ஹிந்தித் திரையிசையில் கஸல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்: “சென்னையில் கஸல் இசைமேதை மெஹ்தி ஹசன் அவர்களின் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். நான் அவரை விமான நிலையத்திலிருந்து அழைத்து வந்தேன். நிகழ்ச்சி நடக்கவிருக்கும் அரங்கில் நாங்கள் சவுண்ட் சிஸ்டம் டெஸ்ட் செய்துக்கொண்டிருந்தோம். அரங்கின் நடுவில் நின்றுக்கொண்டு மெஹதி ஹசன், ‘யாராவது மைக்கில் பேசுங்கள்,’ என்றார். நான் உடனே அவருடைய ஒரு கஸல் பாடலைப் பாடினேன். அதை கேட்டு ஆச்சரியப்பட்ட அவர், ‘நன்றாகப் பாடுகிறாய் தம்பி,’ என்றார். அவருக்கு நான் ஒரு பாடகன் என்று தெரியாது. அவர் என்னைப் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.” இதைக் கூறிவிட்டு அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த இயக்குநர் பாபு மற்றும் எழுத்தாளர் ரமணா அவர்களின் பக்கம் திரும்பி, “இவர்களுக்கும் மெஹதி ஹசன் என்றால் உயிர்,” என்றார். இன்னொரு முறை வேறொரு நிகழ்ச்சியில் கங்கை அமரனுடன் கலந்துக்கொண்டபோது, கங்கை அமரன் இசையமைத்த ‘நீல வான ஓடையில்’ என்னும் பாட்டின் ஆரம்ப ஹம்மிங்கில் ஒரு கஸல் பாட்டின் தாக்கம் இருப்பதை சுட்டிக் காட்டினார். அதற்கு கங்கை அமரன் ஓரிரு இளையராஜா பாடல்களின் பல்லவிகளைப் பாடி அதில் உள்ள கஸல் தாக்கத்தை சுட்டிக் காட்டினார். பாடகர் தீபன் சக்ரவர்த்தி ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற நிகழ்ச்சியில் தனக்கு கஸல் மேதைகளான மெஹ்தி ஹசன் மற்றும் குலாம் அலி இருவரும் மிகவும் பிடித்த பாடகர்கள் என்றும், அவர்கள் மீது பெரும் மரியாதை வைத்திருப்பதாகவும் கூறினார். கே.பாலச்சந்தர் இயக்கிய தொலைக்காட்சி தொடர்களில் தமிழில் கஸல்களை உபயோகித்திருக்கிறார். இன்று பி.பி.ஸ்ரீனிவாஸ் எழுதி, ஓ.எஸ்.அருண் பாடிய ஒரு குறுந்தகடு கிடைக்கிறது. முன்பொரு காலத்தில் புகழ் பெற்ற பாடலான ‘மேகமே மேகமே’ என்னும் பாடல் ஒரு கஸலின் தழுவலே.

கஸல் என்பதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று, கவிதை வடிவமாக. இன்னொன்று, இசை வடிவமாக. வயலின் விக்கி சொல்வனதில் முன்பு கஸல் பற்றி எழுதிய கட்டுரையில், “அடிப்படையில் இந்த கஸல் உருது மொழி இலக்கியத்தில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கும் கவிதை வகையாகும். இரண்டு இரண்டு அடிகளைக் கொண்ட கவிதைகளை ‘ஷேர்’ (Sher) என அழைப்பார்கள். இப்படியான ஷேர்களை கண்ணி கண்ணியாகக் கோர்த்துப் பின்னப்படும் கவிதை மாலையே கஸல் எனப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் எல்லா ஷேர்களின் தொடுப்பும் கஸலாகி விடாது. உருதுவில் ஒரு பாட்டின் சந்தம் ‘பெஹர்’ என அழைக்கப்படுகிறது. ஒரு கஸலுக்குள் புனையப்படும் எந்த ஒரு கண்ணியின் இரு அடிகளும் ஒரே பெஹரில் அமைய வேண்டும் என்பதும், எல்லா கண்ணிகளுக்குள் இடையேயான பெஹரும் ஒத்துப்போக வேண்டும் என்பதும் கஸலின் மிக முக்கியமான விதி,” என்று சொல்கிறார். (விக்கியின் முழுக்கட்டுரையும் இங்கு படிக்கலாம்.) விக்கி சொல்வது போல் கஸல் உருது மொழியின் தலைச்சிறந்த கவிதை வடிவமாகக் கருதப்படுகிறது. கஸல் எழுதிய கவிஞர்கள் உருது மொழியின் முக்கியமான ஆளுமைகள். மிர்சா காலிப், மீர் தாகி மீர், க்வாஜா மீர் தர்த் போன்ற கஸல் விற்பன்னர்கள்தான் உருது மொழியின் சிறந்த கவிஞர்களாக கருதப்படுகிறார்கள்.

கஸல் என்பது அடிப்படையில் கவிதை வடிவத்தைக் குறித்தாலும், நாளடைவில் அது இசை வடிவத்தையும் குறிக்க ஆரம்பித்தது. அந்த இசை வடிவத்துக்கென எழுதப்படாததொரு இலக்கணம் உருவாகியது. கஸலுக்கான இசை மென்மையாக இருக்கவேண்டும், ஹிந்துஸ்தானி மரபிசையில் இருக்கும் ராகங்களை ஒட்டி இருக்க வேண்டும், குரல் வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேவைக்கு மிகாத பக்கவாத்தியங்களுடன் இசைக்கவேண்டும். இப்படி எழுதப்படாத விதிகள் பல. இவை எல்லாம் கஸல் பாடகர்களின் தனிப்பாடல்களில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கும்.

கஸல் பாடல்களில், இசைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு முக்கியத்துவம் கவிதைக்கும் கொடுக்கப்படுகிறது. வார்த்தைகளின் அழகும், சந்தத்தின் நேர்த்தியும், மெட்டுகளின் இனிமையும், மனம் கவர் ராகங்களும் ஒன்று சேர இருக்கும் கஸல் பலரை மயக்கியதில் ஆச்சரியம் இல்லை. (அதே சமயம், ஒரு பாடல் மென்மையாக இருப்பதினாலோ, கவிதை நன்றாக இருப்பதினாலோ அதை கஸல் என்று சொல்லி விடமுடியாது. அந்தப் பாடல் வரிகள் கஸல் இலக்கணத்திற்கு உட்பட்டு இருக்கவேண்டும்.)

இந்த அருமையான வடிவம் திரையிசைக்கு உகந்ததாக இருந்தது. இருப்பினும், கஸலை திரையிசையில் பொருத்துவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. அதற்கு இசையமைப்பாளர்கள் சில சவால்களை எதிர்கொள்ளவேண்டும். முதலாவது கஸலின் கவிதை அமைப்பு. முன்பு சொன்னதைப் போல, கஸல் கவிதைகள் ஷேர் எனப்படும் இரண்டு வரி செய்யுள்களால் ஆனவை. அதனால் ஒரு கவிதை (ஷேர்) எந்த மெட்டில் அமைக்கப்பட்டதோ அதே மெட்டில் எல்லா கவிதைகளையும் பாடுவது உண்டு. இந்த அணுகுமுறையைப் பல தனிப்பாடல்களில் கேட்கலாம். இது போன்ற அமைப்பு சிலருக்கு பிடித்திருந்தாலும், பலருக்கு அலுப்பு தட்டிவிடும். அதனால் இந்த விஷயத்தில் வெகுஜன ஊடகமான திரைப்படத்தில் பணியாற்றும் இசையமைப்பாளர்கள் வெகு கவனமாக இருக்க வேண்டும். எல்லா திரையிசை பாடல்களிலும் சரணம் நான்கு வரிகளாவது இருக்கும். இது இசையமைக்க வசதியாக இருக்கும். ஒரு ராகத்தின் பல்வேறு பரிணாமங்களை காண்பிக முடியும். நான்கு வரிகளில் மந்திர ஸ்தாயி முதல் தார ஸ்தாயி வரை சஞ்சரிக்க முடியும். அதனால் கேட்பவர்க்கு மேலும் கீழும் ஏறி இறங்குபடியான மெட்டைக் கேட்ட முழுமையான அனுபவம் கிடைக்கும். ஆனால் இரண்டு வரிகள் மட்டுமே இருந்தால் அது இசையமைப்பாளர் கையைக் கட்டிப்போட்டது போல் இருக்கும். ஒரு கட்டுப்பாட்டுக்குள்தான் பாடலின் மெட்டு சஞ்சரிக்க முடியும். தனிப்பாடலாக இருந்தால் அந்த பாடகன் அல்லது பாடகி ஒவ்வொரு கவிதையும் தன் கற்பனாசக்திக்கு ஏற்றவாறு விதவிதமான சங்கதிகளைப் போட்டுப் பாடலாம். இதனால் கேட்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல் இருக்கும். பாடகரின் கற்பனாசக்தியையும் வியக்க முடியும். ஆனால் திரைப் பாடலில் இது சாத்தியமில்லை. வெகுஜன ஊடகமான திரைப்படத்தில் சங்கதிகளெல்லாம் போட்டுப் பாடிக் கொண்டிருக்கமுடியாது. சிகரெட் பிடிக்கப் போனவர்கள் திரும்பி வரமாட்டார்கள்.

திரையிசையில் வரும் கஸல்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று, அந்த படத்துக்காக எழுதப்பட்ட கஸல். இன்னொன்று பிரபலமான கஸல்களை எடுத்துக்கொண்டு, அதைத் திரைப்படத்தில் பொருத்துவது. பிரபலமான கஸலை எடுத்து படத்தில் கொண்டு வைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இரண்டு வரிக் கவிதைகளின் தொகுப்பாக இருக்கும் கஸல் பாடல்களில், எல்லா கவிதைகளின் பேசுபொருட்களும் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதாவது ஒரு கஸல் பாடலுக்கென்று மொத்தமாக ஒரே பேசுபொருள் என்றில்லை. முதல் கவிதை காதலைப் பற்றி பேசலாம், இரண்டாவது கவிதை வாழ்க்கைத் தத்துவத்தை பற்றி பேசலாம், மூன்றாவது கவிதை ஏதாவது ஒரு வரலாற்று நிகழ்ச்சியைப் பற்றிப் பேசலாம். எல்லா கவிதைகளும் இலக்கணத்தைக் கடைப்பிடித்தால் போதும். அதனால் ஒரு கஸல் முழுவதையும் திரையிசையில் பொருத்திவிடமுடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளை மட்டுமே காட்சிச் சூழலுக்கு ஏற்றவாறு பொருத்தமுடியும். இந்தச் சிக்கல்களை எல்லாம் மீறி, ஹிந்தித் திரையிசையில் பல காலத்தால் அழிக்க முடியாத கஸல் பாடல்களை இசையமைப்பாளர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

கஸல் இசையின் மூடிசூடா மன்னராகக் கருதப்படும் ‘மிர்ஸா காலிப்’ (Mirza Ghalib) அவர்களின் வாழ்க்கை வரலாறு கூட 1954-இல் ஹிந்தித் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. உருது மொழியின் மிக முக்கியமான கவிஞர் மிர்ஸா காலிப். 1797 இல் பிறந்த காலிப், இளம் வயதிலிருந்தே கஸல் எழுத ஆரம்பித்தார். அவருக்குத் திருமணமாகி ஏழு குழந்தைகள் பிறந்தன. ஆனால் எல்லாக் குழந்தைகளும் இளம் வயதிலேயே இறந்துவிட்டன. இது காலிபை வெகுவாக பாதித்தது. 1857 இல் வெடித்த சிப்பாய் புரட்சியையும், அது தோல்வியடைந்த பிறகு ஆங்கிலேயர்களின் குரூரத்தையும் பார்த்தவர் காலிப்.

இத்திரைப்படத்திற்கு குலாம் முஹம்மது இசையமைத்தார். திரைப்படத்தின் கதையே ஒரு கஸல் மேதையின் வாழ்க்கை வரலாறு என்பதால், கஸல் பாடல்களுக்கு நிறைய முக்கியத்துவம் இருந்தது. அதே சமயம் அவற்றை மரபு வழி கஸல்களாக்கி விடாமல், திரையிசையின் கூறுகளும் இடம் பெற்ற பாடல்களாக்க வேண்டியிருந்தது. ஒரே சமயத்தில் கஸல் பிரியர்களையும், வெகுஜனத் திரையிசை ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டிய சவாலை இசையமைப்பாளர் குலாம் முஹம்மது எதிர்கொண்டு, இத்திரைப்படத்தில் காலிப் எழுதிய கஸல்களுக்கு நேர்த்தியாகத் திரையிசை வடிவம் கொடுத்திருக்கிறார்.

‘தில்-ஏ-நாதான்’ என்ற பாடல் கஸல் என்ற பொதுவில் அறியப்பட்ட வகையில் மரபார்ந்து இருக்கும். இதைக் காட்சிக்கேற்ப ஒரு இரு குரலிசையாக அமைத்திருக்கிறார் குலாம் முஹம்மது. ஆண் குரல் ஒரு முறை ஒரு கவிதையைப் பாடுவது, பிறகு பெண் குரல் வேறோரு கவிதையைப் பாடுவது, மெட்டில் சிறு மாற்றங்கள் செய்வது போன்ற உத்திகளால் நீளமான கஸலாக இருந்தாலும் இதில் நம் கவனம் குன்றாமல் இருக்கும்படி செய்துவிடுகிறார் குலாம் முஹம்மது. பாடலின் மெட்டும் கஸல் வரிகளை அற்புதமாக முன்னுக்குக் கொண்டுவந்து நிறுத்துகின்றன. காலிப்பின் மேதைமையை பறைசாற்றுகிறது இந்த மெட்டு. காலிப் இந்தப் படத்தின் பாடல்களை கேட்டால் குலாம் முஹம்மதை மிகவும் மெச்சிக் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

மதன்மோகன்-லதா மங்கேஷ்கர் ஜோடி ஹிந்தி திரையிசையில் மிக பிரசித்தி பெற்ற ஒரு ஜோடி. மதன்மோகன் அருமையான பல கஸல்களை உருவாக்கியவர். ‘கஸல்களின் மன்னன்’ என்று அறியப்படுபவர். மதன்மோகன் லதாவின் குரலுக்காகவே மெட்டுகளை உருவாக்கினார் என்று கூட சொல்லலாம். மதன்மோகனைத் தன் சகோதரனாகக் கருதிய லதா, அவரின் ஒவ்வொரு பாடலையும் தன் குரலால் பட்டை தீட்டினார். இந்த ஜோடி ஹிந்தித் திரையிசைக்கு சாகாவரம் பெற்ற பல பாடல்களை தானமாக கொடுத்திருக்கிறது. அதில் பல கஸல்கள் அடக்கம்.‘கஸல்’ என்ற படத்தில் வரும் ‘நக்மா ஓ ஷேர்’ பாடல் அதில் மிகவும் முக்கியமான ஒன்று. லதா மங்கேஷ்கர், முஹம்மது ரபி இருவர் குரலிலும் தனித்தனியாக இந்தப் பாடல் இருக்கிறது. கஸலுக்கு வேண்டிய மென்மை, கவிதை வரிகளுக்கு பிரதான்யம், இடையூறு செய்யாத இடையிசை என்று கஸல் இசையின் எழுதப்படாத இலக்கணத்தை ஒட்டி இசையமைக்கப்பட்ட பாடல் இது.

ஹிந்தித் திரையிசையை நவீனமாக்கிய முன்னோடிகளில் முக்கியமானவர் அனில் பிஸ்வாஸ். அதே போல் திரையிசையில் கஸல் பாடுவதில் தலைசிறந்தவராகக் கருதப்பட்டவர் தலத் முஹம்மது அவர்கள். இவர்கள் கூட்டணியில் பல சிறப்பான கஸல் பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு உதாரணம் ‘ஏக் மை ஹூன்’ என்ற பாடல். அனில் பிஸ்வாஸின் மயிலிறகால் வருடுவது போன்ற மென்மையான மெட்டை, தன்னுடைய மென்மையான குரல் மூலம் இன்னும் அழகுபடுத்துகிறார் தலத். கைஃப் இர்ஃபானி (Kaif Irfani) என்னும் கவிஞர் ‘தரானா’ என்னும் படத்திற்காக எழுதிய கஸல் இது. வார்த்தைகள் துல்லியமாகக் கேட்கும்படி எப்படி அனில் பிஸ்வாஸ் இசையமைத்திருக்கிறார் என்பதையும், உருது வார்த்தைகளை எவ்வளவு துல்லியமாக தலத் உச்சரிக்கிறார் என்பதையும் கவனியுங்கள்.

இதே தலத் முஹம்மது திரையில் பாடிய இன்னொரு கஸல் பாடலான ‘மொஹபத் ஹி ந ஜோ ஸம்ஜே’ ஹிந்தித் திரையிசையில் மரபுடன் கொடுக்கப்பட்ட கஸல்களில் முக்கியமான ஒன்று. இதற்கு இசையமைத்தவர் ஹிந்தித் திரையிசையில் ஒரு ‘Trend setter’ ஆகக் கருதப்பட்ட சி.ராமச்சந்திரா. நூர் லக்னவி இயற்றிய கஸல்லை பாகேஸ்ரீ ராகத்தில் அமைத்திருக்கிறார் ராமச்சந்திரா. அந்த ராகத்தின் பாவத்தை அழகாக வெளிப்படுத்துகிறார் தலத்.

மரபார்ந்த முறையில் திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட கஸல் பாடலுக்கு இன்னொரு உதாரணம், யமன் ராகத்தில் அமைந்த ‘நுக்தாசீன் ஹை கம்-ஏ-தில்’ என்ற கஸல். இது ‘மிர்ஸா காலிப்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல். சுரையா பாடிய இந்த பாடல் மிக நேர்த்தியாகவும், இனிமையாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. தனிப்பாடல்களில் வருவதுபோல் எல்லா கவிதைகளுக்கும் ஒரே மெட்டை அமைக்காமல், குலாம் முஹம்மது ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு மெட்டைக் கொடுத்து நமக்கு அலுப்பு தட்டாமல் பார்த்துக் கொள்கிறார். இந்தப் பாடல் முழுவதும் யமன் ராகம் அழகாக மிளிர்கிறது.

கஸல் என்றாலே அது மதுவைப் பற்றியோ அல்லது மாதுவைப் பற்றியோதான் இருக்க வேண்டும் என்று ஒரு பொதுவான கருத்து பலரிடமும் இருக்கிறது. பல கஸல்கள் இவற்றைப் பற்றிப் பேசினாலும் இது ஒரு தவறான கருத்து என்றே சொல்ல வேண்டும். கஸல் வேறு பல விஷயங்களையும் பாடுபொருளாகக் கொண்டிருக்கிறது. ‘ஹம் ஹை மாதாய-எ-கூசா’ என்ற கஸல் பெண்ணின் இயலாமையைப் பற்றி பேசும் ஒன்று. மஜ்ருஹ் சுல்தான்புரியின் இந்தப் கஸல் முழுவதும் ஒரு சோகம் இழையோடும்படி இசையமைத்திருப்பார் மதன்மோகன். அந்த பெண்ணின் நிலைமையை லதாவின் குரலில் இந்தப் பாடல் தத்ரூபமாக எதிரொலிக்கும். ‘தஸ்தக்’ என்னும் படத்தில் வரும் இந்த கஸல்லை எழுதியவர் மஜ்ரூஹ் சுல்தான்புரி.

மிர்ஸா காலிப் போன்ற சிறந்த கவிஞர்கள் கஸலை நையாண்டிக்காகவும், எதிரியைக் கிண்டல் செய்யவும் கூட உபயோகித்துக்கொண்டார்கள். அப்படிப்பட்டதொரு கஸல்தான் ‘தாஜ்மஹால்’ என்னும் படத்தில் வரும் ‘ஜூர்ம்-எ-உல்பத்’ என்னும் பாடல். இளவரசனைக் காதலிக்கும் பெண் ஒருத்தி, ஒரு மஹா சாம்ராஜ்யத்தை ஆளும் சக்ரவர்த்தி முன் இளவரசன் மீதான தன் காதலை வெளிப்படுத்துகிறாள். “என் மனதைக் கொடுத்துவிட்டேன், எடுத்துக்கொள்ள வேண்டியவர் எடுத்துக்கொண்டுவிட்டார். இனி நீங்கள் உங்கள் மனம் போல் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்,” என்று அந்த ராஜாவிடம் கேலியாகக் கூறுகிறாள். காதலுக்காக ஒரு சாம்ராஜ்யத்தையே எதிர்க்கத் தயாராக இருக்கும் மனநிலையில் இந்தப் பாட்டை அந்தப் பெண் பாடுகிறாள். நல்ல காட்சியமைப்பு. பல அற்புதமான பாடல்கள் கொண்ட ‘தாஜ்மஹால்’படத்தில் முதன்மையாகத் தெரிகிறது இந்தப் பாடல். இதற்கு இசையமைத்தவர் ரோஷன். மாமேதையான ரோஷனின் இசையமைப்பில் லதா மங்கேஷ்கரின் குரலும் அநாயசமாக மிளிர்கிறது. சாஹிர் லுத்யான்வி எழுதிய இந்த கஸலில் வித்தியாசமான தாளகதியை அமைத்து, சாரங்கியை இடையிடையே இசைக்கவிட்டு கஸலை புதியதொரு பரிமாணத்தில் தந்திருக்கிறார் ரோஷன்.

கஸல் மென்மையாகத்தான் ஒரு பொருளை பற்றி பேச வேண்டும் என்பதில்லை. பல கஸல்கள் தீவிரமாக இருக்கின்றன. இதுபோன்ற கஸல்களில் ஒரு உத்வேகம் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டு ‘மிர்ஸா காலிப்’ படத்தில் வரும் ‘யே ந தீ ஹமாரி கிஸ்மத்’என்ற கஸல். நாம் எப்பொழுதும் கேட்கும் கஸல் வடிவம் போல் அல்லாமல், காட்சிக்கு ஏற்றாற்போல் வித்தியாசமாக இசையமைதிருப்பார் குலாம் முஹம்மது. இதில் ஒரு வேகம் இருக்கும். இடையிசையும் இந்த வேகத்திற்குக் கைக்கொடுக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். மேல் ஸ்தாயியில் முடியும் இந்த அருமையான பாட்டு குலாம் முஹம்மதின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. காலிப் எழுதிய இந்த புகழ் பெற்ற கஸலுக்கு அதன் வடிவச் சவால்களை எதிர் கொண்டு ஒரு உத்வேகத்தை கொடுத்திருப்பார்.

எந்த ஒரு இசைவடிவமும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் அது மெதுவாக அழிவை நோக்கி செல்லும். ஹிந்தித் திரையிசையில் சில முக்கியமான இசையமைப்பாளர்கள், காலத்திற்கேற்ப கஸலுக்கு மெட்டமைப்பதை மாற்றி ஒரு புதிய பொலிவுடன் கொடுக்கத் தொடங்கினார்கள். திரைப்படங்கள் கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணங்களுக்கு மாறிய காலத்திற்கு ஏற்ப, மதன்மோகன் தான் இசையமைக்கும் பாணியையும் மாற்றினார்.‘மௌசம்’ படத்தில் இடம்பெற்ற ‘ருகீ ருகீஸி கதம்’ என்ற பாட்டில் எப்பொழுதும் உடனிருக்கும் தபலாவோடு வேறு சில தாள வாத்தியங்களையும், வயலின், கிடாரையும் சேர்த்து கஸல் பாடல்களுக்கு ஒரு புதிய வடிவம் கொடுத்தார். இந்த கஸல் வடிவம் புதுப் பொலிவுடனும், அதே சமயம் அதன் உள்ளார்ந்த ஜீவன் குன்றாமலும் இருக்கிறது. இது மதன்மோகனின் இசைப்புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த கஸலை எழுதியவர் குல்சார்.

ரேகா நடித்து பிரபலமான படம், ‘உம்ராவ் ஜான்’. இதில் அற்புதமான பல கஸல்களுக்கு இசையமைத்தார் கய்யாம். 80களில் வெளியான இந்த படம் இசையமைப்பாளர் கய்யாமுக்கு ஒரு சவாலாக இருந்திருக்கும். பழங்காலத்து நர்த்தகியை பற்றிய கதை. ஆனால் காலத்திற்கு தகுந்தாற்போல் புதுமையாக இருக்கவேண்டும். இதை வெகு நேர்த்தியாக எதிர் கொண்டார் கய்யாம். அவருக்கு இந்த படத்தின் இசைக்காக தேசிய விருது கிடைத்தது. இந்த படத்திற்காக ஷஹர்யார் எழுதிய கஸல்கள் ஆஷா போஸ்லேயின் குரலில் பட்டிதொட்டிகளில்லெல்லாம் ஒலித்தது. ‘தில் சீஜ் க்யா ஹை மெரி ஜான் லீஜியே’ கஸல் பாடல் மிகவும் முக்கியமான ஒன்று. கதாநாயகி ஒரு நாட்டிய மங்கை. அவள் நடனமாடிக்கொண்டே இந்த பாடலைப் பாடுகிறாள். அதற்காக உபயோகப்படுத்தப் பட்டிருப்பது ஒரு கஸல் பாடல். ஒரு கஸலை நாட்டியப் பாடலாக மாற்றும் சவாலை கய்யாம் அருமையாக எதிர்கொள்கிறார். பாடல் முழுவதும் வரும் அந்த சலங்கை ஒலி, நாட்டியத்திற்கு ஏற்ற தாளகதியை வாசிக்கும் தபலா, எழுந்து ஆடத் தூண்டும் இடையிசை என்று பல நகாசு வேலைகளைச் செய்து இந்த பாடலை ஒரு நாட்டியப் பாடலாக மாற்றியிருக்கிறார் கய்யாம். அதே சமயம் சரணங்களில் வேகத்தை குறைத்து, சில இடங்களில் வாத்தியங்களை மௌனமாக்கி இந்த கஸல்லின் ஆன்மா சிதையாமல் பார்த்துக்கொண்டார். ரேகாவின் அழகும் கய்யாமின் மெட்டும் சேர்ந்து கிறங்கவைப்பதாக இருந்தன.

இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றால் அது  தலத் அஜீஜ் (Talat Aziz) பாடிய ‘யெஹ் ஜமீன் சாந்து ஸீ பெஹதர் நாசர் ஆதி ஹை ஹமேன்’ என்னும் பாடல். ஒரு சீரான தாளகதியில் பிரயாணிக்கும் பாடல். காதலுக்கு வேண்டிய துள்ளலுடன் இருக்கும் ஒரு பாடல். சராசரி கஸலை விட சற்று அதிக வேகம் கொண்டது. நவீன கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் ஒரு புதுமையுடன் ஒலிக்கும் இந்த கஸல்.

ஹிந்தித் திரைசையில் இவ்வளவு முக்கியமான இடம் வகித்த கஸலின் இன்றைய நிலை மிகவும் வருந்தத்தக்க வகையில் இருக்கிறது. இப்பொழுது வரும் ஹிந்தி பாடல்களில் உருது கிட்டத்தட்ட மறைந்துவிட்டது. ஆங்கிலத்தைக் கலப்பதுதான் இப்பொழுதைய நாகரிகம். ஹிந்திப் பாடலில் ஆங்கிலத்தை கலக்கிறார்களா அல்லது ஆங்கில பாடல்களில் ஹிந்தியை கலக்கிறார்களா என்று தெரியாத அளவிற்கு கலவையாக இருக்கிறது. மதன்மோகன், கய்யாம் போல் கஸலை நன்றாகப் புரிந்துக்கொண்டு, இசையமைக்கக் கூடிய இசையமைப்பாளர்கள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்று சொல்லவேண்டும். வார்த்தைகளை மழுங்கடிக்கும் லூப்ஸ், காதைக் கிழிக்கும் சப்தம், எளிமையான caller tune-னுக்காக செய்யப்படும் மெட்டுகள், நுண்ணிய உணர்வுகளுக்கு இடம்கொடுக்காத ஒரு சூழல். இந்தச் சூழ்நிலையில் கஸல்லை தொடுவார் இல்லை என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உருது மொழியின் அழகையும், கஸல்களின் இனிமையும் இழந்து நிற்கிறது ஹிந்தித் திரையிசை.