வைதேஹி – அறிமுகமும் கவிதைகளும்

ஜானகி ஸ்ரீனிவாசமூர்த்தி எனும் வைதேஹி சமகால கன்னட எழுத்தாளர். கதை, கட்டுரை, கவிதை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு எனப் பலவகை எழுத்தில் தன் முத்திரையைப் பதித்துள்ளவர். கர்நாடக மாநில குந்தாபுரத்தில் பிறந்த இவர் தற்போது வசிப்பது மணிப்பாலில். இவர் தன்னை ஒரு பெண்ணிய எழுத்தாளராய் அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், ஆணாதிக்க சமுதாயத்தில் சாதாரண மத்திய வர்க்கப் பெண்களின் வாழ்வுப் போராட்டங்களைச் சுற்றியே இவரது கதைகள் பெரும்பாலும் அமைந்துள்ளன. உரத்து கோஷம் போடாமல் நம் சமுதாயத்தில் பெண்களின் வாழ்க்கையை அது இருப்பது போலவே காட்டி அதன் மூலம் தெரிந்து கொள்ளவேண்டியதை நமக்கே விட்டுவிடுகிறார். குந்தாபுர வட்டாரத்தின் இனிமையான வழக்குப் பேச்சு இவர் கதைகளின் தனிச்சிறப்பு.

v

கிரீஷ் காஸரவள்ளியின் இயக்கத்தில் பெருமளவில் பாராட்டும் பல விருதுகளும் பெற்ற குலாபி டாக்கீஸ் என்ற திரைப்படக்கதையின் மூலம் இவர் எழுதியது ஒரு கதைதான். மூலக்கதை என்று போட்டதை விட தூண்டுதல் என்றிருந்தால் சரியாய் இருக்கும் என்கிறார் இவர்.

”இப்படத்தில் இருப்பது என் கதையின் செல்யுலாயிட் வடிவம் அல்ல. என் கதையின் ஆதாரத்தில் இயக்குனர் காஸரவள்ளி அவர்களுக்குத் தெரிந்த ஒரு கிளைக்கதை – உபபடைப்பு என்று சொல்லலாம். ஒரு படைப்பை படிக்கும்போதோ அல்லது பார்க்கும்போதோ படைப்புத்திறன் உள்ளவர் மனதினுள் அதனுடன் இழைந்த ஸ்வரமாய் இன்னொன்று உருவாகுவது இயற்கையாய் நடக்கக்கூடிய ஒன்று. இது அந்தப் படைப்பை புரிந்து, உள்வாங்கிக் கொள்வதற்கான ஒரு வழியும்கூட. ஒருவிதத்தில் அது படைப்புக்கு அளிக்கும் மறுவினை, படைப்பாற்றலின் துடிப்பு. இன்றைய வாழ்வில் இருக்கும் ஒரு கவலைக்குரிய விஷயத்தைப் பற்றிப்பேச காஸரவள்ளிக்கு என் கதை ஆதாரமாய் இருந்து, அதிலிருந்து அவரது கற்பனையில் அவருடையதேயான ஒரு தனிக்கதை உதிக்கக் காரணமாய் இருந்தது என்பதுதான் எனக்கு முக்கியமானது.” என்கிறார் இவர்.

சாஹித்ய அகாடெமி விருதை இரண்டு முறைகளும், கன்னட சாஹித்ய அகாடெமி விருதை இரண்டு முறையும் பெற்றுள்ள இவர் தானசிந்தாமணி,  கதா என்று இன்னும் பல விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கவிதை தெரிந்தவர்களே சொல்லுங்கள்

வைதேஹி

கவிதை தெரிந்தவர்களே சொல்லுங்கள்
எனக்குக் கவிதை தெரியாது
தெளிவான ரசம் தெரியும்

தெளிவான ரசம் என்றால் என்ன நினைத்தீர்கள் ?
அதற்குத் தேவை உள்ளே
நீரும் வாசனைப்  பொருட்களும்
அவற்றின் தன்மையின்  புரிதலும்
கொதித்து அடங்கி வரும்
சாரமும் அதன் தன்மையும்
இப்படிப் பலவும்..

மூலையிலே இருந்தது ரசப் பாத்திரம்
அணைந்தும் அணையாததுமாய்
சாம்பல் பூத்த கரியடுப்பின் மேலே
காத்துக்கொண்டு. காத்திருந்தால்  என்ன?

அசைவ உணவின் பகட்டு வகைகளும்
நடனம் போல் நடைபோட்டு
பரிமாறுபவரும்
நளினச் சிரிப்பும் நாகரிக பாவமும்
நிறைந்த தர்பாரில்
மெலிந்த தெளிந்த ரசம் அப்படியே
இருந்தது காலைமுதல்

அணைந்தும் அணையாத
கரியடுப்பின்மேல்
கொதித்து வற்றி
இரவானபோதும் ஊசிப்போகாமல்.

கவிதையை பற்றிப் பெரிதும் தெரிந்தவர்களே
தெளிவான ரசம் தெரியுமா உங்களுக்கு ?
மன்னிக்கவும் எனக்குக் கவிதை தெரியாது.

தமிழில்: உஷா வை.

அவன் அவள் மற்றும் மொழி

அவள் சொன்னாள்: பசி தாகம்.
அவன் சொன்னான்: நன்றாக சாப்பிடு குடி.
அப்போது அவள் அழுதாள்.
அவன் சிரித்தான்.

முந்தைய தினம் அவன் ஜன்னலென்று சொன்னான்,
அவள் நினைத்தது போல கதவென்று இல்லை!
சுவர் என்றான் அவன்.
அவள் வெளியென்று நினைத்திருந்தாள்.
சுவர் உடைந்தால் எல்லாம் வெளிதானே?

அவனுக்குப் பிடித்த புளிக்குழம்பு செய்தாள்.
அவன் சாப்பிட்டதோ மோர் குழம்பு.

எல்லாமே ஏன் இப்படித் தலைகீழாக இருக்கிறது?
காற்றேயில்லை அவர்களுக்கிடையில்
அப்படியானால்,
அலைகள்?

சப்தங்கள் தலைகீழாக
தனித்து அலறுகின்றன
நீரின் ஆழத்தில்.

அப்போது ஆரம்பித்ததுதான்
தற்கொலைப் பேச்சு.

என்ன சொன்னான் அவன்?
தமாஷுக்காக! என்றுதானே?

இப்படித்தான் அவ்வப்போது
ஏதாவது நடக்கிறது.
கடலென்றால் கடலில்லை.
கரையென்று நினைத்திருப்பது
மீனின் பின்புறத் திமில்.

ஒன்று சொன்னால்
இன்னொன்று அர்த்தமாகும்
வார்த்தைகளின் விளையாட்டுதான்
உனக்குத் தெரியுமே.

அவள் கேட்டாள்:
சொல்லு, இறுதியாக
நம்மிருவரில்
யாருக்கு அதிக பைத்தியம்?

அவன் : என்ன கேட்டாய்?
யாருக்கு முதலில் சாக ஆசையென்றா?
அவள்: வெக்கை. ஜன்னலைத் திறக்கவா, நடுவே காற்றுவரட்டும்?
அவன்: என்ன? பசியா? தாகமா?

தமிழில்: ச.அனுக்கிரஹா

கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் இங்கே.