இலவச இணையம் – எப்படி சாத்தியம்? – இறுதி பாகம்

இக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதி | இரண்டாம் பகுதி

எல்லாவற்றையும் இலவசமாக நுகர்வோரிடம் ஒப்படைத்தல்

நுகர்வோர்/வாடிக்கையாளர்களிடம் உள்ள உச்சக்கட்ட நம்பிக்கையின் அடையாளம் இது. இந்த உத்தியில் எல்லாவற்றையும் நுகர்வோரிடமே விட்டு விடுகிறார்கள். ஈபே மற்றும் அமேஸான் போன்ற கட்டுப்பாடு முறைகள் எல்லாம் கிடையாது. இந்த உத்தியில் பெறும் வெற்றி கண்டுள்ள அமைப்பு www.craigslist.org என்ற வகைப்படுத்தப்பட்ட விளம்பரத்தளம். இப்படித்தான் விளம்பரம் செய்ய வேண்டும் என்ற வரைமுறைகள் எல்லாம் கிடையாது. க்ரேய்க் நியுமார்க் (Craig Newmark) இந்த சேவையை கலிபோர்னியாவில் ஒரு சின்ன அலுவலகத்தில் தொடங்கி, இன்று அது மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளது. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் விற்கலாம். விற்போர் சுய தணிக்கை முறைகளை கையாளுவார்கள் என்ற நம்பிக்கை க்ரேய்க்கிற்கு. அவருடைய உத்தி என்னவென்றால், நுகர்வோர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள். குறுக்கே யாரும் நின்று தடைகளை உருவாக்கக் கூடாது. (Do not be in their way.)

இது போன்ற உத்தி, பல வகை விவாத அமைப்புகளில் இணையத்தில் பிரபலமாக இருந்தாலும், விளம்பரத்திற்கு யாரும் சிந்தித்துக் கூட பார்க்காத புதுமை – அதனால் வெற்றி. இதில் சில பிரச்சினைகளும் எழுந்துள்ளன. உதாரணத்திற்கு, கனடாவில் சில மாநில அரசுகள் க்ரேக்ஸ்லிஸ்ட் மேலாண்மையை அழைத்து அதன் சில கட்டுப்பாடற்ற விளம்பர முறைகளை விசாரித்து வருகின்றன. விபச்சார விளம்பரங்கள் கூட தணிக்கையற்று வெளியாகிவிடுகின்றன என்று அரசு கவலைப்படுகிறது.

கூட்டமூலத்துவம் (crowdsourcing) – ஒரு அலசல்

பலவகை இணைய இலவச முறைகளைப் பற்றியும் சில விஷயங்களைப் பார்த்தோம். படிப்போருக்கு எல்லாம் நல்முகமாகவே பட்டால், அதில் உங்களது தவறுஎதுவும் இல்லை. இந்த முறைகளின் கெட்ட முகத்தை நாம் ஆராயவே இல்லை (க்ரேய்க்ஸ்லிஸ்ட் தவிர). அமேஸான், பெஸ்ட்பை போன்ற இணையதளங்களின் மறைமுக விற்பனை வாதம் இதுதான்: “நாங்கள் பல தரமான பொருள்களையும் விற்கிறோம். சிலவற்றில் பிரச்சினைகள் இருப்பது நிஜம். உங்களின் கருத்துக்களை மதித்து எங்கள் இணைத்தளங்களில் தைரியமாக வெளியிடுகிறோம். பார்த்து, ஆராய்ந்து நீங்கள் முடிவெடுக்க உதவுவதே எங்கள் குறிக்கோள்.” சட்டென்று பார்த்தால், நம்பும்படியாகத்தான் இருக்கிறது.

இந்த மாதிரி விமர்சன கலாசாரம் புத்தகங்கள், சினிமாவிலிருந்து வந்த வெகுஜன விற்பனைத் தந்திரம். பள்ளி மாணவனாக இருந்த போது எனக்கு நேர்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஆங்கிலப் பாடம் ஒன்றின் புத்தகம் படு அறுவையாக இருந்தது. கடைசி வரிசைகளில் அமர்ந்த எனக்கு வேடிக்கையாக ஒரு ஐடியா தோன்றி செயல்படுத்தியும் விட்டேன். அந்த புத்தகத்தை திறந்து, அமெரிக்க மென் அட்டை புத்தக ஸ்டைலில், “ஆஹா, இந்த புத்தகத்திற்கு 5 நட்சத்திரம் கொடுக்கிறேன்”, “சீக்கிரத்தில் ஒரு ஹாலிவுட் படம் உங்கள் அருகே தியேட்டரில்!”, “இரண்டு கட்டை விரல் உயர்த்தி!” என்று எழுதித் தள்ளினேன். அதைப் பார்த்த சக மாணவர்கள் இதை ஒரு ஜோக்காக பார்த்து, வகுப்பு நடக்கும்போது, என் புத்தகத்தை பிடிங்கி, ஒருவர் ஒருவராக படித்து சிரித்து, ஆசிரியர் வரை சென்று விட்டது. நல்ல வேளை, அவரும் சிரித்து விட்டார்!

கூட்ட மூலத்துவ உத்தியை பலதரப்பட்ட இணையதளங்களும் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டன. இந்த உத்தியை சற்று கூர்ந்து ஆராய்வோம். முதலில் ஒரு புத்தகமோ, அல்லது சினிமாவோ வெளி வந்தால், என்ன நடக்கிறது? ரஜினி ரசிகர்கள் அவரது பட முதல் நாளன்று அவரது போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடுகிறார்கள். இப்படி இவர்கள் செய்வதால், அது நல்ல படமா? அதே போல ஹாரி பாட்டர் புத்தகம் வெளி வந்தவுடன் அதைப் பற்றி எழுதுபவர்கள் யார்? ஜே.கே.ரவுலிங்கின் ரசிகர்கள். புத்தகமோ அல்லது திரைப்படமோ பிடிக்காவிட்டால், அதைப் பற்றி எழுதுபவர்கள் மிகச் சிலரே. அத்துடன் இந்த கூட்ட முறையில், வெளிப்படுவது இரண்டு தீவிர எண்ணங்கள். ஒன்று, ‘தெய்வமே’ என்று புகழ்ந்துரைக்கும் தீவிரம், இல்லையேல் வெறுப்புற்று, ‘குப்பையே’ என்று இகழ்ந்துரைக்கும் தீவிரம். உண்மையான நிலை இதற்கு நடுவில் எங்கோ சிக்கி வெளிவருவதே இல்லை.

2009-இல் போர்சுகலில் உள்ள மதீரா பல்கலைக்கழகம் அமேஸானில் வாங்கிய 20,000 பொருட்களைப் பற்றிய கருத்துக்களை ஆராய்ந்தது (நன்றி: ஸையண்டிஃபிக் அமெரிக்கன்). ஆராய்ச்சியில் தெரிய வந்தது என்னவென்றால், ஒரு சிறிய எண்ணிக்கையானோர் திரும்பத் திரும்ப விமர்சனம் எழுதிய வண்ணம் இருந்திருக்கிறார்கள். இவர்கள் சாதாரண மக்களின் எண்ணங்களை அமுக்கி விடுகிறார்கள். இதைப் போன்று இணையத்தில் விமர்சனம் செய்பவர்கள் சாதாரண நுகர்வோரைவிட அதிகம் இணையத்தில் மேய்ந்து கொண்டே இருப்பவர்கள். சில இணையதளங்கள் இதைப் போன்ற விமர்சகர்களை வடிகட்டுகிறார்கள். ஆனால், பல தளங்கள் செய்வதில்லை.

இந்த உத்தியின் கெட்ட முகம் இது. சில தளங்களில் (http://www.yelp.com/) பலவகை வியாபாரங்களை விமர்சிக்கிறார்கள். பல வியாபாரங்களும் இப்படிப்பட்ட விமர்சனங்களை விளம்பரத்துக்காக உபயோகிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இணையதளத்தைச் சேர்ந்த விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்களைப் பற்றிய கெட்ட விமர்சனம் வந்தால் வடிகட்டத் தயங்குவதில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். இணைய விமர்சனங்களை அப்படியே நம்பிவிடக் கூடாது. மேலும் நம் அனைவரிடம் ஒரு கூட்டு நடத்தை (groupthinking) இருப்பது மறுக்க முடியாது. ஒரு பொது அமைப்பில் மிகவும் ஜாக்கிரதையாக எழுதுவது இயற்கை. எழுதும் எழுத்தின் பின்னணியை (reading between the lines) ஆராய்வது மிக அவசியம்.

இணையத்தில் எல்லாம் சுகமா?

millionsusegசரி, வெற்றி கண்டுள்ள கூகிள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களில் எல்லாம் பிரமாதமாக நடப்பது போல சொல்கிறீர்களே என்று சிலர் நினைக்கலாம். முக்கால்வாசி நல்லபடியாக இருந்தாலும், அங்கங்கே உதைக்கவும் செய்கிறது. வணிகம் பற்றி எழுதும் மேற்கத்திய எழுத்தாளர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. காற்றடித்தால் ஒரு பத்தகம், மழையடித்தால் இன்னொன்று, இரண்டும் அடித்தால் மூன்றாவது புத்தகம், காற்றும், மழையும் இல்லாமல் வெயிலடித்தால் நான்காவது புத்தகம் இருக்கவே இருக்கிறது! இவர்களைக் குறை சொல்லி புண்ணியம் இல்லை. ஏனென்றால், விஞ்ஞானம் போல, என்றும் (குறைந்தபட்சம், சில பத்தாண்டுகள்) மாறாத கொள்கைகள் கொண்டதல்ல வணிகம். ஓரளவிற்கு, பொருளாதாரம்/வணிகம் ஒரு குறையுள்ள விஞ்ஞானம் (imperfect science) என்று கொள்ளலாம். அறிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் மாறிக் கொண்டே வரும். மிகவும் முக்கியம், எந்தப் பாடம் நமக்கு நல்ல பாடம் என்று முடிவெடுப்பது.

ஃபேஸ்புக் சமீபத்தில் அதன் profiles ஐ மாற்றியது. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றையே இதன் மூலம் எழுதிவிடலாம். சமூக வலையமைப்புக்கு நாங்கள் வழிவகுக்கிறோம் என்று பறை சாற்றும் ஃபேஸ்புக், எத்தனை பேரை கேட்டு இதைச் செய்தது? அதே போல, பல தருணங்களில் ஃபேஸ்புக், அதன் நுகர்வோரின் அந்தரங்கம் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நுகர்வோர் சொல்வதையே செய்கிறோம் என்று சொல்லி வரும் கூகிள், வேவ் (wave) என்ற ஜிமெயில் சேவையை தொடங்கி நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டது. உதாரணத்திற்கு பல நூறு நண்பர்கள், உறவினர்கள், மற்றும் பலரோடு நீங்கள் மின்னஞ்சல் தொடர்பு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வேவ், உங்களை இணையத்தில் யார் தொடரலாம் என்று தானே முடிவு செய்யத் தொடங்கியது. நுகர்வோர் கொதித்து எழ, கூகிள் பின் வாங்கியது. இது போல, பல்வேறு முயற்சிகளில் கூகிள் சமரசம் செய்து பின்வாங்கியும் உள்ளது. இதில் தெரிவது என்னவென்றால், பெரிய நிறுவனங்களாக மாறும் பொழுது, பல இடங்களில் முன்போல் அல்லாமல் தவறுகள் நேரத்தான் செய்கிறது. இணையத்தில் எல்லாம் பூதக் கண்ணாடி வழியாக பார்க்க நேரும் பொழுது, அசடும் அதிகமாகவே தெரியும்!

உருப்படியான யோசனைகள்

இக்கட்டுரையில் பல வித வியாபார உத்திகளைப் படித்திருப்பீர்கள். எல்லா உத்திகளும் எல்லா வணிகங்களுக்கும் பொருந்தாது. சமீபத்தில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மிக அழகாக பேனோரோமிக் காமிராக்களைக் கொண்டு பல சுற்றுலாத் தலங்களையும் அதன் இணையதளத்தில் சேர்த்துள்ளது. இலவசமாக, உங்களது கணினியிலிருந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலை இன்ச் இன்ச்சாக பார்க்கலாம் – அதே போல ராமேஸ்வரம் ராமசாமி கோவிலையும் ஒரு ஆராய்ச்சியாளரைப் போல அலசலாம்.

http://www.view360.in/virtualtour/madurai/

இதைப் பார்த்து மேலும் சுற்றுலா பயணிகள் அதிகரிக்கும் என்பது இவர்களது கணிப்பு. இது ஒரு நல்ல முன்னேற்றம். அதே சமயம் தீவிரவாதிகள் இப்படிப்பட்ட காட்சித்தொகுப்புகளை, வரைபடங்களை உபயோகித்துக்கொண்டு குண்டுவெடிப்புகளைத் திட்டமிடலாம்.

எந்த ஒரு உத்தியும் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்யுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், இக்கட்டுரையில் விளக்கியுள்ள எல்லா உத்திகளிலும் ரிஸ்க் உள்ளதை மறுக்க முடியாது. ஆனால், இந்த உத்திகள் சில, உங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதையும் மறுக்க முடியாது.

1. உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களுடைய தயாரிப்புகளை உபயோகிக்கும்போது பெருமைப்படுகிறார்களா என்பதை முதலில் நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். இதற்கு மேற்சொன்ன பல இலவச முறைகளை இணையம் கொண்டு நீங்கள் அறிய முயற்சிக்கலாம்.

2. வாடிக்கையாளர்கள் அதிகம் உபயோகிக்கும் கையேடுகள் போன்ற குறிப்பு விஷயங்களை (reference materials) உங்கள் இணைத்தளத்தில் வெளியிட முயற்சி செய்யுங்கள்.

3. வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிரச்சினைகளை விவாதிக்க உங்கள் இணைத்தளத்தில் (வெளியுலகிற்கு தெரியாமலிருக்க பதிவு முறையும் வைத்துக் கொள்ளலாம்) வழி செய்யுங்கள். புது வாடிக்கையாளர்கள் மற்றவர்களின் பிரச்சினைகளைத் தேடி வழி அறியும் முறைகளை ஊக்குவியுங்கள்.

4. பல தயாரிப்பாளர்களின் பொருட்களை விற்கும் வியாபாரமாக இருந்தால், உங்கள் இணையதளத்தில் பொருட்களை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கும் முறைகளை அறிமுகப்படுத்துங்கள்.

5. உங்கள் தயாரிப்புகளை வித்தியாசமாக உபயோகம் செய்யும் வாடிக்கையாளர்களின் அணுகுமுறைகளை பிரகடனம் செய்யுங்கள். இந்த வகை செய்திகளில் வாடிக்கையாளர்தான் ஹீரோ – உங்கள் தயாரிப்பு அல்ல.

6. சில இலவச முறைகளில் சமூகப் பொறுப்பும் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது. இன்னும், 10 ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் இந்தியாவில் மின்சார பற்றாக்குறை இருக்க வாய்ப்பு உள்ளது. இன்று இந்தியாவில் பலரிடமும் செல்பேசிகள் உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் பகுதி வாரியாக மின்வெட்டு வெவ்வேறு சமயங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏன் உங்கள் இணைத்தளத்தில் இதை வெளியிடுவதுடன், இந்த பட்டியலை, செல்பேசியில் தரவிறக்கம் செய்யும் வசதியையும் இலவசமாக செய்து கொடுக்கக் கூடாது? உங்களது நிறுவனத்திற்கு அது ஒரு நல்ல பேரையும் ஏற்படுத்தும். இதைச் செயல்படுத்த அதிகம் செலவும் ஆகாது.

7. நம் நகரங்களில் பஸ் எந்த நேரத்திற்கு எந்த நிறுத்துமிடத்திற்கு வரும் என்று பலருக்கும் தெரியாது. உங்கள் நிறுவனம், அருகில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றுடன் இணைந்து, இதை ஒரு இலவச இணைய/செல்பேசி சேவையாக செய்யக் கூடாது? ஒவ்வோடு பஸ் நிறுத்துமிடத்திலும் ஒரு எளிய குறியீடு தேவை. அத்துடன் உங்கள் சிறிய விளம்பரமும் இருக்கலாம். செல்பேசியில் ஒரு குறிப்பிட்ட எண்ணைக் கூப்பிட்டால், அடுத்த பஸ் எப்பொழுது வரும் என்று ஒரு சேவை அமைத்தால், உங்கள் நிறுவனம் பற்றிய மதிப்பு மக்களிடையே உயரும். இந்த சேவையை பொறியியல் கல்லூரியே பராமரிக்கட்டும். அதற்கான வருடாந்திர செலவை மட்டும் உங்கள் நிறுவனம் ஏற்றுக் கொள்ளலாம்.

8. பல தலைமுறை பொருட்களை தயாரிக்கும் (multi-generation products) நிறுவனத்தில் வேலை செய்கிறீர்களா? பழைய தலைமுறை பொருட்களின் வாடிக்கையாளர்கள் எத்தனை சதவீதம் என்று கணக்கிடுங்கள். அவை ஒரு 2 சதவீதத்தைவிட குறைவாக இருந்தால், அந்த பராமரிப்பு சேவையை இலவசமாக்குங்கள். இந்த மாற்றத்தின் மதிப்பைக் குறைவாக மதிப்பிடாதீர்கள். மற்ற வியாபரங்களுடன் (நேர்முக பயன்பாட்டாளர்கள் அல்லாத) வேலை செய்யும் தொழிலாக இருந்தால், இந்த உத்தியை தைரியமாகப் பயன்படுத்தலாம். இதைப்பற்றி உங்கள் இணைத்தளத்தில் அதிகம் விளம்பரம் செய்யுங்கள். அடுத்த தலைமுறை பொருட்களுக்கு மேலும் வாடிக்கையாளர்கள் மாறுவதைப் பார்க்கலாம்.

9. வாடிக்கையாளர்கள் பாராட்டு தினம் என்று வங்கிகள் முதல் எல்லா வியாபாரங்களும் ஒரு சம்பிரதாயம் போல செய்து வருகிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியது ‘வாடிக்கையாளர்கள் கருத்து தினம்’ (Customer feedback day). வாடிக்கையாளர்களர்களை ஒரு மூன்றாம் நிறுவனம் மூலம் உங்கள் பொருட்களில் உள்ள குறைகளைப் பற்றி விவாதிக்கச் சொல்லுங்கள். மேலும் உங்கள் மார்க்கெடிங் திட்டங்களைப் பற்றி அவர்களின் கருத்துக்களைக் கேளுங்கள்.

10. உங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு விவசாயப் பொருட்களை, கச்சா பொருளாக உபயோகிக்கிறதா? இடைத்தரகர்களை நீக்கி/நிறுத்தி, விவசாயிகளுடன் நேரடித் தொடர்பு முயற்சிகளில் ஈடுபடுங்கள். ஐடிசி செய்வது போல, இலவச இணையம் மற்றும் இணைத்தளம் உருவாக்கி அவர்களின் வெற்றிக்கும் வழி செய்யுங்கள்.

முடிவுரை

வணிகத்துறை என்றும் மாறும் ஒரு துறை. இக்கட்டுரையில் எழுதியவை இன்று நல்ல ஒரு எடுத்துக்காட்டாக வெளிப்பட்டாலும், சில வருடங்களுக்குப் பின் செல்லாக்காசாக வாய்ப்புள்ளது. இணையம் புதிய வணிக முறைகளை புகுத்திக்கொண்டு வருகிறது. அதில் இன்று பயன் பெறுவது மிகவும் முக்கியம். எந்த ஒரு வியாபார முடிவும் உங்களது நிலைமையைப் பொருத்தே வேலை செய்யும் தன்மை கொண்டது. ஏதாவது ஒரு வழியில் உங்களது வியாபாரத்தைப் பற்றி வேறு முறையில் சிந்திக்க இக்கட்டுரை உதவினால், அதுவே உங்களின் வெற்றியின் முதல்படி.