குழலினிது யாழினிது என்பார்… (2012 மார்கழி இசை விழா அனுபவம்)

மீண்டும் மார்கழி இசை விழா. நடந்த கச்சேரிகளோ நூற்றிற்கும் மேல். அவற்றில் என்னால், நிர்பந்தக் கச்சேரிகள், ரிவ்யூ கச்சேரிகள், ரசனைகள், சோதனைகள், எதையும் ஒருமுறை, வருடம் ஒருமுறை, அயல் நாடு, வெளி மாநிலம், வாத்தியங்கள், வாய்ப்பேச்சுகள், கண் அயர, கால் அயர, வாய் மெல்ல, மனம் மகிழ, பார்வையிட, பாதியில் அகல, ஏஸி இல்லாத ஹால், பார்க்கிங் கிடைத்ததால், என்று பாகுபடுத்திய காரணங்களுடன் பலசரக்காய் தினத்திற்கு மூன்று நான்கு கச்சேரிகள் தாவியும், இரண்டு வாரங்கள் எடுத்த விடுப்பில் கேட்கமுடிந்தது நாற்பது சொச்சம். இதற்கே, இண்டியானா ஜோன்ஸ் ‘கிரிஸ்டல் ஸ்கல்’ படத்தின் ‘அறிவு அனைத்திற்கும் ஆசைப்படும்’ வில்லியின் மண்டைபோல் ஆகிவிட்டது எனதும். வெடிப்பதுதான் பாக்கி. வீட்டிற்கு திரும்பி, சில நாள் மௌனம். கலைய ஜாஸ் இசை. பத்தியச் சாப்பாடு. பி.ஜி.வுட்ஹவுஸ், நாஞ்சில் நாடன். இன்றுதான் சவுண்ட் கார்டன், கிங் க்ரிம்ஸன் என்று அன்றாட அரையிரைச்சல்களுக்குத் துணிந்துள்ளேன்.

இம்முறை விமர்சனம் குறைத்து, விளக்கங்கள் சுருக்கி, இசையைப்பற்றி அனுபவப் பகிர்வாய் எழுதிப் பார்க்கிறேன். நான் கேட்டவைகளில் முக்கால்வாசி கச்சேரிகள் மியூசிக் அகடெமியில் நிகழ்ந்தவை. மிச்சக் கால்பங்கில், முக்கால்வாசி ராக சுதா அரங்கில், ஏனையவை, வித்யபாரதி கல்யாண மண்டபம், மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், சாஸ்திரி ஹால், நாரதகான சபா மினிஹால், வாணி மஹால். (இப்படி ஒரு ‘ஃப்ளோவில்’ எழுதிவைத்தால், நாற்பதை கணக்கில்கொண்டு எண்ணினால், கணக்கு உதைக்கும். அதனால் ஒரு ‘கிட்டத்தட்ட’வை மேற்படி வாக்கியத்தின் ஒரு ‘முக்கால்வாசி’க்கு முன் சேர்த்துக்கொள்ளுங்கள்.)

–*–

எனக்கு மார்கழி இசை விழா, பிருந்தா வழியில் அவரது சிஷ்யை ரமா ரவியின் புதல்வியும், சிஷ்யையுமான, நந்திதா ரவி, ராகசுதா அரங்கில் பாடிய ‘பகவாரி’ ஹம்ஸத்வனி வர்ணத்தில் தொடங்கியது. சென்ற வருடம் சில வருங்கால நட்சத்திர நம்பிகளை அறிமுகம் செய்து எழுதியிருந்தேன். இம்முறை இசையில் பரிமளிக்கும் ஓரிரு நங்கைகளை (தேவையிருப்போருக்கு) அறிமுகம் செய்வோம்.

24fr-nandita_ravi_1_664982g

[நந்திதா ரவி]

நந்திதா ரவிக்கு ராக ஆலாபனை வருகிறது. அன்று பைரவி, வராளி என்று நன்றாகச் செய்தார். கீர்த்தனைகள் ஒழுங்காய் பாடவருகிறது. ஸ்வரங்கள் கற்பனையுடன் வருகிறது. நிரவல் மனோதிடத்துடன் இன்னமும் கைகூடவில்லை. அதேபோல், பிருந்தா வழியில் பதங்களையும், ஜாவளிகளையும் பிரதானப்படுத்தி, ஒரு முத்திரையுடன், பாடுவார்கள். நந்திதா ரவி அவ்வகையில் செய்யவில்லை. ரஞ்சகமான கச்சேரிப் பட்டியலில் இவ்வகை இசைக்கு இடமிலையோ என்று குழம்புகிறாரோ. கர்நாடக இசையின் ஒரு பாடாந்திரத்தை அடுத்த சந்ததியினர் தூக்கிப்பிடிக்கவேண்டிய மனோதிடம் அவர் வழியை முடிவுசெய்ய உதவும்.

அகடெமியில் இம்முறை மூன்று நாகஸ்வரங்கள், ஆறு வீணைக் கச்சேரிகள். மாலையில் நிஷா ராஜகோபால் வாய்ப்பாட்டுக் கச்சேரியை முழுவதும் கேட்டு ரசித்தேன். வளரும் பெண் கலைஞர்களில் முக்கியமாகக் கவனிக்கப்படுபவர். மூத்த பாடகர் வசுந்த்ரா ராஜகோபாலின் மகள். கேதாரகௌளை வர்ணத்தில் தொடங்கிய கச்சேரியில் அன்று நிஷா ஆலாபனை செய்த காம்போதி உசத்தியானது. சாத்தூர் சுப்ரமணியம், எஸ் ராமநாதன் போன்றோர் காம்போதியில் விட்டுச்சென்ற படைப்பூக்கத் தடங்களை நினைவு கொள்ள வைத்தது. “எவரி மாட்ட வின்னாவோ” என்ற தியாகையரின் கிருதியை, நிரவல், ஸ்வரங்கள், என்று அனைத்து அலங்காரங்களுடன் நிதானமாக விஸ்தரித்துப் பாடினார். ராகம் தானம் பல்லவியில் ஷண்முகப்பிரியா ஆலாபனை அமர்க்களம். நிச்சயம் இவரிடம் ராகம் பாடுவதற்கு ஒரு மனச்சாய்வும், திடமும் இருக்கிறது.

“செந்தில் ஆண்டவனே ஷண்முகனே, தேவாதி தேவனே முருகனே” என்கிற ஆதி தாளம், கண்ட நடையில் அமைந்த பல்லவியை திரிகாலத்திலும் தாளம் பிசகாமல் பாடினார். (தாளங்கள் பற்றிய விளக்கம் ரா.தா.ப. நான்காம் பாகத்தில் | பல்லவி திரிகாலம் பற்றிய விளக்கம் ரா.தா.ப. ஏழாம் பாகத்தில்).

இறுதியில் ராகமாலிகையாக பல ராகங்களில் பல்லவியை பாடுவதில் அறிவார்த்தமான ஒன்றை ஆர்ப்பாட்டமில்லாமல் செய்தார். பல்லவியின் ஒவ்வொரு சொல்லிற்கும் ஏற்கனவே அச்சொல்லில் துவங்கும் கிருதி அமைந்திருக்கும் ராகங்களை ராகமாலிகையில் எடுத்துக் கொண்டு, அவற்றில் ஸ்வரங்கள் பாடி, முடிக்கையில் அச்சொல்லில் முடித்துப் பட்டையை கிளப்பினார். உதாரணமாய்: பல்லவியின் “செந்தில் ஆண்டவனே” என்கிற சொற்களில் ஏற்கனவே ‘செந்தில் ஆண்டவன்’ என்கிற பாபநாசம் சிவன் கிருதி கரஹரப்பிரியாவில் உள்ளது. ராகமாலிகையில் அதனால் கரஹரப்பிரியாவில் ஸ்வரங்கள் பாடி, மேலுள்ள பல்லவியை தாளத்தின் சமத்தில் தொடங்கினார். இதைப்போலவே அடுத்து வந்த ராகங்கள் கன்னடா (சரவணபவகுஹனே ‘ஷண்முகனே’ கிருதி), சுநாதவிநோதினி (‘தேவாதி தேவ’ கிருதி), ஏற்றாற்போல தாளத்தின் இடங்களில் முடித்துப் பல்லவியைப் பாடினார்.

34_nisha_rajagopal_vo_6370e

[நிஷா ராஜகோபால்]

நிறைவான கச்சேரி. இருந்தாலும், அன்று அகடெமி மேடையில் நிஷா ராஜகோபால் அசோகவனத்துச் சீதை. திரிஜடையும் உண்டு, கஞ்சீரா கலைஞர் வடிவில் (திருக்காழுக்கரா ஒய்.என்.சாந்தாராம் – லயம் சுமார்; நாதம் பிரமாதம்).
மறுநாள் மாலை ராகசுதாவில் அஸ்வத் நாராயணன் கச்சேரி. நான் ஹிண்டு நாளிதழுக்காக நானூறு ஆங்கிலச் சொற்களுக்கு மிகாமல் விமர்சனம் எழுத வேண்டிய கச்சேரி. அஸ்வத் காலஞ்சென்ற கே.வி.நாராயணசுவாமியின் பேரன். என்னை ஏமாற்றவில்லை. சௌக்கியமான சங்கீதம். எம்.டி.ராமநாதன் இயற்றிய கிருதியுடன் தொடங்கினார். எம்.டி.ஆர். டைகர் வரதாச்சாரியாரின் சிஷ்யர். அரியக்குடியாரும்தான். கே.வி.என். அரியக்குடியாரின் சிஷ்யர். அஸ்வத் கே.வி.என் அவர்களிடம் கற்றவர். இப்படிச் சில உள் உறவுகள், பாடாந்திரங்கள், ராகம், கிருதித் தேர்வுகள், எதில் ஸ்வரம், எங்கு நிரவல், என்று எக்கச்சேரியிலும் நடந்தவண்ணம் இருக்கும். தேர்ந்த ரசிகர்கள் இசைவிழாக்களில் இவற்றையும் கவனித்து ரசிப்பார்கள்.

அஸ்வத் பாடுகையில் கிருதிகளில் சொற்கள் தெளிவாய் கேட்கின்றன. பேகடாவைப் பிரதானமாய் ஆலாபனை செய்தார். ’நாதோபாசனா’ என்று கே.வி.என். ஓஹோ எனப் பாடிய கிருதியையே எடுத்துக்கொண்டார். பிரதான உருப்படிக்கு முன்னால் பூர்வி கல்யாணி, கௌளை, பௌளி என்று ராகத் தேர்வுகள். அனைத்திலும் ஸ, ரி, க ஸ்வரங்கள் அதேதான் என்பதால் கேட்கையில் சற்று அலுத்தது. கவனித்துக்கொள்வார்.

இவற்றையெல்லாம் ஆங்கிலத்தில் சுருக்கி வரைந்து கொடுத்தால், வார்த்தை விழுங்கல்களுடன், நாம் செய்யாத புதிய ஆங்கில இலக்கண மற்றும் தேய்வழக்குத் தவறுகளுடன் மறுநாள் நம் ரிவ்யூ வெளிவந்தது வேறு விஷயம்.

மறுநாள் அகடெமியில் மண்டா (உச்சரிப்பு மந்தா) சுதாராணி, சுசரித்ரா விவாதி மேளத்தில் ஆலாபனை செய்து பாடினார். தீக்ஷதர் வழியில் இதற்கு சந்தான மஞ்சரி என்று பெயர். அவரது கிருதியும் அச்சொற்களை வைத்தே தொடங்கும். ஆந்திராவில் பிரபலமான சுதாராணி, விவாதி ராகங்களை எடுத்தாளத் தயங்காதவர். பிரதானமாய் சங்கராபரணம் ஆலாபனை செய்து “அக்ஷயலிங்கவிபோ” பாடினார். நிரவலை வழக்கமாய்ச் செய்யும் ‘பதரிவன…’ எனத் துவங்கும் வரியில் செய்யாமல், அடுத்த வரியில் செய்தார். ஸ்வரங்களில் மிருதங்கம் அவ்வப்போது கோட்டைவிட்டார். ஆனால் மிருதங்கம் கவனமாக உபபக்கவாத்தியமான முகர்சிங்கிற்கு பங்களிக்க அவகாசங்கள் அளித்தார். வெளிமாநில மிருதங்கம் போலும். இரண்டு மூன்று வருடம் முன்னர் இருந்த பிரமிப்பும் விறுவிறுப்பும் இப்போது மண்டா சுதாராணியின் கச்சேரியில் குறைவே. ஆனாலும், ஞானஸ்தர் என்பதை மறுக்கமுடியாது.

hyfr25academic_sin_1093279e

[மண்டா சுதாராணி]

இடையில் டி.என்.சேஷன், ஞாநி, எஸ்.பி.காந்தன் என்று, இசைக்கலைஞர்கள் அல்லாத, எனக்குத் தெரிந்த, என்னைத் தெரியாத பலரை அகடெமி கேன்டீனில் பார்த்தேன். கேன்டீனில் கடுகடுவென்றிருந்த பணியாளர், பத்து ரூபாய் டிப்ஸ் வெட்டி, முதுகில் தட்டி, “நீங்க சிரிச்சா அழகாயிருக்கும்” என்றதும் நின்று, கெட்டி சட்னியுடன், தன் சோகங்களை சற்று பரிமாறினார். சிரிக்க மறுத்துவிட்டார். மறுநாள் மறந்து விட்டார்.

ஐயர் பிரதர்ஸ் வீணை கச்சேரி ராகசுதாவில். ஆஸ்திரேலியாவில் இசைப்பள்ளி வைத்திருக்கிறார்கள் என்றார் நண்பர். வழக்கம்போல இவர்களது கச்சேரியில் கிருதிகள் சிரத்தையாகவும் மிக நேர்த்தியாகவும், வாசிக்கப்பட்டன. காம்போதி ராக ஆலாபனையும் நிதானமான கிளாஸ். சென்ற வருடங்களைப் போலவே, ஸ்வரங்கள் சுமார். விறுவிறுக்கவில்லை. நிரவல் செய்யவில்லை.

அடுத்த நாள் காலை மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் திருச்சூர் சகோதரர்கள் கச்சேரியிலும் நிரவல் இல்லை. இரண்டு மணி நேரக் கச்சேரிகளில் நிரவல் எனும் படைப்பூக்க அங்கம் சாய்ஸில் விடப்படுவதற்கு, அவகாசமின்மை மட்டுமே காரணம் என்பதை அக்கச்சேரிகளுக்கு வராத ரசிகர்கள் வேண்டுமானால் நம்பலாம்.

திருச்சூர் சகோதரர்களின் இக்கச்சேரியும் நான் ‘ஹிண்டு’விற்காக ‘ரெவ்யூ’ செய்யவேண்டியதாக அமைந்தது. இவர்களைப் பற்றி ஏற்கனவே சென்ற வருடம் அறிமுகமாக சொல்வனத்தில் எழுதிவிட்டேன். சுருக்கமாக, நாகஸ்வரத்தில் செய்யக் கேட்கும் ஒத்திசைவைக் குரல்களில் செய்ய முனைவார்கள். அடிக்கடி ஆலாபனைகளிலும் செய்தால் சுகிர்தமாய் இல்லை. கல்யாணியில் ராகம் தானம் பல்லவி செய்தார்கள். ஆனால், சென்ற வருடத்திலிருந்து நிச்சயம் இசையில், ஆலாபனைகளில், கச்சேரி விறுவிறுப்புகளில் வளர்ந்திருக்கிறார்கள்.

avn_trichur1_1228770f

[திருச்சூர் சகோதரர்கள்]

முடிந்ததும், மீனாம்பிகாவில் காவிவேட்டியை மடித்துக்கட்டியபடி “சாருக்கு ஒரு அசோகா அல்வா” என்றபடி வந்தவன்… ஆ, பள்ளியில் உடன் படித்தவன். இருவருக்கும் அடுத்தவர் பெயர் ஞாபகம் இருந்தது, மகிழ்ச்சி. படிக்கையில் அவனுக்கு சமையல் தெரியும் என்பது எனக்குத் தெரியாது. எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது என்பது அவனுக்கு இன்றும் தெரியாது.

மறுநாள் அகடெமியில் சிக்கில் குருசரண் ‘ராம பாண த்ராண சௌர்யம்’ என்று தியாகையரின் கிருதியை சாவேரியில் விவரமாய் பாடினார். நல்ல குரல், கற்பனை வளம், நிரவல் செய்தார். அரையாவர்த்தன ஸ்வரங்களாய் பொங்கியது. திருவாரூர் பக்தவத்ஸலம் அருமையாக மிருதங்கத்தில் கைகொடுத்தார். ராகம் தானம் பல்லவி கோஸலம் எனும் விவாதிமேள ராகத்தில். “கோசலை பாலா, மாசிலா வீரா, ஆசிலா ராமா” என்று பல்லவியை கண்ட திரிபுடையில் அமைத்திருந்தார். ஆசுகவி என்பவர் விரைவில் கவியாற்றுபவர். இங்கு ஆசிலா என்றால் ‘அன்ப்ளெமிஷ்ட்’, ‘கறையற்ற’ எனலாம்.

21theftb-_sikkil_kv_312266f

[சிக்கில் குருசரண்]

ராகமாலிகையில் வஸந்தி எனும் ராகத்தை பாடினார். குறுக்கு சிறுத்தவளே பாட்டின் ராகம் என்றார் மூத்த நண்பர். எனக்கு தலைக்கு மேல் விஷ்க். இதை திடீரென்று எப்படிப் பாடினாரோ என்று வியக்கையில் அடுத்து “எப்படிப் பாடினரோ” பாடி, சுமனேஸரஞ்சனி எனும் ராகத்தில் தில்லானா பாடினார். இந்த ராகம் சுத்ததன்யாசியின் பிரதி மத்யம ராகம். அஸ்வத் நாராயணன் கச்சேரியிலும் கேட்க நேர்ந்தது.

இடையில் மாலை கோதண்டராமன் ஆர்கே அரங்கில் வாசித்ததைக் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை. ஜுரம், ஜலதோஷம். இரண்டு நாள் திட்டங்கள் அம்பேல். மார்கழியால் இருக்கலாம். அரங்குகளின் ‘ஏஸி’ குளிரால் இருக்கலாம். சாஸ்திரி ஹால் உட்பட, சென்னையில் அநேகமாக அனைத்துச் சபாக்களும் ‘ஏஸி’ செய்து வெளியிலிருந்து வரும் இடைஞ்சலான சப்தங்களை அடக்கிவிட்டனர். உள்ளிருந்தும் கர்நாடக சங்கீதம் பொதுமக்கள் காதுகளுக்கு வெளியேறாமல் முடங்கி விட்டது என்பது முன்னொரு காலத்தில் கிருஷ்ண கானசபா ‘கீத்து கொட்டாய்க்கு’ வெளியே நின்று கச்சேரி கேட்டவர்களுக்குப் புரியும்.

பிரேக்கிற்குப் பிறகு வித்தியாசமாய் இருக்கட்டும் என்று அகடெமியின் ஒரு இசைச் சொற்பொழிவிற்குச் சென்றேன். மூத்த இசை ஆய்வாளர் எஸ். ஆர். ஜானகிராமன், கேதாரகௌளை, கன்னடகௌளை ராகங்களை ஐம்பது நிமிடங்களில் விளக்கிச் சொல்வதாய் அமைப்பு. நாராயண கௌளை ராகத்தில் தான வர்ணத்தை, தானச் சொற்களுடன் (ஆனந்தம் – ரா. தா. ப. கட்டுரைத்தொடர் பாகம் இரண்டை பார்க்கவும்) அருமையாகச் சிஷ்யனுடன் பாடிக்கட்டினார். தான வர்ணம் என்பதில் தானமாகவும், அவ்விடத்திலேயே சொற்களை வைத்தும் பாடவேண்டிய பகுதிகள் அமைக்கப் பட்டிருக்கும்.

நாராயண கௌளை ராகம் சங்கீத மும்மூர்த்திகளின் காலத்திற்கு சற்றே முந்தையது. மிகப்பழமையானதில்லை. சங்கீதப் புத்தகங்களில் உள்ள குறிப்புகளை வைத்து இவ்வாறு அனுமானிக்கிறர்கள். ‘மஹா பெரியவா’ என்று போற்றப்படும் மஹாவைத்தியநாத ஐயர் நாராயண கௌளையில் விஸ்தாரமாக ராகம் தானம் பல்லவி பாடி போட்டியில் வென்றதாக வரலாறு கூறுகிறது.

கன்னடகௌளை அவ்வப்போது ஆபேரி ராகத்துடன் குழப்புவது. அதுவும் ஆபேரியை சரிவரப் பாடப்படாத ஆபேரி நிச்சயம் குழப்பிவிடும். சொகஸு ஜூட தரமா என்று தியாகையரின் அருமையான கிருதி உள்ளது. இந்த ராகத்தை ஆலத்தூர் சகோதரர்கள் கடந்து எவர் ஆலாபனை செய்துள்ளனர் என்பதைக் கவனிக்கவேண்டும். நாராயண கௌளையிலும் தியாகையரின் ‘கதலு வாடு காடே’ பிரசித்தம். இக்கிருதியை எஸ். ராமநாதன் பாடிய, மற்றும் சித்தூர் சுப்ரமண்யப்பிள்ளை ஆலாபனை ஒலிநாடாக்கள் உள்ளன.

கன்னடகௌளையை பாட்டுடன், விவரித்துச் சொன்னது போல அன்று நாராயணகௌளையைச் செய்யவில்லை என்றே பட்டது. “நாராயண கௌளையில் செய்யக்கூடியது, கேதார கௌளையில் செய்யக்கூடாதது” என்பது போன்ற விவரணைகள் எனக்கு முழுவதுமாய் புரியவில்லை. குழுமியிருந்த சங்கீதக் கலைஞர்களுக்குப் புரிந்திருக்கலாம்.

ஒருமாதிரி விக்டோரியன் ஆங்கிலத்தில் எஸ்.ஆர்.ஜே. விளக்கியது அடிக்கடி இடறியது. உதாரணமாய், அவரே “தியாகராஜா காட் (caught) தி ராகா, தீக்ஷதர் டாட் (taught) தி ராகா” என்றார். இவ்வகை ‘விளம்பரச் சொலவடை’களுக்கு நிஜமாகவே ஆழ்ந்த பொருள் இருக்கவேண்டும் என்பதில்லை. பம்மல் சம்பந்தத்தின் ‘பழமொழி’ போல. அனுபவிக்கணும். ஆராயப்படாது. ஆனாலும் கேள்வி நேரத்தில் இசை ஆய்வாளர் ராமநாதனும், சித்ரவீணா ரவிக்கிரனும் இதையும், தீக்ஷதரின் நீலோத்பலாம்பிகாயாம் கிருதியில் எஸ்.ஆர்.ஜே. குறிப்பிட்ட பிரயோகங்கள் இல்லையே என்றும், கேட்டனர். பதிலை முப்பது விநாடிக்குள் விவரிக்குமாறு உரையை நடத்தியவர் சிரிக்காமல் சொல்ல, எஸ்.ஆர்.ஜே. நேரடியாக பதிலளிக்கவில்லை. பாடிக்காட்டினார். கைத்தட்டிவிட்டு, சற்றே அஜீரணத்துடன் வெளியேறினோம்.

அன்று மாலை அகடெமியில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ். கிட்டத்தட்ட ‘ஃபுல் பென்ச்’ பக்க வாத்தியங்களுடன். அன்றைக்கு இரண்டு நாள் முன்னர்தான் கிருஷ்ண கான சபாவில் லயப்பிரதானமாய் இவர் செய்த கச்சேரியை விமர்சித்து எஸ்.வி.கே. எழுதியிருந்ததை வாசித்தாரோ என்னவோ, லய வின்யாசங்களை மாண்டலினில் குறைவாகவே வெளிப்படுத்தினார். மாயாமாளவ கௌளையில் ஆலாபனையும், ‘சரஸீருக புன்னாக’ என்று எதிர்பார்த்த இடத்தில் நிரவல் செய்து ‘துளவிதளமுலசே சந்தோஷமுகா’ எனும் தியாகையரின் பிரசித்திபெற்ற கிருதியை வாசித்தார். ராகம் தானம் பல்லவியில் ஐந்து ராகங்களை எடுத்துக்கொண்டார். சங்கராபரணத்தை விரித்து ஆலாபனை செய்தது நன்று. அடுத்து சுருக்கமாக பவப்பிரியா, வசந்தா, ஆபேரி, தானரூபி என்று வாசித்தார். விவாதி மேளராகங்களை ஆலாபனை செய்கையில் அதற்கான இசை உருவங்களை தனித்தன்மையுடன் கொடுப்பதில் உள்ள சிரமங்களை சென்ற வருடம் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். கச்சேரிகளில் அரிதாகக் கேட்கும் சம்பூர்ணமேளங்களான பவப்பிரியாவோ, தானரூபியோ அவ்வகையில் தனியாக ரூபங்கள் கிடைப்பது கடினமே. சீரிய முயற்சி. தொடர்ந்து பல கலைஞர்கள் முயல்கையில்தான் இவ்வகை ராகங்களில் உள்ள இசைச்சிறப்புகள், உணர்வுகள், வெளிக்கொணரப்படும்.

21fr_mandolin_shri_1304970g

[மாண்டலின் ஸ்ரீனிவாஸ்]

கேனன் பால் ரன் (Canonball run) போன்ற எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் சிறுவயதிலும், ‘ப்ரொடெக்டர்’ தொடங்கி பல சாகஸ வெற்றிப்படங்களில் ‘சுத்திச் சுத்தி அடிக்கும்’ ஜாக்கிசானை, ஹு ஆம் ஐ, ரஷ் அவர் 3, போன்ற சமீபத்திய படங்களில் பார்க்கையில் சிங்கத்திற்கு வயதாகிவிட்டதோ என்று தோன்றும். ஸ்ரீநிவாஸ் வேகமாக வாசிக்கையில் விரல்கள் இடறுகிறது. நான் கேட்ட அன்று மட்டுமேவா.

மூச்சுக் கட்டி ஊத வேண்டிய
முக்கியமான
கட்டத்திலெல்லாம்
சீவாளியைக் கழற்றி
சரி பார்க்கிறது
வயதான நாயனம்
இட்டு
நிரப்பிச் செல்கிறது
இளம் தவில்

என்று கண்மனி குணசேகரனின் கவிதை வரிகள் நினைவில் நிழலாடுகின்றன.

இளம் தவில் என்றவுடன், லயத்திலிருந்து மெலடிக்கு கடத்தி மறுநாள் மத்தியானம் இளம் பாடகி எஸ்.மாளவிகா வித்யபாரதியில் வாயைத்திறந்து கணீரென்று பாடுவதுடன் ஒப்பிடமுடிகிறது. லதாங்கியில் பிறவா வரம், ஜகன்மோகினியில் சோபில்லு, அடுத்து பிரதானமாய் தோடி; கஜவதனா என்று தீக்ஷதர் கிருதியில் நிரவல் ஸ்வரங்கள். ஆலாபனை நல்ல கட்டமைப்பு. படிப்படியாக மெருகேற்றினார். இளம் பாடகிகளில் கவனிக்கப்படவேண்டியவர்.

சில பாடகர்கள் தங்கள் திறமையினால் உள்ளிருந்து கேண்டீனுக்கு எழுப்பி அனுப்புவர். மறுதினம் மதியம் நாரதகான சபா மினிஹாலில் ராமகிருஷ்ணன் மூர்த்தி உள்ளே நுழைய முடியாத கூட்டத்தினால் ஞானாம்பிகாவிற்கு அனுப்பிவைத்தார். வெளியில் இருந்தபடியே சுருட்டி ஆலாபனையையும், அடுத்து பைரவி ஆலாபனையையும் கேட்டுவிட்டே கேண்டினுக்கு நடையைக் கட்டினேன். மறுநாள் மைலாப்பூர் கிளப்பில் அவரே ‘சரஸசாமதான’ என்று காபிநாராயணியில் விறுவிறுத்தார். சாவேரி ஆலாபனை செய்தார். அகடெமியில் அவர் பாடிய சங்கராபரணம், ‘மனசு சுவாதீன’ நன்று. சில நாள்கள் விட்டு மீண்டும் ராகசுதாவில் நாயகி, ஜெயந்தஸ்ரி என்று தொடங்கியவர், காம்போதி ராகத்தைப் பிரதானமாக மிக விரிவாக ஆலபனை செய்து, (மந்தரஸ்தாயியிலும் சஞ்சாரங்கள் செய்திருந்தால், சீசனின் பெஸ்ட் காம்போதி என்று தயக்கமின்றி சொல்லியிருக்கலாம்), நேரக்கட்டுப்பாட்டில் ஸ்ரீ ரகுவர கிருதியை எடுத்துக்கொண்டு, நிரவலை சுருக்கி, ஸ்வரங்களை பெருக்கி, கவனமாக முடித்தார். இலவசக் கச்சேரியின் ரசிகஜனத்திரளிடம் ஏக அப்ளாஸ். அநேகமாக இக்கச்சேரி முடிந்த கையோடு மூர்த்தி ‘தொண்டை’யார்பேட்டை டாக்டரைப் பார்க்கப்போயிருப்பார் என்று நினைக்கிறேன்.

31th_2ramakrishnan__879217f

[ராமகிருஷ்ணன் மூர்த்தி]

இடையில் சில தினங்களில் பல கச்சேரிகள் கேட்டேன். அகடெமியில் திருப்பாம்பரம் சுவாமிநாதன் நாகஸ்வரம் (அன்று சுமார்தான்), பெனலா சங்கரப்ரகாஷ் (வீணையை மாண்டலின் போல வாசிக்க முற்பட்டு அமிர்தவர்ஷிணியின் தானத்தில் பட்சணவண்டி மணி அடிப்பதைப் போல சப்தங்கள்), சுதா ரகுநாதன் (ரங்கபுரவிஹாரா, சாவேரி ஆலாபனை நன்று), பரத் சுந்தர் (சாவேரி, துருசுகா, நன்று), டி.பி. அஷ்வின் (இவ்வருடம் நூற்றாண்டு கொண்டாடும் கலைஞர் டி.கே.ரங்காச்சாரியின் பேரன்).

வித்யபாரதியில் (பார்த்தஸ்வாமி சபா) ரித்விக் ராஜா (‘இடி ஜென்மமிதி ஹா…’ என்று வராளியில் உருகியதில், சாஃப்ட்வேர் பணியாளர்கள் ‘ஐடி (IT) ஜென்மமிதி ஹா…’ எனும் விரக்தியை அறியமுடிந்தது), சுமித்ரா வாசுதேவ் (வேதவல்லியின் சிஷ்யை. சென்ற வருடம் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். இவ்வருடம் அகடெமியில் மாலை ‘டிக்கட் ஸ்லாட்டிற்கு’ முன்னேறியுள்ளார்), திருவாரூர் கிரிஷ் (பிருந்தாவின் பேரன், ‘லதாங்கி மற்றும் தோடி பிரதானம்’ கோம்போ).

ராகசுதாவில் ரஞ்சித் வாரியார் (பூர்விகல்யாணி, பேகடாவில் அரிதான சியாமா சாஸ்திரியின் ‘அம்பா காமாக்ஷி’), வேதவல்லியிடம் பயிற்சி பெறும் அஷ்வினின் வீணை இசை (கானடா, பந்துவராளி, சங்கராபரணம் ஆலாபனைகள் நன்று), சாஸ்திரி ஹாலில் அருந்ததி கிருஷ்ணன் வாய்ப்பாட்டு (பூர்விகல்யாணியை அல்ப பிரயோகமான “க ம த ஸ” வை குறைத்து, “க ம ப த ப ஸ” வை முக்கியப்படுத்தி நேர்த்தியாய் ஆலாபனை செய்தார்), தீக்‌ஷா (பைரவி ஆலாபனை நன்று), தீபிகா வரதராஜன் (சுதா ரகுநாதன் சிஷ்யை, சஹானா, சந்திரஜ்யோதி, ஆரபி ஆலாபனைகள், ஹேமவதியில் ராகம் தானம் பல்லவி, நன்று), வாணி மஹாலில் வயலின் வித்வான் வி.வி.ரவியின் மகன் ராகவ் கிருஷ்ணா (ஹேமவதி சுமார்தான்).

காலங்களை முன்னுக்கு பின் புரட்டிப்போடும் பின்நவீனத்துவ இலக்கியம் நம்மிடையே பிரபலம். ‘பின்நவீனத்துவ கட்டுரை’ போல இருக்கட்டும் என்று, மேற்படி கச்சேரிகளை, அவை நடந்த வெவ்வேறு தினங்களின் கால இடவெளிகளை மனதில்கொள்ளமல் சுருக்கி, கட்டுரையின் நீளம் கருதி, சாய்சில் விடுகிறேன்.

–*–

அடுத்ததாய் ராகசுதா அரங்கிற்கு ஓட்டம். வேதவல்லி கச்சேரி. ஒவ்வொருவருடமும் சீசனில் வேதவல்லியின் கச்சேரிகளின் இசைக்கு கேட்க கேட்க வயது குறைகிறது. கேட்டபிறகே மனதில் தேவையான அமைதி திரும்புகிறது. சங்கீத சீசன் என்பது வியாபார மாயை இல்லை என்று நம்பிக்கை வருகிறது. ராமகிருஷ்ணன் மூர்த்தி இளம் பாடகர், ஜென்-நெக்ஸ்ட், அதனால்தான் அவ்வளவு கூட்டம் அம்முகிறது என்று சமாதானம் சொல்ல முடியாமல் போகிறது. வேதவல்லி கச்சேரியில் மேற்படி ராமகிருஷ்ணன் மூர்த்தியே மேடையில்தான் ஒதுங்க இடம் கிடைத்தது. குரல் ரம்யமாய் இருந்த காலத்தில் ‘அது வெறும் அகடெமிக் பாட்டு’ என்று விமர்சிக்கப்பட்டவர், இன்று, அவ்வப்போது குரல் ‘ஒத்துழையாமை இயக்கத்தில்’ பங்கேற்றாலும், இசையினால் பெரும் ரசிகத்திரளைக் கவர்வது, பெருமூச்சுடனான ஆனந்தம். இணையம் வழி பரிமாற்றங்களும் ஒரு காரணமோ என்று தோன்றுகிறது.

26mpvedavalli_118656g

[வேதவல்லி]

தோடி, பூர்விகல்யாணி, கல்யாணி என்று எதுவுமில்லை. பிரதான ராகம் யதுகுல காம்போதி. அடுத்து ஆலாபனை ஷண்முகபிரியாவில். தானம் பேகடா, வராளி, நாட்டைக்குறிஞ்சி என்று ராகமாலிகையில்.

பேகடாவில் இருந்து வராளிக்கு ஒரு ஜீவஸ்வரம் வழியாக நகர்கையில் ஏற்படும் ஆனந்தத்தில் நிச்சயம் என் வாழ்க்கையின் ஒரு வருடத்தையாவது அவருக்கு அளித்துவிட சம்மதமே. பழநி சுப்புடுவின் வாசிப்பைக் கேட்டதும் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை உயிரையே கொடுப்பதாகச் சொன்னாராம். அன்றிரவே இயற்கை எய்தினாராம். நம் உயிரும், வாழ்வும் அவ்வளவு மகத்தானதில்லை. மொத்தமாக கொடுத்துவிட்டால் அவர் இசையைக் கேட்க நாம் இருக்கமாட்டோமே என்கிற சுயநலம் தடுக்கிறது.

‘ஏகாம்பரேஸ்வரநாயிகே’ கிருதியில் ‘காஞ்சி நகரநிவாஸினே’ வரியில் நிரவல். தனி ஆவர்த்தனத்தில் மன்னார்குடி ஈஸ்வரன் தன்னை மீட்டுக்கொண்டார். சுதா ரகுநாதன் அகடெமி கச்சேரியில் வழக்கமாய் வாசித்தவர், அன்றைய கச்சேரியை பரிமளிக்கச்செய்த வகையிலான வாசிப்பு, வேதவல்லியின் இசையில் அவர் கொண்டிருந்த பிரேமையை எடுத்துக்காட்டியது.

‘ஸ்ரீகுருகுஹ மூர்த்தே’ என்று உதயரவிச்சந்திரிகா ராகத்தில் (சுத்ததன்யாஸியில் நி கிடையாது), திஸ்ர ஏகம் தாளத்தில் தீக்ஷதர் கிருதி, பின்னர் ஓஸோஸி என்று முகாரியில் பதம். ‘மோடி ஜேஸவேலரா’ என்று கமாஸில் ஜாவளி. இதில் மிருதங்கத்தின் சொல்கட்டிலிருந்து அடுத்த வரிகளுக்கான ஸ்வரங்களை அமைத்துப் பாடியது அமர்க்களம். மேடையில் வயலின், கடம், மிருதங்கம் என்று அனைவரும் வாய்ப்பாட்டுடன் இசைந்து வாசிக்கையில், கச்சேரி ரசிகர்களுக்கு மேலான பரவசமான அனுபவமாகிறது.

மறுதினம் மாலை அகடெமியில் விஜயலக்ஷ்மி சுப்ரமணியன் லதாங்கி மற்றும் முகாரி ஆலாபனைகள் செய்தார். ராகம் தானம் பல்லவியில், பல்லவியை ‘பஞ்சமுகி’ எனும் தாளத்தில் செய்தார். பாலமுரளி போன்றோர் ஏற்கனவே செய்தது. தேவைப்படுவோருக்கு இருக்கட்டும் என்று எழுதிவைக்கிறேன். ராகம் தானம் பல்லவி நான்காம் பகுதியில் தாளங்களை விளக்கியிருக்கிறேன். அதில் ஆதி தாளம், சதுஸ்ர திரிபுடை, நாலு அக்ஷர துருதம் ஒன்றும் இரண்டு அக்ஷர லகுக்கள் இரண்டும் சேர்த்து, எட்டு அக்ஷரங்கள் கொண்டது. அவ்வாதிதாளத்தில் மூன்று இடங்களில் (உள்ளங்கையை தொடையில் படுமாறு தட்டும் மூன்று இடங்களில்) கண்ட நடையில் போட்டால், மூன்று அதிகப்படியான ஒன்றரை அக்ஷரங்கள் கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் எட்டுடன், இந்த நான்கரையை கூட்டினால் பன்னிரெண்டரை அக்ஷரங்கள் வரும். பஞ்சமுகி தாளம்.

avn_sanjay_1294264g

[சஞ்சய் சுப்ரமணியன்]

இரவு அகடெமியில் சஞ்சய் சுப்ரமணியன் கச்சேரி. கரஹரப்பிரியாவில் ‘செந்தில் ஆண்டவன்’ எனத் தொடங்கியவர், நாட்டைக்குறிஞ்சி, லதாங்கி, சரஸ்வதி மனோஹரி என்று தொடர்ந்து, அதான் தொடக்கத்திலேயே லதாங்கி வந்துவிட்டதே அப்பாடா இனி கச்சேரியில் கல்யாணி, பூர்விகல்யாணி, பந்துவராளி என்று எதுவும் வராது என்று சமாதானமாகையில், பிரதான உருப்பிடியாய் தோடியை எடுத்தார். ஆனாலும் அன்று அமர்க்களப்படுத்திவிட்டார். தோடி ஆலாபனையைக் கேட்ட பிறகு, சொப்பனவாழ்வில் இக்கணம் கடந்து வேறேது மகிழ என்றானது. முடிவு இப்போதே என்றால் சம்மதித்திருப்பேன். கடந்த ஐம்பது வருட அகடெமி கச்சேரிகளில் கேட்டதில் சஞ்சயின் தோடி முதல் வரிசையில் என்றார் மூத்த நண்பர்.

ராகம் தானம் பல்லவிக்கு ஆரபி ராகம். அருமையாக விஸ்தரித்துப் பாடினார். பல்லவி வழக்கமான ஆச்சர்யமாய், “குழலினிது யாழினிது என்பார்…” என ஆதிதாளத்தில் திருக்குறளையே எடுத்துக்கொண்டார். ஆரபிக்கு ஏற்றவாறு பல்லவி இனித்தது. ராகமாலிகையில் காபி பெஹாக் ரேவதி என்றவர், இடையில் அநாயாசமாய் மதுவந்தி ஐந்து நிமிடங்கள் பாடினார். குரல் தரஸ்தாயி பஞ்சமம் வரை தொட்டது. விழுந்து புரண்டு குதித்துப் பிரிந்து பிரவாகித்தது. அயராத உழைப்பின் பலனாய் (குரல் வளமைக்கும் அப்பியாசங்கள் செய்வார் எனத் தோன்றுகிறது), நிச்சயம் கிரிக்கெட்டில் ‘ஸோன்’(Zone) என்பார்களே, அவ்வகையில் இசையில் இருக்கிறார் சஞ்சய். அவரையும் சேர்த்து அனைவரும் வரும் வருடங்களில் அனுபவித்து மகிழவேண்டும்.

குழலினிது யாழினிது என்பார் நம் சஞ்சய்
வழமை இசை கேளாதார்.

மறுநாள் அகடெமியில் பந்துலராமா கச்சேரி. ஞானஸ்தர். மணிரங்கு ராகத்தில் ஆலாபனை செய்து ‘மாமவ பட்டாபிராமா’ என்று தியாகையரின் கிருதியை நிதானமாய், நேர்த்தியாய் பாடினார். அடுத்ததாய் ரிஷபப்பிரியா ராகத்தை ஆலாபனை செய்தார். குறை சொல்லமுடியாத ஆலாபனை. கல்யாணியுடன் குழப்பமில்லாமல் ஒரு ரூபத்தை கொடுத்தார். ஆனாலும், எனக்கு சில வருடங்கள் முன்னால் சாத்தூர் சகோதரிகள் (சாத்தூர் சுப்ரமண்யத்தின் மகள்கள்) அநாயாசமாக இந்த ராகத்தைப் பாடியதே மைல்கல்லாய் இன்னமும் படுகிறது. பந்துலராமா ‘கணநாய’ எனத்துவங்கும் கோட்டீஸ்வர ஐயரின் கிருதியைப் பாடி, அடுத்ததாய் ரீதிகௌளை ராகத்தை ஆலாபனை செய்தார். பதலிக தீர எனும் தியாகராஜரின் கிருதி பிரதானமான உருப்படி. ரீதிகௌளை ஆலாபனை ரிஷபப்பிரியா ஆலாபனையைவிட லகுவாக விரிந்தது.

வித்யபாரதியில் இளம் கலைஞர் விஷ்ணுதேவ் நம்பூதிரி மத்யானக் கச்சேரியில் எடுத்ததும் வசந்தபைரவி ஆலாபனை செய்தார். பாராட்டவேண்டிய முயற்சியே. இவ்வகை அரிதான ராகங்களில் ஆலாபனையை புறவயமாக விமர்சனம் செய்வது கடினம். முன்னரே கேட்ட மனப்பதிவுகளோ, கேட்டுக்கொள்ள ஒலி ஆவணங்களோ அருகாமையில் இருக்காது. கிருதிகளின் ஸ்வரவடிவங்களைக் கொண்டே இலக்கணத்தை அறிந்து, அவ்வகையில் ஆலாபனையில் படைப்பூக்கம் இருந்ததா என்றும் சரிபார்க்கமுடியும். எதிர்பார்த்தபடி, ‘நீ தயராதா’ எனும் கிருதி வந்தது. அமிர்தவர்ஷினி, மாஞ்சி, நீலாம்பரி என்று இவரதும் வித்தியாசமான பட்டியல். விஸ்வநாத் பரசுராம் (வயலின் வித்வான் ஸ்ரீராம் பரசுராமின் சகோதரர்) இக்கச்சேரியை சிலாகித்து ‘ஹிண்டு’வில் விமர்சனம் எழுதியிருந்தார் என்று நினைவு.

30th_vishnudev2_1315538g

[விஷ்ணுதேவ்]

ராகசுதாவில் ஆறு மணி அலமேலு மணி கச்சேரி என் நாற்பதாவது. அந்தக்காலப் பாடகி. ‘பலநேரங்களில் பல மனிதர்கள்’ எழுதிய பாரதி மணியை நாம் அநேகர் ‘பாரதி’ வெளிவருவதற்கு முன்னால் அறியமாட்டோம். அலமேலு மணியை பாடகர் ஹரிஹரனின் தாயார் என்று அறிமுகம் செய்தால் அறிய முற்படுவோம். புத்தகம் வாசிக்க, அணிந்துரைகள் போல, சங்கீதம் கேட்க, சினிந்துரைகள் தேவையிருக்கிறது.

‘கருநிம்ப’ என்று சஹானாவில் தொடங்கியவர் கேட்டு வெகுநாட்களான ‘தெரதியகராதாவை’ கௌளிபந்துவில் அடுத்ததாய் பாடினார். அடுத்து, அதனுடனும் அரிதாக இன்றையக் கச்சேரிகளில் காதில் விழும் வேகவாகினி ராகத்தில் அமைந்த, தீக்ஷதரின் ‘வீணாபுஸ்தகதாரிணி’. மிஸ்ர ஜம்பையில் தாளம் போட்டார். அடுத்து தேவமனோஹரியில் ஆலாபனை. தர்பார் ராகத்துடன் சில ஒற்றுமைகள் உள்ள ஸ்வரக்கோர்வைகள் கொண்டதால் ஆலாபனையில் நி நி ஸ (த நி த நி ப ம) என்று பாடுகையில் ஒருமாதிரி வெட்டி வெட்டிப் பாடவேண்டும். அலட்டிக்கொள்ளமல் செய்தார். எவரிக்கை என்று எதிர்பார்த்த தியாகையரின் கிருதி.

அடுத்து ஆஹிரியில் ‘மாயம்மா’விற்குப் பிறகு, தர்மவதி ஆலாபனை செய்தார். சில பத்து வருடங்களுக்கு முன்னர் பட்டம்மாள், சுப்புலட்சுமி போன்றோர் கச்சேரிகளில் புழங்கிய ராகம். கிருதி ‘பஜன சேயவே மனஸா’. ‘நிரவதிசுகதா…’ எனத் துவங்கும் வரியில் நிரவல். பிரதானமாய் சங்கராபரணம் ராகத்தில் ஆலாபனை. ஞானஸ்தர் என்பதை மந்தரஸ்தாயி சஞ்சாரங்களில் ஸ நி த நி ப என்று பாடுவதிலும், தரஸ்தாயியில் ஸா விற்கு அடுத்த ரி க ஸ்வரங்களில் கார்வைகள் அதிகம் கொடுக்காமலும் பாடும் முறைகளில் வெளிப்படுத்தினார். என் தொண்ணைக் காதுகளுக்கு அவ்வப்போதுதான் இவைகள் புரிந்தாலும், அறியமுடிகையில் ஆனந்தமாகவே இருந்தது.

அலமேலு மணிக்கு ‘பிருந்தா வழி’ இன்றைய கச்சேரிகளில் சோபிக்குமா என்கிற குழப்பங்கள் இல்லை. தனி ஆவர்தனத்திற்கு பிறகு ‘நின்னுஜூச்சி’ என்று திஸ்ர திரிபுடை தாளத்தில், புன்னாகவராளியில் க்ஷேத்ரங்யர் பதம் நிதானமாகப் பாடினார்.

[அலமேலு மணி புன்னாகவராளி பதம்]

அடுத்து ‘அதிநிபை’ என்று யமுனாகல்யாணியில் தர்மபுரி சுப்பராயர் இயற்றிய பிரசித்திபெற்ற ஜாவளி.

[அலமேலு மணி யமுனாகல்யாணி ஜாவளி]

அதற்கடுத்து விருத்தம். லலிதா, ஹம்ஸநந்தி, காபி, சுத்தசாரங் (கேட்டுத் தெரிந்துகொண்டேன்), என்று ராகமாலிகையில். முடிக்கும்முன் நாராயண தீர்த்தரின் பாடல். பிருந்தா வழியில் பாடும் நந்திதா ரவியின் ‘பகவாரியில்’ தொடங்கிய என் 2012 மார்கழி இசைவிழா அனுபவம், அரைத் திங்கள் கழிந்து, பிருந்தா வழியில், அவரது நேரடி சிஷ்யையான அலமேலு மணியின் மங்களத்தில் நிறைவுபெற்றது.

–*–

சில பொது அம்சங்களைக் கூறி முடிக்கிறேன்.

அலமேலு மணி போல, பரசாலா பொன்னம்மாள், மறைந்த கல்பகம் சுவாமிநாதன், ஜெயலக்ஷ்மி சந்தானம், அனந்தலக்ஷ்மி சடகோபன், வேதவல்லி என்று தொடங்கி சுகுணா புருஷோத்தமன் வரையிலாவது ‘அந்தக்கால பாடகர்கள்’ நிச்சயம் ராகங்களை மேடையில் தேடுவதில்லை. குரல் ஒத்துழைத்தாலும் இல்லாவிடினும் இசையில் ஒரு எளிமை, லகு, நிதானம், சௌக்யம், கௌரவம் இருக்கிறது. ராகங்களில் ஆலாபனை செய்ய அவகாசம் இருக்கிறது. அநேக கிருதிகளுக்கு நிரவல் செய்ய முடிகிறது. இசைவாணி, காமகோடியின் தீட்சண்யத்தில் பந்தா, பகட்டு, டாம்பீகம் என்பவைகள் அண்டுவதில்லை. இழுத்துப் போர்த்திய புடவையில், குனிந்த தலையுடன், மூடிய கண்களுடன், அவையடக்கத்துடன், ரம்யமாகப் பாடிக்கொண்டே போகிறார்கள். இவர்களது அப்பியாச முறைகளும், பயிற்சியிலும், சங்கீதத்தை போஷிக்கும் அணுகுமுறையிலும், குரலைப் பேணும் உத்திகளிலும் உள்ள ஒழுங்குகள் அடுத்த சந்ததியினரின் கவனத்தில் வரவேண்டும். பிறகே மேடையேற முற்படவேண்டும் என்பது என் சின்ன சின்ன ஆசைகளில் இருநூற்றிஎழுபத்திமூன்றாவது.

இரண்டு மணிநேரக் கச்சேரி என்றாலும், ராகம் தானம் பல்லவி அங்கம் பாடப்படுகிறது. ஆனால், நிரவல் செய்வதில் தீவிரம் குறைந்து வருகிறதோ எனப் படுகிறது.

பூர்வி (புவர்-வீ) கல்யாணியை குண்டர் தடை சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டும். இரண்டு வாரங்களுக்குள் பத்துப்பதினொரு முறை கேட்டால் இப்படித்தான் ஆகும். கச்சேரிப் ‘பத்துப்பாட்டு’ பட்டியலில் முன்னர் இடம்வகித்த பந்துவராளியை, பூர்வி கல்யாணி இடம்பெயர்த்துவிட்டதோ எனத் தோன்றுகிறது. எஸ்.ராஜம் வேதனைப்பட்டு வீட்டினுள் சொன்னதை (‘ப’, ‘ஸ’ ஸ்வரங்களில் நிற்கமுடியாமல், அருகிலேயே ‘ம’, ‘த’ என்றும் ‘நி’, ‘ரி’ என்றும் குரல் அலைபாய்பவர்கள், பந்துவராளியைப் பாடக்கூடாது) இவ்வகையில் மதிக்கிறார்கள் போலுள்ளது.

அநேக பூர்வி கல்யாணி போக, சில கச்சேரிகளில், மாற்றாக லதாங்கி கேட்டது. லதாங்கி, பிரதான ராகம் தோடி என்றே மூன்று இடங்களில் அமைந்தது (மாளவிகா, சஞ்சய், திருவாரூர் கிரிஷ்). கணிசமாக காம்போதியும், சங்கராபரணமும், சாவேரியும் கேட்டது. சில வருடம் முன்னர் ஆர்வலர் ஒருவர் சீசனில் பாடப்படும் ராகங்களை இணையத்தில் தொகுத்தார். கல்யாணி, காம்போதி, தோடி, சங்கராபரணம், பைரவி போன்றவை அடிக்கடிப் பாடப்பட்டவை என்றாகியது. தொடர்ந்து இவ்வகையில் புள்ளிவிபரங்கள் கிடைத்தால், சங்கீதப் போக்கையும் சார்ந்தவைகளின் நிலையையும் அறியமுடியும்.

இரண்டு மூன்று சீசன்களாய் திடீரென்று பல பிரபலமான ஆண் பாடகர்களின் நெற்றியிலிருந்து உட்பிரிவுகள் ஏதுமின்றி ஹோல்சேலாய் ஹிந்துமதம் காணமல் போய்விட்டது. கூட்டம் நிறைய வருவது உறுதியானால் பெண்களும் நெற்றியில் பொட்டின்றி, தலையில் பூவின்றி மேடையேறலாம்.

இசை விழாவில் பல காலிப் பெருங்காய டப்பிகள் கேட்கின்றன. என்றுமே இவ்வாறுதானா என்பது இருபது வருடங்கள் மட்டுமே இசைப் பரிச்சயம் உள்ள எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒன்று மனதில் சுடுகிறது. அகடெமியும் இன்னசில சபாக்களும் முடிந்தவரை பல மாவட்டங்கள், மாநிலங்கள் என்று கூட்டிவந்து கலைஞர்களை மேடையேற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் ‘வருடத்தில் ஒருமுறை’ போதாது என்பது கோலப்பன் நேரிடையாக தமிழ்நாட்டின் உள்ளே பலபகுதிகளுக்குச் சென்று, வருடா வருடம் மார்கழி இசைவிழா சமயத்தில் பேட்டி எடுத்துப் போடும் கலைஞர்களின் வாழ்க்கை நிலையை கவனிக்கையில் தெரிகிறது. அகடெமியில் ஒரு நாள் ஸ்பெஷல் பாஸிற்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொடுப்பவர்கள், சொந்த ஊரில், அருகிவரும் ‘குந்தளம்’ போன்ற வாத்யங்களை வாசிக்கும், வறுமையால் மதம் மாறும் கலைஞர்களை ஆதரிக்க அதை அளிக்கலாம். அகடெமி மேடையில் பாடும் கலைஞர்கள் புரிந்துகொள்வார்கள். ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் ஒளிப்படங்கள் நன்றி: தி ஹிந்து