் மாற்றங்கள் இந்த சமூகத்தின் வாழ்வில் பின்னிப் பிணைகின்றன இந்த வெளியுலக மாற்றங்களும் நிகழ்வுகளும் வெறும் பின்னணியாகத் தரப்படவில்லை. அந்த மாற்றங்கள் இந்த மாதவ பிராமண குடும்பத்தின் வாழ்வோடும் வெளி சமூக சரித்திரத்தின் மாற்றங்களோடும் ஒன்றை ஒன்று பாதிக்கும் ஒட்டுறவு கொண்டவை. கடந்த இருபதுகளிலும் முப்பதுகளிலும் வயதுக்கு வந்த, இன்றைய முதியவர்கள் இந்த நாவலை, கடந்து விட்ட பழங்காலத்தை இழந்த ஒரு வருத்த உணர்வு இல்லாது படிக்க முடியாது. அவர்கள் கடந்து வந்துவிட்ட பழங்கால நினைவுகளும் படிக்கும் போது மேலெழும். விட்டல் ராவின் இன்னொரு நாவலான காலவெளியும் குறிப்பிட்டுப் பேசவேண்டிய ஒன்று. விட்டல் ராவ் எழுபதுகளில் சென்னை ஒவியக் கல்லூரியில் ஒவியம் கற்றார். காலவெளி நாவலில், அறுபது எழுபதுகளில், ஓவியக் கல்லூரியில் கற்று முடிந்த பின் நாட்களின் சூழலை, ஒவியமும் கற்று வந்த மாணவர்களின் உணர்வுகளை, அவர்களிடையே நிலவிய ஆசைகள், தோல்வி உணர்வுகள், பிழைக்க வழி தேடும் முயற்சிகள்,அவர்களிடையே நிலவிய போட்டி மனம், பொறாமை உணர்வுகள் அத்தனையையும் , நம்பகத் தன்மையோடும் வெகு அழகாகவும், உண்மையாகவும், விவரங்களோடும் தன் எழுத்தில் பதித்துள்ளார். ஒரு மாதிரியான பொஹீமியன் வாழ்க்கை, அதில் விருப்பும் தோல்வியும், தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் ஆசை, ஒரு கலைஞனின் நவீன பார்வைக்கும் உணர்வுகளுக்கும் அனுதாபமோ புரிதலோ இல்லாத நகர வாழ்க்கை, நவீன கலைகளின் புதிய போக்குகள் பற்றிய ஞானமோ அக்கறையோ கூட இல்லாத அந்த சூழலையும் வெகு நன்றாகவே விட்டல் ராவ் தன் நாவலில் பதிவு செய்துள்ளார். விட்டல் ராவுக்கு குறிப்பிட்டுச் சொல்லத் தக்க நுணுக்க விவரங்களின் நினைவும் அவற்றைப்பதிவு செய்யும் திறனும்,, தன் நிகழ் கால, இலக்கியம், நாடகம், சினிமா, சங்கீதம் என பலதுறைகளிலும் ஆழ்ந்த பரிச்சயமும் கொண்டிருந்திருக்கிறார். அக்கால புதுமையான தமிழில் இலக்கிய சிறுபத்திரிகைகளின் பெருக்கமும், எழுத்தாளர், ஒவியர், என பல்துறைகளிலும் ஈடுபாடுள்ளோ குழு சந்திப்புகளும், தெருச் சந்திப்புகளின் உரையாடல்களும், திருவல்லிக்கேணியின் குறுகிய எண்ணற்ற சந்துகளில் நடமாட்டமும் ஆங்கிலோ இந்தியர்கள் வசிக்கும் ஒரு தெருமுனை வீட்டிலிருந்து இன்னொரு சந்தின் ஒரு இடுங்கிய வீட்டின் உள்ளே அறுபதுக்களின் ராக் இசைத் தட்டுக்கள் கேட்கப் போவதுமான அந்நினைவுகள் அந்த சூழல் எல்லாம் பதிவாகியிருப்பது, இது நினைவுகளின் பதிவா, அல்லது கதை சொல்லலா என்ற ஊசலாட்டம் இந்த மாதிரியான எழுத்து விட்டல் ராவை தனித்துக் காட்டும். அந்நாட்களில் கல்லூரியிலிருந்து படிப்பை முடித்து வெளியே வந்த நான்கு ஒவிய மாணவர்களின் அன்றாட வாழ்வின் போராட்டத்தையும் எதிர்பார்ப்புகளையும் தோல்விகளையும் வெகு இயல்பாக, ஏதும் பெரும் சாதனை செய்தவதான தோரணையின்றி பதிவு செய்திருப்பது விட்டல் ராவின் சிறப்பு.

Thoppil_Mohammad_Meeran_Tamils_Creativeஇந்த இடத்திலிருந்து தோப்பில் முகம்மது மீரானின் ஒரு கடலோரத்து கிராமத்தின் கதை என்னும் முதல் நாவலுக்குள் நாம் நகர்வது ஏதும் சிரம மில்லாத பயணம் தான். மீரானின் இம் முதல் நாவலே ஒரு க்ளாஸிக் ஆகியுள்ளதும், இலக்கிய அங்கீகாரம் பெற்றுள்ளதும், அவருக்கு பெரும் பாராட்டுக்களும் புகழும் தந்துள்ளதும், அதே சமயம் இது வியாபார ரீதியாகவும் வெற்றியாகியுள்ளதெல்லாம் எல்லாமே, ஏதோ ஒரே பரிசு அவருக்கு அளிக்கவல்லது எல்லாவற்றையும் ஒரே கூடையில் போட்டு ஒட்டு மொத்தமாக கொடுத்தது போல ஆனதும், தமிழில் புதிதாக நிகழும் ஒரு அதிசய நிகழ்ச்சி. சமீபகால தமிழ் இலக்கிய வரலாற்றில், இது போன்ற ஒரு நிகழ்வு இருந்ததில்லை. தோப்பில் முகம்மது மீரான் இந்த நாவலை எழுதியதே ஒரு சாகஸம் நிறைந்த காரியம் தான். 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப பத்துக்களில், அவரது முஸ்லீம் சமுதாயத்தின் வாழ்க்கைச் சித்திரத்தை இந்நாவலில் பதிந்துள்ளார். அந்த சமுதாயத்தின் மத நம்பிக்கைகள், அவற்றில அவர்கள் கொண்டிருந்த வேறு எதையும் சிந்திக்கவும் செய்யத் துணியாத முரட்டு விஸ்வாசம், ஆங்கிலக் கல்விக்கு எதிர்ப்பு, தாம் அராபிய வம்ஸாவளியில் வந்தவர்கள் என்றும் அந்த கலப்பற்ற புனிதத்வத்தைக் காப்பாற்றுபவர்கள் என்ற கர்வம் எல்லாம் மீரானால் எவ்வித தயக்கமுமின்றி இந்நாவலில் சித்தரிக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த சித்தரிப்பில் தம் மூதாதையரை, அவர்கள் வாழ்க்கைப் பிடிப்பை, பழமையை, அவர் கேலி செய்யவில்லை. அவர்கள் அந்த வாழ்க்கை மதிப்புகளில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள், அதற்காக இன்றைய நம் மதிப்பிடுகளைக் கொண்டு அவர்களைக் கேலி செய்வதில் அர்த்தமில்லை, இதே போல இன்றைய நம் வாழ்க்கை மதிப்புகளும் நம்பிக்கைகளும் நம் எதிர் கால சந்ததியார்களின் கேலிக்கும் இரையாகலாம் என்பது போன்ற சிந்தனை பின்னிருந்திருக்கிறது. இது எப்படியோ போகட்டும். எப்படியாக இருந்தாலும், இந்த சித்தரிப்பு, தம் வாழ்க்கை முறையிலும், நம்பிக்கைகளிலும் ஒரு அதீத முரட்டுத் தனமான பிடிப்பு உள்ள முஸ்லீம் சமூகத்தைப் பற்றிய இந்த சித்தரிப்பு, அபாய கரமானது தான். ஸல்மான் ருஷ்டிக்கு என்ன நிகழ்ந்தது என்பதை நாம் நினைவு கொண்டால், தோப்பில் முகம்மது மிரானின் எழுத்து எவ்வளவு சாகஸம் நிறைந்தது, எத்தகைய பயங்கர விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்பதை நினைத்தால், இந்த நாவல், அவரது சமூகத்தினரே வெளியிடும் ஒரு பத்திரிகையில், அந்த முஸ்லீம் கமூகம் தமக்குள்ளே வினியோகித்துக் கொள்ளும் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது என்பது ஆச்சரியம் தருவது. திரும்பவும் இந்த க்ளாஸிக் தமிழ் நாவல் எழுதிய தோப்பில் முகம்மது மீரான், தமிழ் படித்தவர் இல்லை. மலையாளம் மாத்திரமே படித்தவர். அவர் எழுதுவது தமிழ் மொழியில் தான் ஆனால் அவர் படித்த அவருக்குத் தெரிந்த மலையாள எழுத்தில் தான் தமிழ் எழுதுகிறார். பின்னர் தமிழ் எழுத்தில் தெரிந்தவர் உதவியுடன் பிரதி செய்து கொள்கிறார். ஆச்சரியம் தான்.

நேர்மை, உண்மை, தனக்கு உண்மையாயிருத்தல், சுயத்தை கேள்விக்கு உட்படுத்தல் என்பன பற்றிப் பேசும்போது, சி. எம் முத்து என்னும் ஒரு இளம் எழுத்தாளர் பக்கம் நம் கவனம் செல்கிறது. சி.எம். முத்து எண்பதுகளில் தெரிய வந்தவர். அவரது இதுகாறும் வெளிவந்துள்ள நெஞ்சின் நடுவே, கறிச்சோறு என்னும் இரண்டு நாவல்களிலும் சாதி என்னும் உணர்வு வெறியாகக் கொண்டுள்ள அவர் சாதியினரைப் பற்றித் தான் எழுதுகிறார். அவர் சார்ந்திருக்கும் தேவர் என்னும் பின் தங்கிய சாதியினருக்குள்ளும் உள்ள எண்ணற்ற சாதி உட்பிரிவுகள் அவர்களுக்குள்ளும் உள்ள மேல் சாதி, கீழ்சாதி பிளவுகள் அவரவரின் மேல் ஜாதிப்பெருமைகளும் கர்வமும், அதனால் அடிக்கடி வெடிக்கும் சாதிச்சண்டைகள், அவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக தம்மிலும் கீழ் சாதியினரோடான தீண்டத் தகாதாராக நடத்தும் கொடுமை, இது அவ்வளவின் வேஷதாரித்தனம் போன்ற அத்தனையும் முத்துவின் நாவல்களில் எத்தகைய தயக்கமோ, பயமோ இன்றி வெளிப்படுத் தப்படுகின்றன. மீரான் தன் மதத்தினரின் அன்றைய சித்திரத்தை உண்மையுடன் சித்தரித்தாலும் அவை அவர்களது அன்றைய வாழ்வின் மதிப்பீடுகள் சார்ந்தது என்ற ஒரு தற்காப்பு உணர்வு தெரிவது போல, முத்து தன் சாதியினரின் மேல்சாதிப் பெருமையும் கர்வமும், தமக்குள் இருக்கும் ஆயிரம் பிரிவுகளை நியாயப் படுத்தும் வேஷதாரித்தனத்தையும் அந்த வாழ்க்கையின் மதிப்புகள் சார்ந்தது என்று தன் சாதியினரின் சாதி வெறியை நியாயப் படுத்துவதுமில்லை. சமாதானம் ஏதும் சொல்வதுமில்லை. கடுமையான கண்டனம் தான் தயக்கமின்றி அவர் நாவல்களில் வெளிப்படுகிறது. தன் சுய விமர்சனத்தில் முத்து தன் சாதியினரைப் பற்றிச் சொல்வது அத்தனையும் ஒவ்வொரு சாதி சமூகத்தைப் பற்றியதுமான உண்மை என்ற போதிலும், மேல் சாதி ஹிந்து சமூகத்தில் உள்ள ஒவ்வொரு சாதியினரும் பேணும் சுய சாதிப் பெருமையும் அதை மறைக்கும் அவர்களிடம் காணும் வேஷதாரித்தனமும், சாதி அடுக்கின் ஏணியின் ஒவ்வொரு படியும் ஏற ஏற மேல் படி ஒவ்வொன்றிலும் இருக்கும் சாதியினரின் வெறியில் ஏற்றத்தையே நாம் காண வேண்டியிருக்கும். பிராமணரைத் தவிர. அவர்கள் கண்ணாடிப் பெட்டியில் பாம்போடு அடை பட்டிருக்கும் எலியைப் போல எந்நேரமும் நடுங்கியே வாழ்கிறவர்கள். சுய ஜாதி விமர்சனம் என்ற அளவில் தன் சாதியினர் பேணும் சாதி வெறியை மறைக்காது குறைக்காது நியாயப் படுத்தாது வெளிப்படுத்தும் சி.எம். முத்து தமிழ் நாட்டில் தனித்துக் காணும் எழுத்தாளர். தமிழ் நாட்டில் எந்த சாதி எழுத்தாளரும் தன் சாதியினரின் சாதி வெறியைப் பற்றி மூச்சு விடமாட்டார். அவர் பேணும் சாதி சமத்துவத்தை நிலை நாட்ட, பொதுவாக சாதிப் பற்றை எதிர்க்க, அவருக்கு சுலபமாகக் கிடைப்பது பிராமண சமூகம் தான். அவர் தன் சாதி உணர்வை மீறிய சமத்துவத்தை, முற்போக்கு உணர்வுகளை அவ்வப்போது நிரூபித்துக் கொள்ள, பறை சாற்றிக் கொள்ள அவருக்கு சுலபமாக கைகொடுப்பது பிராமணரிடம் அவர் காணும் ஜாதி உணர்வை கடுமையாகச் சாடுவது தான்

(தொடரும்)

6 Comments »

 • ராம்ஜி​_யாஹூ said:

  இப்போது 2013 இல் உங்கள் பார்வையில்
  இந்தக் கட்டுரை எவ்வாறு உள்ளது

  # 7 September 2013 at 9:55 am
 • Venkat Swaminathan said:

  ராம்ஜி,

  உங்கள் கேள்வியில் தொக்கி நிற்பது, இக்கட்டுரையில் எழுதியுள்ளவற்றில் பலவோ, சிலவோ உங்களுக்கு பொருத்தமானதாக, சரியாக படவில்லை. என் அபிப்ராயங்கள் இப்போது மாறியிருக்கக் கூடும் என்று எண்ணுகிறீர்கள். அந்த சந்தேகங்களை வெளிப்படச் சொல்லி, ஏன் அப்படிக் கருதுகிறீர்கள் என்று சொன்னால் தானே அது கருத்துப் பரிமாறல் ஆகும். உண்மை, பார்வைகள் கருத்துக்கள் மாறும் தான். கால நிர்ப்பந்தங்களும் மாறும் தான்.60-களின் கடைசியில் பிணக்கு கதை எழுதிய ஜெயகாந்தன் 1959-ல் திருச்சி மேடையில் ஈ.வே.ராவின் முன்னிலையிலேயே அவருக்கு தன் எதிர்ப்பை அவரது பக்தர்கள் முன்னிலையிலேயே காட்டிய ஜெயகாந்தன், சில வருஷங்களுக்கு முன் ஹாஸ்பிடலிலிருந்து நேரே கருணாநிதியைப் போய் தரிசித்து நன்றி தெரிவித்து வந்தார். 1950 களில் பத்திரிகைக் கடை முன்னாலேயே நண்பர்களிடையே குமுதம் ஆனந்த விகடம் பத்திரிகைகளின் அசட்டுத்தனத்தை கேலிசெய்த சுஜாதா பின்னர் குமுதம் பத்திரிகைக்கு அபிமான எழுத்தாளர் ஆனார். சங்கர்க்கு ஆஸ்தான திரைக்கதை வசன கர்த்தாவானார். 40/50 வருடங்களுக்கு முன் ஒரு சிலரைப் பற்றிச் சொன்னதையேவா இப்போதும் சொல்வோம் அதது அந்தந்த சமயம், என்ன கிடைக்கிறது படிக்க பார்க்க என்பதைப் பொறுத்துத்தானே இருக்கும். இல்லையா? அப்படித் தான் இங்கும் ஒரு சிலரைப்பற்றி கொஞ்சம் shades மாறும் இப்போது.

  உங்கள்மனதை விட்டு எழுதுங்கள். அதற்குத் தானே இருக்கிறது இந்த இடம்.

  # 10 September 2013 at 3:06 am
 • Sankaranarayanan said:

  திரு ஏ.எஸ்.பி அய்யர் அவர்களின் ‘முப்பெரு வீரர்கள்’ என்ற சரித்திர நவீனத்தைப் படித்திருக்கிறீர்களா? 1940 களில் வெளியிடப்பட்ட இந்த புத்தகம், நவீன தமிழ் இலக்கியத்தின் ஆரம்ப கட்டங்களில் வெளியான வரலாற்றுப்ப் புனைவுகளில் ஒரு குறிப்பிடதக்க புத்தகம் என்று நீங்கள் கருதவில்லையா

  # 10 September 2013 at 9:33 am
 • Venkat Swaminathan said:

  நாம் அறிமுகமானவர்கள் என்றே நம்புகிறேன். நிறைய மொழிபெயர்ப்புகள் செய்துள்ள சங்கர நாராயணன் தானே.

  நாம் எல்லோரும் ஒவ்வொருவரும் எவ்வளவுதான் படித்திருக்க முடியும்? தெரிந்திருக்க முடியும்? என் வரம்புகள் எனக்கு. பல தெரிய வருவதில்லை. சில உரிய நேரத்தில் நினைவுக்கு வருவதில்லை. நான் கேள்விப்பட்டிராத புத்தகங்களில் ஒன்று, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஏ.எஸ்.பி. அய்யரின் முப்பெரு வீரர்கள். சொல்வனம் பொறுப்பாளர்கள், அதன் ஆசிர்யர் குழு அனுமதிக்குமாயின் இந்த புத்தகம் பற்றி எழுதுங்களேன்.மிக பழைய புத்தகமாக இருக்கவேண்டும். இப்போது கிடைக்குமோ என்னவோ. அது பற்றி நீங்கள் எழுதியாவது தெரிந்து கொள்ளலாமே.

  # 11 September 2013 at 1:31 am
 • Sankaranarayanan said:

  அன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய திரு.வெ.சா. அவர்களுக்கு,
  நீங்கள் அறிந்த நபர் நான் அல்ல. ஆனால் உங்கள் எழுத்துக்களை மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் படித்து மகிழும் ஒரு வாசகன் .
  நான் குறிப்பிட்ட புத்தகம் ‘முப்பெரு வீரர்’ , திரு ஏ.எஸ்.பி அய்யர் (Ayilam S.Panchapakesa Ayyar) அவர்கள் எழுதியது. இதன் பிரதி , என் தந்தையின் சேகரிப்பில் இருந்து எனக்கு கிடைத்தது. ஒய்வு பெற்றபின் என் தந்தையின் சேகரிப்பில் இருந்த புத்தகங்களை குடைந்த பொழுது கிடைத்த புத்தகம். அடி , முடி இல்லை. முகவுரையிலிருந்து ஆசிரியர் பெயர் தெரிந்தது. பின்னர் நடையும், அடக்கமும் ஒரு வித்யாசமான வாசிப்பு அனுபவத்தை தந்தது. அலக்சாண்டர் – சந்திரகுப்தர் -சாணக்யர் என்னும் மகத்தான சரித்திர புருஷர்களைச் சுற்றிப் புனையப்பட்ட சிறப்பான புனைவு. நுணுக்கமான விஷயங்கள் அடங்கிய முகவுரையுடன் கூடியது. சரித்திர பின்புலத்திற்கு எடுத்துக்கொண்ட ஆதாரங்கள் மிகவும் சிரத்தையுடன் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்ட தமிழில் பிறகு வெளிவந்த Romantic historical fantasy- களில் இருந்து மாறுபட்டதாக இருந்தது.
  உங்கள் பதிலுக்குப் பிறகு, மறுபடி கூகிளில் இருந்து தேடியதில், திரு. ஏ.எஸ்.பி அய்யர் அவர்கள் இந்தக் கதையை ஆங்கிலத்தில் முதலில் எழுதி இருப்பது தெரிந்தது. (https://archive.org/stream/threemenofdestin035316mbp/threemenofdestin035316mbp_djvu.txt)
  தமிழில், மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படிருகலாம். யாருடைய மொழிபெயர்ப்பு என்பது தெரியவில்லை.
  திரு. ஏ.எஸ்.பி அய்யர் அவர்களே சாதனை படைத்த ஒரு ஆளுமை என்பதும் தெரிந்தது. பாலக்காட்டைச் சார்ந்த அயிலம் என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்த அவர் , சென்னை ராஜதானியிலிருந்து (Madras Province) , ICS தேர்வு பெற்றவர்களில் முதன்மையானவராகச சிறப்புப் பெற்றவர். ஆங்கிலத்தில் இன்னும் பல சிறப்பான புத்தகங்களை எழுதியவர். ஒரு பண்பட்ட எழுத்தாளர், மற்றும் கலை விமர்சகர் என்ற முறையில், நிச்சயம் உங்களுக்கு திரு ஏ.எஸ்.பி. அய்யர் அவர்களில் பன்முக ஆளுமை பற்றி அதிகமாகவே தெரிந்திருக்கலாம்.
  அன்புடனும், வணக்கத்துடனும்,
  சங்கரநாராயணன்

  # 12 September 2013 at 5:43 am
 • bala said:

  சி. எம் முத்து போன்ற அதிகம் அறியாத எழுத்தாளர்களை எனக்கு அறிமுகம் செய்வதற்கு நன்றி.

  # 14 September 2013 at 6:27 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.