விருதுகள், பரிசுகள், பதவிகள், அங்கீகாரங்கள்

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமானதும், நேரெதிரானதுமான எதிர்வினை இருப்பதைப் பற்றி ந்யூட்டன் சொல்லி விட்டார். அவர் கவனித்துச் சொல்வதற்கு முன்பிருந்தே அவ்வியற்கை நியதியும் இருந்து வருகிறது. ஒருவிதத்தில் அது இருப்பதற்கு எதிர்வினையாகவே அக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது என்றும் கூறலாம்.

பௌதிக விஷயங்களில் போலவே உளவியலிலும் இது நடக்கும் என்று நம்பப்படுகிறது. பௌதிகமும், உளவியலும் பற்பல விகிதங்களில் கலந்ததாகவே ஒவ்வொரு கணமும் அமைந்து விடுவதால் ஒரு வினையில் அல்லது எதிர்வினையில் பௌதிகம் எவ்வளவு உளவியல் எவ்வளவு என்பது கண்டடைய கடினமான ஒன்று. நொடியின் கோடித்துகள்களில் பலவினைகள், எதிர்வினைகள் நடந்து விடுகின்றன.

விளையாட்டு, கலை, இலக்கியம், அரசியல், சமூக சேவை என்று மனித நடவடிக்கைகள் இருக்கும் பல்வேறு துறைகளிலும் நேரடியான மற்றும் மறைமுகமான அங்கீகாரங்கள் அளிக்கப்பட்டவாறே உள்ளன.

இதில் அளவற்ற மகிழ்ச்சிகள், எண்ணற்ற குறைகூறல்கள் எதிர்வினையாக வெளிப்படுத்தப்பட்டவாறேயும் இருக்கின்றன.

bharat-ratna

பாரத் ரத்னாவிலிருந்து, கலைமாமணி வரை பலர் நம்மிடையே உலா வருகிறார்கள். ‘நொபெல்’ பரிசிலிருந்து, ‘சாஹித்ய அகாடமி’ பரிசு வரை, ‘விம்பிள்டன்’ கோப்பையிலிருந்து, பள்ளிகளில் தரப்படும் சோப்பு டப்பாவரை. பணமுடிப்பு, பட்டயம், சான்றிதழ் இவை தவிர மக்கள் அளிக்கும் பட்டங்கள், தானே சூடிக் கொள்பவை, விளிகள், வியப்புகள் இத்யாதி.

ஒரு விளையாட்டு இரண்டு குழுவினருக்கிடையில் நடக்கையில் இருவருக்கும் ஒரே மாதிரி சட்ட திட்டங்கள் அனுசரிக்கப் பட வேண்டும். இயற்கை, உடல் வலு, சீதோஷ்ணம், உபயோகிக்கப் படும் கருவிகள், மற்றும் பொருட்களின் தன்மை போன்றவை மாறியபடி இருந்தாலும் சட்ட திட்டங்கள், விதிகள், வாய்ப்பு அனைத்தும் சம அளவில் இருந்தால்தான் போட்டியும், முடிவும் நியாயமாக நடந்ததாகச் சொல்லமுடியும். கிரிக்கட் மாட்சில் இந்தியாவுக்கு ஒரு ஓவருக்கு 6 பந்துகள் என்றால் இங்கிலாந்துக்கும் அதேதான். அப்போதுதான் அது போட்டி. இல்லவிட்டால் அது அநியாயம்.

எண்ணிக்கைகளில் அடங்கக் கூடிய சமாச்சாரங்கள் உள்ளன. இலக்கியம், ஓவியம், நாடகம், சினிமா போன்றவற்றில் அளவு சமாச்சரமே இல்லை. ஒருவருக்கு அகிலன் பிடிக்கும்; ஒருவருக்கு கல்கி, ஒருவருக்கு புதுமைப் பித்தன். இந்தியாவின் மார்லன் ப்ராண்டோ, தமிழகத்தின் சத்யஜித் ராய், தென்னாட்டு பெர்னாட் ஷா போன்ற ஒப்பீடுகளும் பெரும்பாலும் இனப்பாசத்தாலும், உணர்ச்சி பூர்வமான பற்றாலும் விஷய ஞானம் இல்லாமலேயே மொழியப்பட்டு, ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.

தனிப்பட்ட பிடித்தங்கள், சார்புகள், காழ்ப்புகள் தேர்வு, ஆதரவு, எதிர்ப்பு எல்லாவற்றையும் கறைபடுத்துகின்றன. நாஞ்சில் நாடனின் கும்பமுனி தனக்கு ஏன் ஒரு விருதும் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணங்களைப் பட்டியலிடுவார். நான் முற்போக்கு இல்லை, பிராமணன் இல்லை என்று அது போகும். லா.ச.ரா. தனக்கு அரசாங்கத்தின் அங்கீகாரம் எதுவும் கிட்டாததற்கு தான் பிராமணன் என்பது காரணம் என்பார். இரண்டும் அவர்களைப் பொறுத்தவரை உண்மை. ஆனால் அடிப்படை உண்மை பரிசுகளுக்கும், விருதுகளுக்கும் ஜாதி ஒரு அளவுகோலாகி இருக்கும் துரதிருஷ்டம். எல்லாவற்றையும் எதிர்க்கவும், ஆதரிக்கவும் நமக்குத் தெரியும். வரதட்சணை, பால்ய விவாஹம் எல்லாவற்றுக்கும் ஆதரவான வாதங்கள் உள்ளன. எந்த வழுவலையும், வழுக்குதலையும், திரிப்பையும் தர்க்க ரீதியாகவோ, அசுர பலத்தாலோ ஆதரிக்க, நியாயப் படுத்த முடியும்.

சமீபத்தில் கர்நாடக சட்டசபையில் அமைச்சர் மொபைல் ஃபோனில் ‘போர்னோகிராஃபி’ பார்த்தார் என்பது முதல் பக்கச் செய்தி. இதில் எது தவறு? ஒருவேளை பக்தி படம், அல்லது காந்தி அல்லது அம்பேத்கர் திரைப்படம் என்றால் அது ஒகேவா? அல்லது சட்டசபை நேரத்தில் வேறு ஏதோ ஒன்றை செய்து கொண்டிருந்தார் என்பதா? ‘கண்டேன் காதலில்’ (ஜப் வி மெட் டின் தமிழ்) சந்தானத்திடம் அவர் சகோதரி “வெள்ளிக் கிழமையும் அதுவுமா ஓடிப் போயிட்டாளே’ என்று தன் மகளைப் பற்றிக் கூறியதும் அவர் “ அப்ப சனிக்கிழமை ஓடிப்போனா பரவாயில்லையா? “ என்பார். அது மாதிரி.

சரி அப்போ ஆபீஸ் நேரத்தில் சங்கராச்சாரியாரை அல்லது வீரமணியைப் போய்ப் பார்ப்பது, ஷேர் மார்க்கட் செய்வது, பத்ரிகை படிப்பது, ‘கேம்ஸ்’ விளையாடுவது, காய்கறியிலிருந்து எல்லாம் வாங்குவது, சினிமாவுக்குப் போவது, இலக்கியம் படிப்பது, அறம் பற்றி பேசிக் கொண்டே இருப்பது இன்னபிற எதில் சேர்த்தி?

இலக்கிய விருதுகளில் ஆதரவும், எதிர்ப்பும் கூடவே வருபவை. ஒரு எழுத்தாளரை விரும்புபவர்கள், விரும்பாதவர்கள் இருவரும் இருக்கவே செய்வர். ‘எனக்குப் பிடிக்கிறது, உனக்கு’ என்பதே விமர்சனமாய் மலர்கின்றது அல்லது வளர்கின்றது. பிடித்தலுக்குக் காரணங்களை ஆராய்கையில், அல்லது பிடிக்காமைக்குக் காரணங்களை ஆராய்கையில் விமர்சனம் நிகழ்கிறது. இதிலும் பெரும்பாலும் ‘ச்ப்ஜெக்டிவ்’ உணர்வுகள் வழி நடத்துகின்ற்ன.

தேர்வில் கடைபிடிக்கப்படும் உயர்தரமான, கடுமையான சட்டங்களும், நடுநிலைமை விழையும் மரபும், நீதிபதிகளின் நேர்மையும் ஒரு போட்டியின் முக்கியத்துவத்தையும், விருது / பரிசு / அங்கீகரத்தின் அப்பழுக்கற்ற தன்மையையும் நிலை நாட்டுகின்றன. இதனாலேயே ‘விம்பிள்டன்’ போட்டியில் வெல்வதும், ‘ம்யூசிக் அகாடமி’யில் பாடுவதும் உயரியனவாக கருதப்படுகின்றன. இளைய ராஜாவின் ரசிகராக செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயர் இருப்பதும், டார்க்கவ்ஸ்கியின் ரசிகராக பெர்க்மன் இருப்பதும் அர்த்தம் மிக்கவையாவது இதனாலயேதான்.

பொருளாதாரத்தில் பெரிதும் பேசப்படும் ‘சப்ளை’யும் ‘டிமாண்டு’ம் இதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. என்ன ‘குறைந்து கொண்டே வரும் ஆர்வ விதி’ பல இடங்களில் செல்லுபடியாவதில்லை. பதவி என்பது இந்த விருதுகளிலேயே வலு மிகுந்தது. நேற்றுவரை பிரபலமாக இராத அகிலேஷ் யாதவ் இன்று இந்தியாவின் மாபெரும் மாநிலமான உத்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர். அவர் தந்தை முலாயம் சிங் யாதவ், தான் அமர வேண்டிய அரசுக் கட்டிலில் மகன் அமர வழி செய்தார். இதைப் பார்த்தவுடன் “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று பொருமும் குரலொன்றும் தமிழகத்தில் கேட்கிறது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரரின் கால்களை இறுகப் பிடித்து அவர் நாற்காலியை நெருங்கவிடாமல் செய்யும் இன்னொருவரும் அதே டயலாக்கை “வடக்கு வழ்கிறது; தெற்கு தேய்கிறது தமிழ் நாட்டுக்குள்ளும்” என்று முனகுகிறார். இறந்த பிறகும் சிவலோகப் பதவி அடைபவர்கள் நம்மிடையே உண்டு. “ப’சித்திரு, த’னித்திரு, வி’ழித்திரு என்ற வார்த்தைகளில் உள்ள முதல் எழுத்துகள்தான் ‘பதவி’ என்று தொடர்ந்து சொல்லி பல பதவிகளைப் பெற்றவர்களும் உண்டு. பெரும்பாலும் பதவிக்கு அலையாதவர்கள் இல்லை. சில விதி விலக்குகளையும் காண்கிறோம்.

தேச விடுதலையின்போது மகாத்மா காந்தி பிரதமராக ஆகியிருக்கலாம். அவர் வாழ்க்கை அதற்கன்று என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

கவர்னர்-ஜெனரலாக இருந்த ராஜாஜியே ஜனாதிபதியாக வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் முதற்கொண்டு பலரும் விழைகையில் வட இந்தியர் ஒருவர் வர வேண்டும் என்கிற குழுவுக்கு அதிக வலு இருந்தது. அரசியல் வட்டாரங்கள் இந்த உஷ்ணத்தில் பலரைத் தவிக்க வைத்துக் கொண்டிருந்தபோது ஒரே ஒருவர் மட்டும் இது எதிலும் சிக்காமல், இதைப் பற்றிய நினைப்பு கிஞ்சித்தும் இல்லாமல் எப்போதும் போல் விச்ராந்தியாக இருந்திருக்கிறார். அவர்தான் ராஜாஜி. இதை பிமனேஷ் சாடர்ஜீ என்னும் வங்காளி ‘ராஜாஜியுடன் ஆயிரம் நாட்கள்’ என்கிற நூலில் பதிவு செய்துள்ளார்.

jeyakanthan6ஜெயகாந்தனுக்கு சாஹித்ய அகாடமி, ஞானபீடம் கிடைக்காத காலத்தில் அவர் அதைப் பொருட்படுத்தி காயவுமில்லை; காய் நகர்த்தவும் இல்லை. கிடைத்தபின்னரும் ‘செல்ஃப் கான்ஷியஸ்’ஸாக எதுவும் செய்யவில்லை. அவரது 60 வயது நிறைவின்போது சென்னை தேனம்பேட்டை காமராஜ் அரங்கில் ஒரு விழா நடந்தது. அரங்கு உள்ளும், வெளியும் நிரம்பி வழிந்தது. அப்போது பேசுகையில் தனக்கு அளிக்கப்பட்ட பண முடிச்சு பற்றி குறிப்பிட்டு “இதை என்ன செய்வேன்? குப்பையில் போடுவேன்; குப்பை என்றால் ‘பாங்க்’ என்றார். தன்னை கௌரவித்தவர்களை மனம் நெகிழ்ந்து தான் இதற்குத் தகுதியா என்றெல்லாம் ஒரு வார்த்தை பேசவில்லை. “ஏன் தமிழர் அனைவரும் இந்தி கற்க வேண்டும்’ என்பது பற்றி, மேடையில் அமர்ந்திருந்த மத்திய அமைச்சர் நெளியுமாறு பேசினார். இறுதியில் “மூலவரை வணங்கினால் அனைத்து கோவில் விக்கிரகங்களையும், சன்னதிகளையும் வணங்கிய மாதிரி, எனவே மூப்பனாருக்கு நன்றி” என்று முடித்தார். மறுநாள் தினசரிகளில் “நேற்று யாருக்கும் நான் சரியாக நன்றி சொல்லவில்லை. அனைவருக்கும் உளமார்ந்த நன்றி’ என்று அவர் சொன்னதாக செய்தி வெளியாகி இருந்தது.

‘இவ்வருட துக்ளக் ஆண்டு விழாவில் பா.ஜ.க. தலைவர் அத்வானி “சோவை ஒன் மேன் க்ரூஸேடர்” என்று புகழ்ந்ததை “ அத்வானிக்கா நகைச்சுவையும் அங்கதமும் வராது? பாருங்கள் நான் ஒற்றை ஆள். என் பின் ஒருவர் கூட இல்லை, வரமாட்டார்கள் என்பதை எப்படிச் சொல்லிவிட்டார்” என்றுதான் சோ அதை ஏற்றுக் கொண்டார்.

காமராஜர் முன்னிலையில் அவரைப் புகழ்ந்து மேடையில் பேசினால், அவர்களை இடைமறித்து சொல்ல வந்த விஷயத்தைப் பேசச் சொல்லி விடுவாராம். நாஞ்சில் நாடனிடம் அவர் கதை மிகவும் நன்றாக இருக்கிறது என்று யாராவது சம்பிரதாயமாகப் பேச ஆரம்பித்தால் அவர் பேச்சை மற்றி வெறெதையோ பேச வைத்து விடுவார். தான் சொன்னது அவர் காதில் விழுந்ததா என்பதே சந்தேகமாகிவிடும் சொன்னவருக்கு.

‘ஹ்யுமிலிடி’ என்பது பயிற்சியால் வருவதல்ல. அது இதயத்தின் மலர்ச்சி. அதற்கு அங்கீகாரம் தேவையில்லை. அது கைதட்டல்களுக்குக் காத்திருப்பதில்லை. தானாகக் கிடைப்பதையும், கோவிலில் தரும் திருநீறைத் தட்டி விட்டு தன் ‘நம்பிக்கையின்மை’யைப் பறை சாற்றிக் கொள்வதைப்போல், அது கேவலப்படுத்துவதில்லை.

அதற்காக அங்கீகரங்களை பொருட் படுத்தாதவர்கள்தான் உத்தமர்கள் என்றில்லை. அங்கீகாரத்தின் அர்த்தமின்மையை உணர்ந்தவர்களை கிடைக்கையிலும் அது தொந்திரவு செய்வதில்லை,. இந்தப் பின்னணியில் தங்கள் முன்னாலேயே தங்களைப் போற்றிப் புகழ்பவர்களை பல அரசியல் தலைவர்கள் புன்னகையோடு பார்த்து ரசிப்பது நமக்கே சங்கோஜமாக இருக்கிறது.

சார்த்தர் நோபல் பரிசை வேண்டாம் என்றார். டால்ஸ்டாய், காந்திக்கெல்லாம் எந்த விருதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. பாரதிக்கும்தான். சில விருதுகளின் விலை 15,000 ரூபாய் என்று ஒரு நண்பர் சொன்னார். சில பரிசுகளுக்காக பழம், பணத்தட்டுகளோடு தப்பான ஆளிடம் அவரும் நீதிபதிகளிலொருவர் என்று எண்ணி போனவர்களின் கதைகளும் உலவி வருகின்றன.

இதற்கெல்லாம் மத்தியில் எழுத்துலகத்தில் ‘என்றென்றும் வாசகனா’க இருப்பதில் உள்ள இன்னுமோர் அனுகூலத்தை எண்ணி நான் மட்டற்ற மகிழ்ச்சியுறுகிறேன். அது சிறந்த வாசகர் பரிசு யாரும், இதுவரை வழங்கியதாகத் தெரியாததுதான்.

அது நடக்கும்வரை எனக்கும் ஒரு தொந்தரவும், அறச்சிக்கலும், தர்ம தேவதையோடு வாக்குவாதமும் இல்லை.