பகுதி 02 – ஹூகோவ்: சீனாவின் வசிப்பிடப் பதிவு முறை

ஜெயந்தி சங்கர் சீனச் சமூகம், அரசியல் குறித்து எழுதும் ‘சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்’ என்ற இக்கட்டுரைத்தொடரின் இரண்டாவது கட்டுரை இது. முதல் கட்டுரையை இங்கே படிக்கலாம். இதே இதழில் வெளியாகியிருக்கும் ‘பாலையில் துவங்கிய நெடும்பயணம்’ என்ற கட்டுரை சீனர்களின் உளவியல், அரசியல் இவற்றில் மங்கோலியர்களின் பங்களிப்பைக் குறித்துப் பேசுகிறது.

சீனாவின் உள்நாட்டு இடப்பெயர்வுகளைக் குறித்து அறிய முனையும் ஒருவர் அதன் வரலாற்றுப் பின்னணியைக் கொஞ்சேமேனும் அறிவது அவசியமாகிறது. நாட்டின் எந்தப் பகுதியில் ஒருவர் வசிக்கிறார் என்பது குறித்து வசிப்புரிமை பெறுவது அங்கு மிக இன்றியமையாதது. இந்த வசிப்பிடப் பதிவு முறையை ‘ஹூகோவ்’ என்பார்கள்.

இந்த நிரந்தரவாச உரிமை ஏதோ நாடு விட்டு நாடு வந்தவர்களுக்கானதென்று கருதிவிட வேண்டாம். சொந்த நாட்டுக்குள்ளேயே வேறு ஊருக்கோ, மாநிலத்துக்கோ, குறிப்பாக சிற்றூரிலிருந்து பேரூருக்குப் போவோர் இதுபோன்ற வசிப்பு உரிமத்திற்கு விண்ணப்பித்துப் பெற்ற அடையாள அட்டையைக் கையில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மக்களுக்கு உணவு விநியோகம், இருப்பிட வசதிகளை அரசு தருவதற்காக இப்படிக் கணக்கு வைக்கிறது என்று ஒரு சாக்குச் சொல்ல இடம் உண்டு. அதுவல்ல மையக் காரணம். மக்களைக் கட்டுப்படுத்தல்தான் என்பது இன்றைய உண்மை.

சீனாவுக்கே உரியதான ஹூகோவ் சமீபத்தில் உருவான ஒன்றல்ல. பழஞ்சீனத்திலேயே குடும்பப் பதிவட்டை முறை இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் முன்னோர்கள், இறப்புகள், பிறப்புகள், குடும்பத்தினர் விவரங்கள், திருமணமானோர், குலப்பெயர், சொத்து விவரங்கள், தொழில்/வியாபார விவரங்களும் குடும்பப் பதிவட்டையில் இருந்தன. பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர்கள், வாழ்க்கைத் துணையின் பெயர், சொந்த ஊர் ஆகிய பல விவரங்களுடன் கூடவே எந்த வட்டாரத்தில் வசிக்கும் உரிமை பெற்றவர் என்று சுட்டுவதே தற்கால ஹூகோவ். சீனாவின் அதிகார வர்க்கம் இன்றை நேற்றையது அல்லவே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே சீன ஆட்சிமுறை அடுக்கடுக்காக அமைந்த அதிகாரிக் கூட்டத்தை நம்பியே இருந்திருக்கிறது.

பழஞ்சீனத் தத்துவஞானி லாட்ஸு சொல்வது போல ‘பிரமாண்ட நாட்டை நிர்வகிப்பது என்பது மிகச்சிறிய மீனைச் சமைப்பது போன்றது.’ சட்டங்களும் விதிமுறைகளும் இயற்றவும் அமுலாக்குவதுமே பெரிய சவால். ஏனெனில், வட்டார நிர்வாகமே மிகப் பெரியது. குவாங்தோங்கின் ஒரு சிறுநகரத்திலேயே 1 மில்லியன் பேர் வசிக்கிறார்கள். சீனத்துக்கு வெளியில் இருக்கும் சில மாநகரங்களின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் இது அதிகம். ஹென்னன் மாநிலத்தின் மக்கள்தொகை 100 மில்லியன். இது பல நாடுகளின் மக்கள் தொகையை விடவும் அதிகம்.

வரிவசூல், சமூகக் கட்டுப்பாடு, சமூகப் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, அரசியல், ரகசிய நடவடிக்கைகள், கட்டாயமாக இராணுவத்திற்கு ஆள் எடுப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு உதவிய குடும்பப் பதிவட்டை சீனாவில் ஸியா முடியாட்சி (கி.மு2100-1600) முதலே இருந்திருக்கிறது. படிப்படியாக நூற்றாண்டுகள் உருண்டோடியதில் குடும்ப அட்டையின் அடிப்படையில் நெடிய தலைமுறை இழைகளும், குலக் குழுக்களும் உருவாகின.

ஜோவ் முடியாட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்த போது ஸிமின் என்ற பெயரில் ஒரு அமைச்சர் இருந்தார். பிறப்புகள், இறப்புகள், குடியேற்றம், குடிவெளியேற்றம் போன்றவற்றைப் பதிந்து பாதுகாக்கும் பொறுப்பில் இவர் தான் இருந்தார். இந்த முறையில் இருக்கும் விதிமுறைகள் குறித்து எழுதப்பட்ட பதிவுகளின் மூன்று பிரதிகள் வெவ்வேறு இடங்களில் வைக்கப் பட்டிருந்தன.

முடியாட்சியின் நிர்வாகத் துறையின் செயல்பாடுகள் அனைத்துமே தலைநகரிலிருந்து சிற்றூர் இருக்கும் தூரத்தைப் பொருத்தே அமைந்தன. தலைநகருக்கு மிக அருகில் இருந்த அலுவலகத்திற்கு துபி என்று பெயர். தூரத்தில் இருப்பவற்றை ஸியாங் என்றும் ஸ்யூ என்றும் அழைத்தனர். இந்த ‘பாவோஜியா’ முறையில் தான் குடும்பங்களும் வகுக்கப்பட்டன. இவற்றைப் பற்றி வென்ஸியன் என்ற ஊரைச் சேர்ந்த டோங்காவ் என்பவர் ஹூகோவ் பற்றிய தனது ஆய்வுக்கட்டுரை ஒன்றில் எழுதி 1317ஆம் ஆண்டில் பிரசுரம் செய்தார்.

கி.மு 7ஆம் நூற்றாண்டில் சீனாவை ஆண்ட ச்சீ முடியாட்சியின் பிரதம மந்திரி குவான் ஜோங் நிதித்துறையின் பல்வேறு வரிகளையும் இராணுவத்திற்கு ஆளெடுப்பதற்கான விதிமுறைகளையும் இயற்றினார். வெவ்வேறு ஊர்களுக்கான வேறுபாடுகளுடன் அமைந்த இச்சட்டப்படி, உரிய முன்னனுமதியில்லாமல் ஊரை விட்டு வெளியே போக முடியாது; மற்ற ஊர்க்காரர் ஊருக்குள் வரவும் முடியாது. குடும்ப உறுப்பினர்கள் பிரிந்து சிதறுவதைத் தடுக்கும் முக்கிய நோக்கமும் இருந்ததால், யாரும் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூர் செல்லும் முன்னர் உரிய அனுமதி பெறுதல் வேண்டும். இவை குறித்தெல்லாம் ‘ஷாங் பிரபு நூல்’ என்ற ஏட்டில் ஷாங் யாங் என்பவர் விளக்கியிருக்கிறார்.

ஸியாவ் ஹே என்பவர்தான் ஹான் முடியாட்சியின் முதல் மாமன்னர். ஒன்பது அடிப்படை ‘ஹான்’ சட்டங்களுடன் கூடுதலாக ஒரு பகுதியை இயற்றிச் சேர்த்த இவரே, பல்வேறு வரிகளையும் இராணுவத்திற்கு ஆளெடுப்பதற்கும் விதிமுறைகளையும் கொண்ட தற்கால ‘ஹூகோவ் முறை’யின் துவக்கமாக இருந்தவர் என்றறியப்படுகிறார்.

சீனாவின் கம்யூனிஸ்டு கட்சி 1940களில் ஆட்சியமைத்த போது பொருளாதாரச் சமத்துவத்தைக் கொணர விரும்பியது. முக்கியமாக கிராமம் மற்றும் நகரத்துக்கு இடையில் நடக்கும் மக்களின் போக்குவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஹூகோவ் உதவும் என்று நம்பி 1950ஆம் ஆண்டில் முதன்முதலில் நடைமுறைக்குக் கொண்டு வந்தபோது வசிப்பிடம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் குடிமக்களைப் பிரித்தனர். சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் என்பதை விவசாய அல்லது விவசாயமில்லாத என்று மேலும் எளிமைப் படுத்திருந்தனர். உள்ளூர் அதிகாரிகளே குடிமக்களுக்கு பதிவட்டையைக் கொடுத்தனர். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு குடும்பப் பதிவட்டையைக் கொடுத்து விட்டு பூவுலகை விட்டுப் பிரிந்தனர். குடும்பப் பதிவட்டை என்பது வாரிசுரிமை கொண்ட குடும்பச் சொத்து போன்றே இருந்திருக்கிறது.

வளங்களை முறையாகப் பகிர்தல், மக்கள் குழுக்களை மேற்பார்வையிடுதல் ஆகியவை முக்கிய நோக்கங்களாக இருந்திருக்கின்றன. விவசாய ஹூகோவ் வைத்திருந்தோரில் நிலமில்லாத தொழிலாளிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நிலம் கிடைத்தது. விவசாயமல்லாத ஹூகோவ் அட்டை வைத்திருக்கும் குடிமக்களுக்கு சீன அரசாங்கமே அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் ரேஷன் முறையில் கொடுத்தது. வேலை வாய்ப்பு, மான்யத்தில் வீட்டு வசதி, இலவசக் கல்வி, சுகாதாரச் சலுகைகள், ஓய்வூதியம் போன்றவற்றையும் விவசாயத்தில் ஈடுபடாத குடிமக்களுக்கு அரசாங்கமே செய்து கொடுத்தது.

1952ஆம் ஆண்டில் குக்கிராமங்கள், கிராமங்கள், பின் சிற்றூர்களிலிருந்து நகரங்களுக்கும் பெருநகரங்களுக்கும் மாநகரங்களுக்கும் போக நினைத்த மக்களைத் தடுக்க பல்வேறு சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டன. அதற்கு முன்பு வரை இடப்பெயர்வுகளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் சீரற்றே இருந்தன.

1958ல் குடும்பப் பதிவட்டை மேலும் பல வட்டாரங்களில் நடைமுறைப்பட்ட போது எல்லோருக்கும் கிராமத் தொழிலாளி என்றோ நகரத் தொழிலாளி என்றோ ஒரு பொது அடையாளம் தான் இருந்தது. வேலை அல்லது வியாபார நோக்கில் கிராமம் மற்றும் சிற்றூரிலிருந்து நகரம் மற்றும் மாநகரத்துக்குச் செல்ல நினைப்போர் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை மிகவும் கடுமையாகக் கட்டுக்குள் வைக்கப்பட்டது. அப்போதெல்லாம் தன் மாநிலத்தை விட்டு வெளியேறி வேலை செய்ய நினைக்கும் தொழிலாளி எல்லைச் சாவடிகளில் ஆறு அடையாளச் சீட்டுகளைக் காட்ட வேண்டியிருக்கும். தன் மாநிலத்தை விட்டு வெளியில் வாழும் ஒருவருக்கு ரேஷனில் கொடுக்கப்படும் தானிய வகைகள், முதலாளி கொடுக்கும் வசிப்பிடம், சுகாதார/மருத்துவ மான்யம் போன்றவை மறுக்கப்படும். கல்வி, வேலை வாய்ப்பு, திருமணம் போன்ற அனைத்திலுமே இந்தப் பதிவட்டை முறை மெதுமெதுவாக ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தது.

ஹூகோவ் விதிமுறைகள் நகரவாசிகளுக்குக் கொடுத்த அளவிற்கு நன்மைகளைக் கிராமப்புற விவசாயிகளுக்குக் கொடுக்கவில்லை என்பது உண்மையே. அடுத்தடுத்த கட்டத்தில் நகரமயமாக்கலையும், நகரவாசிகளையும், நாட்டின் பொருளாதார மேம்பாட்டையும் மையப்படுத்தியே மாற்றங்கள் புகுத்தப்பட்டன. இவ்விவசாயிகள் தமது தானியங்கள் மற்றும் விளைபொருட்களை அரசுக்கே குறைந்த விலையில் விற்க வேண்டிருந்தது. வேலை நிமித்தம் தற்காலிகமாக நகரத்தில் வசித்துக் கொண்டு இடையிடையே ஊருக்குப் போய்த் திரும்பி அலுத்துப் போய், நிரந்தரமாக நகரத்துக்குக் குடிபெயர விரும்பியோர், நகர ஹூகோவ்விற்கு விண்ணப்பித்துக் காத்திருக்க வேண்டியிருந்தது. குறுகிய காலப் பயணத்தில் கிளம்பினால் கூட, ‘விஸா’ போலவே வசிப்பிடத்தில் முன்அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. இதெல்லாமே குடியானவர்களைச் சுதந்திரமாக வெளியூர்களுக்குப் போகவிடாமல் தடுத்தன.

குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் கடின உடலுழைப்பை வேகமாக உறிஞ்ச நகரங்கள், குறிப்பாக அரசாங்கம் எடுத்து நடத்திய தொழிற்சாலைகள் பெருந்தாகத்துடன் காத்திருந்தன. குடும்பப் பொருளாதார மேம்பாட்டுக்காக பெரிய எண்ணிக்கையில் கிராமப்புறங்களிலிருந்து வெளியேறியவர்கள் நரகங்களுக்குச் சென்றனர். ரஷ்யாவின் உள்நாட்டுக் கடவுச் சீட்டு முறையை ஒற்றி அமைக்கப்பட்ட ஹூகோவ்வை தொடக்கத்தில் அரசாங்கம் மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தியது. இறையாண்மையை மேலும் உறுதிப்படுத்தவே இம்முறையை அரசாங்கம் பயன்படுத்துகிறதென்று முன்பே பொருளாதார வல்லுனர்கள் சொன்னார்கள். ஆனால், காலவோட்டத்தில் எதிர்பாராத பலப்பல நெருக்கடிகள் முளைத்தெழுந்தன.

பஞ்ச காலத்தில், (1958-1962) அளிக்கப்பட்ட நகர வதிவுரிமையை வாழ்வுக்கும், கிராம வதிவுரிமையை சாவுக்கும் ஈடாக மக்க்ள் நினைத்தனர். இக்காலகட்டத்தில் 600 மில்லியன் கிராம ஹூகோவ் உரிமையாளர்கள் அனைவரையும் விவசாயக் குழுக்களாகப் பிரித்தது அரசு (கம்யூனிஸ்டு கட்சி). கூட்டு விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்ட இவர்கள் அறுவடைக்குப் பிறகு விளைச்சல் வரிகளையும் பகிர்ந்து தானியமாகவே கட்டினர். மிஞ்சியதைப் பகிர்ந்துண்டனர். இது மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் என்ற நிலை நீடித்தது. அறுவடையான தானியங்களில் பெரும்பகுதி வரிக்கே போனது. குறைந்த மகசூலும் கம்யூனிஸ்டுகள் காட்டிய பொய்க்கணக்குகளும், அதிக வரியையும், குறைந்த வருவாயையுமே கொணர்ந்ததால் குடியானவர்கள் பாடு மிகத் திண்டாட்டமாகிவிட்டது. குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்டமாகப் பட்டினி கிடந்தனர். 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பட்டினிச் சாவுக்கு பலியாகினர். அச்சாவுகளில் 95% கிராமப்புறங்களில் நிகழ்ந்தன. எல்லாத் தானியங்களும் நகரங்களுக்குப் போனது. ஆனால், உள்ளடங்கிய கிராமங்களில் கூட்டங்கூட்டமாக உயிரிழந்தோரைக் குறித்து நகரவாசிகள் அறியக்கூட இல்லை. நாட்டை ஆண்ட கம்யூனிசக் கட்சி மிகச் சாமர்த்தியமாக அந்த எண்ணிக்கைகளை மறைத்திருந்தது.

பட்டினியில் வாடிய பலர் நகரங்களுக்கு ஓடிச் சென்று பிச்சையெடுக்க நினைத்தனர். ஆனால், கடுமையான எல்லைப் பாதுகாப்பு அதை அனுமதிக்கவில்லை. அதையும் மீறி நகருக்குள் நுழைந்தோர் பிடிபட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். திருப்பி ஊருக்கு அனுப்பட்டு சில நாட்களிலேயே இறந்தனர். கிராமப்புறங்களில் நியமிக்கப்பட்டு, கிராம ஹூகோவ் அளிக்கப்பட்ட இராணுவ உயரதிகாரிகளுடைய குடும்ப உறுப்பினர்கள் பஞ்சப் பட்டினியால் இறக்க நேர்ந்த பிறகு தான் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் கவலைப்பட ஆரம்பித்தனர். ஹூகோவ்வைத் தளர்த்த கட்சித் தலைவரும் நெருக்கப் பட்டார். ஹூகோவ்வின் ஆகத் தீவிரத் தாக்கம் என்று இந்த பஞ்சகால நிகழ்வுகளைத் தான் சீனத்தில் இன்றும் சொல்வார்கள். இதே பஞ்சகாலத்தில் நகர ஹூகோவ் பெற்றிருந்தவர்கள் மத்திய அரசிடமிருந்து ரேஷன் மூலம் தடையின்றி பல்வேறு உணவுப்பொருட்களைப் பெற்றனர். ஒவ்வொருவருக்கும் ஒருநாளைக்கு வேண்டிய 1500 கலோரிகள் கிடைக்காவிட்டாலும் பட்டினி கிடக்காத அளவிற்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு குடிமகனுக்கும் அனுமதிக்கப்பட்ட ஊருக்குள் மட்டுமே வாழும் உரிமை இருந்தது. ஆனாலும், ஆங்காங்கே பரவலாகவே இச்சட்டம் மீறப்பட்டு வந்தது. கடலோர நகரங்களுக்கு கிராமத்தினர் இடம்பெயர ஊக்குவிக்கப்பட்டனர். நகரங்களில் தொழிலாளிகள் தேவைப்பட்டதால் சிற்சில சட்டத் திருத்தங்களுக்குப் பிறகு மேலும் சிலர் அனுமதியின்றி நகருக்குப் போகவும் அங்கே குடியேறவும் அனுமதிக்கப்பட்டனர். கொஞ்ச காலத்துக்கு எளிய கிராம மக்களுக்குச் சட்டத் திருத்தங்கள் உதவின என்றே சொல்ல வேண்டும்.

முதலீடுகளின் விநியோக முறை, நிலவிற்பனைச் சட்டங்கள், உள்ளூர் அரசதிகாரிகளுக்கான சலுகைகள் போன்றவற்றின் மூலம் சீன அரசாங்கம் நகரமயமாக்கலுக்குச் சாதகமாகவே செயல்பட்டது. அத்துடன், வேலைவாய்ப்பு, கல்வி, வியாபார வாய்ப்புகள், மேம்பட்ட வாழ்க்கைமுறைக்கான விழைவு போன்ற பலவற்றால் செலுத்தப்பட்டு இடம்பெயர்ந்தோர் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்குத் தமது வதிவிடங்களை விண்ணப்பித்து மாற்றிக் கொண்டார்கள்.

1960களிலும் 1970களிலும் அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களுக்காக நகரங்களை நோக்கிய மக்களின் நகர்வை கட்சி ஒடுக்கியது. கோட்பாட்டு மற்றும் அரசியல் காரணங்களை முன்வைத்து 1966-1976வரையில் நடந்த கலாசாரப்புரட்சியின் துவக்க காலங்களில் பெரியளவில் கிராமப்புறங்களுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப் பட்ட நகர இளையர்கள் 1980களின் மத்தியில் மீண்டும் நகரங்களுக்கு இடம்பெயர அனுமதிக்கப் பட்டதால் பெரும்பகுதியான இளைய சமுதாயம் ஆவலுடன் நகரங்களுக்கு திரும்பியது.

1970களிலும் 1980களிலும் விவசாயம் தனியார் வசம் சென்றது. அப்போது விவசாயத் தொழிலாளிகள் தேவைக்கதிகமாக இருந்தனர். நகரங்களிலோ தொழிற்துறைகளின் வளர்ச்சியால், தொழிலாளிகளின் தேவை மேலும் கூடியது. இந்நிலவரத்தைச் சமாளிக்க அதிகாரிகள் கிராமத்தாரை நகருக்குப் போக விட்டனர். தற்காலவாச உரிமைகள் வழங்கப்பட்டன. இவை தொழிலாளிகள் சொந்த ஊருக்கும் நகரத்துக்கும் போகவர உதவின. எல்லாமே ஒருசில ஆண்டுகளுக்குத் தான்.

பின் ஹூகோவ் மேலும் கடுமையாக்கப் பட்டது. நகரங்களுக்குள் புகுந்தாலே மக்கள் கைதானார்கள். சமூக மற்றும் அரசியல் குற்றவாளிகள், சந்தேகத்திற்குட்பட்ட நபர்கள் மற்றும் குழுவினரைக் கண்டுகொள்ளவும் இம்முறை தொடக்ககாலம் முதல் 2006 வரையிலும் கூட உதவியுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ரகசியக் குழுக்கள் பெரும் கெடுபிடிகளைச் சந்தித்தனர்.

1970களின் இறுதியில் தொடங்கி 1980களின் துவக்கம் வரை விவசாய மற்றும் பண்ணைத் துறை சார்ந்த சட்ட மாற்றங்களால் நகரச் சந்தைகளில் உணவுப்பொருட்களின் வரத்து விறுவிறுவென்று கூடியது. ரேஷன் அட்டை இல்லாமல் உணவுதானியங்கள் வாங்குவதொன்றும் முன்பு போலப் பிரச்சனையில்லை. இதனால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து பிழைப்போர் அதிகரித்தனர். நகரில் கிடைத்த அபரிமிதமான உணவுப்பொருட்கள் காரணமாக அரசாங்கம் இடப்பெயர்வுச் சட்டங்களைத் தளர்த்தியது. இருப்பினும், இது குறுகிய காலத்துக்குத் தான் அமுலில் இருந்தது. 1984ல், உள்நாட்டு இடப்பெயர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர ஹூகோவ் சட்டத்தில் மேலும் பல நுட்ப மாற்றங்களைப் புகுத்தினர்.

மீண்டும் 1986 மார்ச்சில், 1957ல் உருவாக்கப்பட்ட ஹூகோவ் முறையை ஆறாவது தேசியக் காங்கிரஸில் மீள்பரிசீலனை செய்து மக்கள் தொகைக் கொள்கைகளைக் கடுமையாக்கவென்று பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தனர். 1984ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ‘தன்னிறைவு உணவுதானியம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி கிராமவாசிகள் குடியிருக்க வீடிருந்து, அவரவர் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்து, கையில் வேலையும் இருந்தால் சந்தைகூடும் பக்கத்து ஊர்களில் வசிப்புரிமை பெற முடிந்தது.

1980களிலும் 1990களிலும் ஹூகோவ்வின் தாக்கம் வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் ஆழப் படிய ஆரம்பித்தது. 1976 வரையில் அவ்வப்போது வாச அனுமதி இல்லாதோரை அரசாங்கம் அதிரடியாக வளைத்துப் பிடித்து, நகரத்திலேயே காவலில் வைத்து வெளியேற்றியது. நிரந்தவாசம் பெற்றுள்ள ஊரில் வசிப்பதே ஒவ்வொரு குடிமகனின் கடமை. அனுமதியின்றி வேறு வட்டாரத்திற்குப் போவது சட்டப்படி குற்றம்.

குறைந்த வருவாய் ஈட்டும், உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளிகளுக்கு நகர ஹூகோவ் கிடைப்பது தான் என்றென்றைக்கும் கடினம். அத்தகைய தொழிலாளிக்கு ஒரு ஊரில் நிரந்தர வேலை இருக்கலாம். ஆனால், அதன் வருவாய் குறைவென்பதால் அதை நிரந்தர வருவாய் என்று அதிகாரிகள் கருதுவதில்லை. சில விண்ணப்பங்கள் மட்டும் அரிதாக அனுமதிக்கப்படும். ஜெஜியாங் நகரத்தின் விதிமுறைகளின் படி நிரந்தர வருவாயும் உறுதியான வசிப்பிடமும் மட்டுமிருந்தால் போதாது. விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு அந்நகரில் வசித்திருக்க வேண்டும். ஆனால், திறன் பெற்றவர்களும் கல்வித் தகுதியுடையோரும் உள்ளூரில் குறிப்பிட்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. வியாபாரிகள் நிரந்தர வசிப்பிடமும் வருவாயும் இருந்தால் 5000 யுவான்கள் கட்டி ஹூகோவ்விற்கு விண்ணப்பித்துப் பெற முடியும்.

பல்வேறு கெடுபிடிகளின் காரணமாக ஹூகோவ் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களினால் பெரிய பயனில்லாமல் போனது. சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை மக்கள் கூர்ந்து அறிந்து, புகுந்து வெளிவந்தனர். ஜெஜியாங் மாநிலத்தின் நிங்பாவ் நகரில் 2001ல் விண்ணப்பித்த 2 மில்லியன் இடம்பெயர்ந்தோரில் 30,000 பேருக்கு விண்ணப்பத்திற்கான தகுதிகளான நிரந்தர வருவாயும் உறுதியான வசிப்பிடமும் இருப்பதாக ஆட்சியாளர் தெரிவித்தனர். திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீபெய் மாநிலத்தின் ஷிஜியாஜுவாங் நகரத்திலோ 300,000 விண்ணப்பங்களில் 11,000 விண்ணப்பதாரர்களுக்கு அத்தகுதிகள் இருப்பதாகச் சொன்னார்கள். முதலீட்டின் அடிப்படையில் விண்ணப்பிப்போருக்கும் உள்ளூர் ஹூகோவ் கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த வழியில் அனுமதி பெற்றவர்கள் மிகக் குறைவு. 2001ல், பேய்ஜிங்கில் முதலீட்டாளர்களுக்கு ஹூகோவ் என்று மாற்றம் அறிவிக்கப்பட்டபின் ஒரேயொரு விண்ணப்பம் தான் இதனடிப்படையில் விண்ணப்பிக்கப்பட்டு அனுமதிப் பதிவட்டையையும் வழங்கப்பட்டது.

1990கள் முதல் 2003-4 வரையில் மேலதிக மாற்றங்கள் நிறுத்தப்பட்டு ஹூகோவ்வில் முன்பு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் யாவும் தீவிரப்படுத்தப்பட்டன. நகர மேம்பாடுகளையும் வசதிகளையும் கிராமங்களுக்குக் கொண்டு சேர்க்க நினைத்தது முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது. இடம்பெயர்ந்தோரின் உழைப்பு சுரண்டப் படாதிருக்கவும் சிற்றூர்-பேரூர்களுக்கிடையில் நிகழ்ந்த மக்களின் போக்குவரத்தைச் சீராக்கவும் அதிக கவனங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2004 இறுதியில் மத்திய அரசு அதிகாரிகள் நகரங்களுக்குப் போக விரும்பும் கிராமத்தினருக்கு உள்ளூரில் நடப்பிலிருந்த கெடுபிடிகளைச் சற்றே தளர்த்தினர்.

இடம்பெயர்ந்து உழைக்கும் தொழிலாளிகளுக்குச் சாதகமாக 2007ல் கொடுக்கப்படாத ஊதியங்கள், வேலையிட விபத்துகள் போன்றவற்றையொட்டி சட்டப் பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 2007க்கும் 2008க்குமிடையில் 95% வழக்குகள் தொழிலாளிகளுக்கு நியாயம் பெற்றுக் கொடுத்தன. பல வழக்குகள் தொழிலாளிக்கு சாதகமான தீர்ப்புகளை வென்றன. அதையெல்லாம் கடந்தும் வேலையிடத்தில் வேறுபாடுகளும் அநியாயங்களும் நிலவியபடியே தான் இருந்தன. தென் குவாங்தோங் மாநிலத்தின் ஜுஹாய் நகரில் உள்ளூர் ஹூகோவ் வைத்திருப்போர் அதிகரித்து சமாளிக்க முடியாமல் போனதால் 2008 ஏப்ரலில் விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பெறப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
1990கள் தொடங்கி, படிப்படியாக தொழில்நுட்பம் ஹூகோவ்வை மேலும் சிறப்பாகச் செயல்படுத்தப் பேருதவியாக இருக்கிறது. காவல்துறைக்கும் இப்போது ஹூகோவ் பதிவுப் பட்டியல் கணினியில் ஏற்றப்பட்டிருக்கிறது. வட்டாரவாரியாக இயங்கும் அலுவகங்களை இணைக்கவும் தொழில்நுட்பம் உதவுகின்றது.

அதிவேக நகரமயமாக்கலும் அதனால் இடைவிடாமல் தொடரும் இடப்பெயர்வுகளும் சீனாவில் மக்கள் தொகை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் அதிகரித்து பெரும்பாலான மற்ற வட்டாரங்களில் குறைவதற்கே வழிவிட்டது. அத்துடன், விவசாயத் துறை பாதிப்படைந்தது. அதனால், மீண்டும் வேலைப் பகிர்வும் சீரமைப்பும் தேவைப்பட்டது.

கல்விக்கு நகரங்களில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கிராமங்களில் இல்லை. குடும்பத்தை விட்டுவிட்டு நகருக்கு வருவோரின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. இது போன்ற இடைவெளிகள் குறைக்கப்படாமல் நகரங்களின் முன்னேற்றத்தால் தேசத்துக்குப் பொருளில்லை என்பது அறிவு ஜீவிகளின் கருத்து. கிராமங்களில் விடப்படும் பிள்ளைகளைக் கருத்தில் கொண்டு சமூக, உணர்வு, மனோவியல் சார்ந்த மாற்றங்கள் ஹூகோவ்வில் தேவை என்பதே இவர்கள் வாதம்.
கிராமங்களிலிருந்து கிளம்பி வருவோரை குடும்பத்துடன் வர அனுமதித்தால் பல பிரச்சனைகள் குறைந்து, மெதுவாகத் தீரும் என்றெண்ணுவோர் இருக்க, அரசாங்கமோ அதை அனுமதிக்கத் தயாராக இல்லை. ஏனெனில், ஏற்கனவே கூடிவரும் நகர மக்கள் தொகையையும் அதன் நீட்சியாக எழும் சமூகப் பிரச்சனைகளையும் சமாளிக்க முடியாமல் அரசாங்கம் திணறுகிறது. குடும்பங்களுக்கு அவ்வாறு அனுமதியளித்தால் கிராம-நகர மக்களுக்கிடையே நிலவும் பொருளாதார மற்றும் பிறவகை ஏற்றத் தாழ்வுகள் குறைய வழியுண்டு என்பது பலரது நம்பிக்கை.

வளர்ச்சியை நோக்கிய மக்களின் இடம்பெயர்வுகள் அதிகரித்தன. கிராமங்களுக்கு வளர்ச்சியைக் கொண்டு போவதென்பது நடைமுறையில் மிகக் குறைவாகவே ஈடேறியது. ஆகவே, நகரங்கள் அசுரவேகத்தில் வளரும் வேளையில் கிராமங்களில் வந்திருக்க வேண்டிய வளர்ச்சியைக் காணோம். தொடர்ந்து சீர்திருத்தங்கள் ஏற்பட்டபடியே உள்ளன. இருந்தும் ஹூகோவ் இல்லாத சீனத்தை நினைத்துப்பார்ப்பதற்கே இல்லை என்கிறார்கள் மக்கள். அவ்வாறான தேசம் உருவாகி வர சில தசாப்தங்கள் எடுக்கலாம். சிற்சில திருத்தங்கள் புகுத்தப்படுவதும் தளர்த்தப்படுவதும் கடுமையாவதுமாகவே நடைமுறை இருக்கிறது. ஆதிகாலத்தில் உருவாக்கப்பட்ட ஹூகோவ் முறை உலகப் பொருளியல் சந்தையைப் பற்றி யோசிக்க வழியில்லை. ஆகவே, அந்த நோக்கில் அது இயற்றப்படவுமில்லை. இதுவும் அதன் தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணம்.

சீனத்தில் ஒருவருடைய ஹூகோவ் எந்த ஊருடையது என்பது மிக முக்கியம். அதைவிட முக்கியம் அது எந்த வகுப்பைச் சேர்ந்தது என்பது. அதைப் பொருத்தே அவருடைய எதிர்கால வாழ்க்கையும் முன்னேற்றமும் அமையும். எது செய்யவும் ஹூகோவ் வேண்டும். சிற்றூர் ஹூகோவ் திருமணம், குழந்தைகள் பெறுவது, காப்பீடு, வேலைவாய்ப்பு, பிள்ளைகளின் நகரப் பள்ளி என்று அனைத்தைக்கும் இடைஞ்சல் தான். வேலை நடக்க குடிமகன் கொடுக்க வேண்டிய விலைகள் மிக அதிகம். பணம் கொடுத்தாலும் சேவைகள் கிடைக்காமல் போகவே அதிக வாய்ப்புண்டு. ஹூகோவ்வை நகர ஹூகோவ்வாக மாற்ற முயன்றால் ஒவ்வொரு கையொப்பத்துக்கும் அனுமதிக்கும் சொந்த ஊருக்கு அடிக்கடி போய் வந்துகொண்டே இருக்க வேண்டியதாக இருக்கும். கிடைக்கும் கையொப்பங்களும் கோப்புகளும் வேண்டியதை ஏற்பாடு செய்துகொள்ள உதவுமா என்பதும் சந்தேகமே. நகர அரசதிகாரிகளை விட கிராம/சிற்றூர் அதிகாரிகளின் ஊழல் அதிகம்..

நேர்வழியில் முறையாக பேய்ஜிங்கில் ஹூகோவ் வாங்குவது என்பது வெள்ளை யானையைப் பார்ப்பதற்குச் சமமானது. இடம்பெயர்ந்து உழைக்கும் தொழிலாளி ஜாங் மிங்ஹுவாவின் கதை நல்லதொரு உதாரணமாக இருக்கும். இவரிடம் இருப்பது அன்ஹுவேய் மாநில ஹூகோவ். வேலை செய்து வாழ்வதோ பேய்ஜிங் மாநகரத்தில். வறுமை பீடித்த சிற்றூரிலிருந்து வந்த ஜாங் மிங்ஹுவா படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்றைய தேதியில் தொழிலாளர்களை அமர்த்தி தானே காண்டிராக்ட் எடுத்து கட்டட வேலை செய்கிறார். இவருக்கு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மகள் இருக்கிறாள். அவளுடையதும் அன்ஹுவேய் மாநில ஹூகோவ் தான். பேய்ஜிங் ஹூகோவ் இருப்போருக்குக் கிடைக்கும் எந்தச் சலுகையும் இவளுக்குக் கிடைக்காது. சிறு வயதில் ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து திரும்பும் சிறுமி, ‘ஆசிரியை மற்ற எல்லாச் சிறார்களுக்கும் சின்னசின்ன பரிசுகள் கொடுத்துவிட்டுத் தனக்கு மட்டும் தரவில்லை’, என்று அப்பாவிடம் சொல்லி அழுவாள். இவள் கேட்டால், ‘பேய்ஜிங் ஹூகோவ் இருக்கும் பிள்ளைகளுக்கு தான் கொடுக்க வேண்டும். உனக்குக் கிடையாது’, என்பாராம் ஆசிரியை. ஜூனில் நடக்கவிருக்கும் கல்லூரி நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிறாள். இதனால், அவள் பூர்வீக ஊருக்குப் போய் தான் நுழைவுத் தேர்வையே எழுத வேண்டும். ஜாங் மிங்ஹுவா மகளுடையதை பேய்ஜிங் ஹூகோவ்வாக மாற்றத் தொடர்ந்து முயன்று வந்தார். நடக்கவேயில்லை. வெறுத்துப் போய் முயற்சியைக் கைவிட்டார். பத்தாண்டுகளுக்கு முன்னால் மகளுக்கு பெய்ஜிங் ஹூகோவ் இல்லாத காரணத்துக்காகவே தொடக்கப்பள்ளியில் ஆண்டுக்கு 3000 யுவான்களைச் செலவிட்டார். வாங்கித் தருவதாக நண்பர் சொன்னார் என்று ஜாங் மிங்ஹுவா, தரகரை ஊரெல்லாம் தேடி இறுதியில் பேய்ஜிங் ஹூகோவ் வாங்கித் தருவதாகச் சொன்ன வேறொருவரிடம் 20,000 யுவான் முன்பணம் கொடுத்து ஏமார்ந்தார். இன்னொரு நண்பர் பேய்ஜிங்கில் வீடு வாங்கினால் மகளுக்கு பெய்ஜிங் ஹூகோவ் கிடைக்க வழியுண்டே என்றார். அந்த வழியையும் யோசித்தார். அரசலுவலகத்தில் சரியான தொடர்பு இல்லாத காரணத்தால் இதுவும் சரி வரவில்லை. நுழைவுத் தேர்வில் நன்றாகச் செய்து பேய்ஜிங்கின் கல்லூரி ஒன்றில் சேரச் சொல்லி இப்போது மகளுக்கு ஊக்க வார்த்தைகள் கூறிக் கொண்டிருக்கிறார். அப்படிச் சேர்ந்தால், தானாகவே அவளுக்கு பேய்ஜிங் ஹூகோவ் கிடைக்கும். “மதிப்பா நேர்வழியிலயே கெடச்சிடுமே,’ என்று நம்பிக்கையோடு சொல்கிறார் தந்தை.

கல்வியோ, பணவசதியோ உள்ளாருக்கு வசிப்புரிமைப் பதிவு விதிகளைத் தளர்த்த அரசாங்கம் எப்போதுமே தயாராக இருந்தது. பணக்காரர்களுக்குரியதான ‘நீல முத்திரை’ ஹூகோவ் 1992ல் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநில மாவட்ட அரசுகளும் பணக்காரர்களையும், கல்விமான்களையும் திறனாளர்களையும் ஈர்க்க தொடர்ந்து மிக முயன்றனர்.

பல்வேறு மாற்றங்களைக் கடந்தும் நகரங்களில் சட்டவிரோதக் குடியேறிகள் இருந்து கொண்டே தான் இருந்தனர். இவர்களின் எண்ணிக்கை எந்தக் கெடுபிடிக்கும் குறையாமல் கூடிக் கொண்டே தான் போனது. ரேஷன் முறை மெதுமெதுவாக குறைக்கப்பட்ட போது பதிவு செய்யாத இடம்பெயர்வோரின் எண்ணிக்கை மேலும் எளிதாகக் கூடியது. பிடிபட்டோரை அதிகாரிகள் காவலில் வைத்து ஊருக்கு அனுப்புவதும் அதற்கேற்ப கூடியது. 1995ல் நடந்த கணக்கெடுப்பின் படி 80 மில்லியன் இடம்பெயர்ந்தோர் மட்டுமே தற்காலிக வசிப்புரிமை பதிவு செய்திருந்தனர். மொத்தத்தில் பாதி எண்ணிக்கை இது. நகரவாசிகளுக்கு ஈடாக பொதுச் சுகாதாரச் சேவை மான்யம், கல்வி போன்ற சலுகைகள் இவர்களுக்குக் கிடைக்கவில்லை.

1997ல், அரசாங்கம் சோதனை முயற்சியாக சில சிற்றூர்கள் மற்றும் பேரூர்களில் வசித்தோருக்கு நகரஹூகோவ் கொடுத்துப் பார்த்தது. குறைந்தது இரண்டாண்டுகளுக்கேனும் நிரந்தர வசிப்பிடம், நிரந்தர வேலை மற்றும் வருவாய் வேண்டி தத்தமது ஹூகோவ்வை மாற்றிக் கொள்ள விரும்பியோருக்கு வாய்ப்பேற்பட்டது. வசிப்பிடம், கையில் வேலை இருந்தோருக்கு விண்ணப்பம் வேகமாக நகர்ந்து அனுமதிப் பதிவட்டைக் கிடைப்பது எளிதாக இருந்தது. அரசாங்கம் 2001 வாக்கில் இதை மேலும் அதிக மாநிலங்களுக்குக் கொண்டு போனது.

பல மாநிலங்களில், நகரங்களும் பெருநகரங்களும் உள்ளூர் ஹூகோவ் பெறுவதற்கான தகுதிகளைத் தளர்த்தின. உறுதியானதொரு வசிப்பிடம் மற்றும் நிரந்தர வருவாய் இருந்தாலே விண்ணப்பிக்க முடியும். அதிகாரிகள் சிற்சில விஷயங்களைக் கடுமையில்லாமலே அணுகினர். உதாரணத்துக்கு, நான்ஜிங் முனிஸிபல் விதிகளின் படி உறுதியானதொரு வசிப்பிடம் என்பது தனியார் வீடு, கார்பரேஷன் வீடு அல்லது அரசாங்க வீடு என்று ஏதாவது ஒன்றாக இருந்தாலே போதும். ‘நிரந்தர வருவாய்’ என்பதைப் பெரும்பாலும் தனியார் அல்லது அரசாங்கத்தின் முறையான நிரந்தர வேலை என்று தான் அதிகாரிகள் வகுத்தனர். அப்படியான வேலைகளில் உறுதியான வருவாய் நிச்சயம் என்பதே அவர்களின் அனுமானம். திறனற்ற வேலைகள் என்று வகுக்கப்பட்ட கட்டடத் தொழில் உள்ளிட்ட பல வேலைகளை இதில் சேர்ப்பதில்லை. உள்ளூர் ஹூகோவ் விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய்க்குக் கீழே இருந்தால் விண்ணப்பங்களை ஏற்பதே இல்லை. அதே வேளையில், ஹீபேய் மாநிலத்தில் வாடகை வீட்டில் வசிப்போர் விண்ணப்பிக்கவே முடியாது.

சில மாநில முனிஸிபல் அலுவலகங்கள் கல்வி மற்றும் பொருளாதார அடிப்படையில் உள்ளூர் பதிவட்டையை வழங்குவதுண்டு. ஜேஜியாங் மாநிலத்தில், குறிப்பிட்ட தொகையைப் பணமாகக் கொடுத்து விண்ணப்பித்தால் நகரங்கள் மற்றும் பெருநகரங்களுக்கான ஹூகோவ் வழங்குவதுண்டு. இடம்பெயரும் நகரில் குறைந்தது 30 சதுர மீட்டர் பரப்பளவு அடுக்ககத்தை வாங்கும் ஒருவருக்கு கிடைப்பது சுலபம். இடம்பெயர்ந்து நகருக்கு வரும் கல்விமான்களுக்கும் விண்ணப்பங்கள் வேகமாக நகர சிறப்புச் சலுகை கிடைக்கிறது. குறைந்தது இரண்டாண்டு கல்லூரிப் படிப்பு இருந்தால் சோங்ச்சிங் முனிஸிபாலிடி எளிதாக வழங்குகிறது.

பேய்ஜிங்கில் கட்டட நிர்மாண வேலை செய்யும் ஹென்னன் மாநில ஹூகோவ் வைத்திருக்கும் ச்சாங் பௌன்னின் கதை இன்னொரு வகை. ஹென்னன்னில் பிறந்த இவர் 2002ல் பேய்ஜிங்கிற்கு வந்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு மனைவியையும் மூன்று வயது குழந்தையையும் தன்னுடன் வாழவென்று நகருக்கே கூட்டி வந்தார். பாலர் பள்ளியில் மகனைச் சேர்க்கத் தயாரான போது தான் பேய்ஜிங் ஹூகோவ் இல்லாததால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை முதன்முதலில் சந்தித்தார். பெற்றோர் இருவருக்கும் பேய்ஜிங் ஹூகோவ் இல்லாததால் டொனேஷன் கொடுத்து தான் சேர்க்க வேண்டும் என்றார்கள் பள்ளியில். பள்ளிக் கட்டணத்தைத் தவிர ஆண்டுதோறும் 20,000 யுவான் கட்ட வேண்டும். இது சட்ட விரோதமானது என்றாலும், ஆங்காங்கே நகரங்களிலும் நடப்பது. இத்தனை பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியாததால் வேறு வழியில்லாமல் மகனை மனைவியுடன் ஹென்னன் மாநிலத்தில் இருந்த தனது சொந்த ஊருக்கே அனுப்பி அங்கே பாலர் பள்ளியில் சேர்த்தார் ச்சாங் பௌன். “எத்தனை காலம் தான் மனைவி மக்களைப் பிரிந்தே வாழ்வது?”, என்று கேட்கிறார். 2008 வரை நிலமை மேம்படாததால், வேறு வழியே இல்லாமல் 18,000 வரை டொனேஷன் கொடுத்து பேய்ஜிங் நகரத் தொடக்கப்பள்ளியில் மகனைச் சேர்க்க வேண்டியதாகி விட்டது. பேய்ஜிங்கில் ஓர் அடுக்ககம் வாங்க தம்பதியருக்கு ஆசை. ஆனால், பேய்ஜிங் ஹூகோவ் மற்றும் நிரந்தர வருவாய் இல்லாததால் வீட்டுக் கடன் கிடைப்பது சாத்தியமில்லை என்ற நிலை. தனியார் வீடுகளோ விலை மிக அதிகம். பேய்ஜிங் ஹூகோவ் இல்லாததால் அரசாங்க வீட்டுவசதிவாரிய வீடுகளை வாங்குவதற்கும் வழியில்லை. பெற்றோர் இருவரும் தமது கனவுகளையும் நம்பிக்கைகளையும் முழுக்க மகன் மீது வைத்திருக்கின்றனர். பெரியவனாகி கல்லூரிக்குள் நுழைந்து நல்ல வேலையில் அமர்ந்தானானால், அவனுக்குக் கிடைக்கும் ஹூகோவ் தமது பேய்ஜிங் ஹூகோவ்வுக்கு வழி விடும் என்று மிகநம்புகிறார்கள்.

உலக மனித உரிமைச் சங்கம் போன்ற அமைப்புகள், இடம்பெயர்ந்து பிழைக்கும் தொழிலாளிகள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் வகுப்புப் பிரஜையாக நடத்தப்படுவதையும் ஹூகோவ்வையும் கண்டித்துக் குரல் எழுப்பியுள்ளனர். முக்கியமாக, குறைந்த ஊதியம், சுகாதார மற்றும் வேலையிடக் காப்புறுதிகள் இல்லாமை, நெருக்கிக் கொண்டு கூட்டமாக வாழ வேண்டிய மிக மோசமான தங்குமிடங்கள் போன்றவை குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளன. இவற்றையெல்லாம் கடந்தும் தொழிலாளிக்கும் நகரங்களில் கிடைக்கும் காசு வேண்டியிருக்கிறது. நகரில் கிடைக்கும் வேலை விவசாயம் கொடுக்கும் வருவாயை விட அதிகமாகக் கொடுக்கிறது. சில வருடங்களில் சொந்த ஊரில் நல்லதொரு வீட்டைக் கட்டிவிட கனவுகள் காண்கிறான். இளைஞனாக இருப்பவனுக்கு நட்பு வட்டங்களும் தொடர்பும் கிடைப்பதால் தன் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள நகரத்தில் அமையும் வேலை அவனுக்கு முக்கியமாகிறது.

கட்டடத் தொழிலாளிகளுடைய ஹூகோவ் விதிமுறைகளை விலக்கி நகரில் வேலை செய்ய அனுமதித்தால் வறுமையும் சமூக நிலைப்பாடும் என்னவாகிறது என்று பார்க்க ச்செங்டூவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியிருக்கிறார்கள். அம்மாநிலத்தின் தலைநகரான ச்சோங்ச்சிங்கில் உழைக்கும் பெருபான்மையான வெளியூர் தொழிலாளிகள் வைத்திருப்பது விவசாயி ஹூகோவ். கடற்கரைக்குப் பின்புறமான இந்த நிலவெளி கிட்டத்தட்ட ஸ்காட்லந்தின் பரப்பளவை உடையது. இந்த ஊர் முனிஸிபாலிடி ஹூகோவ் விதிகளைத் தளர்த்தி கிராமத்தினரை நகரவாசிகளாக்க முயன்றாலும் அது நடப்பதாய்க் காணோம். ஹூகோவ் என்ற சொல்லே உச்சரிக்கத் தகாத சொல்லாகி வருகிறது சீனத்தில். மலைப்பாங்கான அந்த ஊரில் நீண்ட காலமாக வேலை செய்யும் சிலர், “கூப்பிட்டு இலவசமாவே கொடுத்தா கூட இந்த ஊர் ஹூகோவ் எனக்கு வேணாம்பா”, என்று மறுக்கிறார்கள். உழைத்துப் பொருளீட்டுவது மட்டுமே அந்த ஊருடனான தனது தொடர்பு என்று பிடிவாதமாக இருக்கிறார்கள். மனமெல்லாம் சொந்த கிராமத்தில் இருக்கிறது. அங்கே இருக்கும் வீடு, நிலம், குடும்பம் போன்றவை தான் பெரும்பாலோருக்கு முக்கியமாகப் படுகிறது. புதிதாக வீடோ நிலமோ வாங்க ஆசைப்பட்டாலும் வேலை பார்க்கும் நகரத்தில் வாங்காமல் சொந்த ஊரில் வாங்கவே நினைக்கிறார்கள். சில ஆண்டுகளில் ஊர் திரும்பவே பெரும்பான்மையினர் திட்டமாக இருக்கிறது. கையிலிருக்கும் மாநில ஹூகோவ்வை வைத்துக் கொண்டு அருகிலிருக்கும் நகரங்களுக்குப் போகப் பிரியப்படும் இவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் நிம்மதியைப் பெறுகிறார்கள். வீதிகள் மேலும் கீழும் ஏறி இறங்கும் தன்மையுடையன. மூங்கில் கழிகளின் இருபுறமும் கனமான பொருட்களைக் கட்டிச் சுமந்து கூலி பெற்றுப் பிழைப்போர் இங்கு அதிகம். பிள்ளைகளுக்குக் கிடைக்கக்கூடிய நகரக் கல்வி குறித்துச் சொல்லி, ஹூகோவ்வை மாற்ற வேண்டினால், “எங்க பிள்ளைங்களுக்கு நகர ஹூகோவ் வாங்கிட்டா பிரச்சன முடிஞ்சிராது. தினமும் பள்ளிக்கூடத்துல நாட்டுக்கட்டன்னு கேலி செய்யறதக் கேட்டு அழுதுகிட்டு வரும். அதுக்கு நாங்க எங்க ஊர்லயே படிக்க வச்சிக்குவோம்”, என்கிறார்கள்.

சமூக நடப்புகளைக் கட்டுப்படுத்தும் கருவியாக முன்பு கருதப்பட்ட ஹூகோவ் இன்றைய நவீன உலகுக்கு ஏற்றதல்ல என்று அடிக்கடி நிரூபித்து வருகிறது. உண்மையில், ஹூகோவ்வில் இல்லை குறை. சீனாவின் வளர்ச்சியடையாத காப்பீட்டுத் துறை, குடிமக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அரசாங்கத்தின் ஊழல் மிகுந்த நடு மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் ஆகியவை தான் இந்தத் தோல்விக்குக் காரணம். ச்செங்டூவில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இதுவே சமூக சமத்துவத்துக்கான தொடக்கமாக இருக்கலாம் என்று அறிஞர்கள் முன்னுரைக்கின்றனர். எதிர்காலத்தில் மற்றமற்ற வட்டாரங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு பல்வேறு நன்மைகள் ஏற்படலாம் என்பதும் இவர்களுடைய நம்பிக்கை. நினைத்தது போல நடக்காமல் ச்செங்டூவில் நிலமை மேலும் மோசமாகியுள்ளது என்பது இன்னொரு தரப்பினர் வாதம்.

திருத்தங்கள் யாவும் சிற்றூர் அளவில் செய்யப்பட்டு உள்ளூருக்குள்ளேயே பின்பற்றப்படுகின்றன. மத்திய அரசாங்கம் போக்குவரத்து மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நிறைய முதலீடு செய்து ஸிச்சுவான் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்த முயன்று வருகிறது அரசாங்கம். இதனால், அம்மாநிலத்திலிருந்து வெளியேறுவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதாகச் சொல்கிறது அரசு. மாற்றங்கள் ஹூகோவ்விலும் சரி தொழிலாளிகளிலும் சரி மெதுவாகத் தான் ஏற்படும் என்றே நம்புப்படுகிறது. ஸிச்சுவான் மாநிலம் தான் ஆக அதிக இடம்பெயரும் தொழிலாளிகளைக் கொடுத்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஷென்ஜென் மாநிலத்தில் தொழிலாளிகளில் 80% இவ்வாறு இடம்பெயர்ந்து உழைப்போர்.

நகரங்களிலும் பெருநகரங்களிலும் இருக்கும் வேலையில்லாத வதிவிட உரிமம் இல்லாத, அடையாள அட்டை இல்லாத ஆட்களை சொந்த ஊருக்கே அனுப்பிவிட வேண்டும் என்று தொடர்ந்து பொதுப்பாதுகாப்புத்துறை சொல்லி வருகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனாவில் உள்நாட்டு இடப்பெயர்வுகள் பல்வேறு சமூகக்காரணிகளால் கூடிக் கொண்டே வருகிறது. அதே வேகத்தில் அது ஏற்படுத்தும் பிரச்சனைகளும் தான்.

உதாரணத்துக்கு, பிள்ளை குட்டிகளை ஊரில் விட்டுவிட்டு நகரத்துக்குப் போவோர் அதிகரிப்பதால் எழும் பிரச்சனைகள் எண்ணற்றவை. சீனத்தின் இடம்பெயர்வோருக்குக் கல்வித் துறை உள்ளிட்ட பொதுச் சேவைகள் கிடைக்காமலே இருந்து வருவது கவனத்துக்குரியது. ஹுக்கோவ்வினால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வாக ஹுக்கோவ்வை முற்றிலும் அகற்றிவிடுதலே நல்லதென்று சில அறிஞர் பெருமக்கள் சொல்லி வருகிறார்கள். இந்தத் தீர்வை நடைமுறைப் படுத்துவதென்பது சாத்தியமா என்று அவர்களுக்கும் தெளிவாகத் தெரிவதில்லை.

2020ல் பெய்ஜிங்கில் உருவாக இருக்கும் ஸிலிகான் பள்ளத்தாக்கு, வால் ஸ்ட்ரீட், மான்ஹாட்டன், ஹாலிவுட் ஆகியவைகளுக்கான ‘திறன் குவிப்பு’ நோக்கில் இவ்வாண்டு பதிவட்டை பெற விண்ணப்பிக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் என்ற பட்டியலை மாற்றியமைத்து விட அரசு தளர்த்த முடிவெடுத்துள்ளது. இதற்கு உலகின் மாபெரும் நகரங்களை முன்னுதாரணமாகக் கொண்டு பத்தாண்டுத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பேய்ஜிங், தியான்ஜின், ஹீபேய் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து, ஒப்பந்தங்கள் முடிவானால் இவ்விடங்களில் ஹூகோவ் தளர்த்தப்படவுள்ளது. இவ்விடங்களுக்கு இடம்பெயர்வோர் உள்ளூர் வாசிகளைப் போலவே அனைத்துச் சலுகைகளையும் பெறுவர்.

சமூக வேறுபாடுகளைக் களைய உதவும் என்பதால் ‘ஹூகோவ் இல்லாமல் இருப்பதே நல்ல ஹூகோவ்வாக இருக்கும்’ என்பது நவீன இளைய சமுதாயத்தின் எண்ணம். ஐம்பதாண்டுகளாக பல்வேறு மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் அவ்வப்போது ஏற்றும் துறந்தும் வந்த ஹூகோவ்வைப் பற்றி தொழில்மயமாக்கல், நகரமயமாதல், சமூகத் தாக்கங்கள் போன்ற பல கோணங்களில் பல்வேறு பார்வைகள் நிலவுகின்றன. நவீன வளர்ந்த நாடாக, உலகின் தலைவனாக உருவாக விழையும் சீனாவின் ஆசைக்கு இது இடையூறாகவே இருக்கும் என்பது ஒருசாரார் சொல்வது. சமூக்த்தில் உள்ள வேறுபாடுகளைக் காரணம் காட்டி ஹுகோவ் எழுகிறது, ஆனால் அதே ஹுகோவ் மேலும் வேறுபாடுகள் உறுதிப்படவே காரணமாகிறது. பிரச்சினைகள் மேன்மேலும் கூர்மைப்பட்டு சிக்கல் அதிகரிக்கவே செய்கிறது.

(தொடரும்)