பணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா?

கனடாவின் ஒரு பகுதியான யூகான் மாகாணத்தில், ஒரு பழங்குடித் தலைவர் பேட்டி ஒன்றில் அவர்களது மொழி பற்றி சி.பி.சி. க்கு அளித்த பேட்டியில், “எங்கள் மொழியில் பனி சம்பந்தப்பட்ட வார்த்தைகள் கிட்டத்தட்ட 80. ஏனென்றால் எங்களின் மையம் இயற்கை. அதோடு ஒட்டி வாழ்கிறோம். உங்கள் ஆங்கிலத்தில் ‘பணம்’ என்ற விஷயத்துக்கு ஏறக்குறைய 80 வார்தைகள் இருக்கின்றன. ஏனென்றால், உங்கள் மையம் அது!” என்றார்.

தமிழிலும் ‘பணம்’ என்ற விஷயம் பல கதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகளில் உள்ள ஒரு சொல். ஆனால் ஆங்கிலம் போல பல வார்த்தைகள் கிடையாது – உதாரணம், மார்ட்கேஜ், பாண்ட்ஸ், டிரைவேடிவ்ஸ், போன்ற வார்த்தைகள் அதிகம் சாதாரண வாழ்க்கையில் தமிழில் பேசப்படுவது இல்லை. “பணம் காசு இருந்தால்தான், வாழ்க்கை நன்றாக இருக்கும்” என்பது ஒரு சாதாரண வாக்கியம். பொதுவாக நாம் பணம், மற்றும் காசை சேர்த்தே சொல்கிறோம். நாணயம் என்ற சொல் காசு என்பதன் இன்னொரு சொல். ஆனால், “பணநாணயம்” என்று நாம் சொல்வதில்லை. சாதாரண வாழ்க்கையில் பணம் என்பது காகித வடிவத்தையும் காசு/நாணயம் என்பது உலோக வடிவத்தையும் குறிக்கிறது.

சரித்திரம்

சீனர்கள் பணம் என்ற விஷயத்தை முதலில் கொண்டு வந்தார்கள். கிருஸ்து பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் உலோக பொறிகளை வியாபார மாற்றாக உபயோகித்துள்ளார்கள். பிறகு கிரேக்கர்கள் உலோக காசுகளை கண்டுபிடித்தார்கள். சீனர்கள் 13 ஆம் நூற்றாண்டில் முதலில் காகிதப் பணத்தை உருவாக்கினார்கள். பதினேழாம் நூற்றாண்டில் பிரிடிஷ்காரர்கள் நவீன காகிதப் பணத்தை உருவாக்கினார்கள். இது, சுருக்கமாக பணத்தின் வரலாறு. அமெரிக்காவில்தான் 1920 வாக்கில் கிரெடிட் கார்டு (Credit Cards) முதல் முதலாக உபயோகப்படுத்தப்பட்டது. முதலில் இவற்றை பெட்ரோல் நிரப்ப மட்டுமே உபயோகப்படுத்த முடியும். 1950 -களில் டைனர்ஸ், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என்று கார்டுகள் பல இடங்களிலும் உபயோகப்படுத்தக் கூடிய வசதி வரத் தொடங்கியது. 1960 –களில், விசா மற்றும் மாஸ்டர்கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்தபடியாக டெபிட் கார்டு (Debit Cards) என்ற நிதி கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. டெபிட் கார்டில் கடன் கிடையாது. உங்கள் கணக்கிலிருந்து உடனடியாக பணம் வியாபாரிக்குக் கைமாறும். அடுத்தபடியாக, ஸ்மார்ட் கார்டு (Smart Cards) அறிமுகம். 1967 ல் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை கார்டுகள் அமெரிக்காவில் 70 களில் உபயோகத்துக்கு வந்தன. இந்த கார்டுக்குள் ஒரு நுண்ணிய கணினி சில்லை உண்டு. ஆரம்பத்தில் முன்னே அமைத்த நிரலை (fixed program) மட்டுமே செயல்படுத்தும் வகையில் இருந்தது. தொழில்நுட்பம் வளர வளர, இன்று இதில் பல வகை நிரல்களை மேலேற்றி பல வகை விஷயங்களுக்கு உபயோகிக்கலாம்.

இப்படி வரலாறாய் இருந்த விஷயம் இன்று பல வகை மென்பொருள் சார்ந்த சேவைகளாய் மாறி, வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களை சவால் விடும் அளவிற்கு வளர்ந்து விட்டது. விசாவும், மாஸ்டரும் அவர்களது துரித தொழில்நுட்ப முதலீடுகளால் எங்கும் வியாபித்து இருக்கின்றனர். ஆனால், பலவகைப் புதிய முறைகள், வங்கிகள், மற்றும் கார்டு வியாபாரங்கள் உருவாக்கிய அடிப்படை நுட்பங்களை உபயோகித்து, அவர்களை விட பெரிதாக வளர்ந்துவிடக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வல்லுனர்கள் கருதுகிறார்கள். சுருக்கமாக, இணையம் நிதி உலகையும் ஆட்டிப் படைக்கிறது.

இக்கட்டுரையில் மூன்று விஷயங்களின் இணையத் தாக்குதலை அலசுவோம்.

1) வங்கிகள் மற்றும் அதன் சேவைகள்

2) பல விதமான கார்டுகள் மற்றும் சேவைகள்

3) இணைய நிதி சேவைகள்

வங்கிகள், வங்கிகள்!

வங்கிகள் நாணயம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே வந்துவிட்டதாக சொல்கிறார்கள். வங்கிகள் பணத்திற்கு பதில் தானியங்களை வைத்து வியாபாரம் செய்த கதையெல்லாம் நமக்கு எதற்கு? மெதுவாக, பணம் என்ற விஷயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் வியாபாரத்திற்கு, குறிப்பாக ஏற்றுமதி/இறக்குமதி வியாபாரத்திற்கு வங்கி என்ற அமைப்பு தேவையாகியது. பல நூறு வருடங்களுக்கு வங்கி என்றாலே காகித மயம்தான். பணக்கடன் என்பது ஒரு 6,000 வருட பழைய சமாச்சாரம், உங்களுக்கு மட்டுமே இருக்கிற விஷயம் இல்லை! 1990 களில் ஒரு முறை ஈரான் நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்படியே எல்லாம் காகித மயமான வங்கிகள் இன்னும் இருக்கின்றன. வெறும் கால்குலேட்டர்கள் மட்டுமே எந்திரங்கள். அதுவும் அவர்களுடைய கரன்ஸியில் (இரானிய ரியால்) சில ஆயிரம் வைத்து ஒரு கர்சீப்பு கூட வாங்க முடியாது!

சரி, நவீன காலத்துக்கு வருவோம். 20 ஆம் நூற்றாண்டில் வங்கித்துறை உலகம் எங்கும் பரவி பலவித சேவைகளை வழங்கத் தொடங்கியது. 20 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான வளர்ச்சியை வங்கித்துறை நன்றாக பயன்படுத்திக் கொண்டது. காகித மயமாக இருந்த வங்கித்துறையில் மேற்கத்திய நாடுகளில் தொழில்நுட்பம் மெதுவாக தலை தூக்க ஆரம்பித்தது. முதலில் டெலக்ஸ், தொலைப்பேசி என்று அடிப்படையான தொலைத் தொடர்பு தொழில்நுட்பங்கள் வரத் தொடங்கின. டெலக்ஸ் மூலம் பண மாற்று சேவைகள் நகரங்களுக்கு, நாடுகளுக்கு நடுவே வியாபாரத்திற்கு சரிப்பட்டு வந்தது. ஆனால், வாடிக்கையாளர்கள் காகிதத்துடனே போராடி வந்தார்கள். 1950 க்கு பின் பயங்கர கணினி முன்னேற்றம் வந்தும் வங்கிகள் பின் அலுவலக வேலைகளுக்கு மட்டுமே கணினிகளை உபயோகித்து வந்தன. 1955 முதல் 1980 வரை இந்தியாவில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு, பல சிறிய நகரங்கள், கிராமங்கள் என்று எல்லா இடங்களிலும் பரவத் தொடங்கின. அரசாங்கத்தின் விவசாய திட்டங்களை செயல்படுத்த அவை தேவைப்பட்டன.

1980 களிலும் வங்கிகள் ராட்சச பின் அலுவலக கணினிகளையே உபயோகித்து வந்தன. தொலைத் தொடர்பு வளர வளர ஃபாக்ஸ் போன்ற அடிப்படை தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் அறிமுகப் படுத்தினார்கள். வங்கி துறையில் இருப்பவர்கள் சற்று தயக்க சுபாவம் கொண்டவர்கள். பிறரின் பணத்தை கையாள்வதால், எதிலும் இரட்டிப்பு உத்தரவாதம் வேண்டும். மனிதர்கள் செய்து வரும் இவ்வகை ’உயர்’ காரியங்களை எந்திரங்களிடம் எப்படி விடுவது என்பது இவர்கள் வாதமாய் இருந்தது. 1980 கள் இவர்கள் சற்று சஞ்சலப்பட்ட காலம் எனலாம். கணிகளின் வேகமும், துல்லியமும் பிடித்திருந்தன. ஆனால், எப்படி எல்லாம் குளறுபடி செய்யுமோ என்ற பயம் வேறு. என் சொந்த அனுபவத்தில், தமிழ்நாட்டில் ஒரு சிறிய தென் நகரத்தில் கணினிகளை அறிமுகப்படுத்திய அனுபவம் வினோதமானது. மனிதர்களைவிட அந்த கணினிக்கு அதிகம் மரியாதை கொடுத்தார்கள் (தனியாக ஏர் கண்டிஷன்). அதில் நிரலை உருவாக்கிய என்னை ஒரு பூசாரி போலப் பார்த்தார்கள். அந்த விசித்திர எந்திரத்திலிருந்து ஒரு பட்டியல் வெளிவருவதை பார்க்க அலை மோதும் கூட்டம். (”என்ன தம்பி, பளய ரேடியோ போல கரகரன்னு சத்தம் – அச்சடிக்குதோ!”) புதிய கணினி வங்கி கிளை என்று ஏகத்துக்கும் விளம்பரப்படுத்தி, பக்கத்தில் உள்ள ஊர்களிலிருந்து பலரும் இந்த அதிசயத்தைப் பார்க்க, கணக்கு திறக்க வண்டியைப் பிடித்து சில மாதங்களுக்கு ’ரங்கநாதன் தெரு’ போல ஆக்கிவிட்டார்கள்.

மெதுவாக, கணினிகளுக்குச் சக்தி கூடக் கூட, வங்கிகளும் தங்களது கிளை அலுவல்களுக்கு உபயோகப்படுத்த முற்பட்டார்கள். மேற்கத்திய நாடுகளில் பெரிய கணினிகளை பழைய தொழில்நுட்பத்தோடு விவரமாக உபயோகிக்க தொடங்கினார்கள். இந்தியா போன்ற வளரும் நாடுகள் மலிவாகிக் கொண்டு வந்த நுண்கணினிகளை உபயோகிக்க முற்பட்டனர். இந்த காலகட்டத்தில் பல மிகப் பெரிய மேற்கத்திய வங்கிகள் தங்கள் சொந்த செலவில் மின்வலையமைப்புகளை (Private Network) உருவாக்கத் தொடங்கினர். இவர்களின் நோக்கம் வளர்ந்துவரும் பன்னாட்டு வியாபாரத்திற்கு உதவுவது (அதில் பணமும் பண்ணுவது). இந்த பணமாற்றத்தைக் கையாள மிக விஸ்தாரமான நிரல்கள் உருவாக்கப்பட்டன. SWIFT (Society for Worldwide Interbank Financial Transactions) என்ற முறை மூலம் பண மாற்றம் பங்கேற்கும் இரு வங்கிகளுக்கு இடையே உலகில் எந்தப் பகுதியிலும் சாத்தியமானது. அமெரிக்காவிற்குள் பணமாற்றத்திற்கு CHIPS மற்றும் FedWire போன்ற அமைப்புகள் உருவாகி வங்கிகள் இந்த புதிய தொழில்நுட்பத்தை உபயோகிக்கத் தொடங்கின. இன்றும் பல அமெரிக்க டாலர் பணமாற்றங்கள் இந்த முறைகளை பின்பற்றுகின்றன. உதாரணத்திற்கு, இந்தியன் வங்கியிலிருக்கும் உங்களது அமெரிக்க டாலர் கணக்கிலிருந்து நியுயார்க்கிலிருக்கும் உங்களது நண்பனின் சிட்டிபேங்க் கணக்கிற்கு மாற்ற வேண்டுமெனில் CHIPS முறை பயன்படுத்தப்படும். கடிதமாய் எழுதித் தள்ளிய வங்கிகள் மாறத் தொடங்கின.

கடந்த 20 ஆண்டுகளாக வங்கிகள் கிளைகளை கணினி தொழில்நுட்பம் கொண்டு பெரிய அளவில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளன. முதலில், கிளைகளில் கணினிகள் வந்தவுடன், கணக்கில் உள்ள பாக்கி அறிந்து கொள்வது மற்றும் கணக்குப் பட்டியல் (Account Statement) என்ற வாடிக்கையாளர்கள் சேவைகள் துரிதப் படுத்தப்பட்டன. போகப் போக, ஒரு வங்கியின் கிளைகளுக்குள் பண மாற்ற சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு எளிதாகியது. இவை நல்ல முன்னேற்றங்களாக இருந்த போதும், வங்கி கிளைகளுக்குச் செல்ல வேண்டியிருந்த்து.

இணையம் வளர வளர, ஏன் இணையம் மூலம் நம் வங்கி வேலைகளை பார்க்கக் கூடாது என்ற கேள்வி எழுந்தது. ஆனால், வங்கித் தொழிலுக்கு இன்னும் இணையம் மேல் நம்பிக்கை வரவில்லை. இன்று பரவலாக இணைய வங்கி சேவைகள் பரவுவதற்கு காரணம் மென்பொருள் மறையீடு (software encryption) நுணுக்கங்கள். எதிர்காலத்தில் ‘சொல்வனத்தில்’ இதுபற்றிய கட்டுரைகள் எதிர்பார்க்கலாம். இவ்வகைத் தொழில் நுட்பங்கள், ஒரு வாடிக்கையாளரின் நிதி அந்தரங்கத்தை பாதுகாக்க உதவுகின்றன. இன்று இணைய சேவைகள் வழங்காத வங்கிகளே இல்லை என்று சொல்லலாம்.

இணைய சேவைகள் வருவதற்கு முன் வந்த பெரிய தானியங்கிப் புரட்சி ’ஏ.டி.எம்.’ என்ற மின்னணு வங்கிக் கிளை அமைப்பு. சாதாரண வங்கி சேவைகளை இந்த எந்திரம் அலுக்காமல் வாரம் முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. இது வங்கியின் சொந்த வலையமைப்பில் (இணையத்தில் அல்ல) செயல்படுகிறது. முதலில் ஒரு வங்கியின் வலையமைப்புக்குள் செயல்பட்டுவந்த இந்த சேவை, நாளடைவில் வங்கிகளுக்கு இடையேயும் செயல்படத் தொடங்கியது. வங்கிகள் ஒரு படி தாண்டி, இந்த சேவையை பல பொது மக்கள் புழங்கும் வணிக மையங்களில், பெரிய அலுவலகங்களில் ஏ.டி.எம்.மை நிறுவத் தொடங்கினார்கள். இன்று பெட்ரோல் வழங்கும் பம்புகள், சினிமா தியேட்டர்கள் என்று பல இடங்களிலும் ஏ.டி.எம். வந்து விட்டது.

இணைய வங்கிச் சேவைகள் பல வகையில் உதவுகின்றன. கணக்கில் பாக்கி அறிதல், பரிமாற்ற விவரம் (transaction listing) , பட்டியல், பண மாற்றம் போன்ற சேவைகளோடு, மின்சார பில், வீட்டு வரி, தண்ணீர் வரி என்று பல வகை செலவுகளுக்கு, வீட்டிலிருந்தபடியே -24 மணி நேரமும்- பணம் கட்ட முடிகிறது. இதில் உள்ள மிகப் பெரிய செளகரியம், பில் கிடைத்தவுடன், எதிர்காலத்தில் இன்ன தேதியில் பணம் செலுத்துமாறு வங்கியின் இணைத்தளத்திலேயே பதிவு செய்ய வழி உள்ளமை; இது மறதியால் சரியான தேதியில் கட்டணம் செலுத்த மறந்து அதற்கு அபராதம் கட்டாமல் இருக்க உதவியாக உள்ளது.
அதே போல, பண மாற்று சேவைகளில் பல வகை சேவைகளை வங்கிகள் அளிக்கின்றன. ஒரே வங்கியின் கிளைகளுக்குள் பண மாற்றம், வெவ்வேறு வங்கிகளுக்கு இடையே பண மாற்றம், ஒருவரின் கணக்குகளுக்குள் உடனே பண மாற்றம், மின்னஞ்சல் மூலம் பண மாற்றம் என்று பல வகை பண மாற்றச் சேவைகள் உள்ளன.

இந்த சமயத்தில் ஹாலிவுட் பண மாற்ற அபத்தத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும். பல மில்லியன் டாலர்களை பண மாற்றம் செய்ய வில்லன் துப்பாக்கியுடன் மடிக்கணினி முன் மிரட்டுவான். கடவுச் சொல்லைக் கொடுத்தவுடன், பெட்ரோல் பம்பில் அளவுமானி போல டிஜிட்டல் எண்கள் ராட்சச வடிவில் உருளும். பண மாற்றம் முடிந்தவுடன் ‘வெற்றி’ என்று கணினியிடமிருந்து ஒரு மறுமொழி வேறு! இந்த அபத்தத்தை இந்திய சினிமாவிலும் அப்படியே காப்பியடிக்கிறார்கள். உண்மையில், வங்கிகள் இணைய பண மாற்று சேவையில் உச்ச எல்லைகள் வைத்துள்ளார்கள். உதாரணத்திற்கு, அந்த உச்ச எல்லை 1 லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். நூறு ரூபாயானாலும் 1 லட்சமானாலும், பண மாற்றம் நொடியில் முடிந்து விடுகிறது. நடைமுறையில், எந்த சினிமா அபத்தங்களும் நடப்பதில்லை.

பல ஆண்டுகள் உலகின் மிகப் பெரிய வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கிய அனுபவத்திலிருந்து வங்கிகளின் தகவல் தொழில்நுட்பக்காரர்களின் மனதில் உள்ள மிகப் பெரிய மூன்று விஷயங்கள் ரொம்பவும் சத்தியமானது என்பதை உணர்ந்தேன்.

1. முதலில் சேவையின் நம்பகத் தன்மை (service reliability) ரொம்ப முக்கியம். வாரக் கடைசியில் ஏ.டி.எம். வலையமைப்பு சில மணி நேரம் செயலிழந்தால் அடுத்த நாள் செய்தித்தாளில் வறுக்கப்படுவது வங்கியின் பெயர்.

2. இரண்டாவது, வாடிக்கையாளர்களின் நிதி அந்தரங்கம் (consumer financial privacy). அதில் ஏதாவது களங்கம் ஏற்பட்டால், வங்கியின் பெயர் தெருவில் சந்தி சிரிக்கும்.

3. மூன்றாவது, சேவையின் துல்லியம் (Transactional accuracy). கணினி மயமாக்கப்பட்ட சேவை எதிலும் இம்மி அளவு கூட தப்பு இருக்க கூடாது. மனிதத் தவறுகள் மன்னிக்கப்படும். எந்திரத் தவறுகள் தண்டிக்கப்படும்.

இம் மூன்று விஷயங்களை இங்கு குறிப்பிட காரணம் உள்ளது. நிதி அமைப்புகள் நவீனப்படுத்தப்படும்போது, இந்த மூன்று விஷயங்களையும் கோட்டை விட்டால் தோல்வி நிச்சயம்.

பொதுவாக, நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம் இது: வங்கிகள் சொந்த வலையமைப்பில் (private network) இரு பக்கம் உள்ளது – ஒன்று, வங்கியின் உள் வேலைகளுக்கு (intranet) . இரண்டாவது வெளியுலக வாடிக்கையாளர்களுக்கு (extranet). மூன்றாவது, வாடிக்கையாளர்கள் செளகரியத்திற்கு இணையம் (inter-net) மூலம் வங்கியின் மறையீடு (encrypted) நிறைந்த இடையமைப்பு (interface) புண்ணியத்தில் உருவான தாற்காலிக வலையமைப்பு. நான்காவது, வங்கிகளுக்கிடையே பண மாற்றுக்கான SWIFT அமைப்பு. மேலே சொன்ன மூன்று முக்கிய விஷயங்களை இந்த வலையமைப்புகளுடன் சிந்தித்து பாருங்கள். எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் நிதித்துறையில் இந்த வலையமைப்புகள் மற்றும் முக்கிய மூன்று கோட்பாடுகளையும் உதறினால் படுத்துவிடும்.

கார்டுகள் கார்டுகள்!

தமிழில் வெளிவந்த ‘அன்பே சிவம்’ என்ற திரைப்படத்தில் பல காட்சிகளில் மாதவன், தன்னுடைய கிரெடிட் கார்டை உபயோகிக்க முயற்சி செய்வார். பல சிறிய ஊர்களில் சிக்கி, கார்டை உபயோகிக்க முடியாமல் தவிப்பார். கடைசியில் சென்னைக்கு வெளியே ஒரு கடையில் கமலுக்காகப் பந்து வாங்குவார். எப்படியோ கிரெடிட் கார்டு வேலை செய்தவுடன் மாதவனுக்கு நாகரீக உலகிற்குள் அடி எடுத்து வைத்துவிட்ட்து போல தோன்றுவதாக காட்சி.

மேலே நாம் பார்த்த சினிமா காட்சியில், மாதவன் ஒரு கார்ட் சொந்தக்காரர் (card holder), கடைக்காரர் ஒரு வியாபாரி (Merchant) என்று அழைக்கப்படுகிறார். எல்லா கடைக்காரர்களும் ’வியாபாரி’ ஆவதில்லை. அதனால், மாதவனால் கார்டு வைத்து எங்கு வேண்டுமானாலும் பந்து வாங்க முடிவதில்லை. ’அன்பே சிவம்’ படத்தில் அந்த ரயில்வே ஸ்டேஷன் ’வியாபாரி’ ஆகாமல் மாதவனை ஃபோன் செய்யவிடாமல் படுத்தும். கிரெடிட் கார்டு விஷயத்தில் இவர்கள் இருவரும் முன்னால் (front interface) இருக்கும் அமைப்புகள். இவர்கள் மட்டுமே ஒரு பரிவர்த்தனையை முடிப்பதில்லை. முதலில் ’வியாபாரியிடம் ஒரு சிறிய மெஷின் ஒன்று இருக்கும் – இதை கொடுக்கல் வாங்கல் முனைக் கணினி (transaction terminal) என்கிறார்கள். மாதவன் கையில் இருந்த கார்டு பொதுவாக ஏதாவது ஒரு வங்கி வழங்கியதாக இருக்கும் – நாம் இந்த உதாரணத்தில், அதை இந்தியன் வங்கி என்று வைத்துக் கொள்வோம். இந்த உதாரணத்தில், இந்தியன் வங்கி அட்டை வழங்குபவர் (card issuer) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு இடையில் சேகரிப்பார் (Acquirer) என்ற ஒரு அமைப்பும் உண்டு. விசாவின் சொந்த தனியார் வலையமைப்பில் இந்த ‘பந்து’ பரிவர்த்தனை நடக்கிறது. மாதவன் தன் கார்டை மெஷினில் அழுத்தி இழுத்ததும் (swipe) செய்தவுடன், பரிவர்த்தனை விவரங்கள் (யார், எப்பொழுது, எவ்வளவுக்கு, யாரிடமிருந்து வாங்கினார்) முதலில் விசாநெட் மூலம் சேகரிப்பாரை (Acquirer) அடைகிறது. அங்கிருந்து விசாநெட் மூலம், வங்கிக்கு இதே விஷயங்கள் தெரிவிக்கப்படுகின்றன வழங்குவார் (issuer). கணக்கில் நிதி நிலையைப் பொறுத்து, வங்கி விசாநெட் மூலம் ஒப்புதல்/நிராகரிப்பு சேகரிப்பார் (Acquirer) மூலம் ’வியாபாரி’க்கு வினாடியில் தெரிவித்துவிடும். கையெழுத்திட்டுவிட்டு பொருளை மாதவன் வாங்கி செல்லுவார்.

’வியாபாரி’ கையெழுத்திடப்பட்ட காகிதங்களை சேகரிப்பாருக்கு (Acquirer) க்கு அனுப்பிவிடுவார். அந்த நிறுவனம் அதை செயல்படுத்திவிட்டு, வங்கியிடமிருந்து (வங்கிகளிடமிருந்து) பணத்தை மெர்செண்டின் வங்கிக் கணக்கில் (இதற்காக ’வியாபாரி’ கணக்கு திறக்க வேண்டும்) சேர்த்து விடுவார்கள். வங்கி, மாதவனுக்கு அவரது கிரெடிட் கார்டு வாங்கல்களை பட்டியலிட்டு அனுப்பி விடுவார்கள். மாதவனையே வைத்துக் கொள்வோம் – வாசகருக்கு ஏன் வீண் கடன்! மாதவன் குறித்த தேதிக்குள் வங்கிக்கு பணத்தைக் கட்டிவிடுவார். இதுவரை என் இரு ‘சொல்வனம்’ கட்டுரைகளில் மாதவன் வந்துவிட்டார் என்பது தற்செயலே – ஏன் அவர் ஷாலினியை வித்தியாசமாய் சைட் அடிக்க வேண்டும், ஏன் கமலுக்கு கிரெடிட் கார்டு மூலம் பந்து வாங்கி கொடுக்க வேண்டும்?

விசாநெட் போல மாஸ்டர்நெட்டும் உண்டு. பல பரிவர்த்தனை முனைக் கணினிகள் அல்லது கொடுக்கல் வாங்கல் முனைக் கணினிகள் (transaction terminals) பல சேகரிப்பார் (Acquirer) களுடன் தொடர்பு கொள்ளும் திறம் படைத்தவை. அதனாலேயே உங்களால், பெரிய கடைகளில் எந்த கிரெடிட் கார்டையும் உபயோகிக்க முடிகிறது. விசா/மாஸ்டர்நெட்டைப் பயன்படுத்துவது ஏன்? மிக மிக பாதுகாப்பான விசாவின்/மாஸ்டரின் வலையமைப்பு அது. உலகில் பல மில்லியன் கி.மீ. க்கு சொந்த செலவில் கடலுக்கடியே, நிலத்துக்கடியே எல்லாம் விசா/மாஸ்டர்காரர்கள் இந்த வலையமைப்பை பல ஆண்டுகள் முதலீடு மற்றும் உழைப்புடன் செய்துள்ளார்கள். ஏன் செய்ய வேண்டும்? உதாரணத்திற்கு, மாதவன் பந்து 20 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், இதில் விசாவுக்கு ஏறக்குறைய 40 பைசா (2%) கொடுக்கப்பட வேண்டும். வங்கி மற்றும் சேகரிப்பாருக்கு (Acquirer) இன்னொரு 40 பைசா கொடுக்கப் படுகிறது. இது மிகப் பெரிய வணிகம். உதாரணத்திற்கு, கனடாவில் மட்டும் கடந்த டிசம்பர் 24 அன்று (கிருஸ்மஸ்ஸுக்கு ஒரு நாள் முன்) மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் வினாடிக்கு 400 கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் நடந்தன. அதாவது, அந்த ஒரு மணி நேரத்தில் 1,440,000 பரிவர்த்தனைகள் நடந்து முடிந்தன. ஒவ்வொன்றிலும் 2% என்று கணக்கிடுங்கள். இதை எதிபார்த்துத்தான் விசா மற்றும் மாஸ்டர் அட்டை நிறுவனங்கள் உலகெங்கும் சொந்த பாதுகாப்பான வலையமைப்புகளில் முதலீடு செய்துள்ளன. அமெரிக்க வியாபாரம் இதைவிடப் பல நூறு மடங்கு பெரிதானது.

டெபிட் கார்டுகள் கிரெடிட் கார்டுகளுக்குப் பிறகே வந்தவை. சில சமயங்களில் ’ஷாப்பிங்’ செய்யும் போது பணத்தை எடுத்துச் செல்வது அபாயகரமானது என்று நாம் நினைக்கிறோம். திருடர்களிடம் எதற்கு வம்பு என்று ப்ளாஸ்டிக்கை நம்பி தங்கம் வாங்கும் ஜாதி நாம்! பல நாடுகளிலும் பல தொழில்நுட்பங்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமான விஷயம், டெபிட் கார்டில் கடன் கிடையாது. இது ஒரு துரிதப் பண மாற்று சேவை என்று கொள்ளலாம். உங்களது சங்கேத எண் (Pin number) கொடுத்தபின் வங்கியில் உள்ள உங்கள் கணக்கிலிருந்து பணம் கடைக்காரரின் கணக்கிற்கு உடனே மாறிவிடும். உலகிலேயே, கனடாவில் டெபிட் கார்டுகள் மிக பிரபலம். இங்கு கனேடியர்கள் உருப்படியாகச் செய்த விஷயம் இண்டராக் (Interac) என்ற லாபநோக்கற்ற ஒரு அமைப்பிடம் டெபிட் கார்டுகளை விட்டு விட்டார்கள். இதனால், மாதவன் கனடா வந்தால் -60 டிகிரி குளிரில் டாஸனில்கூட (யூகான் மாகாணம்) டெபிட் கார்டில் பந்து வாங்கலாம். டெபிட் கார்டுகளுக்கான கட்டணம் குறைவாக இருப்பதால் (கிரெடிட்டை விட) மிகப் பரவலாக கனடாவில் உபயோகத்தில் உள்ளது. கனடாவில் டெபிட் கார்டுகளின் வலையமைப்பு இண்டராக்கிற்கு சொந்தமானது. எல்லா பெரிய/சிறிய வங்கிகளும் கனடாவில் இண்டராக் வலையமைப்புடன் அழகாக ஒத்துழைக்கின்றன. இல்லாவிட்டால், வாடிக்கையாளர்கள் இண்டராக் வசதி உள்ள இன்னொரு வங்கிக்குப் போய் விடுவார்கள்.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் காகிதப் பணத்திற்கு அதிக உபயோகமில்லாமல் செய்து விட்டன. வங்கிகளும் அதிகம் காகிதப் பணத்தை முன் போல வைத்துக் கொள்வதில்லை. காகிதப் பணத்திலிருந்து ப்ளாஸ்டிக் பணத்திற்கு மாறி ஒரு பத்து வருடங்கள் ஆகிவிட்டது. சரி, உங்கள் வங்கிக் கணக்கில், இத்தனை பணம் இருக்கிறது என்பது எதைக் குறிக்கிறது? சமூக அந்தஸ்தை ஒரு புறம் தள்ளி வைத்து பார்த்தால், அது வங்கியின் வழங்கி கணினியில் உள்ள தகவல் (Data), அவ்வளவுதான். உங்கள் பர்ஸைத் திறந்தால் உங்களது நிதி நிலைமையைச் சொல்லவே முடியாது. இன்று பல வித ப்ளாஸ்டிக் நிறைந்த இடம் பர்ஸ். நீங்கள் கடனாளியா அல்லது பணம் நிறைந்தவரா என்று உங்கள் பர்ஸை பார்த்துச் சொல்லவே முடியாது. காகிதப் பணத்திலிருந்து மிக மதிநுட்பமிக்க நிதி வகை அமைப்பை ஒரு 60 ஆண்டுகளில் நாம் அடைய கணினியும், தனியார் வலையமைப்புகளும், இணையமும் காரணம் என்றால் மிகையாகாது.

இவை மட்டுமல்ல, பல வகை விசுவாச கார்டுகள் (loyalty cards) கடந்த 25 ஆண்டுகளாக பிரபலமாக உள்ளன. இவற்றைப் பல வகைகளாகப் பிரிக்கலாம்:

1. அரசாங்க சேவைகளில் (முக்கியமாக பயணத்திற்கு) விசுவாச கார்டு

2. அங்கத்தினருக்கான சிறப்பு விசுவாச கார்டுகள் – இவை முக்கியமாக பெரிய சில்லறை வியாபாரங்களால் வாடிக்கையாளர் விசுவாசத்தை வளர்க்க உபயோகமான கார்டுகள்

3. விமானப் பயண விசுவாசக் கார்டுகள். இவை சற்று வேறுபட்டவை – இவற்றில் பயன்பாட்டுக்கு ஒப்ப புள்ளிகளாகத் தனிக் கணக்கில் சேரும். அப் புள்ளிகளை அதே விமான நிறுவனம் அல்லது அது உறவு கொண்ட இதர விற்பனை நிறுவனங்களில் பரிவர்த்தனைக்கு பல விதத்திலும் உபயோகிக்கலாம்.

அரசாங்க சேவைகள்

சிங்கப்பூருக்கு சென்றிருந்த பொழுது, ஊரைச் சுற்றிப் பார்க்க அந்த நகரத்தின் பொதுப் பயண வசதிகளையே உபயோகித்தேன். அங்குள்ள எந்திரங்களில் ஒரு புறம் கடனட்டையை நுழைத்து, மற்றொரு புறம் அவர்கள் பயண அட்டையை நுழைத்தால் அப்பயண அட்டையில் நாம் சொல்கிற அளவு தொகை ஒன்று கணக்கிலேறும். பின் அந்த அட்டையை பயண வசதியில் உள்ள ஒரு முனைக்கணினியில் நுழைத்தால் ஆங்காங்கே ரயில், பஸ் என்று எதில் வேண்டுமானாலும் செல்லலாம். அவர்களுடைய டாலரைத் தவறாகக் கையாண்டு முழிக்க வேண்டாம். இன்று பல நாடுகளிலும் இது வந்து விட்டது. பெரிய நகரங்களில் நேரமின்மையால் மக்களுக்கு இதைப் போன்ற அமைப்புகள் மிகவும் உதவியாக உள்ளன. அதிகம் உபயோகிக்க உபயோகிக்க, கட்டணமும் குறைந்து கொண்டே வரும். உதாரணத்திற்கு, மாத்த்தில் 3 முறை மட்டுமே பயணித்தால் சலுகை கிடையாது. 40 முறை பயணித்தீர்கள் என்று வைத்துக் கொள்வோம், மாதக் கட்டணத்தை மனதில் கொண்டு, உங்களுக்கு சலுகை கட்டணம் அளிக்கப்படும். இதனாலேயே இவ்வகை கார்டுகளை ”ஸ்மார்ட் கார்ட்” என்கிறார்கள்.

அங்கத்தினர் சேவைகள்

அங்கத்தினர் கார்டுகள் இல்லையேல் வட அமெரிக்காவில் உள்ள பெரிய வியாபாரங்களில் எத்தனை பணமிருந்தாலும் எதுவும் வாங்க முடியாது. ஸாம்ஸ் க்ளப், காஸ்ட்கோ போன்ற அமைப்புகளின் கடைகளில் நுழையவே அங்கத்தினராகி அந்நிறுவனங்கள் கொடுக்கும் அடையாள அட்டைகளைக் காட்ட வேண்டும். அதன் பின் பொருட்களை வாங்குவதற்கு அவர்களுடைய அல்லது அவர்கள் விரும்புகிற கடனட்டை அல்லது ஒரு வங்கியின் டெபிட் அட்டை தேவை. அவர்கள் ஒன்றும் ராக்கெட் விற்கவில்லை. சாதாரண வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களையே விற்கிறார்கள். மலிவு விலையில் பொருட்களை வாங்கப் பணத்தைவிட, இந்த விசுவாச கார்டுகள் தேவை. அதே போல, பல தங்கும் விடுதிகளில் (Hotels) விசுவாச கார்டுகளுக்கு பணத்தைவிட மவுசு அதிகம். இவ்வகை கார்டுகள் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு பிடித்த அறை, பிடித்த அறையில் உள்ள வசதிகள், ஏன் முன்பதிவே இல்லாமல்கூட அறை என்று பல சலுகைகள் கிட்டும் சாத்தியம். அதிகம் இவற்றை உபயோகப்படுத்துவதால், சில இரவுகளுக்குள் கட்டணமும் விலக்கு. அப்படியே விடுமுறைக்காக அந்த ஹோட்டலின் கிளைகளில் எதிலேனும் தங்கினால், சில கேளிக்கைகளும் இலவசம். பணத்தால் இதை வாங்க முடியாது – விசுவாசத்தால் முடியும்.

இதுவே இன்று பெரிதாக வளர்ந்து, பெரிய கடைகள் உலகம் முழுவதும் தங்களுடைய விசுவாச கார்டுகளை உருவாக்கியுள்ளன. உதாரணம், சென்னை சில்க்ஸ் கார்டு கொண்டு அங்கு வாங்கும் ஜவுளிக்கு தள்ளுபடி பெறலாம். இன்று, பெட்ரோல் பம்புகள், மின்னணு சாதனக் கடைகள், வீட்டு சாமான் கடைகள் என்று எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு கார்டுகளை அள்ளி வீசுகிறார்கள். சற்று வேறு விதமாய் பல கடைகள் ‘அன்பளிப்பு கார்டுகள்’ (gift cards) என்று விற்கிறார்கள். இன்று இது ரொம்ப சகஜமான விஷயம். ஒரு குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு செல்லும் போது, இப்படிப்பட்ட அன்பளிப்பு கார்டுகள், குழந்தைக்கு அந்த கடையில் பிடித்ததை வாங்கிக் கொள்ள உதவியாக இருக்கிறது. அன்பளிப்பு கார்டுகள் மூலம், பணத்திற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட கடையில் பொருட்களை வாங்க உபயோகிக்கலாம். இந்த கார்டை வாங்க, முதலில் அதை டெபிட், கிரெடிட் அல்லது பணத்தை வைத்து வாங்க வேண்டும்.

விமானப் புள்ளி கார்டுகள்

அதிகம் விமானப் பயணம் செய்வோர் (Air warriors) சேர்ப்பது ஒரு வகை ’புள்ளிகள்’ (points). பெரும்பாலும் ஓரளவுக்குப் (200,000 புள்ளிகள்) புள்ளிகள் சேர்த்து விட்டால், இலவச விமானப் பயணம் மற்றும் குடும்பத்தோருக்கும் டிக்கெட் என்று சலுகைகள் புள்ளிகளுக்கு ஈடாகக் கிட்டும். அதாவது, புள்ளிகளைச் செலவழித்து மேற்படி வசதிகளைப் பெறலாம். புள்ளிகள் பணத்துக்கு நிகராக ஆகின்றன. ஆனால் மேற்படி புள்ளிகளை வேறெங்கும் சுதந்திரமாக, நம் விருப்பத்துக்குச் செலவழித்து விட முடியாது. அந்த விமான நிறுவனங்களோடு வர்த்தக உறவு கொண்ட சில வியாபார நிறுவனங்கள் இந்தப் புள்ளிகளை அட்டையிலிருந்து கழித்துக் கொண்டு தம் விற்பனைப் பொருட்களை உங்களுக்கு வழங்க முன்வரலாம்.

விமானக் கம்பெனிகள் இணைந்து இது போன்ற புள்ளி கார்டுகளை அளிக்கும் போது சற்று வசீகரமாகவே உள்ளது. இவ்வகை புள்ளிகளைச் செலவழித்து, ஹோட்டலில் இலவசமாகத் தங்கலாம், வாடகை கார்களை ஓட்டுவற்காக எடுக்கலாம், ஏன், புத்தகங்கள் கூட வாங்கலாம். இன்று இணையத்தில், புள்ளி மாற்று வேவைகள் வந்துவிட்டன. அதாவது, உதாரணத்திற்கு, விமானப் புள்ளிகளை சென்னை சில்க்கிற்கு மாற்றி ஜவுளி எடுக்கலாம்.

இவற்றை நாம் பொதுவாக இரண்டாம் கட்ட கார்டுகள் என்று சொல்லலாம். ஏனென்றால், இவ்வகை கார்டுகளை வாங்க முதலில் கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டை உபயோகித்திருக்க வேண்டும். எல்லாம் வாடிக்கையாளர்களின் விசுவாசத்தை சம்பாதிக்க உருவாக்கப்பட்ட உத்திகள். முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம், காகிதப் பணத்தை வைத்துதான் ஒரு 10 ஆண்டுகளுக்கு முன் மேற்சொன்ன எல்லா சேவைகளையும் வாங்கி வந்தோம். காகிதப் பணம் முதலில் க்ரெடிட் கார்டுகளின் பின்னே மறைந்து நின்றது. பிறகு, இவ்வகை விசுவாச கார்டுகள் மற்றும் அன்பளிப்பு கார்டுகளால், இன்னொரு தடுப்புக்குப் பின்னே மறைகிறது. காகிதப் பணம், சினிமாவிலும், மற்ற சட்ட விரோத விஷயங்களில் மட்டுமே இன்னும் விளையாடுகிறது. மற்றபடி அன்றாட வாழ்க்கை நிதி பரிமாற்றங்கள் விசா/மாஸ்டர் மற்றும் வங்கிகளின் வலையமைப்பில் பல வகை அலங்காரங்களோடு நடந்து முடிந்து விடுகின்றன. எதன் மூலம் இந்த அட்டைகள் அங்கீகாரம் பெற்று வர்த்தக உறவுகளை நடத்துகின்றனவோ, அந்தக் காகிதப் பணம் இன்று சந்தேகத்துடன் பார்க்கப் படும் பொருளாகப் பல இடங்களில் ஆகியிருக்கிறது. அது கள்ளப் பணம் என்பதால் மட்டும் சந்தேகிக்கப்படுவதில்லை, கறுப்புப் பணம், பலவகை சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு கணக்கு, பதிவு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்ட பரிமாற்றங்களுக்குப் பயன்படுவதால் காகிதப் பணம் என்பது மெல்ல மெல்ல ஐயத்துக்குட்படுகிறது. அதன் பல பதிலி வடிவங்களோ மெல்ல மெல்ல கூடுதல் நம்பகத்தன்மை பெறுகின்றன.

இதில் சில தத்துவப் பிரச்சினைகள் உண்டு. அவற்றை நீங்கள் ஊகித்திருக்கலாம்.

அரசாங்கத்தைவிட பெரிசு

சற்று யோசிப்போம்.

விசா நொடிக்கு 10,000 நிதி பரிமாற்றங்களை கையாள்கிறது. இணையத்திற்கு அடுத்தபடியாக உலகில் மிகப் பெரிய வலையமைப்பு விசாவுடையது. செப்டம்பர் 30, 2010 ல் விசாவின் அறிக்கைப்படி, 3 மாதத்திற்கு $828 பில்லியன் டாலர்கள் நிதி பரிமாற்றங்களைக் கையாண்டுள்ளது. அதாவது, வருடத்திற்கு 3 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான தொகையைக் கையாளும் நிறுவனம் விசா.

மாஸ்டர்கார்டின் அதே கால கட்ட 3 மாத பரிமாற்றங்கள் $528 பில்லியன்கள். வருடத்திற்கு ஏறக்குறைய 2 டிரில்லியன் டாலர்கள்.

இவ்விரண்டு நிறுவனக்கள் வருடத்திற்கு ஏறக்குறைய 5 டிரில்லியன் டாலர்கள் நிதி பரிமாற்றங்களைக் கையாளுகின்றன. 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மொத்த தேசிய வருவாய் (US GDP) 14.12 டிரில்லியன் டாலர்கள். இதுவரை அமெரிக்க அரசாங்கத்துக்கு இணையாக எந்த ஒரு நிறுவனமும் நிதியைக் கையாளவில்லை. என்றாலும் உலகில் உள்ள இதர அரசாங்கங்களை விடச் சக்தி வாய்ந்த நிறுவனங்களாய் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் உருவெடுக்கத் தொடங்கிவிட்டன. அதனால் என்ன என்று நினைக்கக் கூடும். எந்த வித நிதிக் கொள்கையையும் இவர்களைக் கலக்காமல், விட்டு விட்டு முடிவெடுக்க முடியாத நிலையை உண்டு பண்ணிவிட்டார்கள்.

வங்கிகள், வியாபாரம், அரசாங்கம், உற்பத்தி, ஆராய்ச்சி, பொருளாதாரப் பகிர்வு (distribution) , போக்குவரத்து, தொலைத் தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி – நான் இங்கு மந்திரி பதவிகளைச் சொல்லவில்லை – எல்லா துறைகளிலும் கிரெடிட் கார்டின் ஆளுமை மறுக்க முடியாதது. சொல்லப் போனால், ஒரு குட்டி அரசாங்கமே கிரெடிட் கார்டுக்குள் அடக்கம் – அத்தனை சக்தி வாய்ந்த அமைப்பு இது.

இவ்வளவு பெரிய கடனட்டை நிறுவனங்கள் என்னும் சக்திகளையும் ஆட்டம் காணச் செய்யும் சக்தி ஒரே ஒரு ஊடகத்திற்கு மட்டுமே உண்டு – அது இணையம்.

(தொடரும்)