'நான் கண்ட பாரதம்' – அம்புஜத்தம்மாள் சுயசரிதையிலிருந்து

என் சகோதரனை ஏழாவது வயதில் பழைய கால சம்பிரதாயப்படி, தாய் வழிப்பாட்டனாருடைய சீர்வரிசைகளோடு மேள தாளங்களுடன், மயிலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூலில் சேர்த்தார்கள். ஆனால் எனக்கு அக்ஷராப்பியாசம் (எழுத்தறிவித்தல்) கூட நடைபெறவில்லை. காரணம் முன்பெல்லாம் பெண் குழந்தைகளுக்குக் காது குத்தல், அக்ஷராப்பியாசம் செய்வித்தல் ஆகிய சடங்குகள் கிடையாது. பெண்களுக்கென்று தனிப்பள்ளிக்கூடம் இல்லாமையால், என் தாயார் என்னைப் பள்ளிக்கூடத்துக்கே அனுப்பவில்லை. அதற்குப் பதிலாக இந்திய கிறிஸ்துவ சங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையைக் கொன்டு எனக்குக் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.