02. மீண்டெழுந்த நாட்டுப்புற இசை

இத்தொடரின் பிற பகுதிகளைப் படிக்க: செல்லோ இசைப்புரட்சி

colors_of_cello_front-final-400x397

இசையை உடல் அலங்காரமாகக் கொண்ட கசல்ஸை திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என அரவணைத்த சார்லஸ் லமோரே அவரைப் பாரீஸ் நகரின் பிரதானக் இசைக்கலைஞராக முன்னிறுத்தத் துவங்கினார். அந்நாளில் உலகலாவிய இசை அரங்கமாக இருந்த ஐரோப்பாவுக்குள் பிரவேசிக்க மிகப்பெரிய வாய்ப்பாக கசல்ஸுக்கு இது அமைந்தது. ஒரே இரவில் ஐரோப்பாவிலிருந்த பல இசைக்கூடங்களிலிருந்தும் அழைப்புகள் வரத்தொடங்கின. இது சாதாரண காரியமல்ல. காற்றில் ஊசலாடும் மெழுகு வெளிச்சம் போல் தத்தளித்த கசல்ஸின் தன்னம்பிக்கை சார்லஸ் லமோரேவின் அறிமுகம் மூலம் கம்பீரமாக பவனி வரத்துவங்கியது.

ஒரே வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளில் கசல்ஸ் பங்கு பெறத்துவங்கினார். இனி இசை மூலம் தன் வாழ்வை முழுமைப்படுத்த முடியும் என்ற வைராக்கியம் அவருக்கு அதிகமானது. மேற்கிசை மும்மூர்த்திகளான மோசார்ட், பாக், பீத்தோவன் இசையை பல இசைக் குழுக்களுடன் வாசிக்கத் துவங்கினார்.

சிறுவயதிலிருந்தே புதுமையான பாதையை மட்டுமே தேர்ந்தெடுக்க பழகியிருந்தார் கசல்ஸ். அதிகம் புழக்கத்திலில்லாத செல்லோ கற்றுக்கொள்ளத் துவங்கியதிலிருந்து தன் வாழ்வில் அனைத்தையும் தானே தீர்மானிப்பது என்பதில் தீவிரமாக இருந்தார். நம் முடிவுகளுக்கு நாமே காரணமாக இருக்க வேண்டும் என போதித்து வளர்த்த அம்மாவின் வார்த்தைகளும் திடமான முடிவெடுப்பவராக அவரை மாற்றியிருந்தது. இதனால் திடீரென கிடைத்த புகழ் அவரை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது.

கிடைத்த புகழை அனுபவிக்காமல் வெற்றியை பூதக்கண்ணாடியில் தீவிரமாக அலசும் பண்பு அபாயகரமானதா? இல்லை. நம் தேடலின் பாதையை தீர்மானிக்க, மேன்மையடைய, இலக்கை அடைய, பயணத்திட்டம் தீட்ட இப்படிப்பட்ட தீவிர விசாரணைகள் தேவை என அவர் உணர்ந்திருந்தார். இதையே தன் வாழ்வின் இலக்காகவும் கொண்டார்.

pablo-casals

இசை மூலம் கண்ணுக்குப் புலப்படாத கதவுகளைத் திறக்க முடியும் என்பது கசல்ஸின் தாரக மந்திரமானது. தன் வெற்றி மூலம் அடையவேண்டிய இலக்குகளை தீர்மானித்துக்கொண்டார்.

தன் அபிமான பாக்கின் செல்லோ குறிப்புகளின் புகழைப் பரவச் செய்ய வேண்டும். கனத்த கீழ் சுருதி இசையை வெளிப்படுத்தினாலும், நம் அகத்தின் அடியாழ ஆசைகளை வெளிப்படுத்தும் கருவியாக செல்லோவை முன்னிறுத்த வேண்டும். அடையாளத்தை இழந்து வரும் தன் இன மக்களான காடெலோனியா சமூகத்துக்கு சுதந்திரமும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும். அணையா நெருப்பாக இவை கசல்ஸை ஆட்கொண்டது.

இவற்றில் இனப்பற்று கசல்ஸை மிகவும் பாதித்தது என்றே சொல்லவேண்டும். வரலாற்று ரீதியாக அதற்குச் சில காரணங்கள் உண்டு.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொழி இனம் கடந்து செயல்படவேண்டிய கலைஞர்கள் தங்கள் தேச சொத்துக்களான நாட்டார் இசை, மரபு போன்றவற்றைக் கட்டுக்கோப்பாக பாதுகாக்கத் தொடங்கினர். அதற்கு முன்பு வரை ஒரு ஜெர்மானியக் கலைஞர் இத்தாலிய ஒபராவை தன் தாய்மொழியாகக் கொண்டு செயல்படுவார். ஹங்கேரி நாட்டு இசை ஒருங்கிணைப்பாளர் (Conductor) ருஷ்ய நாட்டிசையை தன் மரபு வழியாக முன்மொழிவார். கலைஞர்கள் தங்கள் நாட்டு பழங்குடி இசைப் பொக்கிஷங்களை மறந்து செயல்பட்ட காலம். மெல்ல தனித்துவமாக வளர்ந்த உள்நாட்டு இசை மரபு மாறி வந்தது. பல நாடுகளில் இவை அழிந்தன.

கசல்ஸின் சமகாலத்தவரான வாக்னர் ஜெர்மன் நாட்டுப்பற்றை வளர்க்கும் இசையை பிரபலப்படுத்தினார். பிற்காலத்தில் ஹிட்லரின் அமைப்புக்கு வாக்னரின் இசையும் எழுத்தும் ஒரு துணைகோலாக இருந்தது. வாக்னரைத் தொடர்ந்து ரிச்சர்ட் ஸ்ட்ராஸ், மாஹ்லர், ஸ்ட்ராவின்ஸ்கி போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் நாட்டின் கிராமிய இசை மற்றும் கதைகளை மையமாகக் கொண்டு ஓபரா, சிம்பொனி இயற்றத் துவங்கினர். பல நாட்டுப்புற இசை பாணிகள் புது வடிவங்களாக உருமாறின. மெல்ல இனக்குழு அடையாளங்கள் இசை வழியே, நாட்டுப் பற்று வழியே நிறுவப்பட்டன.

கசல்ஸையும் இவை பாதித்ததில் ஆச்சர்யமில்லை.

ஸ்பானிய மொழியின் ஆதிக்கத்தில் காடெலோனியா மக்களின் அடையாளமான காடெலோனிய மொழி, நாட்டுப்புற இசை, ஸ்ர்டானா (Sardana) என்ற காடெலோனிய நடனம் போன்றவை அழிந்து கொண்டிருந்தன. சிறுவயதிலிருந்தே காடெலோனிய சுதந்திரமும், கொண்டாட்டங்களும் கசல்ஸின் ரத்தத்தில் நிறைந்திருந்ததால் இம்மாறுதல்களை அவர் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

காற்றின் திசை மாறிவிட்டதால் கப்பலை அதன் போக்கில் செலுத்த அனுமதிக்க முடியுமா என்ன? இப்படிப்பட்ட நிலைப்பாடுகளை கசல்ஸ் என்றும் எதிர்த்திருக்கிறார். ஆனாலும் காலம் கனிந்து வரக் காத்திருந்தார். அப்போதைய கசல்ஸ்கசல்ஸின் அன்றாடத் தேவைகளை இசை அளித்துக்கொண்டிருந்தது. ஐரோப்பா முழுவதும் செல்லோ புகழும் பாக்கின் இசைக்குறிப்புகளும் பரவிக்கொண்டிருந்தன. ஆனாலும் தன் இலக்கு வகுத்த பாதையிலிருந்து சற்றும் வழுவாமல் முன்னேறிக்கொண்டேயிருந்தார்.

இப்படியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கசல்ஸுக்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் தேவைப்பட்டன. ஐரோப்பா, அமெரிக்கா எனப் பல நாடுகளுக்குச் சென்று செல்லோ இசையால் மக்களை வென்றுகொண்டேயிருந்தார் இந்த இசைச்சூறாவளி.

இவர் இசையால் சாதித்ததை சில சக்திகள் வன்முறையால் சாதிக்க நினைத்தன. 1914ஆம் ஆண்டு வந்தது. உலகப் போரின் தீவிரம் மக்களை உறையச் செய்யத் தொடங்கியது. ஸ்பானிய அரசு முதல் உலகப்போரில் நடுநிலைமை வகித்தாலும் போரின் விளைவுகளால் கசல்ஸுக்கு அதிருப்தியே மிஞ்சியது. பல சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவத்தொடங்கினார். ரெட் கிராஸ் அமைப்பின் உறுப்பினராக முதல் உலகப்போர் சமயத்தில் ஐரோப்பாவின் பல மூலைகளுக்குச் சென்று தன்னால் முடிந்த உதவிகளைச் செய்தார்.

இதையும் அதிகாரத்தில் உள்ளவர்கள் விரும்பவில்லை. பாரீஸில் அவர் வேலைப் பார்த்த ஆர்க்கெஸ்ட்ரா குழுவிலிருந்து அவரை விலக்கினார்கள். வேறு வழியில்லாமல் கசல்ஸ் காடெலோனியாவுக்கு திரும்ப வேண்டிய நிலை உண்டானது.

முதல் உலகப்போர் முடியும்வரை கசல்ஸின் எந்த இசையும் பதிவு செய்யப்படவில்லை. ஒரு பாக் இசையின் நிபுணராகவே இசை உலகில் பவனி வந்ததால் கசல்ஸின் இசையமைக்கும் திறன் பற்றி பலருக்கும் தெரியாமல் இருந்தது. நிரந்திர வேலையில்லாமல் காடெலோனியாவில் இருந்த கசல்ஸ் இசையமைப்பதில் தன் நேரத்தைச் செலவு செய்யத் துவங்கினார். ஒவ்வொரு நாளையும் பாக்கின் The Well Tempered Clavier என்றழைக்கப்படும் பயிற்சி குறிப்புகளை இசைத்துத் துவங்குவார். தன் பங்களாவிலிருந்து இசைக் கூடத்தில் பல மணிநேரங்கள் செல்லோவுடன் செலவு செய்வார். இக்காலகட்டத்தில் செல்லோ இசைக்கருவி மூலம் சில முக்கிய பாணிகளை கண்டடைந்தார்.

[பாப்லோ கசல்ஸ் பிரபலப்படுத்திய ‘Song of Birds’ என்ற நாட்டுப்புறப்பாட்டு]

கசல்ஸுக்கு முன்னர் செல்லோ கிடப்பில் போடப்பட்ட வாத்தியக்கருவியாகவே இருந்தது. மிகப் பெரிய வயலின் போல் இருக்கும் அதன் உருவம் இசையார்வமுள்ள அனைவரையும் மிரள வைக்கும். மேலும் வயலின், கிதார் போல் லகுவாக கையில் இழுத்த இழுப்புக்கெல்லாம் வராது. அதன் வடிவமும் எடையும் புதிய ரசிகர்களுக்கு பிரதான சவாலாக இருந்தன.

செல்லோவை இசைக்கும் முறையும் மிக வித்தியாசமானதுதான். இரண்டு கால்களுக்கு நடுவே வயலினைத் தலைகீழாகப் பிடிப்பது போல் பிடிக்க வேண்டும். செல்லோவைப் பிடிப்பது மட்டுமல்ல இசைப்பதும் ஆரம்பகட்ட ரசிகர்களுக்குச் சிக்கலானதுதான். கிட்டத்தட்ட நம் முகமிருக்கும் உயரத்துக்கு எந்தவித பிடிமானமும் இல்லாமல் இடது கை அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். தந்தியை இசைக்கத் தொடங்கினால் முழு கையை அங்குமிங்கும் ஓடிப் பிடிப்பது போல் தோற்றமளிக்கும். ஒரு ஸ்டைலான வாத்தியக்கருவியைப் போல் பார்த்தவுடன் நம்மை ஈர்க்காதது என்னவோ உண்மைதான்!

இப்படிப்பட்ட வாசிக்கும் முறை பலருக்குச் சிக்கலைக் கொடுத்ததில் ஆச்சர்யமில்லை. இதை மேம்படுத்த முனைந்த கசல்ஸ் விரல்களை மட்டும் நகர்த்தி பல `நோட்களை` ஒன்றாக வாசிக்கும் பாணியைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் முழு கையை உபயோகிக்காமல், வெறும் விரல்களைக் கொண்டு புது இசை வெள்ளத்தை வரவழைக்க முடியும். இதன் பெயர் Expressive Intonation.

செல்லோவை தனியிசைக் கருவியாகப் பிரபலப்படுத்திய கசல்ஸ், அதை சுலபமாக உபயோகிக்கவும் புது பாணிகளைக் கண்டுபிடித்துவிட்டார்! அவர் நினைத்ததில் இரண்டு காரியங்கள் முடிவடைந்தன!

இதற்கு பிறகு சற்றே நிம்மதியாக மூச்சு விட்டுக்கொள்ளலாம் என நினைத்த கசல்ஸுக்கு அரசியல் மாற்றத்தினால் பேரிடி இறங்கியது.

ஸ்பானிய ஜெனரலான மைக்கேல் ப்ரைமோ ரிவேரா (Moguel Primo de Revera) தன்னை சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்திக்கொண்டார். அதுவரை ராஜ குடும்பத்துடன் ராசியாக இருந்த மைக்கேல் திடீரென ஒரு நாள் ராணுவ ஆட்சியை அமல் படுத்தினார். முக்கியமாக காடெலோனிய மொழி, இசை, நடனம் என எல்லாவற்றுக்கும் போட்டார் பெரிய தடா. அதுமட்டுமல்லாது அரசு ஆவணங்கள் தொடங்கி, கடைகளின் பெயர் பலகைகள் வரை அனைத்தும் ஸ்பானிய மொழியில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டார். அப்போது ஒரே வாரத்தில் எல்லாவற்றையும் மாற்ற வேண்டுமென மின்னல் உத்தரவும் போடப்பட்டதாம்!

உலகப்போரில் நடுநிலைமை வகித்தாலும், ஸ்பானிய அரசுக்கும் அதன் காலனிக்கள் மூலம் சிறிது இழப்பேற்பட்டது. அதை முறியடித்துக்கொண்டு நாட்டின் நிதியைச் சரிசெய்ய வேண்டும் என்ற திட்டத்தில் மண் விழுந்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் பட்டினியில் அவதிப்படத்தொடங்கினர். பொருளாதாரம் கிணற்றில் போடப்பட்ட கல்லானது.

அரசு அதிகாரிகளும், மக்களும் ஒரே வாரத்தில் தங்கள் தாய்மொழியை மாற்றிக்கொண்டிருந்தபோது மைக்கேல் ப்ரைமோ அடர்ந்த ஸ்பானிய காடுகளில் வேட்டையாடினார். பல சூதாட்ட விடுதிகளில் தப்புந்தவறுமாக ஆடியதால் பல நகரங்களை பணக்காரர்களிடம் இழந்திருந்தார். பின்னர் தன் ராணுவத்தை அனுப்பி இவர்களை சிறை பிடித்தார் என்பது வேறு விஷயம். தன் ஜிப்ஸி நண்பர்களுடன் உல்லாச விடுதிகளில் மாதக்கணக்கில் செல்வு செய்துவிட்டு தலைநகருக்குத் திரும்பும் விருந்தினராக இருந்தார்.

ராஜ குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கஜானா குறைவதைக் கண்டு உள்நாட்டு கலவரம் மூலம் மைக்கேல் ப்ரைமோவை பதவியிலிருந்து இறக்கினர். இந்நம்பிக்கை துரோகத்தால் மனம் உடைந்து போன சர்வாதிகாரி தான் வஞ்சிக்கப்பட்டதாக புலம்பியபடி தன் கடைசி சில மாதங்களை பாரீஸில் கழித்தார்.

ப்ரைமோவின் வாழ்வு கசல்ஸுக்கு அரசியல் ரீதியான தொடர்புகளை மீட்டுத் தந்தது. ராஜாவின் மகன் பள்ளி நண்பர் என்ற காரணத்தினால் சில முக்கிமான முடிவுகள் எடுக்கும்போது மாற்றுத்தரப்பு கருத்துகளுக்காக கசல்ஸிடம் கேட்பது வாடிக்கையானது.ப்ரைமோ பதவி இறங்கியபின் காடெலோனியாவில் தேர்தல் முறையில் ஜனநாயக ஆட்சி கொண்டு அமையக்கூடும் என்ற நப்பாசையை ராஜ குடும்பம் மக்களிடையே விதைத்தது. இதை அரசரிடமிருந்து முதலில் கேட்ட கசல்ஸின் மனம் முழுவதும் இனம் புரியாத சந்தோஷம் நிரம்பியது. தான் விரும்புவதும் இதுவே என பகிரங்கமாக ராஜ குடுபத்தினரிடம் ஒப்புக்கொண்டார்.

காடெலோனிய இன அடையாளத்தை மீட்க வேண்டுமென்ற கசல்ஸின் முக்கியமான ஆசை சிறு புல்லென முளைக்கத் துவங்கியது. காடெலோனிய கலாசாரம் மீண்டும் கோலோச்சக்கூடிய நாள் நெருங்கியது. பல காலங்களாக அரச குடும்பங்களையும், சர்வாதிகார ஆட்சியாளர்களை மட்டுமே பார்த்து வந்த காடெலோனியா ஒரு சுதந்திரமான தேர்தலுக்குத் தயாரானது.

இசையில் மட்டுமல்லாது தன் வாழ்விலும் சுதந்திரத்தை பிரதானக் குறிக்கோளாக கொண்ட கசல்ஸுக்கு இது அளவிடமுடியாத சந்தோஷத்தை அளித்தது. இசையென்பதே சுதந்திரத்தின் வெளிப்பாடு; அதில் எந்தவிதமான கட்டுப்பாடுகள் இருக்ககூடாது என்பதில் கசல்ஸ் தீவிரமாக இருந்தார். இதன் காரணமாகவே செல்லோ இசைக்கருவியை சுலபமாக இசைக்க பல புது பாணிகளை உருவாக்கினார். இவையெல்லாவற்றையும் விட தன் நாட்டு மக்களின் சுதந்திரத்தைக் காண அதிக முனைப்புடன் இருந்தார்.

1936ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் என அறிவிக்கப்பட்டது.

அதே மாதத்தில் இத்தாலியின் பாஸிச தலைமை சர்வாதிகாரியாகவும், புது பேராட்சியின் ஜெனரலாகவும் பெனிட்டோ முசோலினி தன்னை அறிவித்துக்கொண்டார்!