வாசகர் மறுமொழி

mast

திரு.ரவி நடராஜன் எழுதிய அனிமேஷன் தொடரை நான் வெகுவாக விரும்பிப் படித்தேன். அவர் சொல்லியிருக்கும் பல தகவல்களும், குறிப்பாக அவற்றுக்கு இணைப்பாகத் தந்த விடியோக்களும், இணையதள சுட்டிகளும் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன. மேலும் ஒவ்வொரு கட்டுரையிலும் மறக்காமல் அவர் உதவி செய்த திரு.சுவாமி மனோகர் பெயரைக் குறிப்பிட்டது அவருடைய நேர்மையைக் காட்டுகிறது. இன்னும் கொஞ்சம் தொழில்நுட்ப விஷயங்களைப் பேசியிருக்கலாம், மேலும் எடுத்துக்காட்டுகளோடு என்பதுதான் என் மனதுக்குப் படும் ஒரே ஒரு குறை. ஏனென்றால் சொல்வனத்துக்கு வரும் வாசகர்கள் வெறும் பட்டியலை மட்டும் எதிர்பார்ப்பவர்கள் இல்லை. இது ஒன்றுதான் எனக்குக் குறையாகப் பட்டது. மற்றபடி, மிகவும் உபயோகமான நல்ல அறிமுகம் தரும் கட்டுரைத்தொடர் இது. இதுபோன்ற கட்டுரைத்தொடர்கள்தான் ஒரு இதழின் தரத்தையே நிர்ணயிக்கின்றன. அவ்விதத்தில் சொல்வனத்தில் வரும் தொடர்கள் சிறப்பாகவே இருக்கின்றன. நான் மிகவும் விரும்பிப்படித்த நாஞ்சில்நாடனின் ‘பனுவல் போற்றுதும்’, அருண் நரசிம்மனின் ‘ராகம் தானம் பல்லவி’ இரண்டும் திடீரென்று நின்றுபோனது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தைத் தந்தது. தொடர்கள் இடைவெளியில்லாமல், திடுதிப்பென்று நிறுத்தப்படாமல் வெளிவருவது ஒரு இதழின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். தொடரிலும் தொய்வில்லாமல் இருக்கும். ஆசிரியர் குழு கவனிக்கும் என நினைக்கிறேன்.

ராபர்ட் சாலமன்

(’பனுவல் போற்றுதும்’, ‘ராகம் தானம் பல்லவி’ இரு தொடர்களுமே நிறுத்தப்படவில்லை. கட்டுரையாசிரியர்கள் பயணத்திலும், வேலைப்பளுவிலும் இருந்ததால் அவர்களால் எழுத முடியாமல் போனது. இரு தொடர்களும் இந்த இதழில் தொடர்கின்றன. – ஆசிரியர் குழு)

திருமலைராஜன் எழுதிய விக்கிலீக்ஸ் தொடர் நன்றாக இருந்தாலும், சொன்னதையே சொல்வது போன்றிருந்தது கொஞ்சம் ஆயாசமளித்தது. எடிட்டர்கள் இன்னும் கொஞ்சம் எடிட் செய்து கூர்மையாக்கியிருக்கலாம்.

எஸ்.சரவணன்,
அபுதாபி

அரவிந்தன் நீலகண்டன் எழுதிவரும் ஹாலிவுட் திரைப்படங்களைக் குறித்த கட்டுரைகளை ரசித்து, ரசித்து மகிழ்ந்துவருகிறேன். இதுபோன்ற ஆழமான – சமூகப்பார்வை கொண்ட திரைப்படக்கட்டுரைகளைப் படிப்பது வெகு அபூர்வம். சில கலைச்சொற்களின் மொழிபெயர்ப்புகள் சரியில்லாதவை போலத் தோன்றுகின்றன. Coldwar என்பதை பனிப்போர் என்று நேரடியாக மொழிபெயர்ப்பது உறுத்தலாக இருக்கிறது. பொதுவாகவே இதுபோன்ற சொற்களை நேரடி மொழிபெயர்ப்பு செய்வதைத் தவிர்ப்பது நலம். ‘உலைகலனாகுமா தமிழகம்?’ கட்டுரை நன்றாக ஆரம்பித்தாலும் திசை மாறி எங்கெங்கோ போய்விட்டது. ஆனாலும் முக்கியமான கட்டுரைதான். ஸ்வர்ணலதாவைக் குறித்த அஞ்சலிக்கட்டுரை நன்றாக இருந்தது. ஓர் இசைக்கலைஞரின் தனிப்பட்ட ஆளுமையை எந்தவிதத்திலும் தொடாமல் இசையாளுமையை மட்டுமே வைத்து அஞ்சலிக்கட்டுரையை எழுத முடியும் என்று காட்டியதே பெரிய சாதனைதான்.

அன்பரசன்

நலம் மிகு சிந்தையீர்

வணக்கம்,
தங்களின் உலைகலன் ஆகுமா தமிழகம் கட்டுரை கண்டேன். மிகச்சிறந்த கருத்துக்களை நெருக்கித்தொடுத்த நல்ல கட்டுரை. பல்வேறு தளங்களில் இருந்தும், களங்களில் இருந்தும் தரவுகளை தொகுத்து திரட்டி எழுதிய கட்டுரையின் கரு சரியான திசையில் முடிவைச் சொல்கிறது. பொருளாதார மயமாக்களின் வினைகளையும் எதிர் வினைகளையும் பற்றி நன்றாக அலசி ஆய்ந்து எழுதிய கட்டுரையாளருக்கும், ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி,
பாரதி ப்ரகாஷ்

உலைகலனாகுமா தமிழகம்? – கோவை நிகழ்வை முன்வைத்து” – இந்தக் கட்டுரை தமிழகத்திற்கு சொல்வனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும் உள்ளது! என்ன கைம்மாறு செய்ய முடியும், நன்றி சொல்வதைத் தவிர! இருந்தாலும் சாமானியர்கள் எவ்வாறு இதை எதிர் கொள்ள வேண்டும் எனவும் கட்டுரையாளர் எழுதுவார் என நம்புகிறோம்! சுகாவின் ஸ்வர்ணலதாவைப் பற்றிய கட்டுரை என்ன சொல்ல! நன்றி!

ஷங்கரநாராயணன்

ஒரு இசைக் கட்டுரை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது ‘சின்னஞ் சிறு கிளியே’. பாடல்களின் பரிச்சயம் மட்டுமே உள்ள எனக்கு ராகங்களைப் பற்றி எதுவும் தெரியாது சுகாவின் முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல் பாடல்களின் வாயிலாக ராகங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இசை மேதமைகளுக்கான விஷயங்களும் கட்டுரை முழுவதும் பரவிக் கிடக்கின்றன

அவருக்கே உரித்தான அந்த ஆரம்பம், நடை, நிறுத்தங்கள். ஒரு அஞ்சலிக் கட்டுரையானது சோகத்தை மட்டுமே பிழியாமல் கட்டுரையின் நாயகரைப் பற்றிய நினைவுகளை ஆழப்பதித்து செல்லவேண்டும் அது நடந்து விட்டது. சுகாவின் இசைக்கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரவேண்டும் எல்லாவற்றிக்கும் மேலாக சொல்வனத்தின் சரியான முயற்சிக்கு (வித்தியாசமான என்று சொல்லமாட்டேன்) என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஏ தெய்வமே! முப்பதுஏழு வயசான ஒரு குரலை நிறுத்திய உன் பாவம் நீங்க நீ செய்ய வேண்டிய பரிஹாரம் என்ன தெரியுமா. இந்த கட்டுரையின் ஆசிரியரிலிருந்து ஒட்டு மொத்த சொல்வனம் குழுமத்திற்கும் நீண்ட ஆயுளை கொடு.

பா.பொன்னையன்
திருநெல்வேலி.