வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும், புத்தக வெளியீட்டு விழா

ரு பேராசிரியருக்கு அவரிடம் கல்வி பயின்றவர்கள் அவரைப் பாராட்டியோ அல்லது அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவோ கட்டுரைகள் எழுதி அதை ஒரு தொகுப்பாக சமர்ப்பணம் செய்வது பொதுவாக பல்கலைக்கழக வட்டங்களில் Festschrift என்ற வழக்கம். அது ஒரு கொண்டாட்ட நிகழ்வு.

அந்த வகையில், “வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்” என்றதொரு புத்தகத் தொகுப்பை பா.அகிலன், திலீப் குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் தொகுத்து சந்தியா பதிப்பகப் பிரசுரமாக வெளியிட்டுள்ளனர். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாண்டு கால எழுத்துப் பணியைக் கொண்டாடும் இந்தப் புத்தகம் அவரைப் போற்றுவதையோ அல்லது அவரை ஒரு பேராளுமையாகவோ நிலை நிறுத்துவதையோ தன் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. வெங்கட் சாமிநாதனைக் கடுமையாக விமரிசிக்கும் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

release2

பதிப்பாசிரியர்கள் தங்கள் நோக்கத்தை முன்னுரையில் இப்படி விவரிக்கிறார்கள்-

“வெ.சா. ஒரு தனிப்பயணம். பெரும்பாலான நேரங்களில் துணையின்றிய, எதனோடும் சமரஞ் செய்யாத, தனது கருத்துக்களையும், எதிர்கருத்துக்களையும் சலியாது தாவிச் செல்லும் ஒரு நெடும் பயணம். வாதங்களாலும் விவாதங்களாலும் வெ.சா கட்டமைத்த மேற்படி விமர்சன வெளியுள், அதன் கருத்தாடற் பரப்பினுள் வெ.சா.வை நிறுத்தி அவரது வரலாற்று வகிபாத்திரத்தை மதிப்பிடுதலும், பதிவு செய்தலுமான ஒரு முயற்சியே இத் தொகுப்பிற்கான அடிப்படையாகும். அது, அவர் உருவாக்க விரும்பிய கருத்தாடற் களத்தையும், அவரையும் கௌரவிப்பதற்கான ஒரு முயற்சியுமாகும்”

Festschrift வரலாற்றில் இப்படியொரு தொகுப்பு மிக அரிதாகவே வந்திருக்கும். ஒரு விமரிசகனை அவனைக் குறித்த விமரிசனங்களூடே அறிவது என்பது ஆபத்தான எத்தனம். ஆனால் துணிந்து இந்தக் காரியத்தில் இறங்கியுள்ளனர் தொகுப்பாசிரியர்கள்; ஆயினும் வெங்கட் சாமிநாதன் தன்னைக் குறித்த விமரிசனங்களைத் தாண்டி உயர்ந்தே நிற்கிறார்.

இந்தத் தொகுப்பில், “வெங்கட் சாமிநாதன்: தமிழ் இலக்கியவெளியில் ஒரு காட்டுக் குதிரை” என்ற கட்டுரையில் திருமாவளவன், “வெங்கட் சாமிநாதனுக்கு முன் “விமர்சனமரபு” என்று சொல்லும்படியான ஒன்று இருந்ததா என்பது இன்றைய வாசகன் எதிர்கொள்ள வேண்டிய முதற் கேள்வி,” என்று எம். வேதசகாயகுமாரை மேற்கோள் காட்டுகிறார் (பக்கம் 283). அவரே எழுதுவது போல், “இலக்கியம், இசை, நாடகம், கூத்து, ஓவியம், சிற்பம், சினிமா தொடங்கி கம்பியூட்டரில் டிஜிட்டல் படைப்புகள் வரை பரந்து விரிந்த” கட்டற்ற வெளியில் ஒரு புதிய பாதையைத் தேடும் வெங்கட் சாமிநாதனின் விமரிசனப் பார்வை விவாதங்களூடே வெளிப்படுவது பொருத்தமாகவே இருக்கிறது.

ஒரு நல்ல விமரிசகன் கேள்விகளை எழுப்புகிறான்; அவனது கேள்விகளுக்கான நியாயங்கள் மறைந்து, அவனது அவசியம் இல்லாமல் போவதே அந்த விமரிசகனின் வெற்றி என்று புத்தக வெளியீட்டு விழாவில் குறிப்பிட்ட சமகால விமரிசகர்களில் முக்கியமானவரான ஜெயமோகன், தன் ஒவ்வொரு கட்டுரையிலும் தான் வெங்கட் சாமிநாதன் எழுப்பிய கேள்விகளை எதிர்கொள்வதாகக் கூறினார். தமிழின் விமரிசனக் களத்தின் எல்லைகள் இன்றுள்ள நிலையில் அவரால் அமைக்கப்பட்ட ஒன்று என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. விழாவில் ஆற்றப்பட்ட உரைகளைக் கேட்கும்போதும் இந்தத் தொகுப்பைப் படிக்கும்போதும், அவர் நம் அறிவுத் தளத்தில் நிலையான இடத்துக்குரியவர் என்ற எண்ணம் எழுகிறது. எங்கெல்லாம் மரபின் அவசியமும் படைப்பூக்கத்தின் புதுப்பொலிவும் பேசப்படுகிறதோ, அங்கெல்லாம் வெங்கட் சாமிநாதனின் கேள்விகள் எதிர்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகவே இருக்கும்.

“வெங்கட் சாமிநாதன்- வாதங்களும் விவாதங்களும்” என்ற இந்தத் தொகுதி அவரது பங்களிப்பை அனைத்து கோணங்களிலும் அணுகி, அதன் நிறை குறைகளைப் பதிவு செய்திருக்கிறது. தமிழ் பண்பாட்டின் ஐம்பது ஆண்டு கால விமரிசனக் குரலை அதன் எதிர்வினைகளின் வழியாக அடையாளப்படுத்தும் இந்த நூல் இவ்வாண்டு மட்டுமல்ல, தமிழில் இதுவரை வெளிவந்த எந்த நூலுக்கும் இணையான முக்கியத்துவம் கொண்ட ஒன்று. இதைத் தொகுத்த திரு பா.அகிலன், திலீப் குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியவர்கள் நம் நன்றிக்குரியவர்கள்.

-oOo-

இனி தேவநேயப் பாவாணர் அரங்கில் 30.4.2011 அன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் சில குறிப்புகள்:

சிறப்புரை ஆற்றியவர்களில் நாஞ்சில் நாடனின் பேச்சு உணர்ச்சி மேலோங்கி இருந்தது – எழுத்தாளர்களே விமரிசகர்களாக இயங்க வேண்டிய அவல நிலை தற்காலத்தில் இருக்கிறது என்பது அவரது பேச்சின் அடிநாதமாக இருந்தது. விருப்பு வெறுப்பற்று, எந்த அச்சமுமில்லாமல் ஒரு படைப்பை, அதை எதிர்கொள்ளும் சமூகத்தை விமரிசிப்பவர்கள் இப்போது அருகிப் போய்விட்டார்கள் என்றார் அவர். ஒரு விமரிசகனின் அவசியத்தை வலியுறுத்திய, அவனது இழப்பை இந்த சமூகம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற கவலையை வெளிப்படுத்திய அவரது உரை நேரமின்மை காரணமாக தடை செய்யப்பட்டது ஒரு குறையே ஆகும். அவரது பேச்சு மிக முக்கியமான ஒன்று.

nanjil2

வெளி ரங்கராஜன் நாடகத்துறையில் வெங்கட் சாமிநாதனின் பங்களிப்பு குறித்து ஒரு ஆய்வுரை அளித்தார். தமிழின் நவீன நாடகக் கலைஞர்கள் வெங்கட் சாமிநாதனுடனான விவாதங்கள் வாயிலாகத் தங்கள் கலையை முன்னெடுத்துச் செல்ல நேர்ந்தது குறித்த அவரது உரை ஒரு ஆவணத்துக்குரிய சான்றுகளைக் கொண்டதாக இருந்தது. ஆனால், எழுதி வைத்துப் படிக்கப்பட்ட காரணத்தால் நாஞ்சில் நாடனின் உணர்ச்சிப் பெருக்கை அடுத்து வந்த அவரது கருத்து செறிந்த உரை வசீகரமான்தாக இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். கி.ஆ.சச்சிதானந்தம், சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன் உட்பட பலர் எழுதிய ஏராளமான கடிதங்களைக் கோப்புகளாக வைத்திருந்ததாகவும், சி.சு.செல்லப்பாவிடம் இருந்த கடிதங்கள் அனைத்தையும் பதிப்பித்தால் அது தமிழ் இலக்கியத்தின் போக்கை விவரிக்கும் அரிய தொகுப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஜெயமோகன் வெங்கட் சாமிநாதனை ஒரு விமரிசகராகவே அணுகினார். அவரது பேச்சு அரங்கிலிருந்தவர்களை எழுந்து அமரச் செய்தது என்றுதான் சொல்ல வேண்டும். தங்கு தடையில்லாமல் ஆணித்தரமாக அமைந்த அவரது உரை, வெங்கட் சாமிநாதனின் விமரிசன எல்லைகளை விவரிப்பதாக இருந்தது. ஒரு வகையில், அவர் வெங்கட் சாமிநாதனின் ஐம்பது ஆண்டு கால ஆக்கத்தை அதன் நான்கு சாரங்களில் தொகுத்தமைத்தார் என்று சொல்ல வேண்டும். ஜெயமொகனுக்கே உரிய உத்வேகமான உணர்ச்சிப் பிழம்பான தொனியில் இது நிகழ்த்தப்பட்டது. விழா நாயகனைப் புகழ்வதுதான் பொது வழக்கம் – புகழாதவர்களும் அவரது நிறைகளைப் பேசுவதுடன் மட்டுமே நிறுத்தி கொள்வார்கள். ஆனால் வெங்கட் சாமிநாதனை ஒரு முழுமையான விமரிசகராக அணுகிய ஜெயமோகன், அவரது விமரிசனத்துக்கான தேவை இல்லாமல் போவதே விமரிசகனாக வெங்கட் சாமிநாதனின் வெற்றியாக இருக்கும் என்று கூறினார்.

jemo1

கலை, படைப்பு என்ற களத்தில் இது சாத்தியப்படலாம்- அதுவே சந்தேகம்தான். என்றைக்கு மரபின் நிழல் விலகப் போகிறது? புத்துருவம் பெறும்போதும் தன் இயல்பை இழக்காமலிருப்பது என்பது எந்தக் கலைக்கும், பண்பாட்டுக்கும் ஒரு சவாலாகவே இருக்கும். அரவிந்தன் நீலகண்டன் பேசும்போது குறிப்பிட்டார், மரபைக் காக்கும்போது அது அடிப்படைவாதமாக மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது, அதை எப்படிச் செய்வது என்பதை யோசிக்கும்போது அங்கே வெங்கட் சாமிநாதன் முக்கியமானவராக இருக்கிறார் என்று. வெங்கட் சாமிநாதனின் பங்களிப்பு என்று பார்க்கும்போது இது ஒரு முக்கியமான கருத்தாகும்.

ஜெயமோகனின் உரை அரங்கிலும் சரி, தொகுப்பிலும் சரி, உத்வேகமான ஒன்றாக இருக்கிறது. வெங்கட் சாமிநாதனை விமரிசனப் பார்வையுடன் அணுகுபவர்கள் அவரை எந்தப் புள்ளிகளில் எதிர்கொள்ள வேண்டும் என்று வரையறுப்பதாக இருகிறது. அன்று ஜெயமோகன் பேசியதும், தொகுப்பில் அறுபத்தைந்து பக்க அளவில் உள்ள அவரது கட்டுரையும். வெங்கட் சாமிநாதனுக்கு ஒரு சித்தாந்த தளம் அமைத்து, அப்படி ஒன்று இருக்க முடியும் என்றால், அதைத் தெளிவுபடுத்துவதில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்.

செங்கதிரின் உரை சுருக்கமானதாக இருந்தது. நாட்டார் கதை ஒன்றைச் சொல்லி, கலைஞனுக்கு இயல்பாகவே அதீத மரியாதையால் கட்டுண்டு விடாமல் கேள்வி கேட்பதும், நகைச்சுவையின் வழியாக தன் பண்பாட்டை முன்னெடுத்துச் செல்வதும் இயல்பாக இருந்தது என்று சொன்னார். வெங்கட் சாமிநாதனை இந்தக் கதையில் எப்படி பொருத்துகிறார் என்பது புரியவில்லை- அதை முனைந்தாரா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. ஆனால், வெங்கட் சாமிநாதன் ஒரு படைப்பின், பண்பாட்டின் தனித்தன்மையை அறிய முனைந்தார் என்பது அவரது கருத்தாக இருந்திருக்கலாம்.

speakers

கவிஞர் திலகபாமா கவிஞர்களுக்கே உரிய அறச்சீற்றத்துடன் மேடையேறினாலும் அவரது பேச்சு வெங்கட் சாமிநாதனை நேசத்துடன் அணுகுவதாக இருந்தது. அவர் பேசியதில், ஒரு எழுத்தாளன் விமரிசகனாக இருப்பதில் உள்ள பிரச்சினைகளை விவரித்தது கவனிக்கப்பட வேண்டிய கருத்தாகும்.

திரு.பா.அகிலன், தமிழின் கலை மற்றும் பண்பாட்டைப் பேசுகையில் வெங்கட் சாமிநாதன் தன் படைப்புகளின் மூலம் எப்படி ஒரு தவிர்க்க முடியாத பேராளுமையாக இருக்கிறார் என்பதை யாழ் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு பட்டப்படிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசியது நெஞ்சைத் தைப்பதாக இருந்தது. வெங்கட் சாமிநாதன் தமிழ்ப் பண்பாட்டின் பல்வேறு கூறுகளை ஆவணப்படுத்தித் தன் விமரிசனங்களின் வழியாக அவற்றின் இயல்பை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முனைந்தார், இதில் அவரே முன்னோடி என்று பா.அகிலன் பேசியது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

விழா நிறைவில் வெங்கட் சாமிநாதன் தன் வழக்கப்படி சுய எள்ளலுடன் பேசினார். அவரது பேச்சில், பேச்சு என்று சொல்ல முடியாது, வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து பேசுவது போன்ற தொனியில் அவர் தனக்கா இவ்வளவு அங்கீகாரம் என்ற பிரமிப்பை வெளிப்படுத்தினார். யாரும் சொல்லக்கூடிய விஷயத்தையே தானும் சொல்வதாகவும், அதற்கு இப்படியொரு முக்கியத்துவம் கிடைக்கிறதென்றால் தமிழ்ச் சூழலின் நலிவுற்ற நிலையே அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று நகைச்சுவையாகச் சுட்டுவது போலிருந்தது அவரது பேச்சு.

“நான் நல்ல எழுத்தாளன் இல்லை, இப்போது நல்ல பேச்சாளன் இல்லை என்பதையும் நிருபிக்கப் போகிறேன்,” “மைக் கையில் கிடைத்தால் பேச விரும்பாத தமிழனும் இருக்க முடியுமா? ஆனால் நான் இருக்கிறேன். ஒரு சமயம் அதுவே நான் தமிழன் இல்லை என்பதைக் காட்டுகிறதோ என்னவோ!” என்று அவரது எள்ளல்களுக்குக் குறைவில்லை. இயல்பான நகைச்சுவையோடு பேசினார்.

vesa

இரண்டு இடங்களில் உணர்ச்சி வசப்பட்டார். தன் முதல் புத்தகம் பிரசுரமாகக் காரணமாயிருந்த மூவர் பெயரையும் சொன்னார் (பாலையும் வாழையும்’ வெளியிட்ட மூவர்- மணி, ஜெயபாலன், டேவிட் சந்திரசேகர்.) அவர்களைத் தேடிப் பிடித்து இந்த விழாவுக்கு அழைத்து வர முயற்சி செய்தோம், ஆனால் அவர்களால் வர முடியவில்லை என்று சொல்லும்போது குரல் கம்மியது. அதே போல், அவர் தன் மனைவி இப்போது இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார் என்று சொல்லும்போது அவர் குரலில் வருத்தம் வெளிப்படையாகத் தெரிந்தது – நான் எழுதியதில் பணமும் கிடையாது, என்னைச் சுற்றி கையெழுத்து கேட்டு நிற்கும் கூட்டமும் கிடையாது. இப்போது இருந்திருந்தால் இத்தனை பேரை பார்க்கும்போது நம் ஆளும் ஏதோ செய்திருக்கிறான் என்று பெருமைப்பட்டிருப்பாள், என்கிற மாதிரி பேசினார்.

தஞ்சை பிரகாஷ் குறித்துப் பேசும்போது, “எனக்கு அவரது இழப்பு மிகப் பெரிய ஒன்று- அவர் இல்லாமல் என்னால் எப்படி மிச்ச நாட்களை வாழ முடியும் என்று அப்போது தோன்றியது. ஆனால் காலம் எல்லாவற்றையும் கூட்டிக் கொண்டு போய் விடுகிறது, நாமும் ஏதேதோ சமரசம் செய்துகொண்டு நம் வாழ்க்கையைத் தொடர்கிறோம்” என்று உளப்பூர்வமாகப் பேசினார். தஞ்சை பிரகாஷ் மீது அவர் வைத்திருந்த அன்பு அவரது பேச்சில் வெளிப்பட்டது.

எல்லாரும் வெசாவுக்கு அப்புறம் சமரசமில்லாமல் அவர் முன்வைக்கும் விமரிசன மரபு நின்று விடுமே என்று கவலைப்பட்டார்கள். நாஞ்சில் நாடன்கூட அதைக் குறிப்பிட்டார். அவருக்குப் பிடித்த திருச்செந்தாழை “இப்போதெல்லாம் விமரிசன மதிப்புரை வாங்குவதற்கு சிறு தெய்வங்களை திருப்திப்படுத்துவது போல் பாடுபட வேண்டியிருக்கிறது” என்று சொன்னாராம். நேர்மையான விமரிசனம் இருக்கககூடிய சூழல் இப்போது இல்லை, அதை செய்யக்கூடியவர்களும் இல்லை என்று ஏறத்தாழ அனைவரும் வருந்தினர்.

விழா முடிந்து வீட்டுக்கு வந்து புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது, அ.முத்துலிங்கம் எழுதியதைப் படிக்க நேர்ந்தது; “அவர் குணங்களில் உயர்ந்து நிற்பது நேர்மையும், மனிதநேயமும். ஐம்பது வருடங்களுக்கு மேலாக எழுதிக்கொண்டிருக்கும் வெ.சா.வை இன்றைக்கும் பலர் பூரணமாக அறிந்திருக்கவில்லை… வெ.சா. போன்ற பெரிய ஆளுமையை அறிய அவரிடமுள்ள நேர்மை, மனிதநேயம் பற்றியும் அறிந்திருக்க வேண்டும். அது இல்லாமல் அவரை முற்றிலும் புரிந்து கொள்ள இயலாது,” என்று எழுதுகிறார் அவர்.

அனுபவத்தில் மட்டுமே விரியும் ரத்தினச் சுருக்கமான எழுத்துக்குச் சொந்தக்காரர் அ.முத்துலிங்கம். விழாவில் பேசிய அனைவரும் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டது வெங்கட் சாமிநாதனின் சமரசமில்லாத நேர்மையை. ஆனால் அதே நேர்மை – யாருக்கும் பயப்படாமல் எந்த சார்பும் இல்லாமல் ஒருவன் தனக்குத் தெரிந்த உண்மையைப் பேசினாலே போதுமானது – அப்படி தன்னால் ஐம்பதாண்டு காலமாக வாழ்ந்து காட்ட முடிந்ததையே வெங்கட் சாமிநாதன் நமக்கு விட்டுச் செல்லக் கூடிய விழுமியமாக நினைக்கிறார் என்று அவரது நட்பான உரையாடலில் அறிந்தபோது அவரது கறாரான நேர்மை கனிந்த மனித நேயத்தின் மறுபக்கம் என்று புரிந்தது.

இதை மனதில் வைத்துக் கொண்டு படிக்கிறபோது, உண்மை என்பது பன்முக அறிதல்கள் ஊடாடும் வனம், அதில் தற்சார்பற்ற நேர்ப்பார்வையில் மட்டும் புலப்படும் பாதை என்ற தரிசனத்தைத் தருகிறது “வெங்கட் சாமிநாதன்-வாதங்களும் விவாதங்களும்” என்ற இந்த நூல்.

கட்டுரையிலுள்ள ஒளிப்படங்கள் நன்றி – ஆர்.பாலாஜிராஜ், தமிழ் ஸ்டுடியோ

மேலும் ஒளிப்படங்களுக்கு:
தமிழ் ஸ்டுடியோ
ஆர்.பாலாஜிராஜ்