கவிதைகள்

அப்பாவின் பலூன்

image1

‘பலூன்,பலூன்’ என்று நச்சரித்து
‘வேண்டாம்’ என்ற
அப்பாவிடம்
பாப்பா
பலூன் வாங்கியிருக்கும்.

பாப்பாவின்
கைகளுக்குள்ளே கொள்ளாத
பெரிய பலூன்.

பூமியைப்
பிடித்திருப்பது போல்
பாப்பா
பலூனைப் பிடித்திருக்கும்.

காற்றின் இறக்கைகளை
மறைத்து வைத்துக் கொண்டு
பறக்கக் காத்திருக்கும்
பலூனைப்
பரிந்து பறக்க விடும்..

பூமி மேல்
’பலூன் பூமி’
பறக்கும்.

கிறுக்குப் பிடித்து பலூன்
ஓடி ஓடிப் போகும்
திசையில்
பாப்பாவும்
ஓடி ஓடிப் போகும்.

பட்டென
பலூன்
காற்றில் ’காய்’ வெடித்ததாய்ச்
வெடித்துச் சாகும்.

’அப்பவே சொன்னேன்;
பலூன் வெடிக்கும்;
கேட்டியா?’
அப்பா வெடிப்பார்
பாப்பாவிடம்.

பாப்பாவுக்கு
’பலூன்
பறக்கும் தான்’.
வெடிக்கும் வரை.

அப்பாவுக்கு
பறக்கும் முன்னாலே
எப்படி
பலூன் வெடித்தது?.

– கு அழகர்சாமி

௦௦

மடித்து வைத்த நாள்

image2

அந்த நாளை
அந்த கணத்துடன்
மடித்து வைத்திருந்தேன்,
ஒரு பாடலுக்குள். – அது
இனிய நினைவுகளைப் போல
பொலிந்துகொண்டிருந்த
ஜன்னலருகே நின்றிருந்தது.
மிகச் சிவப்பான செம்பருத்தி ஒன்று
அதனுள்ளிருந்து எட்டிப் பார்த்திருந்தது.
திறந்திருந்த புத்தகத்தின் எழுத்துக்கள்
வெயிலின் மயக்கத்தில்
மிதந்துகொண்டிருந்தன.
நான் என் சாய்ந்த நிழலுள்
தொலைந்துகொண்டிருந்தேன்.
ஆனால், சரியாக எந்த கணம் அது?
புதிய பாட்டுப்பெட்டிகளால்
பழைய பாடல்களைப் பாடமுடிவதில்லை.
தேடியெடுத்த ‘டேப் ரிக்கார்டர்’-இல்,
போட்டுப்பார்த்தேன்.
அது மெதுவாக சுருண்டது.
சரியாக அந்த கணத்தில்,
மழை பெய்துகொண்டிருந்தது,
போல இருந்தது.

– ச அனுக்ரஹா

௦௦௦௦

இன்று

i2

இதுதான் எனது அக்காள் குழந்தையின்
பிறந்தநாள் கேக் .
இதன்மீது இனிப்பின் களிம்பால்
இப்படி அழகாக அவள் பெயரை எழுதவேண்டும்
‘தீபிகா’ என.
ஒரு தீபத்தை இதன்மீதேற்றி,
எல்லோரும் கூடிநின்று,
அவள் அதை ஊதப்போகும் வேளையில்,
‘இரு இரு, கொஞ்சம் பொறு’ எனச் சொல்லவேண்டும் ,
அப்போது நீங்கள் பார்க்கவேண்டும்,
அவள் குதிகால்கள் போடும்
ஒரு சிறு ஆட்டத்தை.
பின், பொசுக்கென்று ஊதி அணைக்கையில்
சூழும் இருளையும்.
– ஆதிகேசவன்