தூக்கி எறியப்படும் தூக்குக்கயிறுகள்

ew

சாக்கடை இல்லாத கழிவுநீர்ப் பாதைகள், கொல்லைப்புறத் தோட்டம், கிணற்று மேடு என நீர் ஓடும் இடத்தில் எல்லாம் இன்று தூக்கி எறியப்பட்ட காரக்கனிம மின்கலங்களை (Alkaline Battery – அதாவது சாதாரண கடிகார பேட்டரி) காண முடிகிறது. தூருடைந்து, துருப்பிடித்து, துகிலுரிந்து, துர்பாக்கிய நிலையில் அவை இருக்கும். அது ஒரு உயிர்க்கொல்லி என்று பலரும் அறிந்ததில்லை.

இந்த மின்கலத்திலுள்ள பொட்டாசியம் ஹைட்ராக்ஸட் எளிதில் நீருடன் சேர்ந்து மின்கலனை அரித்து, உள்ளிருக்கும் பாதரச பயில்வானை மண்ணோடு கலந்துவிடுகிறது. பாதரசம் மூளை நரம்புகளைப் பாதிக்கும் வேதிப்பொருளாகும், இது எளிதில் காற்றிலும் நீரிலும் கலந்து மனித உடலுக்குள் சென்று, மனபிறழ்ச்சி, கோமா, தற்கொலையுணர்வு என பலவித பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதற்கு காரணம் யார் என்று கைகாட்டுவது? பாதரசமற்ற கலங்களைத் தயாரிக்காத நிறுவனங்களா? தரநிர்ணயம் செய்யாத மத்திய அரசா? மேற்பார்வையிடாத மாநில அரசா? விழிப்புணர்வு ஏற்படுத்தாத உள்ளாட்சி அமைப்பா? அல்லது இது தெரியாமல் குப்பையில் போடும் நாமா?

காரக்கனிம மின்கலன் எடிசன் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் ஒரு நூற்றாண்டு ஆகியும், பரவலாகப் பயன்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தீர்ந்துபோன மின்கலங்களைக் குப்பைக் கூடையிலோ அல்லது கொல்லையிலோ போட்டு வருகிறோம். இது போக கொஞ்சம் தேடிப்பார்த்தால் லித்தியம், நிக்கல், மெர்க்குரி மின்கலங்கள் என பலவிதங்களிலும் நம் மண்ணில் கிடைக்கும். இதுவொரு உதாரணமே.

பலவித மின்னணு உபகரணங்கள் புழக்கத்தில் வந்துவிட்டன. கைபேசியின் வசீகரம் மக்களை அடைந்த அளவிற்கு அதன் பயன்பாட்டு முறைகள் மக்களை அடையவில்லை. இன்னும் சொல்லப் போனால் எப்படி அதன் கழிவுகளைக் கையாளுவது என்று தெரியாமலேயே இந்தியச் சந்தைக்குள் இவை வந்துவிட்டன. ஒரு கைபேசியோ, மின்கலமோ அல்லது மின்னணு உதிரிபாகங்களோ உபயோகமற்றுப் போகும்போது அதனை சாதாரணக் குப்பையுடன் போடக்கூடாது. இவைகள் குறிப்பிட்ட ஈரப்பதத்திலோ, வெப்பத்திலோ எளிதில் விடத்தைக் கக்கும் அபாயம் கொண்டவை. பிளாஸ்டிக்காவது கரிம[Organic Elements] வேதிப்பொருட்களைத்தான் கொண்டிருக்கும். ஆனால் அதைவிட அபாயமான அலோக, தாண்டல் உலோக [Transition Elements] வேதிப்பொருட்கள் இந்த மின்னணுக் கலன்களில் உண்டு. குப்பையோடு எரிக்கப்படும்போது எளிதில் காற்றில் கலந்துவிடுகிறது. இதனால் இருதய நோய்கள், நுரையீரல் பாதிப்பு, டி.என்.ஏ. சிதைவு, புற்று நோய் என பல்நோக்கு நோய்கள் படையெடுக்கும் அபாயம் உள்ளது. சமூக, சுற்றுப்புற, பொருளாதார காரணிகளைக் கொண்டு அண்மையில் மேப்பில்கிராப்ட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அபாயகரமான நாடுகள் பட்டியலில் இரண்டாமிடத்தை இந்தியர்கள் நாம் பிடித்துள்ளோம். இதில், தமிழகமே இந்தியாவின் இரண்டாவது பெரிய மின்-கழிவு உற்பத்தி மாநிலம் என்பது நமக்கு நாமே சேர்த்துக் கொண்ட கவுரவம்.

இவ்வளவு அபாயம் உள்ள பொருட்களை எப்படி அரசு முறையான மறுசுழற்சித் திட்டமின்றி மக்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. அதைவிடக் கொடுமையாக மின்கழிவு மேலாண்மையின்றி மாநில அரசே இலவசமாக மின்னணு உபகரணங்களை ஒவ்வொரு வீடுகளுக்கும் அளிக்கிறது. ஒரு வீட்டில் ஒரு மின்சாதனப் பொருள் பயனற்றுப் போனால் முதலில் பழைய பொருள் கடையில் விற்க முயல்வர், முடியாவிடில் குப்பையில் போட்டுவிடுவர். இப்படி சேர்ந்த குப்பைக் கழிவுகளை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஊருக்கு ஒதுக்குப் புறமான பகுதியில் நமது உள்ளாட்சி அமைப்பு கொட்டிவிட்டு அல்லது அங்கேயே எரித்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வண்டியேறி வந்துவிடுகிறது. எரிப்பதற்கோ, கொட்டுவதற்கோ உகந்த மக்கும் பொருட்கள் அல்ல இவை.

அதே போல பழைய பொருள் கடைகளுக்குப் போன பொருளெல்லாம் கடைசியில் ஒரு மறுசுழற்சியாளர் கையில் கிடைக்கிறது. அவர் அதை திறந்தவெளியில் எரித்து காசு பார்கிறார். முடிவாக அந்தக் கழிவுகள் முறையாகக் கையாளப்படுவதில்லை. போதாக்குறையாக வெளிநாடுகளில் இருந்து மின்கழிவுகளை இறக்குமதி வேறு செய்து மாசுபடுத்தி காசு எடுக்கிறார்கள். அதாவது மற்ற நாடுகளுக்கு இந்தியா ஒரு குப்பைகிடங்காகக் காட்சியளிக்கிறது. எரிக்கப்பட்ட கழிவுகள் காற்றில் கலக்கின்றன. குப்பையாக நிலத்தில் குவிக்கப்பட்டவை நீருடன் வினைபுரிந்து மண்ணில் நஞ்சைக் கலந்துவிடுகிறது. இதனால் மனிதன் மட்டுமன்றி பல்லுயிர்களும் பாதிக்கப்படுகின்றன.

மின்கழிவுகள்*(e-Waste) என்றால் என்ன? பயனற்ற மின்சாதனப் (Electrical) பொருட்களும், மின்னணுப் (Electronic) பொருட்களும் மின்கழிவுகள் எனப்படுகின்றன. அதாவது கைபேசி, கடிகாரம், அவற்றின் மின்கலன் (battery), கணினி, கணினி சார்ந்த துணை உபகரணங்கள், தாமிர வயர்கள், மின்சுற்று (Electric Circuit), எல்சி.டி. திரை, குளிர்சாதனப் பெட்டி, தொலைகாட்சிப் பெட்டி, சலவை எந்திரம், பாதரச விளக்குகள் மற்றும் எல்லா மின்சார்ந்த பொருட்களும் இந்தப் பட்டியலில் அடங்கும். இந்தப் பொருட்களெல்லாம் ஈயம், காட்மியம், பெரிலியம், தாமிரம், வெள்ளீயம், சிலிக்கான் இரும்பு, அலுமினியம், பாதரசம் போன்றவற்றாலும் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருட்களும் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இதனைச் சாதாரணக் குப்பையில் போடும்போதும் அல்லது பேரிச்சம்பழத்திற்காக நடைவண்டியில் போடும்போதும் சுகாதாரமற்ற முறையில் இந்தப் பொருட்கள் தெரிந்தோ, தெரியாமலோ எரித்துப் பிரிக்கப்படுகின்றன. இந்த முறையற்ற கழிவு மேலாண்மையால் விஷக் கழிவுகள் சுற்றுச்சுழலைப் பாதிக்கின்றன. என்னதான் தாமிரம், இரும்பு, சிலிக்கான் போன்றவை உடலுக்குத் தேவையான சத்துக்களாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக சுற்றுப்புறத்தில் கலப்பதால் பாதிப்புகள் உண்டாகின்றன.

3581_large

மத்திய அரசின் மின்கழிவு (மேலாண்மை மற்றும் நடவடிக்கை) விதி 2011ன்படி 2012 மே மாதத்திற்குள் அனைத்து மின் உபகரணத் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்கள் கழிவுகளைத் திரும்பப் பெற்று மறுசுழற்சி செய்ய போதிய கட்டமைப்பை நிறுவவேண்டும் என்று கூறுகிறது. இவ்விதி முக்கிய மின்-கழிவுகளுக்கு மட்டுமே பொருந்துகிறது; சிறிய கழிவுகளுக்கு விதிவிலக்கு உண்டு. ஒருசில நிறுவனங்கள் தற்போதே அதை அமல்படுத்தியுள்ளன, ஆனால் அவையும் குறைந்த அளவில் மட்டுமே தொடங்கியுள்ளன. பல அந்நிய நிறுவனங்கள் இவ்விசயத்தில் இன்னும் முனைப்பு காட்டவேயில்லை. இன்று, பிரண்ட்ஸ்ஸோடு ஷேர் பண்ணு, உலகத்தின் அதிசயம், உலகம் உங்கள் கையில் எனக் கூவி கூவி விற்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் சில வருடங்களில் மின்-கழிவுகளாக மாறி, நாம் உலக மின்-குப்பைகளின் வல்லரசாக மாறிவிடுவோம். இன்று தூக்கி எறியப்படும் மின்கழிவுகள் எல்லாம் நாளை நம் கழுத்தை நெரிக்கும் தூக்குக்கயிறுகளே. அதற்குள் சுதாரித்து மாசற்ற உலகை மாசுபடாமலேயே இருக்க விடுவோம்.

பிளாஸ்டிக் பொருட்களைப் போல இதன் பயன்பாடு தவிர்க்கக்கூடியதல்ல, ஆனால் பிளாஸ்டிக் போல கண்ட இடங்களில் இவற்றைத் தூக்கியெறியாமல் இருக்கலாம். உற்பத்தி செய்த நிறுவனத்திடமே இவை திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.

நீர்நிலைகள், விவசாய பகுதிகள், இயற்கை வனங்கள் போன்ற பகுதிகளில் கட்டாயம் இவற்றை வீசக்கூடாது. முறையான அங்கீகாரம் பெற்று நாட்டில் இருக்கும் ஒன்றிரண்டு மின்கழிவு மேலாண்மைத் தீர்வகங்களிடம்[e-Waste Management Solution] இதற்கான பணிகளை ஒப்படைக்கலாம்.

முறையற்ற மறுசுழற்சி ஆலைகளை மூடவும், முறையான மின்கழிவு மறுசுழற்சி ஆலைகள் அதிகம் அமைக்கவும் அரசை நாம் கோரலாம்.

அந்நிய நாட்டு எலக்ட்ரானிக் பொருட்களைத் தவிர்ப்பது ஒருபுறமிருந்தாலும், முறையான மறுசுழற்சி செய்து மாசு குறைக்கும் இந்திய நிறுவனப் பொருட்களை வாங்கி ஆதரிக்கலாம். இவை அனைத்தையும்விட மிக முக்கியமாக, மக்களிடையே இவற்றின் ஆபத்த் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு வரவேண்டும். பொதுவாக, யாருமே மின்கழிவுகளைக் கவனமாக வெளியேற்றுங்கள்.

மேற்கோள்கள்:

http://www.moef.nic.in/downloads/rules-and-regulations/1035e_eng.pdf
http://news.efytimes.com/e1/Why%20Recyclers%20Are%20Importing%20eWaste/42978
http://deity.gov.in/sites/upload_files/dit/files/EWaste_Sep11_892011.pdf
http://www.greenpeace.org/india/en/Blog/victory-india-introduces-e-waste-law/blog/35288/
http://www.cseindia.org/content/press-release-e-waste-industry-india-cse-exposes-what-lies-beneath
http://maplecroft.com/about/news/ccvi.html