மருந்து வாங்கப் போனேன், வியாதி வாங்கி வந்தேன்!

ஒரு ஜீன் இருக்கிறது – அதன் பெயரைச் சொல்லக் கூச்சமாக இருக்கிறது. ஏனெனில் அதில் ஒரு தேசீய அவமானமே அடங்கியுள்ளது.

NDM என்பதில் ‘எம்’ என்றால் மெடல்லோ பீட்டா லாக்டமேஸ். இருந்துவிட்டுப் போகட்டும்; இதையெல்லாம் நினைவு வைத்துக்கொண்டு பரீட்சை எழுதுவது, எம்பிபிஎஸ் படிப்பவர்கள் பட வேண்டிய கவலை. ஆனால் ‘என்டி’ என்றால் நியூ டெல்லி. அங்கேதான் பிரச்னை வருகிறது.

இந்த NDM-1 மரபீனி என்பதற்குக் கையில்லை, காலில்லை. ஆனால் இது ஏதாவது பாக்டீரியாக்களுக்கு உள்ளே போய் உட்கார்ந்துகொண்டால் சில என்சைம் நொதிகளைத் தயாரிக்க ஆரம்பித்துவிடும். பிறகு பெரும்பாலான ஆண்ட்டி பயாடிக் மருந்துகளால் அவற்றை அழிக்க முடியாது. ஆண்ட்டி-ஆண்ட்டி பயாடிக் சக்தி! இது ஒரு பாக்டீரியாவிலிருந்து மற்றொரு வகை பாக்டீரியாவுக்கும் தாவக்கூடியது.

NDM-1 ஊடுருவிய கிருமிகள் எந்த மருந்துக்கும் கட்டுப்படாது என்பதால் இது போன்றவைகளை சூப்பர் கிருமி (super bug) என்பார்கள். சமீபத்தில் லான்செட் விஞ்ஞான இதழில் ஒரு அவதூறுக் கட்டுரை வந்திருக்கிறது : ‘இந்தியாவில் போய் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் நியூ டெல்லி சூப்பர் கிருமிகள் பிடித்துக்கொள்ளும், எனவே அங்கே போகாதீர்கள்’ என்கிறது கட்டுரை. சின்ன வயதில் குழந்தைகள் கொல்லைக் கிணற்றில் எட்டிப் பார்த்தால் ‘சோழப் பிரம்மஹத்தி’ பிடித்துக்கொள்ளும் என்று மிரட்டிய பட்டம்மா கிழவியின் ஞாபகம்தான் வருகிறது.

karthikeyanலான்செட் கட்டுரைக்கான ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து தந்தவர் ஒரு கன்னித் தமிழர்; கார்த்திகேயன். எதார்த்தமாக அவர் ஏதோ புள்ளி விவரங்களைத் திரட்டிக் கொடுத்தால், அதற்கு ஒரேயடியாக பேச்சாயி மேக்கப் போட்டு ‘இந்திய ஆஸ்பத்திரிகளே ஆபத்து’ என்று திரித்து விட்டார்கள். இதைக் கண்டு ‘என்னாங்கடா இது இடைச் செருகல்?’ என்று தலையில் அடித்துக் கொள்கிறார் கார்த்திகேயன்.

இந்த மாதிரி மிரட்டல் டெக்னிக்குகளின் பின்னணி என்ன என்று சில ஊகங்கள் உள்ளன. சேவைகள் துறையில் இந்தியா பீடு நடை போட்டு முன்னேறி வருகிறது. மென்பொருள் காண்ட்ராக்ட்களை ஒரேயடியாக வளைத்துப் போட்டாகிவிட்டது. அதே போல் மெடிக்கல் டூரிஸம் என்று அபுதாபியில் இருந்தெல்லாம் அராபிய ஷேக்கர்கள் வந்து இங்கே கிட்னி, இதயம் என்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு போகிறார்கள். காரணம், கிட்னி திருடுபோகும் அபாயத்தையும் மீறி இங்கே செலவு மிகவும் கம்மி!

காஸ்மெடிக் சிகிச்சையிலோ, டாக்டர் சுஸ்ருதர் காலத்திலிருந்தே நாம்தான் அத்தாரிட்டி. அழகு-அறுவை சிகிச்சை என்பது ஐரோப்பாவில் மிகவும் காஸ்ட்லியான விஷயம். 2006-ல் பிரிட்டனிலிருந்து மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் கீழை நாடுகளுக்கு வந்து தொப்பை, தொங்கு சதை சிகிச்சை செய்து கொண்டு போனார்கள். கத்தியைத் தீட்டிக்கொண்டு காத்திருந்த வைத்தியர்கள், 5 கோடி பவுண்டு மதிப்புள்ள பிசினஸ் வெளி நாட்டுக்குப் போய்விட்டது என்று அரற்றினார்கள்.

சமீபத்தில்தான் அமெரிக்க செனட்டர் ஒருவர் இன்ஃபோசிஸ் போன்ற இந்தியக் கம்பெனிகளை ‘திருட்டு சாமான் விற்கும் கடை’ என்று நாக்கில் நரம்பில்லாமல் ஏசினார். ஒன்று தெளிவாகத் தெரிகிறது: நவீன இந்தியாவைக் கண்டு மேற்கத்தியர்கள் அஞ்சுகிறார்கள், அலறுகிறார்கள்!

ஆஸ்பத்திரியில், ஆஸ்பத்திரியால் தொற்றும் வியாதிக்கு நாஸகோமியல் இன்ஃபெக்ஷன் என்பார்கள். இந்த மாதிரி கிரேக்கச் சொற்றொடர்களெல்லாம் அமெரிக்கர்களின் எளிய வாயில் நுழையாது. எனவே சுலபமாக அவர்கள் ஹெல்த் கேர் வியாதி என்றே சொல்கிறார்கள்.

அகில உலகத்துக்கும் தர நிர்ணயம் செய்யும் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 17 லட்சம் பேருக்கு நாஸகோமியல் தொற்று நோய் வருகிறது. அதில் 99,000 மரணங்கள் நடக்கின்றன! நம் ஒவ்வொருவருடைய குடலுக்குள்ளும் கோடிக் கணக்கில் சூப்பர் கிருமிகள் இருக்கலாம். எனவே இது ஏதோ இந்தியாவில் மட்டுமே ஆஸ்பத்திரிப் படுக்கை விரிப்புக்கு அடியில் விஷமச் சிரிப்புடன் உட்கார்ந்திருக்கும் வியாதி என்று பிரச்சாரம் செய்வது ஒரு வியாபார தந்திரம்தான். 2006-ம் வருடம் டெல்லிக் கிருமியை விடப் பொல்லாக் கிருமி ஒன்று அமெரிக்காவின் டெக்ஸாஸில் வெளிப்பட்டது. ஆனால் அதற்கு டெக்ஸாஸ் சூப்பர் பக் என்று யாரும் பெயர் வைக்கவில்லை.

ஒரு காலத்தில் பெரும்பாலான கிருமிகளுக்கு பெனிசிலின் போதுமாக இருந்தது. ஆனால் இயற்கையிலேயே பெனிசிலினுக்கு அழியாத கிருமிகள் அபூர்வமாக ஒரு சில இருக்கும். அவற்றைத் தவிர மற்ற எல்லாக் கிருமிகளையும் நாம் ஒழித்துவிட்டோம்; எனவே மருந்துக்குக் கட்டுப்படாத கிருமி வகை மட்டும் டார்வினுக்கு நன்றியுடன் பல்கிப் பெருகுகிறது. விளைவு, பெனிசிலினுக்கு பெப்பே என்று சொல்லும் புதுக் கிருமி! பிறகு அதை விட சக்தி வாய்ந்த ஆண்ட்டி பயாடிக்கை நாடி ஓடுகிறோம்.

சூப்பர் கிருமிகள் வளர்வதற்கு நம் பொறுப்பில்லாத மருந்து சாப்பிடும் பழக்கங்கள் காரணம். ஒவ்வொரு ஆண்ட்டி பயாடிக்காக அளவுக்கு மீறி உபயோகித்து, அதற்கு அடங்காத கிருமிகளை உற்பத்தி செய்து தள்ளிவிட்டோம். நம்ம ஊரில்தான் மெடிக்கல் ஷாப்காரர்களே பாதி டாக்டர்கள் ஆச்சே? அவர்களே இஷ்டத்துக்கு எடுத்துக் கொடுக்க, நாமும் பல்லி மிட்டாய் மாதிரி பிடிப்பிடியாக விழுங்கி வைக்கிறோம். ரொம்ப தப்பு!

மருந்து ரெசிஸ்டன்ஸ் கொண்ட கிருமிகள் பரவுவதற்கு, நாம் அரை குறையாக மருந்து சாப்பிட்டு நிறுத்துவதும் மற்றொரு காரணம். சிறு நீரகப் பாதையில் வரும் கிருமிகளுக்கு 7 முதல் 14 நாள் வரை ஆண்ட்டிபயாடிக் எடுத்துக்கொண்டால்தான் வேரோடு ஒழிக்க முடியும். ஆனால் பல டாக்டர்களே இரண்டு மூன்று நாளைக்கு மட்டும் டோஸ் எழுதிக் கொடுத்து விட்டுவிடுகிறார்கள். (எல்லாம் செல்ஃப் ஃபைனான்சிங் செய்கிற வேலை!) நாமும் ஜுரம் போன்ற புறச் சின்னங்கள் குறைந்தவுடனேயே மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிட்டு பிரியாணி அடிக்கக் கிளம்பிவிடுகிறோம். அறைகுறையாக அழிக்கப்பட்ட பாக்டீரியா அந்த மருந்துக்கு எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக் கொண்டுவிடும். அடுத்த முறை இன்னும் தீவிரமான ஆண்ட்டி பயாடிக் தேவைப்படும்!

ஆஸ்பத்திரிக் கிருமிகளில் க்ராம் பாசிடிவ், க்ராம் நெகடிவ் என்று இரண்டு வகையும் உண்டு. க்ராம் பாசிடிவுக்கு ஓரளவு மருந்து இருக்கிறது. க்ராம் நெகடிவ்வுக்கு மருதமலையில் மொட்டைதான் ஒரே மருந்து.

நியூயார்க் நகர ஆஸ்பத்திரிகளில் ஒரு பயங்கர க்ராம் நெகடிவ் கிருமி இருக்கிறது. மார்புச் சளி, சிறுநீர்ப் பாதையில் அழற்சி என்று ஆரம்பித்து ரத்ததிலும் தொற்றும். இது வரை மனிதன் கண்டு பிடித்த அத்தனை மருந்துகளும் அதை ஒன்றும் செய்ய முடியாது! இந்த சூப்பர் பூச்சி இப்போது ஆஸ்பத்திரிக்கு வெளியிலும் பரவிக் கொண்டிருக்கிறது.

ப்ரூக்ளின் ஆஸ்பத்திரிகளால் பரப்பப்படும் நிமோனியாவில் இருபது விழுக்காடு, மருந்தே இல்லாத வகை.

ஃப்ரான்ஸில் ஆஸ்பத்திரியில் அடி வைத்தவர்களில் 7% மக்கள் உபரியாக ஏதாவது கிருமியை வாங்கிக்கொண்டுதான் திரும்புகிறார்கள். இத்தாலியில் வருடா வருடம் 6.7% ஆஸ்பத்திரித் தொற்று; ஏழாயிரம் மரணங்கள் வரை ஏற்பட்டிருக்கலாம். சுவிட்சர்லாந்தில் 7.2%. இந்தியா, பாகிஸ்தான் பற்றி வாய் கிழியப் பேசும் பிரிட்டனில் நூற்றுக்குப் பத்து நோயாளிகள் பில்லையும் கொடுத்துவிட்டு பாக்டீரியாவையும் பெற்றுக்கொண்டுதான் போகிறார்கள்.

மற்றவர்கள் கதை இருக்கட்டும். இந்தியாவின் வண்டவாளம் என்ன? யாருக்கும் சரியாகத் தெரியாது. தொற்று நோய்களுக்கான தேசீய ரெஜிஸ்ட்ரி ஒன்று ஏற்படுத்தி எல்லா ஆஸ்பத்திரிப் பிரச்னைகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம்மிடம் ஒரு ரெக்கார்டும் கிடையாது. பெரும்பாலான மருத்துவ மனைகளில் பத்து முதல் முப்பது சதவிகிதம் வரை தொற்று ஏற்படலாம் என்று ஊகிக்கிறார்கள். அநியாயக் கட்டண ஆஸ்பத்திரிகளில் மட்டும் நோய்த் தொற்று குறைவு – மூன்று சதவிகிதம்தான். பேஷண்டுகள் வரிசையாக வராந்தாவில் பாய் போட்டுப் படுத்திருக்கும் தர்மாஸ்பத்திரிகளில் எவ்வளவு என்பதைக் கார்த்திகேயன்தான் ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

ஆனால் இந்தப் புள்ளி விவரங்களிலெல்லாம் ஒரு பிரச்னை. ‘ஆஸ்பத்திரியில் கிடைத்த தொற்று நோய்’ என்பதன் வரையறை என்ன? அதுவே நாட்டுக்கு நாடு, பேட்டைக்குப் பேட்டை மாறுபடுகிறது. லாஸ் வெகாஸ் ஆஸ்பத்திரி ஒன்றில் 250 பேர் செத்து விழுந்தார்கள். விசாரணை நடந்தது. MRSA என்ற சூப்பர் கிருமியை வாரி வழங்கியது ஆஸ்பத்திரிதான் என்பது தெரிய வந்தது. ஆனால் ஆஸ்பத்திரி ஆவணங்களில் இதைப் பற்றிப் பேச்சு மூச்சே இல்லை.

பொதுவாக எந்த ஆஸ்பத்திரியுமே தன்னுடைய நான்கு சுவர்களுக்குள் ஏற்பட்ட தொற்று நோய்கள் பற்றிய தகவல்களை அரசாங்கத்திடம் பகிர்ந்து கொள்வதில்லை. ரொம்ப அதட்டிக் கேட்டால் ‘எண்ணிக்கையைச் சொல்கிறோம், ஆனால் எங்கள் ஆஸ்பத்திரியின் பெயரை மட்டும் வெளியே விட்டுவிடக் கூடாது’ என்ற கண்டிஷனுடன்தான் தருகிறார்கள்.

ஷிர்லி என்ற பெண் செனட் உறுப்பினரின் தந்தையே லாஸ் வெகாஸ் ஆஸ்பத்திரியில் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடினார். ஆஸ்பத்திரிகள் தொற்று நோய்த் தகவல்களைத் தெரிவிக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று போராட ஆரம்பித்தார் ஷிர்லி. உடனே ஆஸ்பத்திரிகள் சார்பில் லாபி செய்பவர்கள் பாக்டீரியாவை விட அதிக எண்ணிக்கையில் புறப்பட்டு வந்து, பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து சரிக்கட்டி, சட்டத்தின் பல்லைப் பிடுங்கிவிட்டார்கள். ஆஸ்பத்திரி இண்டஸ்ட்ரியின் அரசியல் செல்வாக்கு அப்படிப்பட்டது!

ஆஸ்பத்திரி சூழ்நிலையே ஆண்ட்டி பயாடிக்குகளில் சொட்டச் சொட்ட நனைந்த சூழ்நிலை. அட்மிட் ஆகும் நோயாளிகள் ஏற்கனவே நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து பலவீனமாக இருப்பார்கள். எந்த மாதிரி ஆண்ட்டி பயாடிக்குகளை எந்த அளவுக்குக் கொடுக்கிறோம் என்பதை ஆராய்ந்து உணர்ந்து கொடுக்க வேண்டும். ஆஸ்பத்திரித் தொற்று வியாதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு டாக்டர், நர்ஸ், வார்டு பாய், டீ கொண்டு வரும் பையன் எல்லாரும் சுத்த பத்தமாக இருக்க வேண்டும். அடிக்கடி கையை டெட்டால், ஐடியால் போட்டுக் கழுவ வேண்டும். பல சமயம் தண்ணீர்ப் பஞ்சத்தினால் எல்லோரும் சற்று அசால்ட்டாக இருந்துவிடுகிறார்கள்.

nws_hospitals_1_0509jdstandaloneprod_affiliate9

கத்தி கத்தரிகள் முதல் பாண்டேஜ் பஞ்சு வரை எல்லாவற்றையும் வெள்ளாவியில் நன்றாக வேக வைக்க வேண்டும். (ஆனால் பணம் பிடுங்குவதற்காக ஈசிஜி, ஈஈஜி என்று அவர்கள் உபயோகிக்கும் விதவிதமான கருவிகளை ஸ்டெரிலைஸ் செய்வது கடினம்). ஏர் கண்டிஷனர்களிலிருந்து அவ்வப்போது சுத்தமான புதிய காற்று உள்ளே நுழையும்படி திருப்பி வைக்க வேண்டும். அவற்றின் ஃபில்டர்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆஸ்பத்திரியிலும் நாஸகோமியல் ஆடிட் என்று தணிக்கை நடத்த வேண்டும்.

எல்லாவற்றுக்கும் முதலில், காசு கொடுத்து மார்க் ஷீட்டைத் திருத்தி டாக்டர், நர்ஸாக வந்தவர்களுக்கு நோய்த் தடுப்பில் முறையாகப் பயிற்சி கொடுக்க வேண்டும்.