மகரந்தம்

கல்லால் அடித்துக் கொல்லும் பண்பாடு(?!)

முறைதவறி நடந்தனர் என்பதற்காகப் பெண்களைக் கல்லாலடித்துக் கொல்வது அவசியம் என்று இன்னும் ஒரு பெரும் மக்கள் கூட்டம் நம்புகிறது.   இதைப் பண்பாடற்ற மிருகத் தனம் என்று சொல்லலாமா என்றால், மிருகங்கள் கூட இத்தனை கணக்கிட்ட கொடுமையைச் செய்யாது என்பதால் இதை மன வக்கிரம் என்று சொல்வதைத் தவிர வேறெப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. நிறைய பேருக்கு இந்தச் செயலைச் செய்தியாகப் படித்து விட்டுப் போவதால் அதன் வன்மம் புலனாவதில்லை. இத்தனைக்கும் வருடத்துக்கு நான்கைந்து பெண்களாவது இப்படிக் கொல்லப்படுகிறார்கள். இங்கு ஒரு கட்டுரையில் ஒரு மேலை நாட்டு விமர்சகர் தாம் கலந்து கொண்ட ஒரு திரைப்பட விழாவில் இந்தக் காட்சியை ஒரு கதை நிகழ்ச்சியாகக் காட்டிய படத்தைப் பார்க்க வந்திருந்தவர்கள், பெண்கள் ஆண்களால் கல்லாலடித்துக் கொல்லப்படும் காட்சியை வரவேற்றுக் கைதட்டி ரசித்ததைச் சொல்லி அதிர்ச்சி அடைகிறார். தாம் என்னவொரு நாட்டில் இருக்கிறோம் என்பது அவருக்கு அப்போதுதான் புரிகிறது. அந்தக் கட்டுரை, நிகழ்ச்சி குறித்த வருணனையை இங்கே படிக்கலாம்.

http://www.tnr.com/article/the-read/79945/toto-we%E2%80%99re-not-in-cannes-anymore-marrakech-film-festival

புதுவித தலைக் கவசம்

இந்தியாவில் மோட்டார்சைக்கிள் விபத்துகளில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளில் ஒரு முக்கியப் பிரச்சினை பலர் தலையில் கவசம் அணிவதில்லை. ஹெல்மெட் அணிவதை உஷ்ணத்தாலோ, அலட்சியத்தாலோ, அவை உடலில் ஏறபடுத்தும் அவதியாலோ அணிய மறுப்பதால் உடனடி மரணம் நிகழ்கிறது. சிலருக்கு ஹெல்மெட் அணிந்தாலுமே விபத்து நடந்த உடனே மருத்துவ உதவி கிட்ட நேரமாவதால் இறக்கிறார்கள் என்று மேற்கு நாடுகளில் சொல்கிறார்கள். மருத்துவமனைக்கு வந்தாலுமே, தலையில் இருந்து ஹெல்மெட்டைக் கழற்ற பாடுபட வேண்டி இருக்கிறது என்பது மருத்துவ உதவியாளர்களின் குறை. இதைத் தவிர்க்க ஒரு கல்லூரி மாணவரின் புது உருவமைப்பில் தயாராகும் தலைக் கவசம் உதவலாம். இந்த ஹெல்மெட்டை சில விசைகளைத் தளர்த்தினால் அப்படியே அக்கக்காகக் கழற்றி விடலாம். அவசரத்துக்கு இந்த முறையில் ஹெல்மெட்டைப் பிரிப்பது நிறைய நேரத்தை மீதமாக்கி உடனடியாக மருத்துவ உதவிக்குத் தலையை வெளிப்படுத்தும் என்கிறது இந்தச் செய்தி.

http://www.gizmag.com/splinter-motorcycle-helmet-removal-by-paramedics/17218/

சகோதரத்துவத்தின் கோர முகம்

இந்திய முற்போக்குகளுக்கு இந்தியாவை இழிவு செய்வதென்றால் வெல்லம் போல. ஆனால் இந்த முற்போக்குக் குழுக்கள் ஆதரிக்கும் ஒவ்வொரு நாட்டையும் பார்த்தால் தலைகுனியும் வகையான அற்பத்தனங்கள் அங்கு நிலவுகின்றன. சமத்துவமும், சகோதரத்துவமும் பெருகி வழியும் நாடாகத் தன்னை முன்னிருத்திக் கொள்ளும் ஒரு கருத்தியலின் கோரமுகத்தை இந்த செய்தியில் அறியலாம். பாகிஸ்தானின் பெரும்பான்மை மதம் சார்ந்தவர்கள் குடிக்கத் தண்ணீர் இருந்த ஒரு பாத்திரத்தை ஒரு கிருஸ்தவர் தொட்டு விட்டாராம், அது பெருங்குற்றம் என அவர் மீது பழி சுமத்தி அவருக்கு மரண தண்டனை கொடுத்திருக்கிறார்கள் நீதி மன்றத்தில். அவரைக் கொன்றால் 5 லட்சம் ரூபாயைக் கொடுப்பதாக ஒரு பெரிய மசூதியின் மௌலானா அறிவித்திருக்கிறார்.

http://www.telegraph.co.uk/news/newstopics/religion/8179655/Pakistani-cleric-puts-bounty-on-Christian-womans-head.html

இந்தப் பெண்ணின் உயிரைக் காக்க போப் பறந்தடித்து அப்பீல் விடுகிறார்.

http://www.telegraph.co.uk/news/worldnews/asia/pakistan/8142127/Pope-Benedict-XVI-calls-for-release-of-Christian-sentenced-to-hang-in-Pakistan.html

காஷ்மீர் வரை சென்று மக்கள் உரிமைக்கு குரல் கொடுக்கும் முற்போக்குகள் அதற்கு வெகு அருகிலிருக்கும் பாகிஸ்தானிலும் இத்தகைய குரலை எழுப்பத் துணிவார்கள் என்று நம்பலாமா?  பாகிஸ்தானில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட இருக்கும் நகரில் போய்த் தெருவில் நின்று கூட்டம் போட்டு இந்தக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுககுமாறு அவர்களுக்கு விளிப்பு விடுகிறோம்.

குறைந்து வரும் ஹீலியம் வாயு

helium_320x198உலகில் என்னென்னவோ இயற்கை வளங்கள் தீர்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஆழ்கடலில் மீன்கள் பெரிதும் குறைந்து விட்டன. முத்துச் சிப்பிகள் எங்கே போயின? பல நகரங்களில் உலகெங்கும் சிட்டுக் குருவிகளே காணோம். தேனீககள் பல நாடுகளிலும் பெரும் கூட்டங்களாக அழிந்து போகின்றன. பல காட்டு மிருகங்கள் உலகில் இல்லாமல் போய் விட்டன. தவிர எரிபொருள்கள் தீர்ந்து வருகின்றன. வரும் ஐம்பதாண்டுகளில் குடிநீருக்குப் பெரும் பஞ்சம் எழும் என்று நீர் வள ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்தப் பட்டியலில் இன்னொரு பொருளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஹீலியம் வாயு.

http://seedmagazine.com/content/article/going_going_gone/