காலம்

அந்த அறை ரொம்பப் பெரியதுமில்லை; மிகவும் சிறியதுமில்லை. பனிரெண்டுக்கு பனிரெண்டு இருக்கலாம். அதன் ஒரு சுவரினருகில் போடப் பட்டிருந்த இரும்புக் கட்டிலில் மெலிந்து போன மெத்தையின் மேல் நாராயணன் படுத்திருந்தான். நல்ல ஜுரம். மத்தியான நேரம். மதறாஸ் வெய்யில். ஃபேன் உஷ்ணக் காற்றை அறையில் சுழல விட்டுக் கொண்டிருந்தது.

அவன் படுக்கையிலிருந்தவாறே அறைக் கதவைப் பார்க்க முடியும். சரியாகச் சொன்னால் அறைக் கதவுகள். இரட்டைக் கதவுகள். அதில் ஒன்று எப்போதும் சாத்தியும் இன்னொன்று திறந்தும் இருக்கும். ராத்திரியில் கூட காற்றுக்காக. திறந்த கதவின் வழியாக மாடிப் போர்ஷனுக்குப் போகும் படிகளும் அதைத் தாண்டி பின் கட்டிற்குப் போகும் வழியை இணைக்கும் முற்றமும் நடுக் கட்டு வரையிலுமான பாதையும் தெரியும்.

அதன் வழியாக அம்மாவின் தலை தெரியாதா என்று நாராயணன் பார்த்துக் கொண்டிருந்தான். ஜுரமும், குளிரும், போர்வையின் இதமும், உறுத்தலும், கண்களின் எரிச்சலும் அவனுக்கு லேசான தலை சுற்றலைத் தந்தன.

அம்மா வருகையில் ஏதாவதுகொண்டு வருவாள். கஞ்சி, நார்த்தங்காய் ஊறுகாய், ஜூஸ்.. .. ஏதாவது. அவர்கள் போர்ஷனுக்கு சமையலறை, நடுக் கட்டையும் தாண்டி, பின் கட்டில் இருந்தது. பின் கட்டிற்கும் முன்னறைக்குமாக அம்மா இத்தனை வருஷமாக நடந்த நடையில் இந்த உலகத்தை எத்தனையோ முறை சுற்றி வந்திருக்கலாம்.

இது மாதிரி அவன் எவ்வளவோ தடவை ஜுரம் வந்து படுத்திருக்கிறான். தரையில், பின்பு அப்பா போன பிறகு அவர் கட்டிலில். அம்மா ந்யூஸ் பேப்பரை பற்ற வைத்து அதில் வெந்நீர் வைத்து எத்தனையோ நாள் பாதி ராத்திரியில் தாகத்திற்கு கொடுத்திருக்கிறாள்.

ஜுரம் வந்ததும் டாக்டர் ராமராவ் டிஸ்பென்ஸரிக்குப் போய் விடுவார்கள். அது நான்கு அறைகள் கொண்ட டிஸ்பென்ஸரி. இரண்டு அறைகளில் பெஞ்சுகள் இருக்கும். மூன்றாவது அறைக்கு முன் ஒரு மரத் தடுப்பு. அதற்குள்ளும் ஒரு பெஞ்சு. பிறகு கடைசி அறையில் மருந்து கலக்கும் பெரிய பியானோவைப் போன்ற மர மேஜை.

டாக்டர் ராமராவ் நாடகங்களில் வரும் டாக்டர்களைப் போல ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார். அவன் குழந்தையாய் இருந்ததிலிருந்து அவர்தான் குடும்ப டாக்டர். அம்மா அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு டாக்டர் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இப்போது அவனுடைய இருபத்தைந்து வயதிலும் அவர்தான் டாக்டர். அவர் டிஸ்பென்ஸரியில் போய் எத்தனை நாள் உட்கார்ந்து கொண்டிருந்திருப்பான். சில சமயம் படுத்துக் கொண்டும். ரொம்ப சில சமயம் டாக்டரே வீட்டிற்கும் வந்திருக்கிறார்.

நாராயணன் ஒருக்களித்துப் படுத்துக் கொள்ள முயன்றான். கைகளையும் கால்களையும் கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. முகத்தின் மேல் ஒரு பாரம். அவன் இதயம் அடிப்பதோ நுரையீரல் துடிப்போ அவனுக்கே பக் பக் என்று கேட்டது. அதையும் ஃபேனின் கடக் கடக்கையும் தவிர வேறு சப்தமில்லை. கண் கதவின் மேலிருந்து அகலவில்லை. அம்மா இன்னும் வரவில்லை. வருவாள். ஏதாவது பண்ணி கொண்டு வருவாள். இப்போவெல்லாம் மருந்தை அவனே சாப்பிட்டு விடுகிறான். நான்கைந்து வருஷங்களுக்கு முன்பெல்லாம் கூட அம்மாதான் தருவாள். அப்பாவுக்கு எத்தனை விதம் விதமான மத்திரைகளை வேளா வேளைக்கு எடுத்துத் தந்திருப்பாள். மருந்து சாப்பிட சின்னக் குழந்தையைப் போல் அலைக் கழிப்பதில் அவன் அப்பா மாதிரிதான் இருந்தான். இப்போது மாறி விட்டான். கருட மூக்கு ஒன்றைத் தவிர வேறொன்றிலுமே அவன் அப்பா மாதிரி இல்லை.

தலை தெறித்தது. சுற்றலும் நிற்கவில்லை. அவனுக்கு எப்பவுமே ஜுரம் பிடிக்கும். லேசான ஜுரத்தோடு முற்றத்தில் விழும் மழையைப் பார்த்துக் கொண்டே யிருப்பான். அந்தச் சேர்க்கை அவனுக்குப் பிடிக்கும். படித்துப் படித்துத் தலை வலி வந்து ஜுரம் வந்திருக்கிறது. மழையில் நனைந்து. காரணமேயில்லாமல். வாய்க் கசப்பு சில சமயம் தாள முடியாது. முன்பெல்லாம் ஒவ்வொரு முறை மாத்திரையை விழுங்கும் போதும் தொண்டையில் சிக்கிக் கொள்ளுமோ என்ற கலவரம் வரும். அதனாலேயே அதைத் தவிர்க்கப் பார்ப்பான். ஜுரம் தீர்ந்த பிறகும் சூட்டால் உதடுகள் காய்ந்து உலர்ந்து உரிந்து கொண்டிருக்கும். அதைக் கூடப் பிய்த்துப் போடாமல் சும்மா இருப்பான். பிய்த்தால் ரத்தம் வந்துவிடுமோ என்று பயம்.

ஏன் இன்னும் வரவில்லை? அவனுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த வாட்டி வயிற்று வலியோடு ஜுரம் வந்துவிட்டது. குளிர் வேறு. பனியன், முழுக்கைச் சட்டை, லுங்கி, மேலே போர்வை. எல்லாவற்றையும் மீறி குளிரியது. கையைச் சட்டைக்குள் விட்டுக் கொள்ளலாம் என்றால் அசைக்கவே முடியவில்லை. நடு நெஞ்சில் என்னவோ உறுத்தியது, நீளமான பல்லி மாதிரி. அது ரொம்ப காலமாக நகராமல் அங்கேயே இருந்த மாதிரி தோன்றியது.

ஜுரத்தோடு தலை சுற்றல் வந்தால்தான் ரொம்பப் பிரச்னை. தலையைக்கொஞ்சம் உயர்த்தினால் போதும் அதல பாதளத்துக்குள் சரிவது போல பயங்கரமாக இருக்கும்.

குழந்தையாய் இருக்கையில் ஒரு முறை ஆகாரம் வேண்டாம் என்று மறுத்து அழுதிருக்கிறான். அழுது ஜுரம் ஜாஸ்தியாகப் போகிறதே என்று அம்மாவும் ஒன்றும் தரவில்லை. ‘அய்யோ அம்மா ! பயமா இருக்கே ! பள்ளத்துக்குள்ளே விழறேனே ! பிடிச்சுக்கோ ! பிடிச்சுக்கோ !’ என்று கத்தியிருக்கிறான். அம்மா அலறி அடித்துக் கொண்டு பக்கத்துப் போர்ஷன் மாமியைக் கூப்பிட, அவள், அனுபவஸ்தி, ஆறு குழந்தை பெற்றவள், ‘குழந்தைக்கு ஆகாரம் கொடுத்தியா’ என்று கேட்டிருக்கிறாள். அம்மா இல்லையென்றதும், ‘முதல்லே அதைக் கொடு’ என்று பாலாடையால் புகட்டி, பிறகுதான் தலை சுற்றல் நின்றிருக்கிறது.

ஒரு முறை வேடிக்கைக்காக ஒன்று செய்தான். அப்பா அவனுக்கு ஜுரம் வந்தால் கதை சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு தடவை அவர் மடியில் படுத்துக்கொண்டே கண்களை மூடிக் கொண்டு ‘உம்’ கொட்டாமல் இருந்தான். குழந்தை ‘உம் கொட்டவேயில்லையே’ என்று அப்பா பயந்து போய் ‘நாணு ! நாணு !’ என்று அவனை உலுக்கினார். அவன் சும்மா இருந்தான். அம்மாவும் வந்து கலவரத்தோடு அழைத்தாள். சிறிது கழித்து கண்ணைத் திறந்தான். ‘என்னடா என்னடா ‘ என்று அப்பாவும், அம்மாவும் கேட்டார்கள். அவன் வெறுமனே சிரித்து ‘கதை சொல்லுங்கோப்பா’ என்றான். அப்பாவையும் அம்மாவையும் ஏமாற்றினது சந்தோஷமாகவும், பயமாகவும் இருந்தது. நடித்தேன் என்று இன்று வரை சொல்லவில்லை.

முற்றத்தில் வெய்யில் நிரம்பி வழிந்தது. ஆளரவமே இல்லை.

கண்களை மூடிக் கொண்டான்.

ஒரு தடவை ஜுரம் விடவேயில்லை. அம்மை போட்டி விட்டது. ஒரு ஜட்டியை மட்டும் போட்டுக் கொண்டு ஒற்றைத் துணியில் படுக்கை. வாழையிலைக்குப் போகவில்லை. வாய்க் கசப்பு தாளவில்லை. நலைந்து அடி தூரத்தில் இருந்த பீரோ கண்ணாடியில் பார்த்தபோது முகமே தெரியவில்லை. ஏதோ புகைதான் தெரிந்தது.

அன்று இரவு. கதவு வழியாக முற்றத்தில் பெரிய வாண வேடிக்கை நடப்பதைப் பார்த்தான். முற்றத்தில் ஐந்து முகங்களைக் கொண்ட தெரு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. விர் விர்ரென்று பலரும் சைக்கிளில் பறந்தனர். பிளாஸ்டிக் சாமான்கள் விற்கும் பஜார். தலையில் கர்ச்சீப்பை குல்லா மாதிரி கட்டிக் கொண்டு லுங்கியோடு யார் யாரோ சைக்கிளில் பறந்தனர். கொஞ்ச நேரத்தில் அவன் அவனிலிருந்து கிளம்பி இரண்டு அடி மேலே போய்க் குப்புறத் திரும்பி கீழே பார்த்தான். கோமணம் போன்ற ஜட்டியுடன் உடல் முழுக்க, முகம் முழுக்க வார்த்திருந்த வட்டங்களுடன் கிழித்த நாராக செயலற்றுக் கிடந்த உடம்பைப் பார்த்தான். எத்தனை நேரம் வாண வேடிக்கை, பிளாஸ்டிக் பஜார், சைக்கிள்களின் விர் நடந்ததென்று தெரியாது. அப்போது காலமில்லை. தன்னையே தான் ஒட்டின்றி அனுதாபமின்றி வெறுமனே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மல்லாந்து மீண்டும் கீழே வந்தான்.

காலையில் அம்மா ‘நாணு நாணு’ என்று மெதுவாக அழைத்தெழுப்புகையில் கண் விழித்த போது எல்லாம் அமைதியாய் இருந்தது. முதல் நாள் கண்ணாடியில் தெரியாமல் மறைந்து போயிருந்த முகம் இப்போது தெரியவாரம்பித்தது. அப்புறம் இருபத்தியோரு நாட்கள் கழித்துதான் தலைக்கு ஜலம் விட்டது, வேப்பிலை மிதக்கும் இதமான வெந்நீர். இது நடந்து ஐந்தாறு வருடங்களாகி விட்டன.

இப்போது கூட ஜுரம் எத்தனை நாளாக இருக்கிறது என்று தெரியவில்லை. அம்மையாய் இருக்குமோ. மனம் சொன்ன உடனே கன்னத்தில் போட்டுக் கொள்வதாய் நினைத்துக் கொண்டான். கையை வெளியே எடுக்க பயமாய் இருந்தது. குளிர். சங்கிலியில் கட்டிய மாதிரி.

ஒரே வலி. எரிச்சல்.

அவன் நெற்றியில் ஒரு கை படர்ந்தது. கை ஜில்லென்று இருந்தது. ஐஸ் மாதிரி இருந்தது. அம்மா. கண்களை அவன் திறக்கவேயில்லை. ஏதாவது சாப்பிடக் கொண்டு வந்திருப்பாள். வாயை மட்டும் திறக்க வேண்டும். மெதுவாக கை நெற்றியிலிருந்து அகன்றது. அம்மா சொல்லட்டும் வாயைத் திறக்கலாம் என்று இருந்தான். அம்மா சொல்லவேயில்லை. சிறிது கழித்து வாயைத் திறக்க எண்ணி, சிறிய கீற்றாக கண்களைத் திறந்து பார்த்தான்.

கண்ணாடி அணிந்து கொண்டு குப்பென்று நரைத்த தலையோடு குண்டாக ஒரு மூதாட்டி நின்று கொண்டிருந்தாள். இது யார் நம்ம வீட்டிற்குள்? அவள் கண்களில் கலவரமும் கண்ணீரும் தெரிந்தன. அவளருகில் வேள்ளை கவுனும், குல்லாயும் அணிந்த ஒரு பெண்ணும், நடு வயது தாண்டிய, லேசான வழுக்கையோடும், நீண்டு வளைந்த மூக்கோடும் இருந்த சிவத்த ஆள் ஒருவரும் நின்று கொண்டிருந்தார்கள். அந்த மூதாட்டி அவரிடம் “ஜுரம் குறையவே இல்லையேடா. அப்பா இது மாதிரி கிடந்ததே இல்லையேடா. எனக்கு பயமா இருக்கேடா” என்றாள். அவர் ‘குறைஞ்சுடும்மா. குறைஞ்சுடும். டாக்டர்லாம் பார்க்கிறாளோல்லியோ. கவலைப் படாதே’ என்றார்.

அம்மாவைத்தான் இன்னும் காணோம்.