kamagra paypal


முகப்பு » கவிதை

பூக்களின் வெள்ளம்

weather-picture-photo-umbrellas-rain-rome-letneoதென்மேற்குப் பருவமழை
வருவதற்கு முன்னரே ஊர்
திரும்பிவிட வேண்டுமென்றுதான்
திட்டம் ஆனால் இன்னும் ரெண்டு
அமர்வுகளிலிருந்தால் தான்
முடிவு வருமென்று தெரிந்தது
எனவே தான் 6.43 ஐப் பிடித்து
மேல் புறநகர் வண்டியில் தெற்கு
நகரத்தையடையும்போது
விடியலே இல்லையோ வென்று
இருட்டுடன் மழை பொழியவே
திகைப்பு இடமின்றி பதுங்கியே
படியடைந்ததும் கைப்பேசி
மூலம் குறுஞ்செய்தி தாமதம்பற்றி
அனுப்பிய பின் எதிரே தெரிந்தது
மாதா கோயில் கதவு ரயிலடியின்
சுரங்கப்பாதையில் பூக்களின்
வெள்ளப்பெருக்கு –
பல வண்ணக்குடைகளும் –
அவற்றின் கீழ் முகங்களும்.

ஆசிரியர் குறிப்பு:

நவீன தமிழ்க்கவிதை உலகிற்கு கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகப் பரிச்சயமானவர் திரு.எஸ்.வைத்தியநாதன். ’ழ’, ‘கவனம்’, ‘நவீன விருட்சம்’ ஆகிய முக்கியமான சிற்றேடுகளின் வளர்ச்சியில் தொடர்பு கொண்டு கவிதை, கட்டுரை எழுதி வந்தவர். எந்தவிதத் தத்துவப் போர்வை இல்லாமலும், ஆர்ப்பாட்டம் இல்லாமலும், வலிமையான சொற்கட்டுடன், அனுபவச்செறிவுடன் நேரிடையாகப் பரிவுடன் பேசும் கவிதைகள் இவருடையவை – ஆர்.ராஜகோபாலன்.

Comments are closed.