சீனாவின் நிஜமான மக்கள் புரட்சி

அய் வெய்வெய் (Ai Weiwei) என்ற சீன நவீன ஓவியர், சீன அரசாங்கத்தின் திரைமறைவுச் செயல்பாடுகளையும், கருத்து சுதந்திரம் என்பது அந்நாட்டில் சந்திக்கும் இடர்பாடுகளையும் குறித்துத் தொடர்ந்து குரலெழுப்பியபடியே இருந்தார். அரசை விமர்சித்ததற்காக சிறையில் தள்ளப்பட்டிருக்கும் நோபல் பரிசு பெற்ற கருத்துப் போராளியான லீ ஜியாபெள-க்கு ஆதரவாக அய் வெய்வெய் பேசியது சீன அரசை எரிச்சல்படுத்தியது. அதன் காரணமாக ஏப்ரல் 2011-இல் அய் வெய்வெய் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டபின் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என அவர் குடும்பத்தினருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டாலும், பொதுவில் அவர் வரி ஏய்ப்பு செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார் என்று காரணம் சொல்லப்பட்டது. அய் வெய்வெய் ஏற்கனவே உலகெங்கும் நன்கறியப்பட்ட ஓவியராக இருந்ததால், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் தீவிரமான எதிர்ப்புக்குரல்கள் எழுப்பப்பட்டன. சொல்வனத்தில் இது குறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. சீனாவிலிருந்து வெளியேறிய கலைஞர்கள், போராளிகள் பலரும் இணையதளங்களில் அய் வெய்வெய் விடுதலைக்காகப் போராட்டங்கள் நடத்தினர். ஜூன் மாதம் அய் வெய்வெய் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் விடுதலைக்காக 12 மில்லியன் யுவான்கள் பணம் வரி ஏய்ப்புக் குற்றத்துக்காக அரசுக்குச் செலுத்தவேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

தொடர்ந்து சீனாவின் பல இணைய தளங்களில் பொதுமக்கள் திரளான ஆதரவை அய் வெய்வெய்க்கு வழங்கினர். பல நடுத்தர வர்க்கத்து மக்கள் தங்கள் சேமிப்பிலிருந்த பணத்தை அய் வெய்வெய்யிடம் கொடுத்தனர். இது சீனாவின் அடக்குமுறை அரசுக்கு எதிராக மக்கள் நடத்தும் ஜனநாயகப் புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. பலரிடமிருந்தும் சேகரித்த பணத்தைக் கொண்டு அய் வெய்வெய் அபராதத்தொகையைக் கட்டினார். சமீபத்தில் ஜெர்மனியின் பத்திரிகை, டெர் ஷ்பீகல் இதழுக்கு அய் வெய்வெய் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதன் மொழிபெயர்ப்பு இங்கே.

image-285441-galleryv9-ujdf

நான் வெட்கப்படுகிறேன்

ஷ்பீகல்: நீங்கள் சீன வரி அமைப்புகளின் வங்கிக் கணக்கில் சென்ற வாரம் 1.3 மில்லியன் டாலர்கள் செலுத்தியுள்ளீர்கள். அதை ஒரு டெபாசிட்டாக, ஒரு உத்தரவாதமாக நீங்கள் கருதுகிறீர்கள். இதனால் நீங்கள் உங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டதாக அரசு கருதுகிறதா?

அய் வெய்வெய்: அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நான் சொல்ல முடியாது. ஆனால் வரித்துறையினரும், காவல்துறையும் என்னை எந்த அளவுக்குக் கட்டாயப்படுத்தினார்கள் என்பது பற்றி நான் நிறைய சொல்ல முடியும். நாங்கள் பணம் செலுத்தியாக வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார்கள். எங்களை மிகவும் கட்டாயப்படுத்தினார்கள். ஏதாவது கட்டணம் செலுத்து, உனக்குப் புரிய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் நான் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை.

கடைசியில் நீங்கள் பணம் கட்டினீர்கள் என்பது அவர்களுக்கு ஒரு வகையில் வெற்றிதானே?

அதைத்தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. நீ பணம் கட்டாவிட்டால் நாங்கள் உன் வழக்கை பப்ளிக் செக்யூரிட்டி ஆபீசுக்குக் கொண்டு செல்வோம், அங்கு நீ கிரிமினல் குற்றச்சாட்டுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொன்னார்கள். சட்டப்படி பார்த்தால், முதலில் பணம் கட்டியபின்தான் மேல்முறையீடு செய்ய முடியும்.

நீங்கள் வரி ஏய்ப்பு செய்ததாகச் சொல்கிறார்களே, அதற்கான ஆதாரம் எதையாவது அவர்கள் உங்களுக்குக் காட்டினார்களா?

இல்லை. அதுதான் கேவலமாக இருக்கிறது. நான் அரசியலில் ஈடுபட்டதால்தான், நான் அதிகாரத்தில் இருப்பவர்களை விமரிசித்ததால்தான், அவர்கள் என்னைச் சிறையில் அடைத்தார்கள். அதன்பின் என்னை சிறையில் வைப்பதற்கான சாக்கு, எனது ‘வரிப் பிரச்சினையாக’ மாறியது. ஆனால் அதெல்லாம் வெளியாட்களுக்காகத்தான், உள்ளே என்னிடம் அதைப்பற்றி எதையுமே அவர்கள் பேசவில்லை. நான் அவர்களுடைய புத்திசாலித்தனத்தைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. ஆனால் அவர்கள் செய்த வேலை முட்டாள்தனமானது என்றுதான் நான் இன்றும் நம்புகிறேன். ஒருவகையில் அவர்களது செயல் ஒரு முரண்நகைப் பார்வையில் எனக்கு உதவுவதாகவே இருந்தது. இந்த அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்குவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அவர்கள் எனக்கு இதற்கான மேடையை அமைத்துக் கொடுத்தார்கள்.

உங்களுக்கு விதிக்கப்பட்ட வரித்தொகை குறித்து நீங்கள் செய்திருக்கும் மேல்முறையீடு வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறதா?

ஏறத்தாழ சாத்தியமே இல்லை. அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் பற்றி சீனா விவாதிப்பதே கிடையாது. அதற்கு பதிலாக எப்போதும் அவர்கள் வேறு குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தித் தண்டிக்கிறார்கள். கலாசாரப்புரட்சி காலத்திலிருந்தே இதுதான் வழக்கமாக இருக்கிறது, இன்றும் அது தொடர்கிறது. ஆனால் நாம் வெளிப்படையாக இருப்பதுதான் இப்படிப்பட்ட சர்வாதிகார சமுதாயத்துக்கு எதிரான வலுவான ஆயுதமாக இருக்கும். அதனால் என் விஷயத்தில் நாங்கள் இணையத்தில் வெளிப்படையாகச் செயல்படுகிறோம். ஒவ்வொரு விபரத்தையும், ஒவ்வொரு மாற்றத்தையும் மக்கள் முன் வைக்கிறோம். பொதுவில் எல்லாவற்றையும் வைத்தபின், மக்களே சரி-தவறுகளை முடிவு செய்துகொள்ளலாம். ஆக, நாங்கள் நீதிமன்றங்களுக்கு வெளியே எங்கள் வழக்கை நடத்துகிறோம். இதுதான் நியாயம், இதுதான் நீதி என்று நான் நினைக்கிறேன். இதுவே ஒரு குடிமைச் சமூகமாக இருக்கும். எல்லாமே ஒளிவுமறைவாக இருப்பதைக் கொடிய சமூகம் (evil society) என்றுதான் அழைக்க வேண்டியிருக்கும்.

உங்களுக்கு நிதியுதவி வழங்கி ஏராளமான சீன மக்கள் பிரமிக்கத்தக்க தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனர். பலர் தனிப்பட்ட வகையில் தங்கள் கருத்துகளையும் வழங்கியுள்ளனர். உங்கள் மனதைத் தொட்ட வகையில் அவற்றில் எதுவாவது உண்டா?

ஆயிரக்கணக்கான உள்ளத்தைத் தொடும் குறிப்புகள் இருந்தன. ‘வெய்வெய், நீங்கள் யாரென்று எங்களுக்குத் தெரியும், நாங்கள் எங்கள் பணத்தை வாக்குச் சீட்டாகப் பயன்படுத்துகிறோம்,’ என்று ஒரு பதிவர் கூறியிருந்தார். இன்னொருவர், ‘எனக்குப் பதின்மூன்று வயது, அவர்களால் நம்மைத் தோற்கடிக்க முடியாது என்பதற்கு ஆதாரம் இது,’ என்று எழுதியிருந்தார். “இது என் ஓய்வுத் தொகை – எடுத்துக் கொள்ளுங்கள்”, என்று சிலர் சொல்லிருந்தனர். ‘இது நான் காலணி (shoes) வாங்குவதற்காக வைத்திருக்கும் காசு, எடுத்துக் கொள்ளுங்கள்,’ என்று சிலர். இது போன்ற விஷயங்களைப் பார்ப்பதும் கேட்பதும் எனக்கு மிகவும் அவசியமாக இருந்தது. பொதுவாக வலைப்பதிவில் எழுதும்போது இது போன்ற நேசத்தை, வேடிக்கையை, அக்கறையை, தாராள மனப்பான்மையைப் பார்க்க முடிவதில்லை.பொதுவாக வலைப்பதிவு எழுதுவது என்பது ஒரு இருண்ட குகையில் நடப்பது போன்ற ஒன்று, தனித்து விடப்பட்டது போன்று உணர்வைத் தவிர்க்க முடியாது.

CHINA-AIWEIWEI

அய் வெய்வெய்க்குப் பொதுமக்கள் செய்திருக்கும் நிதி உதவி

நீங்கள் சீன மக்களை குறைத்து மதிப்பிட்டு விட்டீர்களா?

ஆமாம். அதற்காக நான் வெட்கப்படுகிறேன். நவீன வரலாற்றில் சீன மக்கள் மண் துகள்களைப் போல ஒற்றுமையில்லாமல் இருக்கிறார்கள் என்று நான் மட்டுமல்ல, பலரும் நினைத்தார்கள். ஆனால் இந்த இணைய யுகத்தில் ‘மண் துகள்கள்’ என்பது ஒரு நேர்மறை உவமை என்று நான் நினைக்கிறேன். நாம் கூட்டமாகக் கூடி நமது ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டியதில்லை. நீங்கள் தனி மனிதனாக இருக்கலாம். உங்களுக்கென்று தனிப்பட்ட விழுமியங்களைக் கொண்டவராக இருக்கலாம். இருந்தாலும் சில குறிப்பிட்ட போராட்டங்களில் மட்டும் மற்றவர்களோடு இணைந்து போராட முடியும். இதைவிட ஆற்றல் மிகுந்தது எதுவும் இல்லை. இணையத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைத் தனிப்பட்ட முறையில் தெரியாது, அவர்களுக்குப் பொது தலைமை கிடையாது, சில சமயம் ஒரு பொது அரசியல் குறிக்கோளும் இருப்பதில்லை. ஆனால் சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்காகப் போராட ஒன்று சேர்கிறார்கள். நான் இதை ஒரு அதிசயமாக நினைக்கிறேன். இது போல் கடந்த காலத்தில் இருந்ததில்லை. இணையம் இல்லாமல் நான் இன்று அய் வெய்வெய்யாக இருக்க மாட்டேன். நான் எங்கோ ஓரிடத்தில் நிகழ்ச்சிகளை நடத்தும் ஓவியனாக மட்டும் இருந்திருப்பேன்.

சீன மக்கள் தங்கள் அரசை விமரிசிப்பவர்களுக்கு இவ்வளவு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதில்லை. ஆனால் வழக்கத்துக்கு மாறாக உங்கள் விஷயத்தில் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

அநீதி இருக்கும்போதெல்லாம் பதற்றம் நிலவுகிறது. சீனாவில் உங்கள் கோபத்தைத் தணித்துக்கொள்ளவேண்டுமென்றால், தீக்குளிக்கவேண்டும் அல்லது பாலத்திலிருந்து குதிக்க வேண்டும். வேறு வடிகால்களே இல்லை. பத்திரிகை சுதந்திரம் இல்லாத சமூகத்தில், பாதிக்கப்பட்டவர்கள் கவனம் பெறுவது கடினம். நேற்று நடந்ததையே உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளுங்களேன்: நான் சிஎன்என்னுக்குத் தொலைபேசியில் நேர்முகம் தந்திருந்தேன். அதன்பின் திடீரென்று, சிஎன்என் ஒளிபரப்பு ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. என் தொலைகாட்சிப் பெட்டி முழுமையாக மௌனமானது. எனக்கு அது முதல் அனுபவம். கடவுளே, நான் பேட்டி கொடுத்ததால்தான் இப்படி நடக்கிறதா, என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்! என்று நான் நினைத்தேன். எந்த ஒரு நாட்டில் இப்படி நடக்கும்? ஒருவேளை க்யூபா, வட கொரியா, சீனா. ஆனால் அவர்களுக்கு என்னதான் வேண்டும், அவர்கள் எதைப் பார்த்து பயப்படுகிறார்கள்?

நீங்கள் இதை எப்படி விளக்குவீர்கள்? ஏன் நீங்கள் அவர்களுக்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறீர்கள்?

உண்மைதான். நான் உண்மைக்காகப் போராடுகிறேன். இந்த மாதிரியான எந்திரங்களுக்கு அதுவே மிகப்பெரும் அச்சுறுத்தல். அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தபின் அவர்கள் மீண்டும் ஒரு தலைமறைவு கட்சியாக மாறி வருகின்றனர், அவர்கள் இப்போது ஒரு ரகசிய இயக்கம். வெளிப்படையாக எதையும் விவாதிப்பதில்லை. கேள்விகளுக்கு பதில் தருவதே கிடையாது. ஆணை பிறப்பிப்பதுடன் சரி, பெரும்பாலும் ரகசிய ஆணைகள். ஆனால் அவர்கள் இருக்கும் இடத்துக்கு இது பொருத்தமானதல்ல. எண்பது மில்லியன் மக்கள் கொண்ட ஒரு கட்சியை வைத்திருக்கிறார்கள். இந்த தேசத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். சீனா ஒரு வளரும் வல்லரசு. இருந்தாலும் ஏன் இவர்கள் இப்படிக் கூசுகிறார்கள்? வெளிப்படையாக இவர்கள் பேச முடியாமல் எது இவர்களைத் தடை செய்கிறது? அதுதான் கேள்வி. யாரிடமும் இதற்கு விடை கிடையாது.

குறிப்பாக உங்களை ஏன் இப்படி குறி வைக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

நானும் இந்தக் கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொள்கிறேன். நான் எப்படி இந்த அரசின் முதன்மை எதிரியாக உருவானேன்? நான் சிறையில் இருந்தபோதும் கூட அவர்கள் திரும்பத் திரும்ப இந்தக் கேள்வியைத்தான் கேட்டார்கள்: அய் வெய்வெய், நீ இன்று இப்படி இருக்கக் காரணம் என்ன? என் பதில் இதுதான்: முதலாவதாக, நான் மறக்க மறுக்கிறேன். என் பெற்றோர், என் குடும்பம், அவர்களது தலைமுறையினர், எனது தலைமுறையினர் – இவர்களெல்லாம் கருத்து சுதந்திரத்தைப் பெறும் போராட்டத்தில் மாபெரும் தியாகங்கள் செய்துள்ளனர். ஒரு வாக்கியம் அல்லது ஒரு சொல்லுக்காக பலர் மரணமடைந்துள்ளனர். அதற்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும். தனது கடந்தகாலத்தை எதிர்கொள்ள அஞ்சும் தேசத்துக்கு எதிர்காலம் கிடையாது. நான் கேள்விகள் கேட்கத் துவங்கினேன். சிச்சுவான் நிலநடுக்கத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இறந்தனர். யார் அவர்கள்? ஷாங்காய் நகரில் இருந்த உயர்மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். யார் அவர்கள்? இந்த எளிமையான கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என்று கேட்டேன். ஒரு கலைஞனாக நான் விவரணைகளை விரித்துக் காட்டப் பழகியவன், மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் அதைச் சொல்லத் தெரிந்தவன். இணையம் ஒரு வலுவான சக்தியாக இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும், இதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

China Ai Weiwei

டிவிட்டரைப் போன்ற மைக்ரோப்ளாகிங் தளமான சினா வைபோவில் உள்ள உங்கள் குறும்பதிவு முடக்கப்பட்டு, மீண்டும் அனுமதிக்கப்பட்டது இல்லையா?

அது வேறு பெயரில் மீண்டும் திறக்கப்பட்டது. இருந்தாலும் குறும்பதிவு திறக்கப்பட்டவுடனேயே ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடரத் துவங்கினர். இவர்கள் எங்கள் தீவிர அபிமானிகள். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் என் குறும்பதிவுகள் தன் தளத்திலிருக்க சினா வைபோ அனுமதித்தது. அந்த சமயத்தில் நாங்கள் எங்கள் வங்கிக் கணக்கை அதில் இணைத்தோம். சினா வைபோ அதை அறிந்திருந்தது, ஆனால் மேலிடத்திலிருந்து உறுதியான உத்தரவு வரும்வரை அதை நீக்க யாரும் தயாராக இல்லை.

அரசால் சகித்துக் கொள்ளப்படும் குறும்பதிவுத் தளமான சினா வைபோ, சீனாவில் வளர்ந்து வரும் ஜனநாயக இயக்கத்தின் மேடையாக அமைந்துள்ளதா?

வேறு மாற்று இல்லாததால்தான் இந்த நிலை. தொழில்நுட்பத்தின் கூர்முனையை இழக்க சீனா விரும்பவில்லை. டிவிட்டருடன் போட்டி போட சினா வைபோ என்று ஒன்று வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால், அதற்கு கருத்து சுதந்திரம் என்ற சமூக ஊடக ஆன்மா கிடையாது. சினா வைபோ இருப்பதற்காக சீன அரசு வருத்தப்படுகிறது. ஆனால் அவர்களால் அதை இழுத்து மூட முடியாது. அது சந்தேகத்துக்கிடமில்லாமல் தற்கொலைக்கொப்பான காரியமாக இருக்கும்.

இப்போது ஏன் இந்த அரசு புதிதாக மிரட்டத் துவங்கியுள்ளது என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் விடுதலை பெற்றதும் அமைதியாக இல்லாததற்கு உங்களைப் பழி வாங்குகிறார்களா?

எனக்கு அவர்களுடைய நோக்கங்கள் தெரியவில்லை. என் விஷயத்தில் அவர்கள் செய்து முடிக்காமல் மிச்சம் வைத்திருக்கும் வேலைகள் ஏதோ இருக்கவேண்டும். அவர்கள் அவமானப்பட விரும்பவில்லை.

கடந்த மாதங்களின் நிகழ்வுகள் உங்களை உங்கள் தாய் நாட்டுடன் பிணைப்பதாக இருந்திருக்கின்றனவா, அல்லது உணர்வுபூர்வமாக நீங்கள் அதனிடமிருந்து அன்னியப்பட்டதாக உணர்கிறீர்களா?

இளைய தலைமுறையினர் என்னைப் பெருவாரியாக ஆதரிப்பதை என்னால் பார்க்க முடிகிறது. நான் சாலையில் நடந்து செல்லும்போதும் உணவகத்தில் இருக்கும்போதும் மக்கள் என்னிடம் வந்து, “நாங்கள் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா? நீங்கள் கையொப்பம் இட்டுத் தருவீர்களா?” என்று கேட்கின்றனர். வேறு சிலர் தங்களது இறந்த மகளின் புகைப்படத்தை எப்பாடு பட்டும் என்னிடம் காட்டி, நீ எங்களுக்கு ஆதரவாக இருப்பாயா என்று கேட்கின்றனர். நான் அவர்களுக்குத் தரும் பதில் இதுதான்: நான் எப்படி உங்களுக்கு ஆதரவாக இருக்க முடியும்? நிச்சயம் என்னுடைய தார்மீக ஆதரவு உங்களுக்கு உண்டு. ஆனால் நான் உங்களுக்கு ஆதரவாக இருக்க முடியாது, நீங்கள் எனக்கு ஆதரவு தர முடியாது. இந்த சமூக அமைப்பின் நிலை அப்படி. நாம் தனித்திருக்கிறோம்.

நீங்கள் ஒரு நாள் சீனாவை விட்டு வெளியேறுவீர்கள் என்று இந்த அரசு நினைக்கிறதா?

எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு என்ன வேண்டும்? அவர்கள் நான் இங்கிருப்பதை விரும்புகிறார்களா? நான் வெளியேற வேண்டும் என்று நினைக்கிறார்களா? நான் தூக்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களா? நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? அவர்களுக்கு என்ன வேண்டும் எனத் தெரியவில்லை.

அய் வெய்வெய் அமைதியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் போல.

அது என்னவோ நிச்சயம். நான் பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் விரும்பவில்லை.

நீங்கள் தொடர்ந்து சீனாவில் இருப்பீர்களா?

இது ஒரு கடினமான கேள்வி. ஆனால் நான் எங்கு இருக்கிறேன் என்பது முக்கியமல்ல- சீனா என்னுடன் இருக்கும். இந்தப் பாதையில் நான் இன்னும் எவ்வளவு தூரம் நடக்க முடியும், எது என் எல்லை என்று எனக்குத் தெரியவில்லை.

கடந்த மாதங்களின் அனுபவங்கள் உங்கள் கலையை, கலை குறித்த உங்கள் தீர்மானத்தை எந்த வகையில் மாற்றியுள்ளன?

எது கலை என்பது குறித்த என் தீர்மானம் எப்போதும் ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது. கலை என்பது கருத்து சுதந்திரம் சார்ந்தது. வெளிப்பாட்டுக்கான புதிய வழி அது. கலைக்கூடங்களில் காட்சிப் பொருளாக இருப்பதோ, வெறுமனே சுவற்றில் தொங்குவதோ கலை கிடையாது. கலை மக்களின் உள்ளத்தில் வாழ வேண்டும். மற்ற எல்லாரையும் போல சாமானியர்களாலும் கலை புரிந்துகொள்ளப்பட வேண்டும். கலை என்பது உன்னதமானதோ, மர்மமானதோ இல்லை என நான் நினைக்கிறேன். யாராலும் கலையை அரசியலிலிருந்து பிரிக்க முடியாது என்றும் நினைக்கிறேன். கலையையும் அரசியலையும் பிரித்துப் பார்ப்பதே ஒரு கடுமையான அரசியல் நோக்கமுடைய ஒன்று என்று நான் நினைக்கிறேன். அடிப்படை விழுமியங்களையும் விட்டுக் கொடுக்குமளவுக்கு வெட்கங்கெட்டவர்களை நான் நிச்சயம் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட கலையைப் பார்க்கும்போது நான் வெட்கிப்போகிறேன். சீனாவில் கலையை ஒரு அலங்காரமாகக் கருதுகிறார்கள், அது ஒரு சுய அனுபோகம் (self indulgence). கலை என்ற பாவனை. கலை போல் இருக்கிறது, கலை போல் விற்பனையாகிறது- ஆனால் அது மலத் துண்டு,  அவ்வளவுதான்.

உங்களையும், பிற போராளிகளையும் இந்த இளவேனிற்காலத்தில் அரசு நடத்திய விதம்தான், கடந்த பல ஆண்டுகளில் இழைக்கப்பட்ட மிகக்கடுமையான அடக்குமுறை என மனித உரிமை அமைப்புகள் கருதுகின்றன. இருப்பினும், கடந்த பதினைந்து ஆண்டுகளைத் திரும்பிப் பார்த்தால், சீன குடிமைச் சமூகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கும் காரணம் தொழில்நுட்பம்தான். சீனாவுக்கு உலகின் அங்கமாக தானும் இடம் பெற வேண்டும் என்ற அரைகுறை ஆசை இருக்கிறது. ஒலிம்பிக்ஸ், எக்ஸ்போ போன்றவற்றை அரங்கேற்றி, நாங்களும் உங்களைப் போன்றவர்கள்தான் என்று சொல்ல பெரிய அளவில் முயற்சி செய்தார்கள். சர்வதேச சமூகம் தங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் கருத்து சுதந்திரம், தனிப்பட்ட உரிமைகள் கொண்ட நீதி அமைப்பு போன்ற மேற்கத்திய விழுமியங்களை அவர்கள் மதிக்கவே மாட்டார்கள். ஆனால், இளைய தலைமுறை பணம் சேர்த்து விட்டது, அவர்கள் போட்டியின் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது, அதனால் அவர்கள் மேற்கைப் பெருமளவில் ஏற்கிறார்கள். சீனா முன்னைவிட இப்போது பரவாயில்லாமல் இருக்கிறது. அவர்கள் என்னை எண்பத்து ஒரு நாட்கள் சிறையில் வைத்திருந்தார்கள், ஆனால் என்னைக் கொல்லவே இல்லை. அவர்கள் என்னிடம் தெளிவாகவே சொன்னார்கள், “இது மட்டும் கலாசாரப் புரட்சியாக இருந்திருந்தால், நீ நூறு முறை இறந்திருப்பாய்” என்றார்கள். “நாங்கள் இப்போதே நல்லபடி நடந்து கொள்கிறோம்,” என்றார்கள். அதற்கு நான், “மிக்க நன்றி. நீங்கள் இப்போது பரவாயில்லைதான். ஆனால் நீங்களாக விருப்பப்பட்டு மாறவில்லை. மாறாமல் வாழ முடியாது என்பதால்தான் இப்படி மாறி இருக்கிறீர்கள்” என்று சொன்னேன்.

சீன மக்கள் இப்போது மேலும் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறோம் என்று தெரியும் முன்னரே உரிமைகளுக்குப் போராடத் துவங்கி விட்டனர் மக்கள். தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான விழிப்புணர்வு அவர்களுக்கு கற்பிக்கப்படவே இல்லை. ஆனால் மருத்துவமனையில் இருக்கும் அவர்களுடைய தாய் வெகு நேரம் மருத்துவருக்காகக் காத்திருக்கும்போது, பால் பவுடரால் தங்கள் குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படும்போது, நிலநடுக்கத்தில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து அதில் தங்கள் குழந்தைகள் சாகும்போது, தங்கள் வீடுகள் கட்டாயப்படுத்தி அழிக்கப்படும்போது எதிர்த்துப் பேசுகிறார்கள்.

ஒரு கலைஞனாக உங்களைத் தவிர, மனித உரிமைகளுக்காக முன்னின்று போராடும் சிறப்புக் குழு ஏதேனும் சீனாவில் உள்ளதா?

இரண்டு குழுக்கள் உள்ளன. முதலில் வக்கீல்கள். வழக்கு நடத்திதான் அவர்கள் பிழைத்தாக வேண்டும். இது அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகம் என்று எதிர்த்து நிற்கக்கூடிய வக்கீல்கள் வெகு சிலரே. லியு ஷியாவ்யுவான் (Liu Xiaoyuan) அவர்களில் ஒருவர். நான் கைது செய்யப்பட்டபோது காவல்துறை அவரிடம், நீ அய் வெய்வெய்க்காகப் பேச முடியாது என்று சொன்னது. இன்று அவருக்கு வழக்காட அனுமதி கிடையாது. அவர் மிரட்டப்பட்டார்; அவரது உடைகளைக் கழட்டி அவரை உதைத்தார்கள். அவரை அவமானப்படுத்தினார்கள். அவர்கள் தெளிவாகவே அவரிடம் சொன்னார்கள்: உன் குடும்பம் கஷ்டப்பட வேண்டும்; உன் குடும்பத்தைத் துண்டாடப் போகிறோம் என்று. லியு ஷியாவ்யுவான் எவ்வளவு தைரியசாலியாக இருந்தால் என்ன? அவரால் இதை எவ்வளவுக்குத் தாங்கிக் கொள்ள முடியும்? பல வழக்கறிஞர்களிடம் இது போல் செய்திருக்கிறார்கள். அடிக்கிறார்கள், அச்சுறுத்துகிறார்கள், பின் தொடர்கிறார்கள். குடிமைச் சமூகத்தில் சட்டத்தைக் காப்பாற்ற யாரும் இல்லை என்றால், அது எப்படிப்பட்ட சமுதாயமாக இருக்கும்?

இரண்டாம் குழு?

இதைக் கேட்டால் சிரிப்பீர்கள். அவர்கள் கம்ப்யூட்டர் வல்லுநர்கள் – கணினி தொழில்நுட்பத்தை அறியவும் புரிந்து கொள்ளவும் இவ்வளவு பாடுபட்டவர்கள். ஃபேஸ்புக், டிவிட்டர், யூ ட்யூப் போன்றவற்றை சீனாவில் பயன்படுத்த முடியாது என்று வெறுத்துப் போயிருக்கிறார்கள். நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை முதலில் உணர்ந்தவர்கள் இவர்கள்தான். அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள் எதிர்த்து நிற்பதில்லை. கலைஞர்கள்தான் மோசமானவர்கள். அவர்கள் சுயநலக்காரர்கள், தற்சார்புடையவர்கள். என்ன நடந்தாலும் கவலைப்படாதவர்கள்.

விமர்சகர்கள் மட்டுமல்ல, அவர்களின் உறவினர்களும் துன்பப்படுகின்றனர். லியு சியோபொவின் மனைவி, லியு ஸியா, அவரும் வீட்டுக் காவில் இருக்கிறார். உங்கள் தாயும் மனைவியும் எப்படி இருக்கிறார்கள்?

அவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர். நான் சிறையை விட்டு வெளியே வரும்போது என் அம்மா மிகவும் முதுமையடைந்து விட்டாள். அவளது செவித்திறனும் ரத்த அழுத்தமும் பாதிக்கப்பட்டு விட்டது. இருந்தும் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஒருத்தரைக் காணாமல் போக்கி, அவரது குடும்பத்துக்கு அதைச் சொல்லாவிட்டால் என்ன இது? நீ மனிதர்களை தீவிரமான உளைச்சலுக்கு உட்படுத்துகிறாய், அவர்களை மரணத்துக்கு அருகில் கொண்டு செல்கிறாய். நம் பூனையோ நாயோ தொலைந்து விட்டால், அது எங்கே இருக்கிறது என்று அறிய எவ்வளவு பாடுபடுகிறோம்- மனிதர்கள் காணாமல் போகும்போது அந்த வலியை உன்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. இது எந்த மாதிரியான சமூகம்? என்னைப் போன்ற ஒருவனைக்கூட ஆதரிக்க முடியாதென்ற நிலை வரும்போது ‘யாருக்குத்தான் இந்த நாட்டில் பாதுகாப்பு இருக்கிறது?’ என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அதனால்தான் எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கிறது. நான் அழகாக இருக்கிறேன், வசீகரமாக இருக்கிறேன் என்பதால் அல்ல. இவன் எனக்காகப் போராடுகிறான் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

சிறையில் இருந்த நினைவுகள் திரும்பும் சிறப்பு கணங்கள் உண்டா?

ஒவ்வொரு நொடியும். அதை அழிக்கவே முடியாது. அப்படிப்பட்ட அனுபவம் ஒரு வடுவை விட்டுச் செல்கிறது.

சிறையில் நீங்கள் இருந்த அனுபவத்தை ஒரு கலைப்படைப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்று சொன்னால், உங்கள் படைப்பு எதுவாக இருக்கும்?

எதுவும் இருக்காது. இல்லாமைதான் சிறை. எதுவுமற்ற வெற்றிடம்.

உங்கள் ஆத்திரத்தையும் கோபத்தையும் எப்படி தணித்துக் கொள்கிறீர்கள்? அதை எப்படிக் கையாள்கிறீர்கள்?

வாழ்க்கையே கலை. கலையே வாழ்க்கை. நான் இரண்டையும் பிரிப்பதில்லை. நான் அந்த அளவுக்குக் கோபப்படுவதில்லை. அதே போல், எனக்கு அவ்வளவு ஆனந்தமும் கிடைக்கிறது.

அந்த ஆனந்தம் எங்கிருந்து வருகிறது?

மழை பெய்வதைப் பார்கிறேன். இலைகள் விழுவதைப் பார்க்கிறேன்.

அய் வெய்வெய், தங்களுக்கு நன்றி.

தொடர்புடைய கட்டுரைகள்:

நசுக்கப்படும் குரல்வளைகள் – ரமேஷ் ராமன்
லீ ஜியாபெள – அமைதியின்மை தந்த அமைதிப்பரிசு – திருவாழிமார்பன்