துருவ நட்சத்திரம் – பழநி சுப்ரமணிய பிள்ளை – மதிப்புரை

“ஸொகஸுகா ம்ருதங்க தாளமு” என்று தொடங்குகிறார் தன் ஸ்ரீரஞ்சனி ராக கீர்த்தனையை, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகைய்யர். இதே கருத்தை அவருக்குமுன்னர் புரந்தரதாஸரும் “தாள பேக்கு தக்க மேள பேக்கு” என்று முன்மொழிந்தார். நம் மரபிசை கச்சேரிகளில் சங்கீதத்திற்கு உறுதுணையாய் இருக்கவேண்டிய தாளபக்கவாத்தியங்களில் முதன்மையானது மிருதங்கம்.

சென்ற நூற்றாண்டில் அரியக்குடியார் வகுத்த கச்சேரி அமைப்பு பிரபலமாகிவருகையில், முப்பதுகளிலிருந்து அடுத்த சுமார் முப்பது வருடங்களுக்கு மிருதங்கத்தில் முழங்கியவர்கள் இருவர். ஒருவர் பாலக்காடு மணி அவர்கள். மற்றொருவர் பழனி சுப்ரமண்யன் அவர்கள். இவரை பற்றிய வரலாற்று அறிமுகமாகவும், தொகுப்பாகவும், மிருதங்க வாத்தியத்தின், வாசிப்பின், நுட்பங்களை அறிமுகம் செய்யுமாறும் அமைகிறது “லலிதா” ராம் எழுதி சொல்வனம் பிரசுரித்துள்ள துருவ நட்சத்திரம் நூல்.

பொறியியல் முதுநிலைபட்டதாதிரியான ராமச்சந்திரன் என்ற இயற்பெயருடைய இளைஞருக்கு, “லலிதா” என்பது பிடித்தமான ராகம். சில வருடங்கள் முன்னர் ஜி. என். பாலசுப்ரமணியன் பற்றி வி. ராமநாராயணனுடன் இணைந்து ஆங்கிலத்தில் “கந்தர்வ கானம்” என்ற நூலை எழுதியுள்ளார். கர்நாடக சங்கீதம் மற்றும் ஓவியக்கலையில் ஆரவாரமின்றி சாதனைகள் நிகழ்த்தியுள்ள, சமீபத்தில் மறைந்த, எஸ். ராஜம் அவர்களைப் பற்றி எஸ். பி. காந்தன் இயக்கிய ஆவணப்படத்திற்கான உள்ளடக்கத்தை ஆய்ந்து வழங்கியுள்ளார். தமிழ் பாரம்பர்யங்களை விவாதிக்கும் வரலாறு டாட் காம் எனும் இணைய சஞ்சிகையில் பங்கேற்கும் கட்டுரையாளர். செறிவான தமிழ் நடையில், சிரத்தையான தகவல் சேகரிப்பில் கட்டமைத்து, நமக்கு இன்று அவசியமான நூல்வகையில், துருவ நட்சத்திரத்தை அளித்துள்ளர்.

“நெக்ஸ்ட், இஸ் எங்கல் கன்னமா, எ பரதியார் ஸாங்” என்று தமிழ்நாட்டிலும் அறிவிக்கும் வித்வான்களில் தொடங்கி, “grt stf yr” என்று செல்பேசியில் வவ்வலின்றி மெச்சிக்கொள்ளும் ரசிகர்கள் வரையிலான கர்நாடக இசையை ஆதரிப்பவர்களில், தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் ஒரு குறைவான பகுதியே. ஒப்புநோக்கினால், இன்றைய நிலையில் கர்நாடக இசையும் ஆங்கிலமும் அறிந்தவர்களைவிட கர்நாடக இசை அறிந்து தமிழ் வாசிக்க அறிந்தவர்கள் குறைவே. மற்றொரு பக்கம், வாசிப்பவர்களே அருகிவருகையில், புத்தகம் என்பது லாபமீட்டும் பண்டம் மட்டுமே என்று கருதும் எழுத்தும் பதிப்பும் தொழில் நடத்தும் இன்றைய சூழல். இந்நிலையில் கர்நாடக இசை பற்றிய நூலை தமிழில் எழுதுவதற்கும் பதிப்பதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். அசட்டுத் துணிச்சல்.

பழநி சுப்ரமண்யத்தின் இடதுகை பழக்கத்தில் தொடங்குகிறது நூலின் தனி ஆவர்தனக் கச்சேரி. கற்பனைச் சித்தரிப்பாய் சென்ற நூற்றாண்டின் முப்பது நாற்பதுகளில் கோலோச்சியிருந்த செம்பை வைத்தியநாத பாகவதருக்கும், உடன் வாசித்துவந்த வயலின் வித்வான் மைசூர் சௌடய்யாவிற்கும், இடது கை மிருதங்க வித்வானான சுப்ரமண்யத்தை மேடையேற்றுவதில் இருந்த கருத்து வேறுபாடுகளையும் (மிருதங்கம் நன்கு ஒலிக்க மேடையில் இடம்மாற்றி உட்கார வேண்டும்), செம்பையின் ஆதரவையும், சௌடய்யாவின் மனமாற்றத்தையும், வரலாற்று சம்பவத்தை சிறுகதை வடிவில் அருமையாய் விவரிக்கிறது. இதற்கு “ஏதோ நேர்ல பாத்தா மாதிரி எழுதியிருக்கான்” என்று என் காதுபட ‘விமர்சனம்’ எழுந்தது. “அசோகர் ரோடு போட்டார், சாலை போட்டார், ரஸ்தா போட்டார்” என்று வரலாற்றை மூன்று மார்க் கேள்விக்கு விடையளிக்கும் வகையில் கற்றறிந்த மகர்களின் கருத்திது எனலாம். வரலாற்றை விவரிப்பதில் சித்தரிப்பின் பங்கை உலகெங்கும் அடுத்த தளத்திற்கு கொண்டுசென்றுவிட்டனர். Dave Barry Slept Here என்று டேவ் பாரியும், An Utterly Impartial History of Great Britain என்று ஜான் ஓ’ஃபாரலும், Comic Century என்று கௌதம் பாட்டியாவும் முறையே அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் உலக வரலாறுகளையே சகட்டுமேனிக்கு பகடியாகவும், எள்ளலுடனும், அதேசமயம் நம்பகமான தகவல் நேர்த்தியுடன் படைப்பூக்கமாக விவரித்த புத்தகங்கள் பிரசுரமாகி பிரபலமடைந்துவருகின்றன. நாமோ பதிவாகியுள்ள கலைஞனின் மனக்குமுறுலைக்கூட தகவலாகத்தான் அணுகுகிறோம்.

“எம். எஸ்.” என்று டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய எம். எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கைவரலாறு போலில்லை இந்நூல். துருவ நட்சத்திரம் கலைஞர்களின் வாழ்க்கை அந்தரங்கங்களை மழுப்பலாகத் கடந்துசெல்லும் பாராட்டுமுகமான வரலாறு. ஆனால் Carnatic Summer என்று வி. ஸ்ரீராம் எழுதி பிரபலமான நூல் போலவும் இல்லை. அத்தியாயத்திற்கு ஒன்றாய் ஸ்ரீராம் அறிமுகம் செய்துள்ள பன்னிரெண்டு கலைஞர்களில் பழநி சுப்ரமணியமும் ஒருவர். அதனால் தகவல்கள் மறுஒலிபரப்பாவது எதிர்பார்க்கக்கூடியதே. ஆனால் துருவ நட்சத்திரம் பழநியின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே பிரதானமாய் தொகுப்பதால் அவர் காலத்திற்கு முன்னும் பின்னும் இருந்த சங்கீத வழிகள், அவரது சிஷ்யபரம்பரை, சார்ந்த நேர்காணல்கள் என்று விரிகிறது.

முழவு, தண்ணுமை, மத்தளம் என்று தொடங்கி தொப்பி, வலந்தலை, அதன் நடுவில் கரணை, என்றெல்லாம் அத்தியாயம் முழுவதும் மிருதங்க வாத்தியம் பற்றி ஆய்வு-அறிமுக நோக்கில் விவரிக்கையில், பாகங்கள் குறித்து இன்றைய வடிவில் மிருதங்க படங்கள் சில வழங்கியிருக்கலாமோ என்று தோன்றுவது என் வாத்தியார் புத்தியின் பழக்கம். ஆனால் அடுத்தடுத்து புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் வழிகள், வழிக்கும் பாணிக்குமான வித்தியாசம் (இசைத்துறையிலும் முன்னோடித்தனம் இருக்கும் படைப்பூக்கமெல்லாம் செழித்துவிடுவதில்லை என்கிற அருமையான விளக்கத்துடன்), மான்பூண்டியா பிள்ளை, தக்ஷிணாமூர்த்தி பிள்ளை, முத்தையா பிள்ளை என்று முன்னோடிகளில் தொடங்கி, செம்பை, ஆலத்தூர் சகோதரர்கள், ஜி.என். பாலசுப்ரமணீயன், மதுரை மணி என்று பழநி அதிகம் வாசித்த வித்வான்கள் என்று அக்காலகட்டத்தின் ஆளுமைகளையும் கச்சேரி சூழலையும் திகைத்து, திளைத்து, பரவசப்படுமளவு நூலாசிரியர் நேர்த்தியாக வெளிக்கொணர்ந்துள்ளார். ஆங்காங்கே களஞ்சியங்களிலிருந்தும், தனி நபர்களிடமிருந்தும் தேடித் தினம் நித்தம் சேகரித்த படங்களையும் கருப்பு-வெள்ளையில் கொடுத்துள்ளது நம் வாசிப்பனுபவத்தை கூட்டுகிறது (ஒரு புகைப்படத்தில் என் தந்தை தன் பெரியம்மா பையனான பழநி சிஷ்யரை அடையாளம் கண்டு ஆனந்தப்பட்டு பழங்கதைகள் பகிர்ந்தார்).

பழநியின் பாணியும் வழியும் என்கிற அத்தியாயம் நிச்சயம் கர்நாடக சங்கீதம் ஓரளவேனும் அறிந்தவர்களுக்கே. அவர்களுக்கே அவ்வத்தியாயத்தின் செழுமை முழுவதும் புரிபடும். சாஹித்தியத்திற்கும், நிரவலுக்கும், ஸ்வரங்களுக்கும், பல்லவிகளுக்கும், தனி ஆவர்த்தனங்களிலும் பழநி வாசிப்பதில் கையாண்ட வித்தியாசங்களையும் நுணுக்கங்களையும் தொப்பி, தேக்கா, மோராக் கோர்வை என்று உபயோகித்து விளக்குவது அறிமுக வாசகர்களுக்கு நிச்சயம் தலைக்கு மேல் `விஷ்க்’. ஏமாற்றமே மிஞ்சும். மிருதங்க வித்வானுடன் அருகில் அமர்ந்து அவர் வாசித்து விளக்கும் பயிலரங்கங்களிலேயே குன்சாகத்தான் புரிபடும். ஆனாலும் `திருட்டுக் குகுணன` போன்ற விஷயங்களை வாசிக்கையில் இசை அறிந்தவர்கள் கண்சிமிட்டி, ஆனந்தமுறுவலிப்பார்கள்.
“இருவரும் பெரும் பெயருடன் விளங்கினர் என்றபோதும் மணி ஐயருக்கு பட்டங்களும் பரிசுகளும் தேடி வந்தன. பழனிக்கோ `சங்கீத கலாநிதி’, `சங்கீத நாடக அகாடமி விருது’ போன்ற விருதுகள் கிடைக்கவில்லை. வெளிப்படையாய்ச் சொல்லத் தயங்கினாலும், தனிப்பட்ட முறையில் பேசும்போது, `பழனி பிராமணரல்லாதவராய் பிறந்ததுதான் இதற்கு முக்கிய காரணம்’, என்று பலர் கூறுகின்றனர். அந்தக்காலத்துச் சூழலை வைத்துப் பார்க்கும்போது இது உண்மை என்றே படுகிறது”. இவ்வாறு குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

கலாநிதி விருது சார்ந்த அக்கால சூழலை பார்த்தால், 1953இல் திருப்பாம்பரம் சுவாமிநாதரில் தொடங்கி 1957இல் சௌடையா வரையிலான ஐந்து கலாநிதி விருதுகளில் ஒருவரே பிராமணர். 1961இலும் நாகஸ்வர வித்வான் திருவிடைமருதூர் வீருசாமி பெற்றார். 1962இல் பழனி நம் உலகை கடந்துசென்றுவிட்டார். அவ்வருடம் வரை பாலக்காடு மணி, பழனி சுப்ரமண்யம் இருவருக்குமே சங்கீத கலாநிதி வழங்கப்படவில்லை. 1966ஆம் வருடமே பாலக்காடு மணி கலாநிதியால் கௌரவிக்கப்பட்டார். அதுவும் அன்றிருந்த விருது சட்டங்கள் தாளவாத்தியங்களுக்கும் வழங்கலாம் என்று திருத்தப்பட்டு அவ்விருதை பெற்ற முதல் மிருதங்க வித்வான் அவர் (அதற்கு அடுத்த வருடமும் (1968) பெண்களுக்கும் வழங்கப்படலாம் என்று மீண்டும் ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டு, எம் .எஸ். சுப்புலட்சுமிக்கு வழங்கப்பட்டதாகக் கேள்வி). பழனி சுப்ரமணியன் துரதிருஷ்டவசமாக நம்மிடமிருந்து விரைவில் மறைந்திராவிடில், சற்று தாமதமாகினும், நிச்சயம் அவருக்கும் கலாநிதி விருது வழங்கப்பட்டிருக்கும். அவருக்கு இல்லையென்றால் அடுத்த சந்ததியின் எந்த மிருதங்கவித்வானுக்கும் வழங்கமுடியாமல் அவ்விருது சிறுமைபட்டிருக்கும். காலம்சென்றவர்களுக்கும் கலாநிதி வழங்கப்படலாம் என்று ஒரு திருத்தம் இன்றாவது வந்தால், அவ்விருதை கௌரவப்படுத்த பெரிய பட்டியலே உள்ளது. திருவாவடுதுறை ராஜரத்தினம், பழனி சுப்ரமணியன் என்று தொடங்கி ராம்னாட் கிருஷ்ணன், தஞ்சாவூர் கல்யாணராமன் என்று ஒவ்வொரு பிராமணரல்லாதவருக்கும் இணையாக ஒரு பிராமணரும் மறுக்கப்பட்டுள்ள பட்டியல் அது. நூலாசிரியர் “(பலர்) வெளிப்படையாய்ச் சொல்லத் தயங்கினாலும்…” என்று கூறுவது உண்மைதானே. வெளிப்படையாக சொல்ல ஆதாரம் வேண்டுமே. கலைஞர்களின் வாழ்வையும் தொழிலையும் பாராட்டுமுகமான வரலாறாய் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய கருத்துபூசல் இது.

சென்ற ஆண்டின் இறுதியில் வெளிவந்ததும் இந்நூல் ஓரளவு வரவேற்பை பெற்றுக்கொண்டிருப்பதை பத்திரிகைகளிலும், இணையை இதழ்களிலும் அறிகையில் மகிழ்கிறேன் என்றாலும், இந்நூலை பாராட்டியுள்ளவர்களை இரண்டு வகையாகக் காண்கிறேன். முதல் வகை இணையச்சூழலில் தமிழ் வாசிப்பவர்கள். பல துறைகளிலும் மேலோட்டமாக ஆர்வமிருப்பவர்கள். ஒரு துறையில் தேர்ச்சிபெற அளிக்கவேண்டிய உழைப்பிற்கான அவகாசமோ அவசியமோ இல்லாதவர்கள். இணைய அவசரங்களிலும், அரட்டை கச்சேரிகளிலும், தங்கள் குரல் கேட்பதற்காகவே சட்டென கருத்துகளை குரலெடுத்துச் சொல்பவர்கள். இவர்களுக்கு அலட்டிக்கொள்ளமல் வாசிக்க இந்நூலில் `அந்தக் காலத்தில்’ எல்லாம் சௌக்கியமாய், நிறைவாய், பரவசமாய் இருந்தது என்பது போன்ற அனுபவப்பகிர்வுகள் ஏராளமாய் கிடைக்கும். உதாரணமாய், ஆலத்தூர் சகோதரர்களுக்கு பழநி வாசித்த கச்சேரியில், தனி ஆவர்த்தனத்தை கேட்பதற்காக, கச்சேரி முடிந்து புறப்பட்டுச் செல்லவேண்டிய ரயில்வண்டியை தன் வேலையே போனாலும் பரவாயில்லை என்று ஆனைதாண்டவபுரத்தில் நிறுத்திவைத்திருந்த ஊழியர் (வாவ், எப்டி ரசிச்சிருக்காங்க, சான்ஸே இல்ல). இவ்வகை சம்பவங்களை மட்டும் வாசித்து, பெருமூச்சடைத்த ஆதங்க பலூனாய் பாராட்டுரைகளை பறக்கவிட்டு, கர்நாடக இசை பற்றிய தங்கள் பற்றையும், ஆர்வத்தையும் விம்மலுடன் வெளிப்படுத்துவது எளிது. மிருதங்கமோ, கர்நாடக இசையோ கடுகளவேனும் தெரிந்திருக்கவேண்டியதில்லை. புத்தகத்தை படித்த பிறகும். இவர்களில் ஒருசிலரேனும் பழநியின் ஆளுமையிலும், நூலாசிரியரின் உழைப்பிலும் கவரப்பட்டு அடுத்த பஸ் பிடித்து இனி வரும் சங்கீத கச்சேரிகளை நிரப்புவார்கள் என்றால் விடிவே.

நூலை பாராட்டியவர்களில் இரண்டாம் வகை கர்நாடக இசை, தமிழ், இரண்டிலும் ஓரளவேனும் தேர்ந்தவர்கள். கர்நாடக இசையை ரேடியோவில் கேட்டு ரசிப்பவர்கள். இன்றைய தொலைகாட்சி, இணைய சூழலிலும், தமிழ் புத்தகம் வாசிப்பதையும் பொழுதுபோக்காய் தொடருபவர்கள். நேரிடையாக பழநியின் வாசிப்பை கச்சேரிகளில் கேட்டு மகிழ்ந்தவர்கள். கச்சேரி சபாக்களில் “கருணாஸ் காபி மஞ்சள் பையில்” குறிப்பேட்டுடன் வந்து எழுபது சதவிகிதம் இருக்கைகளை ஆக்கிரமிப்பவர்கள். அனைவரும் இன்றளவில் எழுபது வயதொத்தவர்கள். இவர்களுக்கு இந்நூல் பல சம்பவங்களையும் பரவசங்களையும் மலரும் நினைவுகளாக்கியுள்ளது. நூலின் ‘கலைமகள்’ தமிழ் நடையும் இதற்கு சாதகம். இவர்களின் பாராட்டுபலன் நூலாசிரியருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கலாம் (நிச்சயம் கொடுக்கட்டும்). கர்நாடக இசையை வரும் தலைமுறைக்கு எடுத்துச்செல்ல பயன்படுமா என்பது என் ஆதங்க சந்தேகம்.
இதோ இந்தக் கட்டுரையை எழுதும் தினத்திலிருந்து இரண்டு தினம் கழித்து பழநி சுப்ரமணியத்தின் மற்றொரு ஆண்டு நினைவுநாள் விழா நடக்கவிருக்கிறது. வேதவல்லியின் கச்சேரியுடன். பழநியின் சிஷ்யபரம்பரையில் வரும் இன்றைய வித்வான் அருண் பிரகாஷ் அழைப்பு விடுத்துள்ளார். துருவ நட்சத்திரம் நூல் வெளியீட்டு விழா நடந்த அதே சென்னை ராக சுதா அரங்கில். பார்க்கத்தானே போகிறேன் அரங்கை நிரைப்பது பெருசுகளின் பரவசமா, சிறிசுகளின் ஆதங்கமா என்று.

வாத்தியம் அதை வாசித்த கலைஞன் பற்றிய தகவல் தொகுப்பா, வரலாற்று ஆய்வா, தேவையான கற்பனைச் சித்தரிப்புகளுடன் புதிய தலைமுறைக்கான வித்வான் அறிமுகமா, இப்படி நூலாசிரியருக்கு குழப்பம் இருப்பதை முன்னுரையில் தெரியப்படுத்துகிறார். ஆய்வு, அறிமுகம், அவதானிப்பு, பாராட்டுரைகள் என்று வகைக்கொன்றான அத்தியாய உள்ளடக்கங்களை காண்கையில் நூல் உள்ளடக்கத்தில் இக்குழப்பத்தை தவிர்க்க முனையாமல் அப்படியே வெளிப்படுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. குறையாகக்கொள்ளவேண்டியதில்லை. அவா சங்கீதம், அவை சங்கீதம், அவ்வை சங்கீதம் என்று ஏதாவது சாக்கில் மரபிசையை ஒதுக்கி “கொலவெறி”யில் மயங்கிக்கிடக்கிறது ஒரு தலைமுறை. மறுபுறத்தில் ஆலாபனையின் முதல் பிடியில் “ஜனரஞ்சனி” என்று ராகத்தையும், மூன்றாவது பிடியில் “படைப்பூக்கம் கம்மி, பூர்ணசந்திரிகா வாடை அடிக்கிறது,” என்று உதட்டை பிதுக்கியும், ஆலாபனையின் வடிவத்தை வைத்தே பாடப்படப்போகும் கீர்த்தனை “ஸ்மரணே சுகமோ” வா, “விடஜாலதுரா” வா என்று சரியாக அனுமானிப்பதிலும் தேர்ந்திருக்கும் முன்னூறு வயதொத்த ரசிகர்கள் குழாம். இடையே சிக்குவது ரசிகானுபவத்தில் முதிர்ச்சிபெற்ற நூலாசிரியரின் குடுமி.

நான்கு வருடங்களாய் தகவல் சேர்த்து ஆய்ந்து தொகுக்கையில், இப்படியாப்பட்ட உன்னத கலைஞனை, பலபரிமாணங்களில், பழநியின் சமகாலத்து ரசிகர்களுக்கும், இசை ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் மட்டுமின்றி, இன்றைய தலைமுறை வாசகிக்கும் கொண்டுசேர்த்து அவளையும் பரிபூரணமாய் திளைக்கச்செய்யவேண்டுமே எனும் நூலாசிரியரின் பரிதவிப்பின் வெளிப்பாடே `இந்நூல் யாருக்கு’ எனும் குழப்பம். “சுப்புடு” என்று அழைக்கப்பட்ட அசாத்தியமான வித்வானான பழநி சுப்ரமண்யனின் ஆளுமையை, மாட்சிமையை, அறிய இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் பெருக்கித் தனித்தனி நூலாய் லலிதா ராமே வெளியிடுவதுதான் தீர்வு.

“துருவ நட்சத்திர”த்தின் பணி நிகழ்காலத்தில் இவ்வகைக் கனவுகள் வடிவமைவதற்கே. அவை பலிதமாவதற்கே வருங்காலம்.

குறிப்பு : இப்புத்தகத்தை இந்த இணையச் சுட்டியின் மூலம் வாங்கலாம் : உடுமலை.காம்

துருவ நட்சத்திரம் – தனி ஆவர்த்தனக் கச்சேரி (புத்தகப் பகுதி) : http://solvanam.com/?p=18173