மகரந்தம்

மனத்தளர்ச்சியின் பரிணாம வேர்கள்?

Sad businesswoman30லிருந்து 50 சதவிகிதம் வரையான மக்கள் “மனத்தளர்ச்சி” (mental depression) எனும் வகை  நோய்க்குறிகள் உள்ள நிலைக்கு ஆளாகிறார்கள் எனத் தெரிகிறது. பொதுவாக எந்த ஒரு மனப் பிரச்சினையும் அளவில் குறைவாகவே இருக்க வேண்டும். இத்தகைய அதிக அளவு மனத்தளர்ச்சி இயற்கைத்தேர்வால் (natural selectiion) களையப்பட்டிருக்க வேண்டும். ஆனால் களையப்படவில்லை. ஏன்? மனத்தளர்ச்சியின் போது மக்கள் தங்கள் பிரச்சனைகளை அதிக ஆழமாக பகுப்பாய்வு செய்கிறார்கள் என்றும், மனத்தளர்ச்சி என்பது   தேவையான, மிகவும் கவனத்துடன் பரிணாமப்  பாதையில்  எழும்பிய  ஒரு சாதகமான வாழ்வியல்பாகவே கூட இருக்கலாம்  என்கிறது இந்த ஸயிண்டிஃபிக் அமெரிக்கன் கட்டுரை.

பண்டைக் காலத் தொழுநோய்- மிகப்பழமையான ஆதாரம்

leprosy20patient20holding20flowerகி.மு-2000இலேயே இந்தியாவில் தொழுநோய் இருந்ததற்கான ஆதாரத்தை இந்த ஆய்வுத்தாள் முன்வைக்கிறது. வேதத்தில் தொழுநோய் சொல்லப்படுகிறதா இல்லையா என்கிற ஒரு விவாதத்துக்கு இந்த ஆதாரம் முற்றுப்புள்ளி வைக்கிறது. தொழுநோயின் தோற்றம் ஆப்பிரிக்கா எனில் கிமு மூவாயிரங்களில் சிந்து சமவெளி-மெசபடோ மியா-எகிப்து ஆகிய பண்பாடுகளிடையே இருந்த உறவுகளால் இங்கு வந்திருக்க வேண்டும். கிமு இரண்டாயிரத்தில் புதைக்கப்பட்ட இந்த தொழுநோயாளியின் ஈமச்சடங்குகளில் வேதப் பண்பாட்டின் அம்சங்கள் உள்ளதாக ஆய்வுத்தாள் குறிப்பிடுகிறது. அதர்வண வேதமே க்ஷயரோகத்துக்கும் குஷ்டத்துக்குமிடையே இருந்த தொடர்பு – அதன் சிகிச்சை முறையில் ஒற்றுமை- என்ற அளவிலாவது பேசக்கூடிய ஆகப்பழமையான இலக்கியம் என்கிறது இந்த ஆய்வுத்தாள்

ஆன்மிகமும், போதையும்

lsdபோதைப் பொருட்கள் என்று மேற்கு ஒருகாலத்தில் எவற்றை ஒதுக்கியதோ அவை குறித்து இன்று அதன் நிலைபாடு வேகமாக மாறி வருகிறது. மனஎழுச்சி தரும் தாவர-வேதிப் பொருட்களை மதச்சடங்கில் பயன்படுத்துவது குறித்து நிறுவன கிறிஸ்தவமே சிந்திக்கிறதாம். சர்ச் ஆஃப் இங்க்லாண்ட் இத்தகைய பொருட்களைப் பயன்படுத்தும் பயிற்சிக்கு தனது பாதிரிகளை அனுப்புகிறதாம்.  இன்னும் இருபது வருடங்களில் இது நிறுவன கிறிஸ்தவ ஆராதனைச் சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்குமாம். ஆனால் மனவெழுச்சி ஏற்படும் வஸ்துக்களைப் பயன்படுத்தும் ஆன்மிக இயக்கம் மதகுருக்களும் நிறுவனங்களும் புனித நூல்களும் இல்லாமல் ஏற்கனவே இருக்கிறதாம். டிமோத்தி லியரியும் ரிச்சர்ட் ஆல்பெர்ட்டும்-இவர் பின்னாளில் ராம் தாஸ் என்று அறியப்பட்டவர்-  முந்நாள் ஹார்வர்ட் பல்கலை உளவியல் பேராசிரியர்கள். மேற்சொன்ன போதைப் பொருட்கள் மனதின் செயல்பாட்டை ஆராய உதவுபவை என்று அழுத்திச் சொன்னதற்காக ஹார்வர்டில் வேலையை இழந்த பின், உளமாற்றமளிக்கும் வேதிப் பொருட்களுக்கான ஆராய்ச்சியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தினர். அவர்களில் லியரி சொல்வதுதான் மேலே உள்ள விஷயங்கள். இன்னும் பல ரசமான விஷயங்களை சொல்லுகிறார் அவர்: ” If you take LSD every week for 30 years, you have available a sequence of about 1500 neurological reincarnations. The aesthetic and ethic and harmonious planning of changes in your external commitments to go along with your changing nervous system becomes a complex art and requires new social conceptions.”  முழு பேட்டியையும் இங்கே படியுங்கள்.  ஆல்பெர்ட் தன் ஆராய்ச்சிகள் வழியே ஆன்மீகத் தேடலுக்கு நகர்ந்து இந்தியாவில் வந்து சேர்ந்தார்.  அவர் சில இந்திய யோகிகளிடம் ஹத யோகப் பயிற்சிகளைப் பயின்று அமெரிக்கா திரும்பிய பின் ராம் தாஸ் என்று தனக்கு இந்திய யோகி ஒருவரால் வைக்கப் பட்ட் பெயரைப் பயன்படுத்தி ஒரு பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் புகழ் பெற்றார்.   இவர் ராம் தாஸ் என்ற பேச்சாளரான பாதையைப் பற்றிய ஒரு தகவல் படம் 2002 இல் வெளி வந்தது.

மனிதருக்குப் பால் குடிக்கும் பழக்கம் – ஏன், எதற்கு?

அர்ஜுனின் அம்மா தயாரித்துத் தரும் நாலரை பால், கள்ளிச்சொட்டு போன்ற ஆரோக்யா பால், பல7_5milkவருடங்களாகப் புகழ் பெற்ற ஆவின் பால் என இந்தியர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தது பால் குடிக்கும் பழக்கம். பாலில் தண்ணீர் கலக்கும் பால்காரர்கள் குறித்த நகைச்சுவைத் துணுக்குகள் பல வருடங்களாக நம் பத்திரிகைகளில் பவனி வருபவை. ஆனால் பிரபஞ்ச உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டும்தான் பாலின் தேவையைக் கடந்து முழு வளர்ச்சியடைந்த பின்னரும் தொடர்ந்து பால் அருந்துபவர்கள், அதுவும் பிற உயிரினங்களிடமிருந்து! பிற உயிரினங்கள் குழந்தைப் பிராயத்தைக் கடந்த பின்னர் பாலைச் செரிக்கும் சக்தியை இழந்து விடுகின்றன. ஏன், வெகு சமீபம் வரை மனிதனாலும் வளர்ச்சியடைந்தபின் பாலைச் செரிக்க முடியாமல்தான் இருந்தது.  பிறகு எப்படி வந்தது இந்த பால் குடிக்கும் பழக்கம்? விடை தேட முயற்சிக்கிறது இந்தக் கட்டுரை.

கனிம உலகைக் கட்டியாளப் போகும் சீனா

01minerals_450உலகின் அரிய வகை தாதுப் பொருட்களில் (rare earth minerals) 99% சீனாவில்தான் இருக்கின்றன. இந்த தாதுப் பொருட்களை உபயோகிக்கும் பல பன்னாட்டு நிறுவங்கள் இப்போது நடுங்கிக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் இந்த தாது, கனிமப் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்யவும், அவை தமது உற்பத்திக்குத் தேவைப்பட்டால் தங்கள் பொருட்களின் உற்பத்தியை சீனாவில் வைத்துக்கொள்ளும்படியும் உத்தரவிடுவதைக் குறித்து சீன அரசு யோசித்து வருகிறது. ஏகபோகத்தைக் (monopoly) கடுமையாக எதிர்க்கும் இந்திய இடதுசாரிகள் இதற்கு என்னவிதமான எதிர்வினை புரிவார்கள்? இதைக் குறித்த கட்டுரை இங்கே.