20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 25

இங்கிலாந்து நாட்டில் ஓவிய நிகழ்வுகள்

‘ப்லூம்ஸ்பரி’ குழுவினரின் படைப்பாற்றலும் செயற்பாடும்:

‘ப்லூம்ஸ்பரி’ (Bloomsbury) இயக்கத்தின் உறுப்பினர் பற்றிய, அதன் பெயர் பற்றிய அனைத்துமே இன்று சர்ச்சைக்குள்ளாகின்றன. ‘ப்லூம்ஸ்பரி’ இயக்கத்தின் தொடக்க காலத்தில் எழுத்தாளர் வெர்ஜீனியா வுல்ஃப் (Virginia woolf), E.M.ஃபோர்ஸ்டர் (E.M.Forster), (எழுத்துத் துறையில் -புதினம், வாழ்க்கை வரலாறு, பொதுக் கட்டுரைகள் என்பதாக அறியப் பட்டவர்) ஜான் மேனார்ட் கெயின்ஸ் (John Maynard Keynes பொருளாதார சிந்தனையாளர்), ஓவியர்கள் வனெசா பெல் (Vanessa Bell), ரோஜர் ப்ஃரை (Roger Fry), டன்கன் க்ரான்ட் (Duncan Grant), கலை இலக்கிய, அரசியல் விமர்சகர்கள் லிட்டன் ஸ்ட்ராச்கே (Lytton Strachey) டெஸ்மோன்ட் மெகார்த்தி (Desmond MacCarthy), க்ளெய்வ் பெல் (Claive Bell), லியொனார்ட் வுல்ஃப் (Leonard Woolf) ஆகியோர் இணைந்து செயற்பட்டது இன்று உறுதியாகியுள்ளது.

01-bloomsbury-group‘ப்லூம்ஸ்பரி’ இயக்கம் பெரும்பாலும் ஒரு குடும்பத்தையே சுற்றியிருந்தது. உறுப்பினர் பலரும் அக்குடும்பத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர். அவரவர் தேர்ந்தெடுத்தத் துறையில் பின்னர் அவர்கள் பெரும் புகழ் பெற்றாலும் தொடக்கத்தில் அங்கு நிலவிய உறவு என்பது சமுதாய ஒழுக்கங்களுக்கு ஒவ்வாததான, எப்போதும் கண்டனங்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது. ஓரினச் சேர்க்கையும், கட்டுப்பாடில்லாத படுக்கைப் பகிர்வும் அவர்களிடையே இயல்பானதாக இருந்தது.

வனெசா பெல் (Vanessa Bell), வெர்ஜீனியா வுல்ஃப் (Virginia woolf) இருவரும் சகோதரிகள். தோபி ஸ்டீபஃன் (Thoby Stephen) ஆட்ரியன் ஸ்டீபஃன் (Adrien Stephen) இருவரும் அவர்களின் தம்பிகள். இந்தக் கலை இலக்கிய இயக்கமும் சிந்தனையும் தோன்றக் காரணமான குடும்பம் அது. பெற்றோரின் மறைவுக்குப் பின்னர் அக்குடும்பம் லண்டனில் ப்லூம்ஸ்பரி பகுதிக்கு இடம் பெயர்ந்து வசிக்கத் தொடங்கியது. இரு சகோதரிகளுக்கும் கல்வி என்பது இல்லத்திலேயே அமைந்தது. தனது கல்லூரி நாட்களில் (1899) தோபி ஸ்டீபஃனுக்கு லிட்டன் ஸ்ட்ராச்சி (Lytton Strachey) க்ளெய்வ் பெல் (Claive Bell), லியொனார்ட் வுல்ஃப் (Leonard Woolf) போன்றோருடன் நெருக்கமான நட்பு உருவாயிற்று. அனைவருமே வசதியான நடுத்தர வருவாய்க் குடும்பங்களிலிருந்து வந்தவர்தான்.

‘தோபி’ தனது சகோதரிகளை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த, அதன் தொடர்ச்சியாக அவர்கள் நண்பனின் இல்லத்துக்கு வருவது என்பது தொடர் நிகழ்வாயிற்று. அவர்கள் இல்லத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழன் மாலையில் ‘தோபி’யின் பொறுப்பில் இலக்கிய படைப்பாளிகளும், வாசகர்களும் கூடி இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபட்டனர். அவ்விதமே வெள்ளிக் கிழமைகளில் வெனசாவின் பொறுப்பில் ஓவிய நண்பர்கள் அங்கு சந்தித்தனர். ‘தோபி’யின் அகால மரணம் அவர்களிடையே நிலவிய நட்பையும் நெருக்கத்தையும் மேலும் ஆழமாக்கியது. அதன் விளைவாக, வனெசா க்ளைவ் பெல்லையும் (1907), வர்ஜீனியா லியொனார்ட் வுல்ப்ஃஐயும் (1912) மணம் செய்து கொண்டனர்.

1910 இல் ஓவியரும் கலை வரலாற்று வல்லுனருமான ரோஜர் ப்ஃரை (Roger Fry) அந்த கூட்டத்தில் இணைந்தது அதன் நிகழ்வுகளை விரிவாக்கியது. அவர் ‘ஒமேகா ஒர்க்ஷாப்ஸ்’ (omega workshops) என்னும் கைவினப் படைப்புகளுக்கான கடையை வனெசா, டன்கன் க்ரான்ட் இருவரையும் பங்குதாரராக இணைத்துக் கொண்டு தொடங்கினார். அவர்கள் கலைநயம் கூடிய விதத்தில் ஆடை, அணிகலன், இருக்கை விரிப்புகள், மேசை, அமர்வுகள், மர இருக்கைகள், பூங்கிண்ணங்கள் போன்றவற்றை உருவாக்கி விற்பனை செய்தனர். இயக்கத்தின் ஓவிய உறுப்பினர் ஒப்பந்த முறையில் அவற்றைப் படைத்தனர். வருமானத்தின் லாபம் சமமாகப் பிரித்துக்கொள்ளப்பட்டது.

09-omega-workshops10-omega-workshops

கல்லூரி நாட்களிலேயே அவர்களில் பலர் ‘கேம்பிரிஜ் அபோஸ்தல்’ (Cambridge Apostles) என்று பெயர் கொண்ட மாணவர்களின் ரகசிய அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தனர். ஒழுக்கம் சார்ந்த கோட்பாடுகளில் உள்ளார்ந்த அணுகு முறை என்பதே சரியானது என்றும், சமுதாயம் பின்பற்றும் மதம் சார்ந்த அர்த்தமற்ற பழமைகளை ஒதுக்க வேண்டும் என்றும், சீர்திருத்தச் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டனர். முதலாளித்துவமும் அரசு ஈடுபட்ட போர்களும் அவர்களுக்கு உடன் பாடாக இருக்கவில்லை. மனச்சாட்சிப்படி நடப்பது என்பதும் பின்பற்றப்பட்டது. பெண்களுக்கு ஓட்டுரிமை என்று குரலெழுப்பி அரசுடன் விரோதத்தை ஏற்படுத்திக் கொண்டது ‘ப்லூம்ஸ்பரி’ இயக்கம்.

இவ்விதம் பல தளங்களில் தங்கள் சிந்தனைகளை கொண்டு சென்ற அவ்வியக்கத்தை முதல் உலகப் போர் உடைத்துப் போட்டது. அவர்களில் யாரும் போரில் பங்கேற்கவில்லை. அவர்களிடையே தாராளமயம், பொதுவுடமை சார்ந்த கொள்கைப் பிரிவுகள் இருந்தன. என்றாலும் போரும் அதனால் தோன்றிய அமைதியின்மையும் தங்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டதை எதிர்ப்பதில் ஒன்றாக இருந்தனர். 1916 இல் வனெசா குடும்பம் ‘ப்லூம்ஸ்பரி’ யிலிருந்து ‘சஸெக்ஸ்’ பகுதியில் உள்ள சார்ல்ஸ்டன் (Charleston) பண்ணை வீட்டிற்குக் குடி பெயர்ந்தது.

போர் அவர்களது இயக்கத்தை சிதைத்தபோதும் அதன் சிந்தனை என்பது உறுப்பினர்களால் தனித்தனியே எடுத்துச் செல்லப்பட்டது. E.M. ஃபார்ஸ்டர் (E.M. Forster) தனது புதிய புதினத்தை (‘மௌரிஸ்’ “Maurice”) ஓரினச் சேர்க்கையை மையமாக வைத்து படைத்ததால் அச்சேற்ற முடியாமல் அவதிப்பட்டார். அவரது மரணத்துக்குப் பின்பே அது பதிப்பிக்கப்பட்டது. வெர்ஜீனியா வுல்ஃப் தனது முதல் நாவலை 1915 இல் கொணர்ந்தார். 1917 இல் ‘வுல்ஃப்’ தம்பதியர் ‘ஹோகார் ப்ரஸ்’ (Hogarth Press) என்ற பெயரில் அச்சகம் ஒன்றை தொடங்கினர். அதில் டி..எஸ். எலியட் (T.S.Eliot), காத்தரின் மான்ஸ்ஃபீல்டு (Katherine Mansfield) போன்றோரின் புதினங்களும் எஸ்.ஃப்ராய்ட் (S.Freud) இன் அங்கில மொழியாக்கங் களும் பதிப்பிக்கப்பட்டன.

மார்ச் மாதம் 1920ஆம் ஆண்டில் மோலி மகார்த்தி, டெஸ்மொண்ட் மகார்த்தி (Molly MacCarthy, Desmond MacCarthy) இருவரும் தங்கள் இளமைக்கால ப்லூம்ஸ்பரி நினைவுகளை வரலாற்று நூலாக்க முற்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ‘மெமுவார் க்ளப்’ (“Memoir Club”) என்னும் பெயரில் ஒரு அமைப்பைத் தொடங் கினர். அது ‘ப்லூம்ஸ்பரி’ இயக்கத்தின் மற்ற நண்பர்களையும் ஒன்றிணைக்கவும் உதவியது. தாங்கள் எழுதியதை ஒருவருக்கொருவர் படித்துக் காட்டிக் கொண்டு இளம் பிராயத்து நினைவுகளை அசைபோடுவது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது. அடுத்த முப்பது ஆண்டுகள் அவர்களின் சந்திப்பு இடைவெளிகள் கொண்டதாக இருந்தபோதும் 1964இல் ‘க்லீவ் பெல்’ (Claive Bell) காலமாகும்வரை தொடர்ச்சியாக நிகழ்ந்தது. வெர்ஜீனா அவ்வப்போது மனநிலை பிழர்வதும் மீள்வதுமாகவே வாழ்ந்தார். அதுவே அவர் நீரில் மூழ்கித் தற்கொலை செய்து கொள்ளக் காரணமுமாயிற்று.

இன்றும் ‘ப்லூம்ஸ்பரி’ படைப்பாளிகளின் உறவு, விமர்சனம், படைப்பு உத்தியில் புதுமை, அரசியல் நோக்கு, அரூபம் சாராத ஓவியப் படைப்புகள் போன்றவை சர்ச்சைக்குள்ளாகின்றன. எனினும், இந்த இயக்கம் கலை / இலக்கிய உலகிற்கு அளித்திருக்கும் பங்களிப்பு மிகவும் சிறப்பானது என்பதில் எவ்வித ஐயமும் ஏற்படாது.

‘ப்லூம்ஸ்பரி’ ஓவியர்களில் மூவரைப் பற்றி குறிப்பிடுவது அந்த இயக்கத்தின் செயற்பாடு பற்றின தெளிவைக் கொடுக்கும்.

வனெசா பெல் (Vanessa Bell)

02-adeam-eve-by-vanessa-bell03-spring-vanessa

ஓவியர், இல்லங்களை அலங்கரிப்பவர் (Interior Designer) ‘ப்லூம்ஸ்பரி’ குழுவின் தோற்றத்துக்குக் காரணமானவர்களில் ஒருவர். புகழ்பெற்ற நாவல் ஆசிரியை, பெண்ணியச் சிந்தனையாளர், வாழ்க்கை வரலாறு எழுதுபவர், விமர்சகர் என்பதாகப் பல தளங்களில் இயங்கிய ‘வெர்ஜினியா வுல்ஃப்’ (Virginia woolf) இவரது இளைய சகோதரி. இருவருமே தொடக்கப் பாடங்களை வீட்டிலேயே கற்றனர். வனெசா ஓவியப் படிப்பை ‘ராயல் அகாடமி’ (Royal Academy) பள்ளியில் முடித்துப் பட்டம் பெற்றார்.

பெற்றோரின் மறைவுக்குப் பின்னர் குடும்பம் ‘ப்லூம்ஸ்பரி’ பகுதிக்குக் குடியேறியது. அதன்பின்னர்தான் அவர்களுக்கு எழுத்தாளர், ஓவியர், சிந்தனையாளர் போன்றோருடன் தொடர்பு கிடைத்து உறவாக மலர்ந்தது. இயக்கம் தோன்றவும் அதுதான் காரணமாயிற்று.

அவரது திருமணம் 1911 இல் க்ளெய்வ் பெல்லுடன் (Claive Bell) நிகழ்ந்தது. ஆனால் இருவரும் மற்றவரின் ஒப்புதலுடன் வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு காதலர்களுடன் வாழ்ந்தனர். இரண்டு ஆண் குழந்தைகளுக்குப் பிறகு அவர்கள் பிரிந்து வசிக்கத் தொடங்கினர். என்றாலும் க்ளெய்வ் வாரம் ஒருமுறை தனது பிள்ளைகளைக்காண வந்து கொண்டிருந்தார். தேவையானபோது பொருளுதவியும் செய்தார். இருவரின் நட்புக்குத் தடையேதும் இருக்கவில்லை. ‘டன்கன் க்ரான்ட்’ (Duncan Grant) என்னும் ஓவியருடன் ‘வனெசா’வுக்கு ஒரு பெண் பிறந்தது. அதை ‘பெல்’ தான் பெற்றதுபோல் சீராட்டி வளர்த்தார். அவளுக்கு 19 வயதாகும் வரை உண்மையான தந்தை யார் என்பது அவளிடமிருந்து மறைக்கப்பட்டது. வனெசாவின் காதலர்களில் ஓவியரும் கலை வரலாற்று ஆசிரியருமான ‘ரோஜர் ப்ஃரை’ (Roger Fry) ஒருவர். ஆங்கில கலை உலகில் ‘வனெசா’ வின் பங்களிப்பு மிகவும் சிறப்பித்துப் பேசப் படுகிறது.

‘ரோஜர் ப்ஃரை’ (Roger Fry)

04-by-roger-fry06-self-portrait-roger-fry

05-verginia-woolf-by-roger-fryஓவியரும் கலை வரலாற்று ஆசிரியரும், விமர்சகருமான ‘ரோஜர் ப்ஃரை’ ‘ப்லூம்ஸ்பரி’ வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவரும்கூட. லண்டன் நகரில் பிறந்த அவர் கல்லூரிப்படிப்பை ‘கிங்ஸ் கல்லூரி -கேம்பிரிட்ஜ் (Kings College – Cambridge) இல் முடித்தபின் இத்தாலி, பாரிஸ் நகரம் சென்று ஓவியப் படிப்பை முடித்து ஒரு ‘நிலக் காட்சி’ (Landscape) ஓவியராகப் பரிமளித்தார். ‘ஹெலன்’ என்னும் ஓவியரை 1896 இல் மணம் புரிந்து இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையானார். ஆனால் அவர் மனைவி ஒரு மன நோயாளியாகிவிட அவரை மனநல இல்லத்தில் சேர்க்க நேர்ந்தது. ஹெலன் தனது வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தார். குழந்தைகளின் எதிர் காலம் ‘ரோஜர்’ பொறுப்பாயிற்று.

‘வனெசா பெல்’ இல்லத்தில் வெள்ளிக்கிழமை கூட்டத்தில் அவர் ஓவிய வரலாறு பற்றி உரை நிகழ்த்தினார். அதன் தொடர்ச்சியாக அவர் அந்தக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டார். இயக்கத்தின் உறுப்பினராகவும் இடம் பெற்றார். ‘வனெசா’ வின் பார்வை அவர்மீது விழவே இருவரும் நெருக்கமாக பழகத் தொடங்கினர். ஆனால், விரைவில் ‘வனெசா’ வின் மனம் ஓவியர் ‘டன்கன் க்ரன்ட்’ வசம் திரும்பிவிட்டது. என்றாலும் அவர்களது நட்பு இருக்கமாகவே இருந்துவந்தது. அது அவரது மரணம்வரை தொடர்ந்தது.

ஒரு படைப்பில் கருப்பொருள், அது அமையும்விதம் பற்றிய அவரது பார்வை தெளிவாக இருந்தது. அவர், ‘ஓவியன் தனது படைப்பில் வண்ணக் கோர்வை, கட்டமைப்பு இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, கற்பனையை வெளிப் படுத்தவேண்டும். ஓவியம் இயற்கையை மட்டும் பிரதிபலிக்கும் விதமாக இருந்து விடக்கூடாது. அதை வைத்து ஓவியத்தின் சிறப்பை முடிவு செய்யவும் கூடாது’ என்று வலியுறுத்தினார்.

அவர் ஓவியம் பற்றித் தொடர்ந்து பல புத்தகங்கள் எழுதினார். அவற்றில் ”விஷன் அண்டு டிசைன்” (Vision and Design) 1920, “ரிஃப்லெக்ஷன்ஸ் ஆன் பிரிடிஷ் ஆர்ட்” (Reflections on British Art) 1934 இரண்டும் மிகவும் சிறப்பாகப் பேசப் படுபவை. ‘மந்த்லி ரிவ்யு’ (Monthly Review), ‘த ஆந்தனேயம்’ (The Athenaeum) போன்ற இதழ்களில் அவரது கலைக் கட்டுரைகள் தொடர்ந்து வந்தன. 1903 இல் நுண்கலைகளுக்கான மாத இதழ் “பர்லிங்டன் மேகஸைன் (Burlington Magazine) தோன்றக் காரணமானவர்களில் அவரும் ஒருவர். 1909/18 களுக்கு இடையில் அதன் இணை ஆசிரியராகவும் பணி புரிந்தார். அதன் பரவலான புகழுக்குக் காரணமானார். 1900 களில் அவர் கலை வரலாற்று ஆசிரியராக ‘ஸ்லேட் ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ (Slade School of Fine Arts-London) பள்ளியில் பணிபுரிந்தார். ‘ஓமேகா வொர்ஷாப்ஸ்’ அவரது மற்றொரு படைப்புத் தளத்துக்கு எடுத்துக்காட்டு. 1933இல் கேம்ப்ரிஜ் பல்கலைக் கழகத்தில் அவருக்குப் பேராசிரியர் பதவி கிடைத்தது. மாணாக்கர்களுக்குக் கலை / வரலாறு தொடர்பான கட்டுரைகளை எழுதினார். ஆனால் அது முற்றுப் பெறும் முன்னரே அவரது மரணம் சம்பவித்து விட்டது. பின்னர் அவை “கடைசீ சொற்பொழிவுகள்” (Last Lectures) என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தது. அவரது சவப்பெட்டியை ‘வெனசா’ ஓவியங்களால் அலங்கரித்தார்.

டங்கன் க்ரான்ட் (Duncan Grant)

08-autumn-landscape-by-dgrant

ஓவியர், அரங்க வடிவமைப்பாளர், ஓவியங்களைப் பிரதியெடுத்தல் (Print making), புத்தகங்களுக்கான கோட்டோவியம் (Illustrations) என்பதாகப் பல துறை களில் புகழ் பெற்று 93 வயது வாழ்ந்தவர் ‘டங்கன் க்ரான்ட்’. தனது இளமைக்கால பாரிஸ் வாழ்க்கையில் ‘வனெசா’, ‘வெர்ஜீனியா’ தம்பதிகளை அவர்களது சகோதரர் களுடன் சந்தித்த அவர் லண்டன் நகரம் மீண்டபின் ‘ப்லூம்ஸ்பரி’ வாராந்திர மாலைக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொண்டார்.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடுகொண்ட அவர் ‘டேவிட் கார்னெட்’ என்பவருடன் வாழ்ந்து வந்தார். ‘வனெசா’ வின் அன்பு கிட்டிய பின்னரும் அது தொடர்ந்தது. மூவரும் ஒரே இல்லத்தில் வசித்தனர். அவர்களிடையே எந்த முரண் பாடும் இருக்கவில்லை. ‘டன்கன் வனெசா’ (Dunkan Vanessa) உறவு ஐம்பது ஆண்டுகள் அறுபடாமல் தொடர்ந்தது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை (1918) பிறந்தது. அவளது 19ஆவது வயது வரை அவளது உண்மையான தந்தை யார் என்பது அவளிடமிருந்து மறைக்கப் பட்டது. க்ளெய்வ் பெல் (Cleave Bell) தான் தனது தந்தை என்று நம்பிய அவளுக்கு உண்மை தெரிந்தபோது பெரும் மன அதிர்ச்சி ஏற்பட்டது. அவள் தனது “அன்புடன் ஏமாற்றப்பட்டேன்” (Deceived with Kindness)” என்ற வரலாற்றுக் கட்டுரை நூலில் (Memoir) அவற்றைப்பற்றி விரிவாக எழுதுகிறாள். பின்னர் ‘டேவிட் கார்னெட்’டைத் தனது கணவனாகத் தேர்ந்தெடுத்தது பெற்றோர் களை பழிவாங்கும் நோக்கத்தோடு தான் செய்யப்பட்டது.

அவர் ‘ஒமேகா ஒர்ஷாப்ஸ்’ நிறுவனத்தில் கூட்டுப் பங்குதாரராகச் செயற்பட்டார். இப்போது சௌத் பேங்க் யுனிவெர்சிடி (South Bank University) என்று அறியப்படும் கட்டிடத்தில் ஓவிய நண்பர்களுடன் இணைந்து சுவர் ஓவியங்கள் படைத்தது அவரது முதல் ஓவியப் பொறுப்பாகும், அவரது தனி மனிதர் ஓவியக்காட்சி (Solo show) 1920இல் வைக்கப்பட்டது. அது முதல் அவரது ஓவியங்கள் தொடர்ந்து குழுக் காட்சிகளில் இடம் பெற்றன. ‘வெனசா’ ‘டன்கன்’ இருவரும் இணந்து சுவரோவியங்கள் படைத்தனர். அது மிகவும் சிறப்பாகப் பேசப்பட்டது. தனது மரணம்வரை (1978) அவர் ஓவியங்கள் படைத்த வண்ணம் இருந்தார்.

(வளரும்)