க.நா.சுவின் இலக்கியச் செயல்பாடுகள்

kanasu2

தான் நெருங்கிப் பழகிய ஆளுமைகளைக் குறித்து தனித்தனிப் புத்தகங்களை ‘நினைவோடை’ என்ற வரிசையில் எழுதியிருக்கிறார் சுந்தர ராமசாமி. அதில் க.நா.சு குறித்து எழுதியிருக்கும் புத்தகம் சிறப்பான ஒன்று. க.நா.சுவுடனான தனிப்பட்ட உறவு, இலக்கியச் செயல்பாடுகள், க.நா.சுவின் குணாதிசயங்கள் எனப் பல்வேறுபட்ட பார்வைகளைத் தரும் அப்புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை இங்கே தருகிறோம். இப்பகுதியில் க.நா.சுவின் பல்வேறு இலக்கியப் பங்களிப்புகளைப் பற்றிய சு.ராவின் தொகுப்புப் பார்வையைப் படிக்கலாம்.

புத்தகம் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்.

இப்புத்தகத்தை இணையத்தில் இங்கே வாங்கலாம்.

லக்கிய வட்டம் காலத்துக்குப் பிறகும் எனக்கும் க.நா.சுவுக்கும் இடையில் நெருக்கமான நட்பு இருந்தது. அவர் எந்தப் பத்திரிக்கையில் எழுதினாலும் அதை ஒன்றுக்கு இரண்டு தடவை படித்து என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தொடர்ந்து புரிந்துகொண்டுவந்தேன். ஆனால் ஒரு தடவை கூட அவருக்கு இது பற்றி எழுதியதே கிடையாது. அந்த மாதிரியான கடிதப் போக்குவரத்து வைத்துக்கொள்ளக்கூடிய சுபாவமே அவருக்குக் கிடையாது. இருந்தும் அவர் எனக்கு முக்கியமானவராகத்தான் இருந்திருக்கிறார். அவருடைய சில கருத்துக்கள் நான் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லாவிட்டாலும் ஆழ்ந்து சிந்திக்கும்படியாக அவை இருந்திருக்கின்றன. தமிழில் மிக முக்கியமான மாற்றத்தை அவர் உருவாக்கியிருக்கிறார் என்பது தெளிவாகவே எனக்குத் தெரிகிறது. கோபதாபங்களுக்கு அவர் பயப்படவேயில்லை. எழுத்து உலகில் ‘கெட்ட’ பெயர் வாங்கிக்கொள்ளாமல் எந்த உண்மையையும் சொல்ல மூடியாது என்பதற்கு அவர் ஒரு உதாரணம்.

suraalbum1071947-48களில் கூட யார் பிரபலமான வர்களாக இருந்தார்களோ, யார் லட்சக் கணக்கான வாசகர்களைக் கொண்டு இருந்தார்களோ  அவர்கள்தான் சிறந்த எழுத்தாளர்கள் என்ற எண்ணம்  சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் இருந்தது. க.நா.சு.தான் அதை முதன்முதலாக உடைத்தார். அப்போது வெகு குறைவான பேர்களே அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டார்கள். சிறு பத்திரிகை வட்டத்துக்கு, பின்னாட்களில் வந்து சேர்ந்தவர்கள்கூட ஆரம்பத்தில் இவர் என்ன சொல்கிறார், இவரைப் படிப்பதற்கு யாருமே இல்லையே. லட்சக்கணக்கானவர்கள் படிக்கிறார்களே, அவர்கள் என்ன மோசமான எழுத்தாளர்களா என்று முரட்டுத் தனமாகக் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வி மழுங்கி க.நா.சுவின் பார்வை நாளாக நாளாக வலுப்பட்டு வந்திருக்கிறது. லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் எப்படி அந்த வாசகர்களை உருவாக்கிக்கொண்டார்களோ அதே போல் க.நா.சுவால் தீவிரமான எழுத்தாளர்களுக்கு ஒரு வாசகர் பட்டாளத்தை உருவாக்கித்தர முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் முன்னால் இலக்கிய விமர்சனம் சார்ந்து ஒரு வாதத்தை க.நா.சு முன்வைத்திருந்தாரே அது தமிழ் இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய மிகப் பெரிய பங்களிப்பு என்று நான் நினைக்கிறேன். வணிக எழுத்தாளர்கள் முன்வைத்த வாதமானது ஒரு தர்க்க நிலையோ, விமர்சன மரபோ கொண்டது அல்ல என்பதெல்லாம் இப்போது அம்பலப்பட்டுப் போய்விட்டிருக்கிறது. ஒருபுறம் அவர் சிறந்த நாவலாசிரியர் – இல்லையென்றால் நல்ல நாவல்களை எழுத ஆசைப்பட்டுக் கைகூடாமல் போனவர் – அவர் நமக்கு மிகச் சிறந்த விமர்சனக் குறிக்கோளை உருவாக்கித் தந்திருக்கிறார்.

பின்னாட்களில் நாம் அவரிடமிருந்து மாறுபட்டுச் சில விஷயங்களை செய்திருக்கலாம். அவர் சொல்ல விட்டுப்போன சில விஷயங்களை நாம் சொல்லியிருக்கலாம். அவரை விமர்சிக்கலாம். நிராகரிக்கலாம். ஆனால் அவர் முன்வைத்த எழுத்தாளர்களை இன்று படிக்க ஒரு பத்தாயிரம் பேராவது இருக்கிறார்கள் என்றால் – அது உண்மையென்றால் – அதற்கு விதைகளைத் தூவியது க.நா.சுதான். இதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. அடுத்ததாக அவர் சிறுகதைகள் எழுதி வந்திருக்கிறார். அவற்றின்மேல் எனக்கு அவ்வளவாக நல்ல அபிப்ராயம் கிடையாது. இரண்டு மூன்று தடவை க.நா.சு எழுதியிருக்கிறாரே என்பதற்காக ஆசையோடு படித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் சி.சு.செல்லப்பா தினமணி கதிரில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வந்திருக்கிறார். அந்த நேரத்தில் க.நா.சுவை தொடர்ந்து கதிரில் எழுதச் சொல்லியிருக்கிறார். இதெல்லாம் எனக்குப் பின்னால் தெரியவந்த விஷயம். அப்போது செல்லப்பா தினமணிக்குள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. திடீரென்று தினமணி கதிரில் க.நா.சுவின் கதைகள் வரிசையாய் இருபத்தைந்து முப்பது வந்திருக்கும். அந்த நேரத்தில் க.நா.சுவின் பெயர் பலபேருக்கு மனதில் பதிந்திருக்கவே இல்லை. ஏதோ ஒருத்தருக்கு அதிக இடம் கொடுத்து வருகிறார்கள், அவர் அதை வைத்துக்கொண்டு ஏதோ எழுதிக்கொண்டுவருகிறார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அந்தக் கதைகள் எல்லாம் ரொம்பவும் வித்தியாசமானவையாக இருந்தன. ஆரம்பம், நடு, முடிவு, கதை சொல்லும் விதம், விஷயம் இப்படி எல்லா விஷயத்தையும் உடைத்து அவருக்கு ஏதோ ஒரு விஷயம் தோன்றுகிறது, அதைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் சிறந்த கதைகள் எழுதியிருக்காவிட்டாலும் அவர் பயன்படுத்திய சுதந்திரமானது பின்னாட்களில் பிறர் சிறந்த கதைகள் எழுத மறைமுகமாகப் பயன்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் அவர் சிறந்த சிறுகதையாளர் என்ற  எண்ணம் எனக்கு இல்லை. வேறு சில எழுத்தாளர்களுக்கு இருக்கிறது.

அவருடைய மொழிபெயர்ப்புகள் மிகவும் முக்கியமானவை. அவர் விருப்பப்பட்டு செய்த புத்தகங்களும் இருக்கின்றன. கஷ்டப்பட்ட காலத்தில் வருமானத்துக்காக மொழிபெயர்த்தவையும் இருக்கின்றன. ஆனால் வருமானத்துக்காகக்கூட தனக்கு முற்றிலும் நம்பிக்கையில்லாத ஒருவரின் புத்தகத்தை அவர் மொழிபெயர்க்கவில்லை என்பது முக்கியமான விஷயம். ஒருவேளை அவருடைய முதல்பட்ச தேர்வாக அந்தப் புத்தகங்கள் இல்லாமல் இருக்கலாம். அவருக்குக் கிழக்கு ஐரோப்பிய புத்தகங்கள்தான் விருப்பத்துக்குரியனவாக இருந்தன. வித்தியாசமான தேர்வாக இருக்கிறதே என்று ஒரு தடவை அவரிடம் கேட்டிருக்கிறேன். அங்குள்ள வாழ்க்கை முறைக்கும் தமிழ் வாழ்க்கை முறைக்கும் இடையில் ஏதோ ஒற்றுமை இருக்கிறது. அவர்கள் தங்களது குடும்பம் சார்ந்து பேசினாலும் நமக்கு அதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அதே சமயம் இங்கிலாந்து, அமெரிக்கப் படைப்புக்களை படிக்கும்போது ஒருவித அன்னியத்தன்மையை உணர்கிறோம் என்று சொல்லியிருக்கிறர். இப்போது நான் சுருக்கமாகச் சொன்னதை அவர் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.

mathaguru-copyக.நா.சு மேற்கத்திய புத்திகொண்டவர்; தமிழ் நாட்டைப் பற்றி அக்கறை இல்லாதவர் என்று சொல்வது வழக்கத்தில் இருக்கிறது. இன்றைக்கும் பலர் அப்படிச் சொல்கிறார்கள். சொல்ல ஆசைப்படுகிறார்கள். ஆனால், அவர் பல சமயங்களில் இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் செயல்பட்டிருக்கிறார் என்பதற்கான தடயங்கள் இருக்கின்றன. இந்தத் தமிழ் நாட்டைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டு அதன் மதிப்பீடுகளை அழிக்கக்கூடிய புத்தகத்தைச் சந்தோஷமாகவும் தாராளமாகவும் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. அதனால் அவர் எல்லாவற்றையும் ஒரு முன்யோசனையோடுதான் செய்கிறார் என்று தோன்றுகிறது. அவர் சொன்னது உண்மைதான் என்பது பின்னால் நிரூபணமாகியிருக்கிறது. அதற்கு ஒருவிதமான பலன் ஏற்பட்டிருக்கிறது என்ற தெளிவு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர் மொழிபெயர்த்த நாவல்களை ஒருசிலராவது விரும்பிப் படித்தார்கள். எழுத்தாளர்களை அது முக்கியமாக பாதித்திருக்கிறது. மகாபாரதத்தைப் படிப்பதில் எவ்வளவு ஆர்வம் உண்டோ அதே அளவு ஆர்வத்துடன் க.நா.சு. மொழிபெயர்த்த நாவல்களை பலர் விரும்பிப் படித்திருக்கிறர்கள். நிறைய எழுத்தாளர்கள் அந்த நாவல்களால் பாதிப்பு பெற்றிருக்கிறார்கள். பெர் லாகர்குவிஸ்டின் ’பாரபாஸ்’ (அன்பு வழி) என்ற நாவல் பலரை ரொம்பவும் பாதித்திருக்கிறது. நம்பி தான் படித்ததிலேயே ‘மதகுரு’ மிகச் சிறந்த நாவல் என்று சொல்லியிருக்கிறான். அதை அவன் படித்தான் என்று சொல்வதைவிடப் பாராயணம் செய்தான் என்று சொல்வதுதான் சரி. க.நா.சு கூட அந்நாவலை மொழிபெயர்க்கும்போது மொழிபெயர்க்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் பல பக்கங்கள் படித்துக்கொண்டே போய்விட்டதாகவும் பின்பு விட்ட இடத்திலிருந்து மொழிபெயர்க்க  ஆரம்பித்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஸெல்மா லாகர்லாஃபின் அந்தப் புத்தகத்தை வருடத்துக்கு ஒரு சில தடவைகள் படிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

மேற்கத்திய விமர்சனங்களை பின்னாட்களில் படித்தபோது ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது அந்த ஸ்வீடிஷ் படைப்பாளிக்கு இவ்வளவு மரியாதை கொடுத்துப் பேசியது உலகத்திலேயே க.நா.சு ஒருவர்தான். பல சமயங்களில் அந்த காலத்து எழுத்துக்களைப் பற்றி எழுதிய  பிற மேற்கத்திய  விமர்சகர்களின் பட்டியலில் ஸெல்மா லாகர்லாஃபின் புத்தகத்தைப் பற்றிப் பேச்சு மூச்சில்லை. உலக விமர்சனம் புறக்கணித்துவிட்ட படைப்பாளியை தன்னத்தனியாகப் பல பத்தாண்டுகள் சொல்லிக்கொண்டு வந்திருப்பதுடன் அந்த நாவலை மொழிபெயர்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தையும் அச்சந்தர்ப்பத்தின் ஓட்டைகள் தெரியாத நிலையிலும் முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார். இதற்கு மிகுந்த உறுதியும் தனது முடிவுகள் பேரில் அசைக்க முடியாத நம்பிக்கையும் வேண்டும். மேற்கத்திய மனங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத ஒரு படைப்பாளி தமிழ் எழுத்தாளன் ஒருவரின் மனதில் இப்படி ஆழமான பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கிறார். தனக்கு இப்படி ஒரு வாசகன் இருக்கிறான் என்ற விஷயத்தை தெரிந்துகொள்ளாமலே ஸெல்மா லாகர்லாஃபும் இறந்து போய்விட்டிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தபோது மிகுந்த வருத்தமாக இருந்தது. க.நா.சு தன் அபிப்ராயத்தைத் தன்னுடன் எத்தனை பேர் சேர்ந்து சொல்கிறார்கள் என்பது பற்றிக் கவலைப்பட்டதே கிடையாது. அவருக்கென்று ஒரு தீர்மானம் இருக்கிறது. அதன்படி அவர் அதைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டேதான் வந்திருக்கிறார்.

அவருடைய பங்களிப்பாக நான் முக்கியமாக நினைக்கக் கூடியது ஒன்று உண்டு. அவரைப் பெரிய விமர்சகராக நான் நினைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து சில கட்டுரைகள் எழுதி தமிழில் இருந்த அவலத்தை முற்றாக உணரும்படிச் செய்துவிட்டார். அதுதான் இன்று பொருட்படுத்தத் தகுந்த முக்கிய பார்வையாக இருக்கிறது. இடதுசாரிக்காரர்களானாலும் வலதுசாரிக்காரர்களானாலும் வேறு எந்தக் குழுவைச் சார்ந்தவர்களானாலும் அவர் சொன்னத் தேர்வைத்தான் அல்லது அதை ஒட்டிய தேர்வைத்தான் தங்களுடையதாக சொல்வது வழக்கமாகிவிட்டிருக்கிறது. அப்படிச் சொல்லும்போதுகூட பலருக்கு க.நா.சுதான் இந்த வழியைத் திறந்துவிட்டது என்பது தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த வழி உறுதிப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
இதுக்கு எதிராக வலுவான குரல்கள் ஒலித்திருக்கின்றன. கைலாசபதி, சிவத்தம்பியின் குரல்கள். க.நா.சுவின் குரலை ஒப்பிடும்போது அவர்களுக்கு அதிக செல்வாக்கு, கல்வித்துறைப் பின்னணி, வாசகர்கள் மத்தியில் கௌரவமான ஸ்தானம், தமிழ் ஆசிரியர்கள், தமிழ் புலவர்கள் மத்தியில் உயர்ந்த மதிப்பு எல்லாம் உண்டு. க.நா.சுவை அவர்கள் ரொம்ப உதறிப் பேசியிருக்கிறர்கள். மனசு புண்படும்படிப் பேசியிருக்கிறார்கள்  முக்கியமாக கைலாசபதி. அதெல்லாம் அவருக்குத் தெரியும். ஒருமுறைகூட  கைலாசபதியையோ சிவத்தம்பியையோ அவர் மட்டம் தட்டிப் பேசியதில்லை. அவர்களுடைய பார்வை சார்ந்து அவர்களுடைய விமர்சனம் சரிதான் என்று என்னிடமே கூறியிருக்கிறார். இப்படியெல்லாம் இருந்தும்கூட காலப்போக்கில் ஒரு முப்பது நாற்பது வருடத்தில் அவர்கள் முன்வைத்த அபிப்ராயங்கள், முக்கியமாக அவர்கள் செய்த தேர்வுகள் எல்லாம் தேய்ந்து இன்று அவர்களைப் பின்பற்றுவதாக சொல்பவர்கள்கூட க.நா.சுவின் பட்டியலைத்தான் ஆதரித்து வருகிறார்கள். பலருக்குக் க.நா.சுவின் பேரைச் சொல்லக்கூடக் கூச்சமாக இருக்கிறது. அவர்கள் சொல்கிறர்களோ இல்லையோ அவர்கள் சொல்வதன் பின்னால் க.நா.சுவின் மதிப்பீடு இருக்கிறது என்பது க.நா.சுவின் எழுத்தைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்குத் தெரியும். ஒரு முக்கியமான இலக்கிய விமர்சகர் என்று சொல்ல முடியாவிட்டாலும்கூட ஒரு மாற்றத்தை உருவாக்கிய இலக்கிய விமர்சகர் என்பதுவே முக்கியமான விஷயமாக எனக்குத் தோன்றுகிறது.

அடுத்ததாக அவரது நாவல்கள்  தமிழ் சூழலைப் பார்க்கும்போது இரண்டு மூன்று நல்ல நாவல்களை நன்றாகவே எழுதியிருக்கிறார். மிகச் சிறந்த நாவலை அவரால் உருவாக்க முடிந்திருக்கவில்லை என்பதும் ஒரு உண்மைதான். அவர் மனதில் நாவல் பற்றி இருந்த கற்பனையை அவரால் செயல்படுத்த முடியவில்லை.

மூன்றவதாக அவரது சிறுகதைகள் எனக்கு அவ்வளவு உயர்வாகத் தெரியவில்லை. ஒருதடவை பாவண்ணனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது க.நா.சுவின் நாலைந்து கதைகள் ரொம்ப உயர்வாக இருக்கின்றன. ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. நாலைந்து தடவை படித்துவிட்டு அவை உயர்ந்த கதைகள் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன் என்றார். நீங்கள் இதைப் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இளைய தலைமுறையில் வேறு சிலரும் இது போன்ற எண்ணம் கொண்டிருக்கலாம். இருபது முப்பது வருடங்கள் கழிந்து க.நா.சுவின் கதைகளுக்கு ஒரு பேர் வரலாம். அவை இறந்துபோய்விட்டதாக நான் நினைக்கவில்லை. எனக்கு இன்று வரை அவை பற்றி ஒரு மதிப்பு உண்டாகவில்லை. க.நா.சு கூட இருந்த காலத்தில், அவரது கடைசி காலத்தில், அவர் இறந்த பின் மூன்று தடவைகள் முக்கால் பங்குக் கதைகளையேனும் திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன். அந்த வாசிப்பின் மூலமும் அவை முக்கியமானவையாகப் படவில்லை. மொழிபெயர்ப்பின் மூலம் அவர் செய்த சாதனை மிகப் பிரம்மாண்டமானது என்பதுதான் என் எண்ணம். ஒவ்வொரு புத்தகத்தைப் பற்றியும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று விருப்பமிருக்கிறது. ஆனால் நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்பதை முதலில் தொகுத்துக்கொள்ளவேண்டும்.

அவரது மொழிபெயர்ப்பு பற்றிப் பொதுவாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அவர் மொழிபெயர்ப்பைச் சரளமாகப் படிக்கும்படிச் செய்திருக்கிறார். அதைப் படிக்கும்போது எந்த ஒரு சிக்கலும் இருக்காது. ஆனால், அநேக மேற்கத்திய படைப்புக்களைப் படிக்கும்போது – அவை சகஜமாகப் படிக்கும்படியாக இருக்கின்றன என்றாலும் – சில இடங்களில் ஒரு அந்நியமான சிக்கலான விஷயங்கள் வரத்தான் செய்கின்றன ஏனென்றால் மேற்கத்திய கலாச்சாரம் என்பது நம் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட ஒன்றுதானே. அங்கு பல விஷயங்கள் வித்தியாசமாக நடந்திருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக சர்ச் சம்பந்தமாக பல சண்டைகள் விவாதங்கள் அங்கு நடந்திருக்கின்றன. கிறிஸ்தவ தியாலஜி சம்பந்தமான விவாதங்கள் அவற்றுக்குரிய சொற்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்த மாதிரியான பகுதிகளையும் சேர்த்து மொழிபெயர்ப்பவர்கள் மொழிபெயர்ப்பில் வாசிக்கும்போது சிக்கலை உணர நேரிடலாம். க.நா.சுவின் மொழிபெயர்ப்புகளில் அந்த விதமான சிக்கல்களைக் காணவே முடியவில்லை. மொழிபெயர்ப்பு, மூலத்துக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்கிறது என்பதை யாருமே சோதித்துப் பார்க்கவில்லை. நான் வலிமைப்படுத்த விரும்பும் கருத்து என்னவென்றால் அவருடைய தேர்வுகள் முக்கியமானவை. தேர்வு செய்யும்போது அதைப் பிரக்ஞை பூர்வமாகச் செய்திருக்கிறார். தமிழ் மக்களை, தமிழ் கலாச்சாரத்தை மனதில் வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒட்டக் கூடியதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாய் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து அவர் ஒருவருக்குத்தான் அப்படி ஒரு பார்வை இருந்திருக்கிறது. மற்றவர்களெல்லாம் தங்களுக்கு என்னென்ன சந்தர்ப்பங்கள் வருகிறதோ அவற்றைச் செய்து தருவார்கள். அதற்கான வருமானத்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள். அதை மீறிப் பல விஷயங்களை செய்திருக்கிறார். அவ்வளவு உயர்வாக அவரே கருதாத புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார் என்பது உண்மைதான். அவருடைய வாழ்க்கை அப்படியான நிர்ப்பந்தங்களை அவருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் தனக்கு விருப்பமில்லாத ஒன்றை அவர் எப்போதும் செய்திருக்கவில்லை. இன்னும் நாம் அவரை விரிவாக ஆராய்ந்து பார்த்தால் அதிகக் குறைகள் கண்டுபிடிக்கச் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். எதிர்காலத்தில் அவை வெளிப்படுத்தப்பட்டாலும்கூட மொழிபெயர்ப்புக்கு அவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. அது மட்டுமல்ல, இன்றுவரை அதைத் தாண்டி யாருமே போயிருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

அடுத்ததாக க.நா.சுவின் பங்களிப்பாக நான் கருதுவது அவர் புதுக்கவிதைக்கு ஆற்றியது. ஆரம்பத்தில் பிச்சமூர்த்தி, கு.ப.ரா, வல்லிக்கண்ணன் இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட புதுக்கவிதை இயக்கம் நடுவில் சற்று ஓய்ந்து போய்விட்டிருந்தது. அது இறந்துபோய்விட்டது என்ற எண்ணங்கள் அதை உருவாக்கியவர்களுக்கே கூட இருந்திருக்கின்றன.  தற்செயலாக 1959ல் ந.பிச்சமூர்த்தியின் ‘பெட்டிக்கடை நாரணன்’ கவிதையை செல்லப்பா மறுபிரசுரம் செய்யப்போக, நிறைய பேர் அதைப் பார்த்துவிட்டுப் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்கள். அந்தக் கவிதை அவர்களைப் பாதித்தது என்று சொல்வதைவிட, அது வெளியான காலத்தில் இளம் படைப்பு மனங்களில் புதிதாக ஒன்றைச் செய்ய  வேண்டும் என்ற எண்ணமும் எப்படிச் செய்வது என்று தெரியாத தத்தளிப்பும் இருந்தன. சமுதாயத்துக்குப் புதுவிதமான கவிதை தேவையாக இருந்தது. பாரதிதாசன் மறைந்த பிறகு எழுத்து தோன்றுவது வரை எழுதப்பட்ட கவிதைகளை இன்று நாம் படிக்கவே முடியாது. கவிதையை உண்மையாக நேசிக்கக் கூடியவனுக்கு கவிதை இல்லாமல் இருந்தது. ஒருவித வறட்சி ஏற்பட்ட நேரத்தில் வழி திறந்துவிட்ட விஷயத்தைத்தான் எழுத்து செய்தது.

இந்தச் சூழல் இப்படியாக உருவாவதற்கு முன்னால் இது சம்பந்தமான ப்ரக்ஞையோடு க.நா.சு. இருந்திருக்கிறார். இது முக்கியமானது. செல்லப்பாவைவிட க.நா.சு. அதிக பிரக்ஞையோடு இருந்திருக்கிறார் என்பதற்குப் பல ஆதாரங்களைச் சொல்ல முடியும். முதன்முதலாகப் புதுக்கவிதை என்ற வார்த்தை அவர் மூலமாகத்தான் உருவாக்கப்பட்டது. அவர் அதை New Poetry என்று சொல்லிவந்தார்.என்று நினைவு. New Poetry வேண்டும் என்று அவர் சொன்னபோது நான் சொன்னேன், ‘எனக்குப் பழைய கவிதைகளில் புலமை இல்லை. என்னால் அதுபோல் கவிதை எழுத முடியாது என்று தோன்றுகிறது. கவிதை எழுத முடியாமல் இருப்பதுதான் என் இயல்புபோல் தெரிகிறது. கதை, நாவல் மட்டுமே என்னால் எழுத முடியும் என்று நினைக்கிறேன்’ என்றேன். உடனே அவர் ‘புதுக்கவிதை எழுத மிகவும் தேவையான அம்சமே அதுதான். பழைய கவிதையில் புலமை இல்லை. உரைநடைதான் எழுதமுடியும் என்று சொன்னாயே அதைப் பாதகமான அம்சமாகப் பார்க்கத் தேவையில்லை. புதுகவிதைக்குத் தேவையான அம்சமே அதுதான். நீ எழுதிப் பார்க்கலாம்’ என்றார். நான் அவர் சொன்னவற்றால் அதிக ஊக்கம் பெற்றுவிடவில்லை. என்னைப் பாராட்டுவதற்காக சொல்வதாக நான் நினைக்கவும் இல்லை. ஏனெனில் அவர் அப்படி உற்சாகப்படுத்தக்கூடியவரும் அல்ல. ஆனால், அவர் சொன்ன விஷயங்கள் என் மனதில் இருந்ததால்தான் என் முதல் கவிதையை ‘உன் கை நகம்’ எழுதியிருந்தேன். ‘பசுவய்யா’ என்ற பெயரில் எழுதினேன். க.நா.சுவுக்கு நான் எழுதியது என்று தெரியக்கூடாது; அவர் தன்னளவில் இந்தக் கவிதையைப் படித்துவிட்டு எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். எனவே செல்லப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் இதை எழுதியது நான்தான் என்பதை யாரிடமும் தெரிவிக்கவேண்டாம் என்று எழுதினேன். அவரும் யாருக்கும் தெரிவிக்கமாட்டேன் என்று பதில் எழுதியிருந்தார். அவர் அப்படிச் சொல்லிவிட்டாரென்றால் அதன் பிறகு தன் மனைவியிடம் கூடத் தெரிவிக்கமாட்டார் என்பது உறுதி. அந்தக் கவிதை பிரசுரமானதுக்கு அடுத்த எழுத்துவில் க.நா.சுவின் ஒரு கடிதம் பிரசுரமாகியிருந்தது. அதில் பெரும்பாலும் எழுத்து பற்றிய விமர்சனமே அதிகமாக இருந்தது. அந்த இதழில் ந.பியின் சில கவிதை மொழிபெயர்ப்புகள் – கலீல் ஜிப்ரானுடையவை- வெளியிடப்பட்டிருந்தன. அவை புதுக்கவிதையே அல்ல என்று க.நா.சு. எழுதியிருந்தார். ’40-50 வருடங்களுக்குப் பிறகு, யாப்பை உடைத்ததில் பிச்சமூர்த்திக்கு இருக்கும் பங்கு புதுக்கவிதை உருவாக்கத்தில் இருக்கிறதா என்ற சந்தேகம் இன்று புதுக்கவிதை வாசகர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் இருக்கிறது. ஒருவேளை அவர்கள் மனதில் இருக்கிறதோ இல்லையோ என் மனதில் எழுந்திருக்கிறது’ என்று எழுதியிருந்தார். அதோடு என்னுடைய கவிதையைக் குறிப்பிட்டு பசுவய்யாவின் கவிதைதான் புதுக்கவிதையின் உதாரணமாக இருக்கிறது என்ற அர்த்தத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நம்பி, நான் எழுதியிருந்தது கவிதையே இல்லை என்றான். ரொம்பவும் வறட்சியாக இருக்கிறது. இது எப்படிக் கவிதையாக முடியும் என்று கோபித்துக்கொண்டிருந்தான். நானே ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டுதான் அதை அனுப்பியிருந்தேன். நான் எழுதியது என்பது தெரியாத நிலையில் அதைக் க.நா.சு. பாராட்டியிருந்தது நானும் தொடர்ந்து கவிதை எழுதலாம் என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது.

சிறுகதை எழுதவோ, நாவல் எழுதவோ அவருடைய தூண்டுதல் எனக்குத் தேவையாக இருந்திருக்கவில்லை. நான் அதற்கு முன்பே எழுதவும் செய்திருந்தேன். என் சிறுகதை பற்றிய அவரது அபிப்ராயம் என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது. ‘ஒரு புளியமரத்தின் கதை’யைப் பற்றி நிறைய பேர் கண்டுகொள்ளாமல் இருந்த நேரத்திலும், சிலர் அது பற்றி உயர்வாக சொன்ன நேரத்திலும் க.நா.சு. அதுபற்றி சொன்ன அபிப்ராயங்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தன.  அழகிரிசாமி ரொம்பவும் பாராட்டிச் சொல்லியிருந்தார். என்றாலும் மிகையாக உற்சாகப்படுத்தும் குணம் இயல்பாகவே அவரிடம் உண்டு என்பதால் அவரது வெளிப்பாட்டை அப்படியே நான் எடுத்துக்கொண்டிருக்கவில்லை. ஆனால் அவருடைய பேச்சில் அடிப்படையாக இருந்த உண்மை உணர்வை மட்டும் எடுத்துக்கொண்டிருந்தேன். க.நா.சு. சிறுகதை, நாவல் பற்றி சொன்ன விஷயங்கள் எனக்கு உற்சாகத்தைத் தந்திருந்தன என்றாலும் கவிதை எழுதுவதற்கு அவரது பாராட்டுதல் தந்த உற்சாகம்தான் காரணமாக இருந்தது என்றுகூடச் சொல்லலாம்.