kamagra paypal


முகப்பு » இந்திய சினிமா, திரைப்படம்

யட்சி – குறும்பட அறிமுகம்

மரணத்தை தழுவத் துடிக்கும் எழுத்தாளனையும், ஒரு தேவதை போல அவனது பாதுகாப்பில் வளர்ந்து வரும் சிறு பெண்ணையும் மையப்படுத்தி தரமணி திரைக்கல்லூரி மாணவர் மணிமாறனால் இறுதியாண்டு செய்முறைப் பயிற்சிக்காக எடுக்கப்பட்ட குறும்படம் தான் “யட்சி”. சென்னை எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி வழங்கிய இக்குறும்படம் – இந்த ஆண்டு நடைபெற்ற கோவா  உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் (2013) – இக்குறும்படம் சிறந்த கதைக்கான சிறப்புப் பரிசையும் பெற்றுள்ளது.

yatchi-shooting-pics-01

வினோத நோயினால் பாதிக்கப்பட்ட வயோதிக எழுத்தாளன் தேவதச்சன் (பரிக்ஷா ராஜாமணி), நோய் முற்றிய நிலையில் எடுக்கப்போகும் தற்கொலை முடிவு பற்றிய காட்சிகளாக இக்குறும்படம் விரிகின்றது. முடிவு என்ன என்பதை குறும்படத்தின் ஆரம்பத்திலேயே இயக்குனர் சொல்லி விடுகிறார். “இதுதான் முடிவு…!” என்பதை ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லிவிட்டு குறும்படத்தை அலுப்பில்லாமல் நகர்த்துவது சவாலான, சிரமமான காரியம். குறும்படம் முழுவதும் ஒரு சின்ன அறையில் படமாக்கப்பட்டுள்ளது. கடைசி ஒரு காட்சியில் மட்டுமே கேமரா அறையை விட்டு வெளியே நகர்கிறது. திரைக்கதையாசிரியராக மணிமாறனுக்கும், ஒளிப்பதிவாளராக ராமனாதனுக்கும் இது கடினமானதாகத் தான் இருந்திருக்க வேண்டும். என்றாலும் இருவரும் படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் அமைத்திருகிறார்கள்.

டெட்ராப்ளீஜியா (Tetraplegia) எனும் வகைப் பக்கவாதத்தால் உடம்பிலுள்ள தசைநரம்புகள் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும், இடதுகையும் ஏற்கனவே செயலிழந்த நிலையில், வலது கை மட்டுமே அசையும் நிலையில் உயிர்ப்புடன் உள்ளது. அதுவும் கூட ஓரிரு நாட்களில் செயலிழந்து போகலாம் என்று மருத்துவ பரிசோதனைகள் மூலம் எழுத்தாளர் தேவதச்சனுக்குத் தெரிய வருகின்றது. பல நாவல்களும், சிறுகதைகளும், பயணக் கட்டுரைகளும் எழுதி அவருக்குப் பெயர் வாங்கிக்கொடுத்த கை ஓரிரு நாட்களில் செயலிழக்க இருக்கின்றது. இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலையில் தற்கொலை செய்துகொள்ள தேவ் முடிவெடுக்கிறார். அதேசமயத்தில் தனது பாதுகாப்பில் வாழும் சிறுமியின் எதிர்காலம் பற்றியும் யோசிக்கத் துவங்குகிறார். தனிமையில் வாழும் எழுத்தாளன் தனது இறுதி முடிவான தற்கொலை எண்ணத்தை – தன்னுடைய பாதுகாப்பில் வாழும் இலக்கியா (நிவேதா) என்ற சிறுமிக்கு விடுமுறை நாளின்போது ஒட்டகக் கதையின் மூலம் மறைமுகமாக உணர்த்தத் துவங்குகிறார்.

“தேவ்… Friday வே சொன்னாங்க தமிழ் மிஸ்…! Monday வரும்போது ஒரு ஸ்டோரி எழுதிட்டு வரணுமாம்… அதுவும் நான் ரைட்டர் வீட்டுப் பொண்ணாம். நான் தான் மொதல்ல கொடுக்கணுமாம்…!” என்று சொல்லிவிட்டு புத்தகத்தையும்    பேனாவையும் எடுத்துக்கொண்டு எழுதுவதற்குத் தயாராகிறாள் இலக்கியா.

“மொதல்ல நான் கத சொல்லிட்றேன். சரின்னு பட்டா எழுது… இல்லன்னா எழுத வேண்டாம்.” என்கிறார் தேவ். தன்னுடைய கையறு நிலையையே உருவகக் கதையாகச் சொல்லத் துவங்குகிறார் தேவ்.

ஒரு பெரிய பாலைவனத்தில் ரெண்டே ரெண்டு ஒட்டகம் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்ததாம். ஒண்ணு பெரிய ஒட்டகம், இன்னொன்னு அதோட குட்டி. திடீரென அங்கு வெப்பம் அதிகமானதால், இரண்டு ஒட்டகமும் சேர்ந்து வேறு இடத்திற்கு இடம்பெயர முடிவெடுக்கின்றன. பெரிய ஒட்டகத்திற்கு காலில் அதிகமான காயங்கள் இருந்ததால் வேகமாக முன்னேறி நடக்க முடியவில்லை. ஆகவே சின்ன ஒட்டகத்திடம் “நீ மட்டும் தனியா போயிடு” –ன்னு சொல்லுச்சாம்.

“அவ்வளோ பெரிய பாலைவனத்துல குட்டி ஒட்டகம் எப்படி தேவ் தனியா போகும்… போயிரு போயிருன்னா எப்படிப் போகும்?” என்கிறாள் இலக்கியா.

எதையோ சிந்தித்தவாறு கதையை மேலும் தொடர்கிறான் தேவ். “என்னோட நண்பன் பக்கத்து காட்டுல தான் இருக்கான். அவன் உனக்கு வழி காட்டுவான். இருட்ட வேற ஆரம்பிச்சிடுச்சி. மணல்ல சூடு வேற கொறைய ஆரம்பிக்கும். உன்னால தனியா போக முடியும். நீ வேகமா தப்பிச்சி போயிடு”ன்னு பெரிய ஒட்டகம் குட்டி ஒட்டகத்திடம் சொல்லியதாகச் சொல்கிறான் தேவ்.

“அதுவே குட்டி ஒட்டகம்!. தனியா எப்பிடி காட்டுக்குள்ள போகும்?. வேற ஏதாச்சும் அனிமல்ஸ் அடிச்சி சாப்பிடுட்சின்னா… அதான் பயப்படுது” என்று குறுக்கிடுகிறாள்  சிறுமி.

இங்கு எழுத்தாளனுக்கே உரிய புத்திசாலித் தனத்துடன் தேவ் கதையை மடைமாற்றித் தொடர்வதும், சிறுமி இடையிடையே கேள்விகளை எழுப்பி அவனை திக்குமுக்காடச் செய்வதுமாக திரைக்கதை பயணிக்கிறது. ஓரிடத்தில் அந்தச் சிறுமி கேட்கிறாள்:

“கதையில இவ்வளோ மிஸ்டேக்ஸ் வருது… உன்னப் போயி எல்லாரும் பெரிய ரைட்டர்னு சொல்றாங்க?”

இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மேலும் கதையைத் தொடர்கிறான் தேவ். தன்னுடைய இறுதி முடிவானது குழந்தையை நிர்கதியற்றவளாக மாற்றும் என்பதால், சிறுமியைப் பார்த்துக் கொள்ளும்படி தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் செல்பேசி வழியே இடையிடையே கேட்டுக்கொள்கிறான் தேவ். ஒரே நபரை ஏற்பாடு செய்யாமல், ஒவ்வொரு விஷயத்திற்கும் சிறப்பாக ஒரு  நபரை ஏற்பாடு செய்கிறான் தேவ். பொழுது புலர்கிறது. தேவ் சொன்ன கதையை எழுதிக்கொண்டு சிறுமி பள்ளிக்குப் புறப்படுகிறாள்.

“தேவ் நான் கெளம்புறேன். உன்ன ச்சேர்ல உட்கார வெக்க கணேஷ் அண்ணன வரசொல்லிட்டுப் போறேன்.” என்கிறாள். கதவருகே சென்றவளை அழைக்கிறான் தேவ்.

“இலக்கியா… கனேசன உடனே வரச் சொல்லாத. ஒருமணி நேரம் கழிச்சி வரச் சொல்லு…” என்கிறான். தலையாட்டிவிட்டுச் செல்கிறாள் இலக்கியா.

வார நாட்களுக்கே உரிய தனிமையின் கோரப்பிடியில் மீண்டும் சிக்குகிறான் தேவ். தூக்கக் கலக்கத்தில் படுக்கையில் கிடக்கும் அவனிடம் சொல்லிக்கொண்டு அறையைவிட்டு வெளியேறுகிறாள் சிறுமி. கட்டிலின் அருகிலிருக்கும் மேசையிலிருந்து சவரப் பிளேடினை பற்களால் கவ்வியவாறு தனது வலதுகை மணிக்கட்டு நரம்பை தேவ் அறுத்துக் கொள்கிறான். தூரத்தில் சமுத்திரம் தெரியும் நாலு வழிப் பாதையில் – பள்ளியை நோக்கி மகிழ்ச்சியுடன் நடக்கத் துவங்குகிறாள் சிறுமி.

yatchi-shooting-02

“காலைல எழுந்து பார்த்த குட்டி… பெரிய ஒட்டகம் செத்து போனதுலையும் ஒரு ஞாயம் இருக்குதுன்னு நெனச்சிக்கிட்டு தன்னுடைய பயணத்தை தொடங்குச்சாம்…” என்று மணிக்கட்டு நரம்பை அறுத்துக்கொண்ட தேவின் குரல் பின்னணியில் கேட்கிறது.

“அந்த ஒட்டகம் பாவமுள்ள தேவ்?” என்ற இலக்கியாவின் குரலும் கேட்கிறது.

“குட்டி ஒட்டகமா?” என்று கேட்கிறான் தேவ்.

“ஹூஹூம்… பெரிய ஒட்டகம்” என்கிறாள் இலக்கியா. சிறுமியின் கழிவிறக்கம் ஒட்டகத்தின் மீதானதல்ல என்பதை வளர்ந்த பின்பு அவள் உணரக்கூடும். அதனை உணர்த்தும் விதமாக, நான்குவழிப் பாதையின் ஓர் ஓரத்திலிருந்து எரியும் குப்பையிலிருந்து வெளிப்படும் புகையானது காற்றில் பரவ, புகையிலிருந்து விலகியவாறு இலக்கியா நடக்கத் துவங்குகிறாள்.

சர்கர நாற்காலியில் அமர்ந்தவாறும், படுக்கையில் கிடந்தவாறும் ஓர் அடிகூட அங்குமிங்கும் நகராமல் இருந்த இடத்தில் இருந்தவாறே முக பாவனைகள் மூலம் இயல்பான நடிப்பினை வெளிப்படுத்தி – தன்னுடைய கதா பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார் ராஜாமணி. இவர் “ப்ரியாராஜ்” என்ற பெயரில் ஜனரஞ்சகப்  பத்திரிகைகளில் துணுக்குக் கட்டுரைகள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. (குமுதம் போன்ற இதழ்களில் எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தை நையாண்டி செய்தவர்.) “சென்னையின் கதை (1921)” என்ற கிளின் பார்லோ எழுதிய ஆங்கில ஆவண நூலை தமிழில் மொழி பெயர்த்து பரவலான கவனத்தையும் பெற்றிருக்கிறார். அடிப்படையில் இவர் எழுத்தாளனும் என்பதால் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக உள்வாங்கி இயல்பாக நடித்திருக்கிறார். ராஜாமணிக்கு குறும்படங்களில் நடித்த அனுபவம் ஏற்கனவே இருக்கின்றது.

ஆனால் சிறுமி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நிவேதாவிற்கு இதுதான் முதல் குறும்படம். என்றாலும் ராஜாமணிக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்திருக்கிறாள். அவளுடைய உடல்மொழியும், பேச்சும், இயல்பும் திரைக்கதை கோரியிருந்த தேவதைக் கதா பாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறது. கருப்பு-வெள்ளை நிறமுடைய நாயைக் குறும்படத்தின் நெடுகிலும் கதை ஓட்டத்திற்கு ஏற்றார்போல பயன்படுத்தி, எழுத்தாளனின் இருள்சூழ்ந்த மனநிலையையும், தேவதை போன்ற சிறுமியின் மனநிலையையும் அழகியல் குறியீடாக வெளிப்படுத்திய அளவில் மணிமாறனைப் பாராட்டலாம். படத்தொகுப்பு, இசை, கலை இயக்கம் போன்றவையும் மெச்சும் படியாகத் தான் இருக்கின்றன. வருங்காலத்தில்  இவர்களால் சிறந்த படைப்புகளைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தக் குறும்படம் ஏற்படுத்துகின்றது.

எழுத்து & இயக்கம்: மணிமாறன்
ஒளிப்பதிவு: ராமநாதன். SP
படத்தொகுப்பு: லோகேஸ்வரன். J
ஒலி வடிவமைப்பு: மணிகண்டன். S
பதப்படுத்தியது: ஜெகநாதன்
இசை: ஆண்டனி ஜார்ஜ்
கலை இயக்கம்: முத்துக்குமார். CK
நடிகர்கள்: பரிக்ஷா ராஜாமணி, நிவேதா

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.