வியத்தலும் உண்டே: அ.முத்துலிங்கத்துடன் ஒரு தினம்

amu_youthஅ.முத்துலிங்கத்தை எனக்கு முன்பே தெரியும். ‘அக்கா’ தொகுப்பு வெளிவந்த 1964 என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். சில பல காலமாகவே பொஸ்ரன் பக்கம் அவர் நடமாடுவதாக ஈழத்து இணைய நண்பர் தெரிவித்திருந்தார். அப்பொழுது நடந்த வலைப் பதிவர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக வரவழைக்க எண்ணினேன். அவர் அலிஸ் மன்றோவின் நேர்காணலுக்கு அலைந்ததை “ஆயிரம் பொன்” என்று எழுதியது, என் நினைவுக்கு வந்ததாலோ, அல்லது என்னுடைய மின்னஞ்சல் எரிதமாகவோ மாறியதாலோ அது சித்திக்கவேயில்லை.

ஒருவரை சந்திக்க செல்லுமுன் அவரின் எழுத்தை படித்து, கேள்வி தயாரித்துக் கொள்ளும் என்னுடைய வழக்கப்படி, முத்துலிங்கத்தையும் வாசிக்க ஆரம்பித்தேன். இரண்டு தெரு தள்ளிதானே இருக்கிறார்… என்றாவது பேரங்காடியிலோ, பொருட்காட்சியிலோ, அகஸ்மாத்தாக சிக்கிவிடுவார் என்னும் நம்பிக்கை இருந்தது.

பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் புத்தக விமர்சனம் எழுதுவார்கள். இசையை ரசித்ததை பதிவார்கள். வம்பு, சண்டை, கிசுகிசு, பகிடி, குத்து எல்லாம் சம அளவில் கலந்து விவாதம் புரிவார்கள். நாவல் புனைவார்கள். சிலர் அதன் மேற்சென்று காப்பியம் படைப்பார்கள். ஒரிருவர் அதனினும் அடுத்த கட்டமாக பின்நவீனத்துவம் தருவார்கள். இவற்றில் ஏதாவது ஒன்றைப் படித்துவிட்டு, ‘ஏன் புரியாமல் எழுதுகிறீர்கள்?’, ‘தற்கால இலக்கிய போக்கு குறித்த உங்கள் கருத்து!’ என்று நேர்காணலைத் துவங்குவது எளிது.

ஆனால், முத்துலிங்கத்துடன் எனக்குப் பிரச்சினை ஏற்பட்டது. எழுதிய கதைகள் புரிந்தன. ‘பூமிக்கு பாதி வயது’ என்று எழுதிய ‘உண்மை (மட்டுமே) கலந்த நாட்குறிப்புகள்’ சம்பவங்களில் உள்ளடி, காட்டமான கருத்து என்று எதுவும் கிடைக்கவில்லை.

குளிரூட்டப்பட்ட அறையில் நிலவும் தன்மைக்கும் மின்விசிறி மட்டும் இயங்கும் இடத்துக்கும் உள்ள வித்தியாசம் போல் இருந்தது. மின்விசிறி சத்தம் போடும்; வேகமாக சுழலும்; பக்கங்களைப் பறக்கடிக்கும்; காற்றடித்து மேலே பலமாக உரசும்; எனினும் வெப்பத்தைக் குறைக்காமல் வெறும் ஓசையாக மட்டுமே வியர்க்கும். ஏர் கண்டிஷனரோ அமைதியாக இயங்கி சாந்தமாக்கி, சமநிலைக்குக் கொணர்ந்து வெளி வெயில் நிலையை மறக்கடித்து, புதுச்சூழலுக்கு இட்டுச் செல்லும். முத்துலிங்கம் எழுத்து ஏசி எழுத்து.

இவரைப் போய் சந்திப்பதா என்று சந்திப்பதற்கு முன்பே ஏமாற்றம் வந்து, அவரை மின்மடலில் தொல்லைப்படுத்துவதை நிறுத்திவிட்டேன்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வரும் அறிவிப்பு வந்தது. பாஸ்டன் பக்க ஏற்பாடுகளை நான் கவனித்துக் கொள்வதால், ஜெயமோகனின் பயணத்திட்டம் குறித்து — அ முத்துலிங்கத்தின் வினாவுடன், இ-மெயில் கிடைக்கப் பெற்றேன். கனடாவில் இருந்து முத்துலிங்கம் பதினாறாம் தேதி வருவதாக விமானத்தில் முன்பதிவு செய்திருக்கிறார். அவர் இந்தப் பக்கம் வரும்போது, அந்தப் பக்கம் டொரொண்டோவிற்கு செல்லுமாறு ஜெமோவின் சுற்றுலா அமைந்திருந்தது. பாஸ்டனில் சந்திக்க இயலாது என்பதில் இருவருக்கும் வருத்தம்.

எல்லோருடனும் மொத்தமாக பகுளத்தில் சந்திப்பது போர் (Bore) வகை. காரின் தனிமையில், பயண குஷியில் மனதிற்குப் பிடித்த எழுத்தாளரை மடக்கிப் போட்டு, அவரின் மூளையைக் குடைவது சுவாரசிய வகை. அதிர்ஷ்டவசமாக இரண்டாம் வகை அமைந்தது. முத்துலிங்கத்தை பொஸ்டனில் இருந்து கனெக்டிகட்டுக்கு மூன்று மணி நேர பயணமாக அழைத்துச் செல்வதற்கு ஒத்துக் கொண்டார்.

a-muttulingamசென்னைத் தமிழர்களோடு தொலைபேசுவது, எனக்குக் கை வந்த கலை. ஆங்கிலத்திற்கு நடுவே தமிழ் வரும். நாகர்கோவில்காரர்களோடு பேசுவதற்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். காலச்சுவடு கண்ணனோடு முதன்முறையாக உரையாடும்போது, அந்த சுகத்தை அறியப் பெற்றேன். மூன்றாவதாக, ஈழத்தமிழரோடு ‘புரியலியே’ என்பதைத் தர்மசங்கடம் கலந்த குற்றவுணர்ச்சியோடு முனகுவது வாடிக்கை. இவரிடம் அந்தப் பிரச்சினை எனக்கில்லை. எழுத்தைப் போலவே, நிறுத்தி நிதானித்த குரலில் பேசுகிறார். தமிழகத்திற்கும் ஓரளவு பொதுவான நடை. நான் விழிப்பதை விழியமாகப் பார்த்தது போல், சமயோசிதமாக ஆங்கிலத்திற்கு மாறுதல் என்று உரையாடலை செலுத்தினார்.

‘கூட எத்தனை பேர் வருகிறார்கள்?’, ‘உங்களின் மகளுக்கு எத்தனை வயது?’, ‘இரவு திரும்பி விடுவோம் அல்லவா?’ என்று எதிர்பார்ப்புகளை கேள்விகள் வாயிலாக விடையறிந்து கொண்டார். இந்திய நேரப்படி நாங்கள் தாமதமாக சென்றபோதும், பதற்றமடைந்து ஒரு தடவை கூட செல்பேசியில் அழையாத பாங்குடன், பொறுமை காத்திருந்தார். வந்திருந்த அனைவரையும் அறிமுகம் வாங்கி, அதன் பிறகு பேசத்துவங்கும்போது, ஒவ்வொருவரின் பெயர் சொல்லியே, உரையாடலைத் துவங்கினார்.

சாதாரணமாக ஆறு பேர் செல்லும் பெரிய ஜீப்புகளில், ஓட்டுநரும், அவரின் முன்பக்க சகாவும் தனி ஆவர்த்தனம் நடத்த, பின்பக்கம் இருவர் சயனித்துவிட, நடுவில் வருபவர் ஏதாவது வேடிக்கை பார்ப்பது சகஜம். பின்னிருக்கையில் அமர்ந்த வெட்டிப்பயலின் கேள்வியை, தான் மட்டும் உடனடியாக பதிலாக்காமல், முன்னிருக்கையாளர்களை நோக்கி அதை வீசினார்.

‘என்ன பாலா, வார்த்தைகளுக்கு முக்கியத்துவமே வேண்டாமென்கிறாரே? கதையின் அடர்த்தியும் போக்கும் முடிவும்தான் தூக்கி நிறுத்தும்கிறாரே (வெட்டி) பாலாஜி! நீங்க அவ்வாறு நினைத்ததுண்டா?’

மகாராஜாவின் ரயில் வண்டி‘யின் முன்னுரை நிழலாடுகிறது:

ஜீன் ஜெனே என்ற பிரபல பிரெ…ஞ்சு எழுத்தாளர் சொல்கிறார்: ‘வார்த்தை என்று ஒன்று இருந்தால் அது உபயோகப்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடாது; ஒரு வார்த்தை அரைகுறை வயதாக அழிய நேரிடுவது சோக மானது. உயர்ந்த கலைஞனின் பங்கு எந்த வார்த்தைக்கும் அதன் மதிப்பை உயர்த்துவதுதான்.’

முன்பின் அறியாதவர்களைப் பார்த்தவுடன் கையை இறுக்கமாகக் கட்டிக் கொள்வதும், வலதுகை விரல்கள் வாயைச் சுற்றி மூடியவாறு அமைதி காப்பதும் இயல்பு. பல காலமாக பழகிய நண்பர்களுடன் பேசுவது போல் முத்துலிங்கத்திடம் அந்த பாதுகாப்பு + எச்சரிக்கை உணர்வு செய்கையில் இல்லை.

‘இந்த GPS கனிவான பெண் குரலில் பேசுகிறது. கனடாவில் தமிழில் பேசும் வழிகாட்டி வந்துவிட்டது தெரியுமா?’ என்று தெரியாத செய்தியை நுழைத்து தயங்கும் பேச்சைத் தழைக்கவைத்தார். ‘தமிழ் இலக்கியத்தை மேற்கத்தியப் புழக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இன்னும் நிறைய பேர் தேவை.’ என்று வழிகாட்டியாக உற்சாகமூட்டினார். தன் வாசிப்பு, பழக்கவழக்கம், இணைய செயல்பாடு எல்லாவற்றிற்கும் சுருக்கமாகவும் விவரமாகவும் பதில்களை யோசித்த பிறகு வழங்கினார்.

காலையில் இரண்டு மணி நேரமாவது எழுதுகிறார். வலையில் இருப்பது பெரும்பாலும் மின்னஞ்சல்களுக்காக மட்டுமே. பதிவுகள், சஞ்சிகைகள் போன்றவை தொடர்ந்து வாசிக்க எழுத்துருக்களும் ஒளிர்திரைகளும் ஒத்துழைப்பதில்லை. அடுத்த சந்திப்புக்கு எவரைத் தொடர்பு கொள்ளலாம் என்பதில் சிறப்பு கவனம், எப்போதும் இருக்கும். ஆப்பிரிக்க அனுபவங்களைத் தொகுத்து நூலாக்க வேண்டும். புனைகதை எழுதியவுடன் செதுக்கல் தொடங்கும். ஒவ்வொரு வரியிலும், வார்த்தைகளும் அமைப்பும் மாறும்; நீக்கப்படும்.

“சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடக் கடினம். ஒவ்வொரு எழுத்தையும் செதுக்க வேண்டியதாக இருக்கும்”, என்கிறார்.

இப்பொழுது ‘வம்ச விருத்தி’ யில் அ முத்துலிங்கம் சொன்னது பொருத்தமாகப் படுகிறது. சொல்கிறேன்:

அமெரிக்காவில் ஒரு தலைசிறந்த நாவிதரிடம் ஒருவர் தலை அலங்காரம் செய்து கொள்ளப் போனாராம். அந்த நாவிதர் ஐந்து நிமிடங்களிலேயே காரியத்தை முடித்து விட்டு நூறு டொலர் கேட்டாராம். திடுக்கிட்டுப் போன அந்த வாடிக்கையாளர் ‘என்ன இது? நாலு முடியை வெட்டியதற்கு நூறு டொலரா?’ என்று கேட்டார். அதற்கு அந்த நாவிதர் ‘ஐயா, இந்த சன்மானம் வெட்டிய தலைமுடியின் அளவை வைத்து தீர்மானிக்கப்படவில்லை; வெட்டாமல் தலையிலே விட்டுவைத்த சிகையை வைத்தல்லவோ நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறினாராம்.

நான் இந்தக் கதைகளை அந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன். சொல்ல வந்த விஷயத்தை தெம்பாகப் பிடித்துக்கொண்டு மீதியைத் தயவு தாட்சண்யம் இன்றி நீக்கிவிட்டிருக்கிறேன்.

வெகு அரிதாகவே புன்னகைக்கிறார். எளிய கருத்தைத் தடாலடியாக சொன்னாலும் ‘அப்படியா?’ என்னும் ஆச்சரியம் மேலோங்க, மேல்விவரங்களை ஆர்வத்துடன் கொக்கி போட்டு, மற்றவர் எண்ணங்களை முழுமையாக்கி, ஒத்துக் கொள்கிறார். மாற்று சிந்தனை இருந்தாலும், கடுமையாக முரண்பட்டு வாக்குவாதங்களுக்குள் நுழையாமல், சொன்னவரின் சிறுகுறிப்பை, விரிவாக்கி, கிரகிக்கிறார்.

ஒரு நல்ல நாவல் எழுதிவிட்டு, வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை நிறைவாகப் பெற்றுவிடும் மேற்கத்திய எழுத்தாளரோடு தமிழகத்தின் நிலையை எண்ணிக் கவலை கொள்கிறார். வறுமை என்னும் அவலமே அவரை வருத்தப்பட வைக்கிறது. அவரின் பேட்டியை மேற்கோள் காட்டினால்:

‘நெஞ்சு பொறுக்குதில்லையே ‘ பாடலில் வரும் ‘கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் ‘ என்ற வரிகள் சொல்லும் தத்துவத்தை யாரால் மறக்கமுடியும். வறுமையின் காரணம் தெரியாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய கொடுமை.

சினிமா பற்றி பேச்சு திரும்புகிறது. தினமும் ஒரு திரைப்படம். இரவில் இரண்டு மணி நேரம் அதற்காக ஒதுக்குகிறார். தமிழ்ப்படம், இரானிய கலைப்படம், சமீபத்திய ஹாலிவு சூப்பர் ஹிட் என்று எந்த பாரபட்சமும் இல்லாமல் பார்க்கிறார். திரைக்கதை எழுத வந்த வாய்ப்புகளை ஒத்துக்கொள்ளவில்லை. சினிமாவில் நுழைவது குறித்து பெரிய அளவில் ஆர்வம் இல்லை.

‘தற்போது யாரை வாசிக்கறீர்கள்?’

மூன்று பேரைச் சொல்வேன்:

1. Sadia Shepard – The girl from Foreign

2. Ameen Merchant: The Silent Raga

3. The Toss of a Lemon by Padma Viswanathan.

நெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்துத் தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன?’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு?’

சந்திப்புக்குச் சென்றுவிட்டோம். முப்பது பேருக்கு மேல் நிறைந்த வரவேற்பறை. ‘திண்ணை’ கோபால் ராஜாராம் வரவேற்று பேசுகிறார். ஜெயமோகன் அறிமுகம் முடிகிறது. முத்துலிங்கம் ஆரம்பிக்கிறார்:

“தமிழில் நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகன்”, என்னும் தடாலடி துவக்கம். தொடர்ந்து தொடர்ந்து ‘சுவருடன் பேசும் மனித’ரில் குறிப்பிட்ட தனி நாடு இருந்தால்தான் மொழி தழைத்தோங்கும் கருத்து விவாதிக்கப்படுகிறது.

amu_jemo

பத்தாயிரக் கணக்கில் மேகங்கள் இருக்கிறது. ஒன்றில் விமானத்தை செலுத்தினால் வேகம் கொள்ளும்; இன்னொன்று கீழே இறக்கிவிடும்; மற்றொன்று அனைத்தையும் மறக்கடிக்கும்; பிறிதொன்று அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும். முத்துலிங்கத்தின் எழுத்து தெளிந்த நீல வானத்திற்கு நடுவே பல்வேறு மேகங்களைக் கொண்டது. எழுத்தாளரை முழுவதுமாக வாசித்துவிட்டால் அவரைப் புரிந்து கொள்வோம் என்றில்லை. ஆனால், அ முத்துலிங்கம் விஷயத்தில் அவரின அனைத்து ஆக்கங்களும் வாசித்தால், அவரைக் குறித்த முழுமையான ரேடார் சித்திரமாவது கிடைக்கும்.

முந்தைய நேர்காணலில் முத்துலிங்கம் எழுதியது:

சிறு வயதில் எங்கள் ஊருக்கு ஒரு சர்க்கஸ் வந்திருந்தது. நாங்கள் பார்க்கப் போனோம். அதிலே ஒரு கோமாளி மேசையை தாண்டிப் பாய்வான். ஒவ்வொரு முறை அவன் பாயும்போதும் மேசை விரிப்பு நைஸாக நழுவி கீழே விழும். ஒரே சிரிப்பு.

வீட்டில் வந்து நான் இதைச் செய்ய முயற்சித்தபோது மூக்கில் அடிபட்டதுதான் மிச்சம். அந்தக் கோமாளி அதைச் செய்தபோது மிகச் சுலபம் போல தோன்றியது. ஆனால் அதற்குப் பின்னால் 20 வருட பயிற்சி இருப்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவர் செய்முறையைப் பார்க்கும்போது அது இலகுவானதாக தோன்றினால் அது அவருடைய அப்பியாசத்தையே காட்டும்.

ஒரு பெரிய எழுத்தாளர் சொல்வார், ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடும்போதுதான் தரை தெரியும் என்று. ஆழமில்லை என்று குதிக்கவும் தோன்றும். ஆனால் நிஜத்தில் அதுதான் மிகவும் ஆழமான ஆறு.

ஜெயமோகன் பிறிதொரு சந்திப்பில் சொன்னதுடன் முடிப்பது பொருத்தம்: ‘சிலர் கரடுமுரடா மட்டும் சொன்னா இலக்கியம்னு நெனச்சு ஏமாந்துடறாங்க. எளிமை வெல்லும்.’

2 Replies to “வியத்தலும் உண்டே: அ.முத்துலிங்கத்துடன் ஒரு தினம்”

Comments are closed.