இணையத்துடன் போராடும் விளம்பரத் தாள்கள்

இக்கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதிகள்: பகுதி 1 | பகுதி 2

தென்ன புதிதாக விளம்பரத் தாள்கள்? செய்தித்தாள்களின் பெயர் திடீரென்று எப்படி மாறியது? இரண்டும் ஒன்றுதான். இணையத்தின் தாக்கத்தைப் பற்றி செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி என்று தனியாக எழுதுவதைவிட ஒன்றாகவே எழுதுதல் எளிது. இவற்றை இயக்கும் சக்தி விளம்பரம் என்ற ஒன்றே.

தொலைத் தொடர்பு அதிகம் வளராத காலங்களில் (அதாவது 19 ஆம் நூற்றாண்டு வரை), செய்திகள் அனைவரையும் எட்டுவது மிகவும் கடினமாக இருந்த பொழுது உருவாக்கப்பட்ட ஒரு ஊடகம் செய்தித்தாள். ஒன்றிரண்டு நாட்கள் கழித்து செய்திகள் அறிவது மிகவும் த்ரில்லிங்காக இருந்து வந்த காலம். உலகத்திலேயே மிகவும் அபத்தமான விஷயம், இன்னும் பலரும் தங்கள் சந்தாவால் செய்தித் தாள்கள் இயங்கி வருவதாக நினைத்துக் கொண்டிருப்பது. சந்தாவால் காகித செலவைக் கூட சமாளிக்க முடியாது. எல்லா காலகட்டங்களிலும் செய்தித் தாள்களை இயக்குவது பல விதமான விளம்பரங்கள்தாம்.

2006 ல் வெளி வந்த மணிரத்னத்தின் ‘குரு’ திரைப்படத்தில் செய்தித்தாள் அதிபருக்கும் குருபாய்க்கும் ஒரே மோதல். குருபாயை மிகவும் விமர்சனம் செய்து எழுதியவுடன் அவர், தன்னுடைய உதவியாளரிடம், “கடுமையாக விமர்சனம் செய்த பத்திரிக்கையின் விளம்பர பட்ஜெட்டை இரட்டிப்பாக்குங்கள்!” என்று சீறுவது போல காட்சி. சற்று சிந்தித்துப் பாருங்கள் – ‘அஙகாடி தெரு’ திரைப்படம் வரும் வரையில் எந்த தமிழ் பத்திரிகை ஜவுளி வியாபார தொழிலாளிகள் நிலை பற்றி எழுதியது?  உள்ளூர் ஃப்ளாட்களின் தரம் சரியில்லை என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அதைப்பற்றி செய்தித்தாள்களில் மூச்! பெரிய விளம்பரதாரர்களை தர்மசங்கடப்படுத்தாமல் இருப்பதே உத்தமம். காரணம், பத்திரிகைகளை இயக்குவதில் ஜவுளி வியாபாரமும், ரியல் எஸ்டேட்காரர்களின் விளம்பரங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அடக்கி வாசிப்பதே வியாபாரத்திற்கு நல்லது.

வட அமெரிக்காவில் ஒரு வழக்கம் உண்டு: “உங்கள் ஊரில் கார் பேப்பர் எது?” என்று விசாரிப்பது. இங்கு எது உண்டோ இல்லையோ, கார் டீலர்கள் ஒவ்வொரு ஊரிலும் உண்டு. விளம்பரத்திற்காக அதிகம் செலவழிக்கும் தொழில்களில் இதுவும் ஒன்று. வீடோ அல்லது காரோ வாங்க வேண்டுமானால் எந்த உள்ளூர் செய்தித்தாளை பார்ப்பீர்களோ அதுவே அந்த நகரில் அதிகம் விற்கும் செய்தித்தாள். இப்படி விளம்பரத்துடன் மிகவும் கலந்துவிட்ட ஊடகம் செய்தித்தாள். விளம்பரத்திற்கு இடம் போகத்தான் செய்திகள் வருகின்றன. ஒவ்வொரு நாளும் விளம்பர பகுதிகளை விற்க செய்தி நிறுவனங்களில் பல நூறு ஊழியர்கள் உழைத்து வருகிறார்கள். விளம்பரம் இல்லையேல் அடுத்த நாள் செய்தித்தாள் அதோகதிதான். வியாபார விளம்பரங்கள் செய்திகளை பின்னேற்றி உள்ளமை உண்மை. இது எப்படி நிகழ்ந்தது?

அச்சு, காகித செலவுகள் உயர உயர அதை சமாளிக்க வழிகள் தேவைப்பட்டன. சந்தா உற்பத்தி செலவின் ஒரு 10% அளவையே ஈடுகட்ட உதவுகிறது. சந்தாவை உயர்த்தினால் படிப்போர் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. விளம்பரங்கள் செய்தித்தாள் தயாரிப்புச் செலவை சமாளிக்க உதவியதோடு அதை ஒரு லாபகரமான தொழிலாகவும் மாற்ற உதவியது. சின்ன செய்தித்தாள்கள் அரசாங்க டெண்டர் போன்ற விளம்பரங்கள் இல்லையேல் பத்திரிகையை மூட வேண்டியதுதான். லாபம் ஈட்டுவது குறிக்கோளாகக் கொண்ட பெரிய செய்தித்தாள்களுக்கு செய்தி என்பது இரண்டாம் பட்சம்தான். இப்படித்தான் செய்தித்தாள்கள் விளம்பரத் தாள்கள் ஆயின. விளம்பரத்திற்கு இடம் போகத்தான் செய்திகளுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. செய்திகள் பல தருணங்களில் சுருக்கப்படுவதற்கும் இதுவே காரணம்.

ஆரம்ப காலங்களில் செய்தித்தாள்கள் தொலை தொடர்பை மிகவும் அதிகமாக உபயோகித்து வந்த துறையாக விளங்கியது. இந்தியாவில் இணைய புரட்சிக்கு முன், டெலக்ஸ், ஃபாக்ஸ் போன்ற வசதிகளை அரசாங்கத்துடன் போராடிப் பெற்று அதிகமாக உபயோகித்தது என்னவோ செய்தி நிறுவனங்கள் தான். ஆனால் தொலைத் தொடர்பின் ராட்சச வளர்ச்சியான இணையத்தை பற்றி குறை கூறுவதும் இதே நிறுவனங்கள்தான்! இன்று இதே நிறுவனங்களின் பல அன்றாட இயக்கங்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் இன்றைய வடிவுகளான இணையத்தையும், அதன் ஒரு முக்கிய அம்சமான மின்னஞ்சலையும் நம்பி உள்ளன என்பது அவற்றால் எளிதில் ஜீரணிக்க முடியாத உண்மை.

செய்தித்தாள்களில் உள்ள ஒரு மிகப் பெரிய செளகரியம் அதன் parallel படிக்கும் முறைகள். அதாவது, அரசியல் படித்துவிட்டுத்தான் விளையாட்டைப்பற்றி படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அரசியல் படிக்கும் அப்பாவிடமிருந்து, கிரிக்கெட் பக்கத்தை மகன் உருவி படிக்கும் காட்சி நமக்கு மிகவும் பழக்கமானது. செய்திதாளின் முதல் போட்டி ரேடியோ. ஆனால், ரேடியோவில் மிகப் பெரிய குறை அதன் serial கேட்கும் முறைகள். விளையாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள் மற்ற செய்திகள் வந்து போக காத்திருக்க வேண்டும். ஆனால், படிக்கத் தெரியாதவர்களையும் சென்றடையும் ரேடியோவின் சக்தி 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செய்தித்தாள்களை மிகவும் அச்சுறுத்தியது. ரேடியோ, மேலும் மற்ற வேலைகளை செய்து கொண்டே கேட்கவும் தோதாக இருந்த்து.

ரேடியோவின் போட்டியை சமாளிக்க, செய்தித்தாள்கள் படங்களுடன் விளம்பரங்களை பிரபலப் படுத்தின. ரேடியோவில் பார்க்க முடியாதே. இந்த புதிய விளம்பர யுக்தி ஓரளவுக்கு செய்தித்தாள்களை காப்பாற்றியது. அடுத்து, 1950 களுக்கு பின் வந்த தொலைக்காட்சி, படம் தாங்கிய செய்தித்தாள்களை அச்சுறுத்தியது. நகரும் படங்கள் கொண்ட விளம்பரங்கள் விளம்பரதார்ர்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக படவே, “செய்தித்தாளின் காலம் முடிந்துவிட்ட்து” என்று பல பண்டிதர்களும் ஜோசியம் சொல்லத் தொடங்கினார்கள். ஆனால் அப்படி நடக்க வில்லை. விளம்பரதாரர்கள் தங்களது செலவை தொலைக்காட்சிக்கும் செய்தித்தாளுக்கும் இடையே பங்கு போடத் தொடங்கினார்கள். செய்தித்தாளின் பங்கு குறைந்தாலும் அது முற்றிலும் நிறுத்தப்படவில்லை. மேலும், தொலைக்காட்சியும் serial முறையில் தான் செய்திகள் படிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. தொலைக்காட்சியில் சானலை மாற்றுவது தான் சற்று இணையான போக்கைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. செய்தித்தாள்களைப் போலவே தொலைக்காட்சியும் விளம்பரங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க அது ஒரு பெரிய தனியார் வியாபாரமாக உருவாகியுள்ளது. சோப்பு, ஷாம்பூ, பற்பசை, உணவு பொருட்கள் (இதை ஆங்கிலத்தில் FMCG – Fast Moving Consumer Goods என்று சொல்வதுண்டு) மற்றும் ஜவுளி விளம்பரங்களே அதிகம். யுனிலீவர், கோல்கேட் பாமாலிவ், பி & ஜி பற்றி கடுமையான விமர்சனத்தை ஏதாவது தொலக்காட்சி சானலில் பார்த்து ‘சொல்வனம்’ இதழுக்கு அனுப்புபவர்களுக்கு ஒரு ஸ்கூட்டர் இலவசம் என்று தைரியமாக அறிவிக்கலாம். செய்தித்தாள்கள் எப்படித் தொலைக்காட்சியின் வியாபாரப் போட்டியை சமாளித்தன?

செய்தித்தாள்களில் வீடு வாடகை, விற்பது, வாங்குவது மற்றும் பழைய கார் போன்ற பொருட்களை வாங்குவது, விற்பது என்பன வகைப்படுத்தப்பட்ட (Classifieds) விளம்பரங்களாக வடிவு கொள்கின்றன. சிறு விளம்பரங்கள் படத்துடன் அல்லது வெறும் வார்த்தைகளுடன் செய்தித்தாள்களில் வருவது உபயோகமான விஷயம். ஓரளவுக்கு தொலைக்காட்சியின் போட்டியைச் சமாளிக்க செய்தித்தாள்களுக்கு உதவியது இந்த வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் என்றால் மிகையாகாது. தொலைக்காட்சியில் விடாமல் வீட்டு வாடகை விளம்பரங்களை காட்டினால் யாரும் பார்க்க மாட்டார்கள். வாங்குவோருக்குச் செய்தித்தாளை கையில் எடுத்துக் கொண்டு, வீடு/கார் தேட மிகவும் தோதாக இருப்பது போல தொலைக்காட்சி உபயோகப்படுவதில்லை. பெரிய நகரங்களில் சனி ஞாயிறுகளில் பல நூறு விளம்பரங்கள் வெளியிட்டு செய்தித்தாள்கள் பிழைத்து வந்தன. நலிந்து வந்த செய்தித்தாள் வியாபாரத்திற்கு வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் ஓரளவு பிழைப்புக்கு வழி வகுத்தன. ஆனால், இன்று இணையப் புரட்சியால் வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களும் இடம் பெயர்ந்து போக ஆரம்பித்துவிட்டன. இந்த நகர்வு செய்தித்தாள்களை மிகவும் பாதித்து விட்டது. இதைப்பற்றி விவரமாகப் பிறகு பார்ப்போம்.

செய்தித்தாள் என்பது அரசியல், சினிமா போன்ற பொதுஜனத் துறைகளில் மிக முக்கியமானதாக பல நூறு வருடங்களாக நம்பப்படும் ஒன்று. பல புகழ் பெற்ற அரசியல் எழுத்தாளர்கள் செய்தித்தாள்களில் பணிபுரிந்தவர்கள். இன்றும் இந்தியாவில் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் மற்றும் ஹிண்டு போன்ற செய்தித்தாள்களின் தலையங்கங்கள் நாட்டு நடப்பின் மிகவும் முக்கிய பிரதிபலிப்பாக கருதப்படுகிறது. இதை நான்காவது எஸ்டேட் என்று செல்லமாக சொல்வதுண்டு[1]. அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், வால் ஸ்டீரீட் ஜர்னல் மிகவும் பிரசித்தி பெற்றவை. இவை அமெரிக்க ஜனநாயகம் மற்றும் வியாபாரத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகின்றன. அமெரிக்க பங்குச் சந்தையில் எந்த நிறுவனத்தை வேண்டுமானாலும் சில விதிகளுக்கு உட்பட்டு பணமிருந்தால் வாங்கி விடலாம். உங்களிடம் வேண்டிய பணமிருந்தாலும் மேல் சொன்ன அமெரிக்க பத்திரிகைகளை வாங்க முடியாது. அமெரிக்க பொருளாதார அமைப்பில் அப்படி ஒரு வசதி உண்டு.

இப்படிப்பட்ட சக்ரவியூகத்தை தாண்டி இணையப் புயல் முன் தள்ளாடும் ராட்சச பத்திரிகை நிறுவனங்களைப் பார்க்கக் கஷ்டமாக உள்ளது. ஏன் இப்படி தள்ளாட வேண்டும்? இவர்கள் ப்ரச்னைதான் என்ன?

முதலில் இத்தொழில் எந்த அளவுக்கு அடிபட்டு உள்ளது என்று பார்ப்போம். பிறகு அதன் காரணங்களை ஆராய்வோம்.

மேலே உள்ள விளக்கப்படம் 2006 ல் உருவாக்கப்பட்டது. இதில் உள்ள 2010 ஜோஸியம் ஏறக்குறைய உண்மையாகிவிட்ட்து. இணையமில்லா மற்ற வழிகளில் விளம்பரத்திற்காக ஒதுக்கப்படும் செலவு தேங்கிய நிலையில் உள்ளது. அடுத்த 20 வருடங்களில் மற்ற வழி விளம்பரச் செல்வுகள் குறைக்கப்பட்டு இணைய வழி விளம்பரங்கள் ஏறக்குறைய வருடத்திற்கு 40 பில்லியன் டாலர்கள் வரை உயர வாய்ப்புண்டு என்று கணிக்கப்படுகிறது. எந்த வகை இணைய ஊடகத்தில் செலவு செய்யப்படும் என்றுதான் சரியாகச் சொல்ல முடியாது. இன்னும் பல பெரிய செய்தித்தாள்கள் மடிய அதிக வாய்ப்புகள் உலகம் முழுவதும் உள்ளன.

செய்தித்தாள்களின் விற்பனை எண்ணிக்கை 1946 க்கு பிறகு 2009 ல் தான் மிக குறைவாக இருநத்து என்ற செய்தி எந்த விதத்திலும் அச்சுத் தொழிலுக்கு ஊக்கம் தருவதாக இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் எப்படி அச்சிலிருந்து விளம்பரங்கள் பிக்ஸ்ல்களாக மாறின? துவக்க கட்டத்தில், இணையத்தின் சக்தியைப் பற்றி எழுதி காசு பண்ணினாலும், உண்மையில் அச்சுத் தொழில் தன் மீது இணையத்தின் தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. பெயருக்கு எல்லா செய்தித்தாள்களும் இணையத்தளம் ஒன்று உருவாக்கி செய்திகள் வெளியிட்டு வந்தது. இது ஃபாஷன் போல கருதப்பட்ட்தே தவிர சீரியஸான வியாபார வழியாக சிந்திக்கப்படவில்லை. இணையத்தில் யார் விளம்பரம் ஒன்றைப் பார்த்து பொருளை வாங்கப் போகிறார்கள் என்ற இறுமாப்போடு செய்தித்தாள்கள் செயல்பட்டன. ’எங்களுக்கும் தொழில்நுட்பம் வரும்’ என்று உலகிற்கு காட்ட ஒரு அரைமனது முயற்சிகளே இவை. இது என்னவோ ஹாலிவுட்டில் ராமராஜன் தன்னை விளம்பரபடுத்திக் கொள்ள அலுவலகம் திறப்பதைப் போலதான் காட்சி அளிக்கிறது  அத்துடன் 1990 களின் ஆரம்பத்தில் இணைய வியாபாரம் (E-Commerce) அதிகம் வளரவில்லை. பலரும் இணையத்தில் பொருட்களை வாங்க விற்கத் தயங்கினார்கள்.

ஆனால், 1990 களின் கடைசியில் ஒரு இணையப்புரட்சியே நடந்ததை அச்சுத் தொழில் உணரவில்லை. முதலில், இணையம் மூலம் வியாபாரம் செய்வதற்கான நம்பிக்கை, நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு வளரத் தொடங்கியது. அமேஸான் மற்றும் ஈபே போன்ற இணைத்தளங்கள் இதில் பெரும் பங்கு வகித்தன. புதிய/பழைய புத்தகங்கள் மற்றும் பல பொருட்களை தனி நபர் விற்க, வாங்க தங்கள் வீட்டிலிருந்தபடியே 24 மணி நேரத்தில் செளகரியப்பட்ட நேரத்தில் செய்ய முடிந்தது. கடை திறந்திருக்குமோ, வாரக் கடைசியோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் க்ரெடிட் கார்டு நிறுவனங்கள் பணம் கைமாறுவதற்கு உதவின. இந்தக் கட்டத்திலும் அச்சுத் தொழில் அதைப் பற்றி எழுதியதே தவிர தன்னை பாதிக்கும் என்று நினைக்கவே இல்லை.

சரி, ஈபே-வுக்கும், அமேஸானுக்கும் செய்தித்தாள்களுக்கும் என்ன சம்பந்தம்? இந்த இணைத்தளங்களில் புதிதாக பல்லாயிரம் புதிய வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை விளம்பரப் படுத்தினார்கள். இணையம் இல்லையேல் இவர்கள் செய்தித்தாளிடம் சென்றிருப்பார்கள். இன்று இது லட்சக்கணக்கான சில்லறை வியாபாரிகளாக வளர்ந்து இத்தகையவர்களில் எவரும் இணைத்தளங்களை விட்டு வெளியே விளம்பரத்திற்காக மூச்சும் விடுவதில்லை. இப்படிப்பட்ட பெரிய சந்தையை அச்சுத் தொழில் தவற விட்டது என்று நாம் கருதலாம்.  ஆனல் இத்தகைய வடிவில் உள்ள வர்த்தகத்துக்கு உதவ எந்த வசதியும் அச்சுத் தொழிலின்பால் இல்லை என்பதே உண்மை நிலை.

1990 களின் கடைசியில் கூகிள் (www.google.com) என்றஇலவசத்  தேடல் மையம் வந்ததை அச்சுத் தொழில் அதிகம் பொருட்படுத்தவில்லை. தேடல் என்பது நல்ல ஒரு கணினி செளகரியம் என்ற அளவிலேயே இருந்தது இவர்களின் கணிப்பு. இது எப்படி தங்களது விளம்பர வருமானத்தை தாக்க முடியும்? 2010 ல் கூகிள் உலகின் மிகப் பெரிய விளம்பர நிறுவனம் – வருமானம் 20 பில்லியன் டாலர்கள். இது எப்படி நிகழ்ந்தது என்று பிறகு விவரிப்போம்.

வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் என்னவோ பெரிய வியாபாரமாக அச்சுத் தொழிலை காப்பாற்றி வந்தது என்று முன்னம் சொன்னோம். அதுவும் இன்று பெரிதும் மாறிவிட்ட்து. க்ரெய்க்ஸ்லிஸ்ட் (craigslist.org) மற்றும் கிஜிஜி (kijiji) போன்ற இலவச இணைத்தளங்கள் உலகின் பெரிய 50 நகரங்களில் இலவச வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள் வெளியிடுகின்றன. அச்சுத் தொழிலை மிகவும் பாதிக்க தொடங்கி விட்டன. ஜெர்மன் மொழி சொல்லிக் கொடுப்பது, கணினி திரை விற்பது, தொல் பொருள் விற்பது என்று எதை வேண்டுமானாலும் இலவசமாக இந்தத் தளங்களில் சாதாரண மக்கள் விற்றுத் தள்ளுகிறார்கள். இந்தியாவில் சுலேகா போன்ற இணைத்தளங்கள் பல இந்திய நகரங்களில் வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை வெளியிட்டு வெற்றி கண்டுள்ளன. மேலும் இந்தியாவில் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணங்கள் இன்றும் ஒரு பெரிய விஷயம். இதற்கு செய்தித்தாள் விளம்பரங்கள் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது ஒரு இடைக்காலம். செய்தித்தாள்களுக்கு முன்பு குடும்பத் தொடர்புகளும், தரகர்களும், சாதாரணத் தபாலும் இந்த பரிமாற்றங்களை நிகழ்த்த உதவின.  சில பத்தாண்டுகளே செய்தித்தாள்கள் இந்தச் சந்தையில் ஆட்சி செலுத்தின.  இன்று அதற்கும் வந்தது வேட்டு.

இன்று பாரத்மாட்ரிமனி.காம் (bharatmatrimony.com)  மற்றும் தமிழ் மாட்ரிமொனி.காம் (tamilmatrimony.com) என்ற வகையான பல இணைத்தளங்கள், இந்த வியாபாரத்தை அச்சுத் தொழிலிடமிருந்து வெகுவாக தட்டிச் சென்று விட்டன. இதைப்போன்ற இணைத்தளங்களில் பல வகை செளகரியங்கள் செய்தித்தாள்களை காட்டிலும் கூடுதலாகவே உள்ளது. முதலில், இணைத் தளங்களில் சில மாதங்களுக்கு விளம்பரத்தை புகைப்படத்துடன் வைத்துக் கொள்ள செலவு குறைவு. மேலும், பல வகையிலும் பொருத்தம் பார்க்க வழி உள்ளது. பல இடங்களிலும் வேலை செய்யும் ஆண் மற்றும் பெண்கள் வாழ்க்கையில் இணைவதற்கு இணை உலகின் துரிதத் தொடர்பு வசதிகள் மிக உதவியாக உள்ளன. உதாரணத்திற்கு, கல்கத்தாவில் உள்ள தமிழ்க் குடும்பங்களுக்குத் திருமண விஷயத்திற்காக ‘ஹிண்டு’ பார்க்கத் தேவையில்லை. இணைத்தளத்தில் திருமண விஷயம் சம்மந்தப்பட்ட சகல சேவைகளும் வீட்டிலிருந்தபடியே ஆரம்ப வேலைகளை தொடங்கலாம்.  பொருத்தமான நபர் என்று தோன்றும் ஒரு நபருடன் உடனடியே தொடர்பு கொள்ளவும் ஈ-மெயில் உதவுவதால், இணையத்திலிருந்து மின்னஞ்சலுக்குப் போகச் சில வினாடிகள்/ நிமிடங்களே ஆகும்.

எது எங்கு போனாலும் வேலை வாய்ப்பு போன்ற விளம்பரங்கள் இருக்கிறதே என்று கொஞ்சம் ஆறுதலாக இருந்த செய்தித்தாள்களுக்கு மான்ஸ்டர் (www.monster.com) மற்றும் வொர்கோபாலிஸ் (www.workopolis.com) போன்ற இணைத்தளங்கள் மேலும் சவால் விட்த் தொடங்கின. இதில் உறுப்பினர்கள் தங்களுடைய தற்குறிப்பை (resume) இணைத்தளத்தில் மேலேற்றி விடலாம். வேலைகளுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிது. தபால் கவர், தலை என்று அலைய வேண்டாம். செய்திதாளைப் போல அல்லாமல் தேவைக்கேற்ப, உங்கள் துறையில் உள்ள புதிய வேலைவாய்ப்புகளை வாரம் ஒரு முறையோ, அன்றாடமோ அனுப்பிவிடுகிறது மான்ஸ்டர். உங்களுக்கு எலக்ட்ரிக் ரிப்பேர் வேலை தெரியும் என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்கு கட்டிடத் தொழிலில் வேலை கிடைக்கலாம், அல்லது கார், மற்றும் மோட்டார் தயாரிப்பு நிறுவனங்களில் கிடைக்கலாம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். செய்தித் தாள்களில் இப்படிப் பல துறைகளிலும் சம நேரத்தில் வேலை தேடுவது கடினம், பலவிடங்களில், பல செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய நேரிடலாம். மேலும் செய்தித்தாள்கள் ஒரு பிராந்தியத்தோடு தாக்கத்தை நிறுத்திக் கொள்வன.  இணைத் தளங்களான, மான்ஸ்டர் போன்றவை ஒரு நாடு என்று கூட இல்லை, ப்ல நாடுகளில் கூடத் தகவலை ஒரே நேரத்தில் பரப்பும் சக்தி உள்ளவை.  அதற்காகச் செலவு ஒன்றும் அதிகமும் இல்லை.

மான்ஸ்டர் மற்றும் வர்கோபாலிஸ் போன்ற இணைத்தளங்களில் தேடுவதும் மிகவும் எளிது. ஒவ்வொரு துறைக்கும் ஒரு வேலை வடிகட்டி (filter) உருவாக்கினால், வாரம் ஒரு முறை புதிய விளம்பரங்களை உங்களுக்கு மின்ன்ஞ்சல் மூலம் அனுப்பி விடுகிறார்கள். அதற்கு பின் பிடித்த துறையில் வேலைகளை வெற்றிகரமாக அடைவது உங்கள் சாமர்த்தியம். எப்படி அனைவரையும் கவர்வது போல தற்குறிப்பு எழுதுவது என்று பல வித ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள். மேலும், நிறுவனங்களுக்கு தங்களது இணைத்தளங்களில் உள்ள தற்குறிப்புகளை பரிசீலனை செய்ய வசதியும் செய்து கொடுத்து காசு பண்ணுகிறார்கள். மான்ஸ்டர் மற்றும் வர்க்காபாலிஸ் இந்திய இணைத்தளங்களும் வைத்துள்ளார்கள். இந்த விசேஷ இணைத்தளங்கள் இந்த ஒரு வேலையை மட்டும் செய்வதால், செய்தித்தாள்களை விட மிக ஆற்றலுடன் செயல்பட்டு அச்சுத் தொழிலை மேலும் அச்சுறுத்தி வருகிறார்கள். இன்று அச்சுத் தொழில் என்று சொல்வதை விட அச்சுறுத்தப்பட்ட தொழில் என்று சொல்வதே சரி என்று படுகிறது!

செய்தித்தாள்களுக்கு இந்த நிலை எப்படி வந்தது என்று சற்று சீரியஸாக அடுத்த கட்டுரையில் அலசுவோம்.

________________________________________________

குறிப்பு:

[1] நான்காவது எஸ்டேட் என்பது யூரோப்பிய அரசியலில் இருந்து வந்த ஒரு சொல்/ பெயர். ஃப்ரெஞ்சு அரசியலில் நாட்டின் மூன்று முக்கிய பங்குதாரர்களாகக் கருதப்ப்பட்டவை, ஆளும் வம்சங்கள்,  சர்ச், பொதுமக்கள்.  இங்கிலாந்தில் இதுவே சற்று வேறாக வருணிக்கப்பட்டது.  ஆன்ம வாழ்வின் எஜமானர்கள், எதார்த்த வாழ்வின் எஜமானர்கள், சாதாரண மக்கள் என்று பிரிவு.  நான்காவது எஸ்டேட், அல்லது பிரிவு இந்த மூன்றுக்கும் அடங்காத சுதந்திர இயக்கம் கொண்டது எனத் துவக்கத்தில் கருதினர்.  இன்று தெரிகிறது, செய்தி நிறுவனங்கள், பொருளுக்கும், அரசியலுக்கும் அடங்கியே இயங்குகின்றன, மக்களை அவையும் வேட்டைதான் ஆடுகின்றன் என்பது?

(தொடரும்)